என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மும்பை அருகே நடுக்கடலில் சுற்றுப்பயணம் சென்ற உல்லாச கப்பலில் பயணிகள் போல மாறுவேடத்தில் சென்று போதை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
    சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். 

    ஆன்லைன் மூலம் சுற்றுலா பயண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் பயணம் செய்ய முடியும். மும்பையில் இருந்து 2-ந்தேதி புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் 4-ந்தேதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

    திட்டமிட்டபடி நேற்று மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது. அதில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.

    சொகுசு கப்பல்
    கார்டிலியா சொகுசு கப்பல்

    இந்த நிலையில் இந்த சொகுசு கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் கையும் களவுமாக பிடிக்க மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் முடிவு செய்தார். இதற்காக அவர் தனிப்படையை உருவாக்கினார்.

    போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு கப்பலில் டான்ஸ் பார்ட்டி தொடங்கியது. பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது தெரிய வந்தது. 

    இதனால் உஷாரான போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர். சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது 8 இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழில் அதிபர்களின் மகன்கள், மகள்களுக்கு கொடுப்பது தெரியவந்தது. 

    ஆரியன் கான்
    ஆரியன் கான்

    இதையடுத்து அந்த 8 பேரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக கோகைன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. நடன நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்ததும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

    ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குற்றவாளிகளை மட்டும் குறிவைத்து பிடித்து தனிமைப்படுத்தினார்கள்.போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள், விநியோகம் செய்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் 13 பேரை மட்டும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கப்பலில் இருந்து வெளியேற்றி மும்பைக்கு அழைத்து வந்தனர். மும்பையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிடிபட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் போதைப் பொருள் விநியோகத்தில் மும்பையைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சுற்றுலா கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய 13 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    ஆரியன் கான், ஷாருக்கான்
    ஆரியன் கான், ஷாருக்கான்

    நேற்று இரவு அவர்கள் விடுமுறை கால கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் தெரிவித்துள்ளார்.மேலும் ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். ஆரியன் யார் யாருடன் பேசினார்? அவருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் குஜராத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் விவகாரத்தில் சென்னை கொளப்பாக்கத்தில் வசித்த சுதாகர்- வைசாலி தம்பதிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை அவர்கள் பெயரில் சர்வதேச கும்பல் கடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பை சுற்றுலா கொகுசு கப்பலில் போதைப் பொருள் விநியோகம் நடந்திருப்பது மும்பையில் உள்ள பிரபலங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுகுறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
    நாக சைதன்யா - சமந்தா

    தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

    சமந்தா
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
    தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம்.

    ராதிகா ஆப்தே

    நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது.

    அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத்தான அவரை மணந்தேன். அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்திக்க செல்கிறேன்” என்றார்.


    ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்திருக்கும் கடைசி திரைப்படம் நோ டைம் டு டை படத்தின் விமர்சனம்.
    இத்தாலியில் ஜேம்ஸ் பாண்ட் தனது காதலியுடன் இருக்கும்போது, திடீரென ஸ்பெக்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்குகிறார்கள். தான் இருக்குமிடத்தை காதலி காட்டிக் கொடுத்ததால்தான் அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கருதும் ஜேம்ஸ் பாண்ட் காதலியை விட்டு பிரிகிறார். 

    சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்ஐ6ன் ஆய்வகத்தில் 'புராஜெக்ட் ஹெர்குலிஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்திவரும் அப்ருஷேவ் என்ற விஞ்ஞானி கடத்தப்படுகிறார். அந்தத் தருணத்தில் ஓய்வில் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட்டை சிஐஏ தொடர்பு கொண்டு, அந்த விஞ்ஞானியை மீட்க உதவ முடியுமா எனக் கேட்கிறது. அதே நாளில் எம்ஐ6ன் புதிய உளவாளி நோமியும் ஜேம்ஸ் பாண்ட்டை தொடர்பு கொண்டு பிரிட்டனுக்கு உதவும்படி கேட்கிறார்.

    இறுதியில், புராஜெக்ட் ஹெர்குலிஸ் என்றால் என்ன? விஞ்ஞானியை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? ஜேம்ஸ் பாண்ட் விஞ்ஞானியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    ஜேம்ஸ் பாண்ட்டாக வரும் டேனியல் கிரேக்கின் நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தப் படம் அவருடைய இறுதி படம் என்பதால், தனக்கே உரிதான முரட்டுத்தனம், நகைச்சுவையில் நம்மை ஆட்கொள்கிறார். கதாநாயகியாக வரும் அனா டி அர்மாஸ், தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். டேனியலுடன் இணைந்து பணிப்புரியும் காட்சிகள் வேற லெவலில் உள்ளன.

    இந்த படத்தின் திரைக்கதை நம்மை ஆட்கொண்டாலும், ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கே உரிய சில அம்சங்கள் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் படம் மெதுவாக செல்கிறது போன்ற உணர்வை கொடுக்கின்றது. சுவாரஸ்யமான சில காட்சிகள் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    விமர்சனம்

    இப்படத்தில் நவீன கால கருவிகள் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், மந்தமான காட்சிகளால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு நீளம் தான். இரண்டு மணிநேரம் 43 நிமிடங்கள் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக நீளம். இவ்வளவு நீளமான படத்தில் முக்கிய வில்லனான ரமி மாலெக் கொஞ்ச நேரம் மட்டும்தான் வருகிறார்.

