search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய் பீம்"

    • இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.
    • ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார். அதன்பின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.


    ஜெய்பீம்

    இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    சூர்யா
    சூர்யா - இயக்குனர் ஞானவேல்

    இதுதொடர்பாக இயக்குனர் ஞானவேல், ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
    சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சூர்யா
    சூர்யாவின் வீடு

    சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    ''செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

    28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கும், 'ஜெய்பீம்' படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்''.

    இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக பள்ளியிலிருந்து சிறுமி ஜோசிகா மாயா விலக்கப்பட்டதாக வந்த செய்திக்கு அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சிறுமி ஜோசிகா மாயா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இருளர் பழங்குடியினர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. 

    தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இருளர் பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக ஒரு கோடி கொடுத்து நிஜத்திலும் தான் ஹீரோ என்று காட்டியிருக்கிறார். 
    இந்நிலையில் படத்தில் இருளர் சிறுமியாக நடித்த ஜோசிகா மாயாவிற்கு சினிமாவில் நடித்தத்தால் ஒரு சிக்கல் வந்திருக்கிறது என்று செய்தி பரவியது. அவர் படிக்கும் பள்ளியிலிருந்து அவரை டி.சி.கொடுத்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. 

    ஜோஷிகா
    தந்தையுடன் ஜோசிகா

    இது குறித்து ஜோசிகாவின் தந்தை சக்தியிடம் பேசினோம், இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வெப் சீஸில் அதிதி பாலன் மகளாக நடித்து முடித்திருக்கிறார். ஒரு படத்திற்குக் கேட்டிருக்கிறார்கள். படிப்பும் நடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார் சக்தி.
    சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சூர்யாவிற்கு ‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா, ஞானவேல் மற்றும் குழுவினர்களுக்கு பெரும் நன்றிகள். JaiBhim’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

    ரஞ்சித்தின் பதிவு
    பா.ரஞ்சித்தின் பதிவு

    ஜெய் பீம் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் விமர்சனம்.
    கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). இவர் மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. அதன்பின் சில நாட்களில் ஊர் தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் திருடுபோகிறது. இதற்கு காரணம் ராஜாக்கண்ணுதான் என்று முடிவு செய்து போலீஸ் அவரை தேடுகிறது.

    ராஜாக்கண்ணு அதே நேரம் வெளியூரில் வேலைக்கு செல்கிறார். வீட்டில் அவர் இல்லாததால் மனைவி செங்கேணி மற்றும் உறவினர்களை போலீஸ் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள்.

    விமர்சனம்

    இந்நிலையில், ராஜாக்கண்ணு மற்றும் உறவினர்கள் லாக்கப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலீஸ் சொல்கிறார்கள். ராஜாக்கண்ணுவை தேடும் மனைவி, வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) உதவியை நாடுகிறார். இறுதியில் ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தார்களா? ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? நகைகளை திருடியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. வழக்கமான நடிப்பு இல்லாமல் வேறொரு சூர்யாவை பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத இவரின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. 

    விமர்சனம்

    ராஜாக்கண்ணு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் மணிகண்டன். போலீசிடம் அடிவாங்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். மணிகண்டனுக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. படத்திற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கும் மணிகண்டனுக்கு பெரிய சபாஷ் போடலாம். இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், செங்கேணி கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். கணவனுக்காக ஏங்குவது, போலீசிடம் அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குனர் தோலுரித்துக் காட்டுகிறார். அதே சமயம் நல்ல போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிக்க தவறவில்லை.

    கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையை தாங்கி பிடித்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்கள் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘ஜெய் பீம்’ ஜெய்.
    ×