என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது
    சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘விநோதய சித்தம்’. இப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    சமுத்திரகனி

    அதேபோல், அன்றைய தினம் சமுத்திரகனி நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ படமும் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதன்மூலம் சமுத்திரகனி நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
    90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. 

    கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

    குஷ்பு

    இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ என ரசிகர்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

    அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.
    அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் தயாராகி வருகிறது.

    இப்படத்தை விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே பாக்ஸிங் காட்சி உள்ளதாம்.

    லிகர் படத்தின் போஸ்டர்
    லிகர் படத்தின் போஸ்டர்

    இதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    இடிமுழக்கம் படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான லட்சியம் படத்தின் ரீமேக் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
    தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். 

    மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே இடிமுழக்கம் படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான லட்சியம் படத்தின் ரீமேக் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    ஜி.வி.பிரகாஷ், சீனு ராமசாமி
    ஜி.வி.பிரகாஷ், சீனு ராமசாமி

    இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இடிமுழக்கம் ரீமேக் படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். நன்றி” என தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். எச்.வினோத் இயக்கி இருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதைத் தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அஜித், எச்.வினோத்
    அஜித், எச்.வினோத்

    இந்நிலையில், ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும், தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். 
    பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நடிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
    பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப்பொருட்களை விற்பனை செய்ய வெளிநாட்டு வாலிபர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும் படியாக சுற்றிய நைஜீரியாவை சேர்ந்த செக்வூம் மால்வின் (வயது 45) என்பவரை கைது செய்தார்கள். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    அதாவது கைதான மால்வின் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்-2 படத்தில் நடித்திருந்தார். அப்படத்திலும் போதைப் பொருள் கடத்தி வருபவராக நடித்திருந்தார் மால்வின். அவரை சூர்யா கைது செய்வது போன்ற காட்சியும் அப்படத்தில் இடம்பெற்றிருந்தது. 

    செக்வூம் மால்வின்
    செக்வூம் மால்வின்

    இந்நிலையில், தற்போது நிஜத்திலும் அவ்வாறே நடந்துள்ளதால், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. கைதான மால்வினிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக, நடிகர் சிங்கமுத்து கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
    நிலப்பிரச்சினை தொடர்பாக நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

    இதன் அடிப்படையில் எழும்பூர் கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குறுக்கு விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக, நடிகர் சிங்கமுத்து, நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்திருந்தார். 

    சிங்கமுத்து, வடிவேலு
    சிங்கமுத்து, வடிவேலு

    இந்நிலையில், நேற்று இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் வடிவேலு குறுக்கு விசாரணைக்காக டிசம்பர் மாதம் 7-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
    நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார்கள். 

    இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போவதாக வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுதவிர தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா, விரைவில் மும்பைக்கு குடியேர உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாற இருக்குறீர்களா’ எனக் கேட்டார். 

    சமந்தா

    இதற்கு “எப்படி இந்த வதந்தி பரவியது எனத் தெரியவில்லை. மற்ற நூறு வதந்திகளைப் போல இதுவும் உண்மையில்லை. எப்போதுமே எனக்கு ஐதராபாத் தான் வீடு. எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது ஐதராபாத் தான், நான் இங்கு தான் வசிப்பேன்” என பதிலளித்தார் சமந்தா. 

    இந்த கலந்துரையாடலின் போது, நடிகை சமந்தா, விவாகரத்து விவகாரம் குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜேம்ஸ் கன் இயக்கத்தில் இட்ரிஸ் எல்பா, மார்கட் ராபி, அலைஸ் பிராகா, ஜான் சீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தி சூசைடு ஸ்குவாடு’ படத்தின் விமர்சனம்
    தவறு செய்து அமெரிக்க சிறையில் இருப்பவர்களில் சூப்பர் பவர் கொண்ட சிலரை ஒன்று சேர்ந்து, ஒரு மிஷனை செய்து முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிடுகிறது. அந்த மிஷனில் இருந்து பின் வாங்கினால், ‘உங்கள் தலைக்குள் ஒரு சிப் வச்சிருக்கோம். அது வெடிச்சு நீங்க உயிரிழக்க நேரிடும்’ என மிரட்டி சூப்பர் பவர் கொண்ட சிறைக் கைதிகளை சம்மதிக்க வைக்கின்றனர். 

