என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புதுமுக இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'லிப்ட்' படத்தின் விமர்சனம்.
    ஐடி ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் இருக்கிறது. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். பின்னர் அம்ரிதாவிற்கு கவின் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கவின் அதை மறுத்துவிடுகிறார். 

    இப்படி சென்று கொண்டு இருக்க, கம்பெனியில் ஒரு முக்கிய புராஜெக்டை முடிக்க வேண்டி இருப்பதால், கவின் மட்டும் இரவு கம்பெனியிலேயே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். நள்ளிரவில் வேலை முடிந்த பிறகு தரைத்தளத்திற்கு செல்ல கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவரால் தரைத்தளத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை.

    லிப்ட் விமர்சனம்

    இந்தநிலையில், நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சிக்கி இருப்பதை அறியும் கவின் அவரை காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் இவ்வாறு செய்ததாக சந்தேகப்படும் அம்ரிதா, பின் அவரை புரிந்து கொள்கிறார். இதையடுத்து இருவரும் படி வழியாக தரைத்தளத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள். 

    அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கின்றனர். இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் லிப்ட்.

    நாயகன் கவின், ஸ்மார்ட்டான ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் சரி, நடிப்பிலும் சரி திறம்பட நடித்து கவர்ந்திருக்கிறார்.

    லிப்ட் விமர்சனம்

    ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலை பலு, அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளையும் சொல்லி இருக்கிறது இந்த படம். இயக்குனர் வினீத் வரப்பிரசாத், அவருக்கு இது அறிமுக படம். இப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் திகில் மற்றும் அமானுஷ்ய விஷயங்களை புகுத்தி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பது பின்னடைவு. 

    படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின்  இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

    மொத்தத்தில் 'லிப்ட்' திகிலூட்டுகிறது.
    நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன். 

    அர்ஜுன்

    அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்.
    நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
    சினிமா உலகில்  நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1928-ம் ஆண்டு  அக்டோபர் மாதம் 1-ந்தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில்  சிவாஜி கணேசன் பிறந்தார். காலத்தால் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் வெளிப்படுத்தியவர்.

    செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். நடிகர் திலகம் என அழைக்கப்படும் அவர் தான் நடித்து 1952-இல் வெளியான முதல் படமான ‘பராசக்தி’யின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.  எந்த படம் நடித்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். 1961-ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்’ படத்தில் அனைவரையும் அழ வைத்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உருக்கமாக நடித்திருப்பார். காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர். 

    செவாலியர் சிவாஜி கணேசனின்  பிறந்தநாளான இன்று அவரை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.


    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 

    நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவியும். இந்நிலையில் தற்போது தான் குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஆண்ட்ரியா பதிவு செய்து இருக்கிறார்.

    ஆண்ட்ரியா

    மேலும் ’நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது’ என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
    கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

    சௌஜன்யா
    சௌஜன்யா

    அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ஷெரின், ரஜினி படத்தில் நடித்துள்ளார்.
    செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். 

    தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

    விஜய் சத்யா - ஷெரின்
    விஜய் சத்யா - ஷெரின்

    ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல்கள், டீசர், டிரைலர்கள் வெளியாக இருக்கிறது.
    சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை அடுத்து ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஜோதிகா - சசிகுமார்
    ஜோதிகா - சசிகுமார்

    உடன் பிறப்பே திரைப்படத்தில் சசிகுமார், ஜோதிகா, சூரி, சமுத்திரகனி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.
    இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. 

    இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம்  நீயடா’ என்கிற படம் உருவாகிறது. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிராஜன். இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.

    பிரஜன்
    நாயகன் பிரஜன் - இயக்குநர் ஆதிராஜன்

    லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
    ஹிப்ஹாப் தமிழா ஆதி, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரித்து இருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் விமர்சனம்.
    காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு செய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஆரம்பித்து விடுகிறார். வரதராஜனின் மகன் முருகன், சந்திரசேகர் பெண்ணை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாகிறார்.

    ஒரு பிரச்சனையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார். இறுதியில் சிவகுமார் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக சிவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. வழக்கமாக குறும்பு தனம் செய்து ஜாலியாக இருக்கும் ஆதியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இத்தனை பொறுப்புகளை ஏற்று இருப்பதால், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார் போல... 

    காஞ்சிபுரம் பட்டின் பெருமை, தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஆதி, அதைப்பற்றி ஆழமாக சொல்லாமல் சென்றது வருத்தம். முதல் பாதியின் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். நிறைய தத்துவங்கள் பேசுவதை குறைத்து இருக்கலாம். முதல் பாதியில் அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வருகிறது. அவை அனைத்தும் பெரிதாக கவரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    விமர்சனம்

    காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஆதி. ஆனால், காமெடி அதிகமாக கைகொடுக்கவில்லை. ஒரு காட்சி மிகவும் சீரியசான என்று நினைத்தால் அது காமெடியாக இருக்கிறது. காமெடியான காட்சிகள் சீரியசாக இருக்கிறது. படம் பார்க்கும் போது அதிக குழப்பம் ஏற்படுகிறது. நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார் ஆதி.

    நாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். முருகன் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், ஒரு சில இடங்களில் சிரிக்கவும், கடுப்பேற்றவும் செய்திருக்கிறார். ஆதியின் நண்பராக வரும் கதிர், ரசிக்கும் படியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் காட்சிகள் தெளிவாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘சிவகுமாரின் சபதம்’ ஜெயிக்கவில்லை. 
    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. 

    பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    பூனம் பஜ்வா
    பூனம் பஜ்வா

    இந்நிலையில், தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
    பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி பைடி பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். 

    நானி

    ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சமுத்திரகனி இயக்கத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, தம்பி இராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விநோதய சித்தம்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘விநோதய சித்தம்’. இப்படத்தை அவர் இயக்கி உள்ளதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    விநோதய சித்தம் படக்குழு
    விநோதய சித்தம் படக்குழு

    படத்தை பற்றி சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்.
    ×