    ஹான்ஸ் சிம்மரின் இசை படத்திற்கு அதிக மதிப்பை உண்டாக்குகிறது. மேலும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக்கை சரியான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் காட்சியமைப்பு அழகியல் காட்சிகளாக அமைந்துள்ளன. சண்டை காட்சிகள் அனைத்து விசில் அடித்து கொண்டாடும் அளவிற்கு அமைந்துள்ளன. 

    மொத்தத்தில் 'நோ டைம் டு டை' சுவாரஸ்யம் குறைவு.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்‌ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படத்தின் முன்னோட்டம்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    சிம்பு, கல்யாணி பிரியதர்‌ஷன்
    கல்யாணி பிரியதர்‌ஷன், சிம்பு

    மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. பிரவீன் கே.எல், இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    அண்ணாத்த படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    அண்ணாத்த படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அரசியல் பின்னணி உள்ள கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

    இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சிம்பு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம். 

    சிம்பு
    சிம்பு

    ஆகவே நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெறவுள்ளது. ஆகாவே மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
    மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கவுதம் மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் விமர்சனம்.
    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக அவரை நியமிக்கின்றனர். தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார் ரிச்சர்ட். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கவுதம் மேனனுக்கும், நாயகன் ரிச்சர்டுக்கும் இடையே பகை உண்டாகிறது. 

    இதையடுத்து கஞ்சா கடத்தியதாக இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார் ரிச்சர்ட். அவரிடம் இருந்து எஸ்கேப் ஆக முயலும் அந்த இளைஞர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதில் ஒரு இளைஞர் மரணமடைந்துவிடுகிறார். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் தான், அவரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து, அவரது மரணத்துக்கு ரிச்சர்ட் காரணமாகிவிட்டதாக சர்ச்சை எழுகிறது. 

    ருத்ர தாண்டவம் விமர்சனம்

    இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படும் ரிச்சர்ட், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதையடுத்து ரிச்சர்ட் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? இல்லையா? இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட்.  மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் அவர் போலீஸ் கதாபாத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆக்‌ஷன், எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருக்கிறார் தர்ஷா குப்தா. முதல் படத்திலேயே கர்ப்பமான பெண் வேடம் ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். அவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

    ருத்ர தாண்டவம் விமர்சனம்

    கவுதம் மேனன், வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறது. போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் தம்பி ராமையா, வக்கீலாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்,  ராதாரவி, நீதிபதியாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

    திரௌபதி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி, இப்படத்தை இயக்கி இருக்கிறார். திரெளபதி படத்தில் நாடக காதலைப் பற்றி திரைக்கதை அமைத்திருந்த அவர், ருத்ர தாண்டவத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் திறம்பட கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். 

    ருத்ர தாண்டவம் விமர்சனம்

    ஜூபினின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். பரூக் பாஷாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘ருத்ரதாண்டவம்’ ரசிக்கலாம்.
    சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்
    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், ஜெய் பீம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதேபோல், கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    நடிகை ஊர்வசி ராவ்துலா, தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
    அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

    கோல்டன் விசாவுடன் ஊர்வசி ராவ்துலா
    கோல்டன் விசாவுடன் ஊர்வசி ராவ்துலா

    ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்துலாவுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இவர் தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
    விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
    காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுமுக இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'லிப்ட்' படத்தின் விமர்சனம்.
    ஐடி ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் இருக்கிறது. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். பின்னர் அம்ரிதாவிற்கு கவின் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கவின் அதை மறுத்துவிடுகிறார். 

    இப்படி சென்று கொண்டு இருக்க, கம்பெனியில் ஒரு முக்கிய புராஜெக்டை முடிக்க வேண்டி இருப்பதால், கவின் மட்டும் இரவு கம்பெனியிலேயே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். நள்ளிரவில் வேலை முடிந்த பிறகு தரைத்தளத்திற்கு செல்ல கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவரால் தரைத்தளத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை.

    லிப்ட் விமர்சனம்

    இந்தநிலையில், நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சிக்கி இருப்பதை அறியும் கவின் அவரை காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் இவ்வாறு செய்ததாக சந்தேகப்படும் அம்ரிதா, பின் அவரை புரிந்து கொள்கிறார். இதையடுத்து இருவரும் படி வழியாக தரைத்தளத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள். 

    அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கின்றனர். இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் லிப்ட்.

    நாயகன் கவின், ஸ்மார்ட்டான ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் சரி, நடிப்பிலும் சரி திறம்பட நடித்து கவர்ந்திருக்கிறார்.

    லிப்ட் விமர்சனம்

    ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலை பலு, அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளையும் சொல்லி இருக்கிறது இந்த படம். இயக்குனர் வினீத் வரப்பிரசாத், அவருக்கு இது அறிமுக படம். இப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் திகில் மற்றும் அமானுஷ்ய விஷயங்களை புகுத்தி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பது பின்னடைவு. 

    படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின்  இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'லிப்ட்' திகிலூட்டுகிறது.
    ×