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கைதிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அவர்களில் சிலர் ஏற்கனவே சண்டையிட்டும் இருக்கின்றனர். இந்த சிக்கல்களை எல்லாம் மீறி அந்த மிஷனை அவர்கள் செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தி சூசைடு ஸ்குவாடு விமர்சனம்

    படத்தில் இட்ரிஸ் எல்பா, மார்கட் ராபி, அலைஸ் பிராகா, ஜான் சீனா, வில் ஸ்மித் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து உள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சூசைடு ஸ்குவாடு படத்தைவிட இந்த படத்தை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் கன். இப்படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும், அவர்களை திறம்பட கையாண்ட விதத்திலேயே இயக்குனர் பாதி வெற்றி அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார்.

    தி சூசைடு ஸ்குவாடு விமர்சனம்

    கதாபாத்திரங்கள் இடையேயான எமோஷனும் சிறப்பாக கையாளப்பட்டு உள்ளது. இட்ரிஸ் எல்பாவும் அவரது மகளுக்குமான உறவு, டேனியெல்லாவுக்கும் அவரது தந்தைக்குமான உறவு, கிங் ஷார்க் கதாபாத்திரம் என அனைத்தும் ரசிகர்களோடு ஒன்றக்கூடியவாறு இருப்பது படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. 

    ஹென்ரி பிரஹாம் மற்றும் டக்காஷியின் கச்சிதமான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஜான் மர்பியின் பின்னணி இசை திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது. 

    மொத்தத்தில் ‘சூசைடு ஸ்குவாடு’ ஆக்‌ஷன் விருந்து.
    அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    விஷ்ணு விஷால்
    விஷ்ணு விஷால்

    அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.கே.பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. 

    அதன்படி நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி பிரியங்கா, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, ஷகீலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி பிரபலம் கனி ஆகியோரது பெயர்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது மாஸ்டர் பட பிரபலம் சிபி சந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    சிபி சந்திரன்
    சிபி சந்திரன்

    இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது. 
    ஜோம் காலெட் செரா இயக்கத்தில் டிவைன் ஜான்சன், எமிலி பிளண்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜங்கிள் குரூஸ்’ படத்தின் விமர்சனம்.
    அமேசான் காட்டில் உள்ள அதிசய மரம் ஒன்றில், எப்பேர்பட்ட நோய்யையும் குணப்படுத்தும் அதிசய மலர் ஒன்று வளர்கிறது. மிகவும் ஆபத்து நிறைந்த அந்த பகுதிக்கு சென்று, அதிசய மலரை எடுக்க வேண்டும் என்று படத்தின் நாயகி எமிலி பிளண்ட் புறப்படுகிறார். அவருக்கு நாயகன் டிவைன் ஜான்சனும் உதவி செய்கிறார். 

    அதே சமயம், வில்லன் கும்பலும் அந்த அதிசய மலரைத் தேடி அமேசான் காட்டுக்குள் நுழைகிறது. அவர்களை சமாளித்து அந்த அதிசய மலரை நாயகனும், நாயகியும் எடுத்து வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நாயகன் டிவைன் ஜான்சன், படகோட்டியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஆங்காங்கே காமெடியிலும் கலக்கி இருக்கிறார். நாயகி எமிலி, திறம்பட நடித்து இருக்கிறார். காமெடிக்காக களமிறக்கப்பட்டுள்ள எட்கர் ராமிரெஸ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான்.

    ஜங்கிள் குரூஸ் விமர்சனம்

    இயக்குனர் ஜோம் காலெட் செரா, அமேசான் காட்டு பகுதியில் அமைக்கப்பட்ட பழங்காலத்து சுற்றுலா படகுத்துறைமுகம், நீரிழ் மூழ்கியிருக்கும் கட்டிடம், ‘நிலவின் கண்ணீர்’ என்று சொல்லக்கூடிய அதிசய மலர் பூக்கும் பிரம்மாண்ட மரம், ஆதிவாசி மக்களின் சாபத்தால் 400 வருடங்களாக அமேசான் காட்டில் இருந்து வெளியேறவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் வாழும் வித்தியாசமான உடலை கொண்ட போர் வீரர்கள், வித்தியாசமான டால்பின் என சிறுவர்களை குஷிப்படுத்துவதற்கான அத்தனை அம்சங்களையும் படம் முழுக்க வைத்து, காட்சிக்கு காட்சி ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறார். 

    ஜங்கிள் குரூஸ் விமர்சனம்

    இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளின் பிரம்மாண்டத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதே சமயம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவு இருப்பது சில இடங்களில் பொம்மை படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுகிறது.

    மொத்தத்தில் ‘ஜங்கிள் குரூஸ்’ சாகச பயணம்.
    ×