என் மலர்
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார்.
இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகவில்லை. ஐஸ்வர்யா இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்களிலும் தனுஷ் நடித்திருந்தார். ஆதலால் இப்படத்திலும் தனுஷ் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இதுதவிர மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று கங்கனா ரணாவத் பதிவிட்டு உள்ளார்.
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரணாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார்.

கங்கனா ரணாவத், நாக சைதன்யா, அமீர்கான்
அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.
ஆர்.அரவிந்த் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ படத்தின் முன்னோட்டம்.
நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘லாக்கப்’ படத்தை அடுத்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திரா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விவேக் பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்
படத்தை பற்றி தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது: ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று தொடங்கி உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)

5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)

9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)

13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)

17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் ஹீரோயினாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர், முகிழ் படங்களின் போஸ்டர்
இந்நிலையில், டாக்டர் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் ‘முகிழ்’ படமும் ரிலீசாக உள்ளது. இப்படம் அக்டோபர் 8-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் நடிகர், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் தலைமையில் அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.
கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் கஞ்சா, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட 13 பேரை பிடித்தனர். பிடிபட்ட அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ஆரியன் கான் கைது செய்யப்பட்டபோது எடுத்த புகைப்படம்
விசாரணை முடிவில், ஷாருக்கான் மகன் ஆரியன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
தமிழ் திரைத்துறையில் பெப்சி அமைப்பு இல்லாமல் ஒரு திரைப்படம் உருவாக சின்ன செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது. அப்படி 24 அமைப்புகள் இணைந்த பிரமாண்டமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு இது. இதில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்குமே ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் தான் வருமானமே வரும்.
எப்போதெல்லாம் ஒரு தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறாரோ அப்போது இந்த அமைப்பில் உள்ள ஒரு தொழிலாளரின் குடும்பம் பாதிக்கப்படும். வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு மேக்கப் போடும் தொழிலாளர் ஒரு நாள் வேலை இழப்பைச் சந்தித்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.
இப்படிப்பட்ட தொழிலாளர்கள் இணைந்த பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பையனூர் பக்கத்தில் பல ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்காகக் கொடுக்க அரசாணை பிறப்பித்தார். அந்த இடத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வீடு கட்ட பல முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.
இதற்காக விஜய் சேதுபதியைச் சந்தித்துப் பேசியதும் அவர் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அதை நிறைவேற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கான விழா சென்னையில் நடந்தது.
அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது: நான் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.
அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனதுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் எப்பாடு பட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காகத் தான் திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன். இப்படித் தெரியாமல் தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.

வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணிகாயப் போடக்கூடாது. சுவரில் ஆணி அடிக்கக் கூடாது. இப்படிப் பலபல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்கக் கூடாது. என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.
அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காகச் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாகத் தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆர்.கே.செல்வமணி கேட்ட ரூ.10 லட்சம் ரூபாய் தொகையை அலுவலகத்திற்குச் சென்றவுடன் காசோலையாகத் தந்து விடுகிறேன்.
இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டினை தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டிடத்தைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.
நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார்.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனிமி படத்தின் போஸ்டர்
இப்படம் அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். அதன்படி ‘எனிமி’ திரைப்படம் அடுத்தமாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’, அருண் விஜய்யின் ‘வா டீல்’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் சிவானி, நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் படக்குழு வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். அதில் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு, ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நின்றபடி இருக்க, நடிகர் கமல்ஹாசன் பைக்கில் கெத்தாக அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
இப்படத்தை அக்டோபர் 13-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் தாமதமானதால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘சொந்த காலில் நிற்க கூடியவள் நான், எனக்கு யாருடைய பணமும் வேண்டாம்‘ என்று நடிகை சமந்தா கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் இரு குடும்பத்தினர் சம்மதத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவரும் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமந்தா திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இருவரும் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவரும் பிரிவதென்று முடிவு எடுத்ததையடுத்து, நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம்‘ என்று சமந்தா கூறிவிட்டாராம்.

சமந்தா, நாக சைதன்யா
இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விடும் நிலை உருவானதையடுத்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த பலரும் முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. நாகசைதன்யா தற்போது ஐதராபாத்தில் வசிக்கும் அடுக்குமாடி வீடு சமந்தாவுக்கு சொந்த மானதாகும். இந்த வீட்டை அவர் தனது சொந்த பணத்தில் வாங்கி இருந்தார். இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருப்பதால், நாக சைதன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.






