என் மலர்
சினிமா செய்திகள்
- நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது.
- இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். நேற்று 4-வது முறையாக நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் அவர் புறப்பட்டு சென்றார்.

சூரி
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் புகார் கொடுத்த போது இந்த கமிஷனர் அலுவலகம் வந்தேன். அதன் பிறகு பலமுறை இங்கு வந்துள்ளேன். திருப்பி, திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ் துறை, நீதித்துறை, கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும். முன்பெல்லாம், வீட்டில் இருந்து கிளம்பும் போது, சூட்டிங் போறீங்களா, என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது வெளியில் கிளம்பும் போது, போலீஸ் நிலையம் போறீங்களா என்று கேட்கிறார்கள். எனது கனவில் கூட போலீஸ் நிலையம்தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா ஆகியோரிடமும் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குலின் சர்ச்சையில் சிக்கினார்.
- இந்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜெயில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜாக்குலின் வெளிநாடு செல்லாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது.

ஜாக்குலின்
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஜாக்குலின் பல தடவை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரது வக்கீல் வாதாடும்போது அமலாக்கத்துறை சம்மன்களுக்கு ஜாக்குலின் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு கோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கி உள்ளது.
- சித்திரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நரேன்.
- இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நரேன். அதன்பின்னர் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை, யு டர்ன், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியன விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

நரேன், கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டு தன்மையா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் 14 வருடத்திற்கு பிறகு நரேன் - மஞ்சு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.

சூர்யா 42 படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை வனப்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் 60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் படத்தின் பெரும் பகுதியை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
- இவர் தற்போது சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பூஜா ஹெக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பூஜா ஹெக்டே
இந்நிலையில், இவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "இரண்டு வாரங்களுக்கு முன்பு.. நான் என் வாழ்வில் இரண்டாவது முறையாக நடக்க கற்றுக் கொண்டேன்.. இது மிகவும் வேடிக்கையானது" என்று பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே பதிவு
இதற்கு முன்பும் தான் சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பூஜா ஹெக்டே இணையத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதர்வா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'.
- இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பட்டத்து அரசன்
'பட்டத்து அரசன்' திரைப்படம் நாளை (நவம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படக்குழு இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அஞ்சனத்தி' பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.
- இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா சமீபத்தில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள்.

நான் பார்த்த அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால், இதுவரை நான் உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
— Mahesh Babu (@urstrulyMahesh) November 24, 2022
- நடிகை நமீதா காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார்.
- இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

நமீதா
விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.

வீரேந்திர சவுத்ரி - நமீதா
பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த நமீதா கடந்த மே மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை வலைத்தளத்தில் அறிவித்து, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

மகன்களுடன் நமீதா
அண்மையில் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நடிகை நமீதா தன் இரட்டை குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' இருவரும் என் கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள். எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் பெயர் சூட்டும் விழா நடந்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
- நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி -2 படத்தில் நடித்து வருகிறார்.
- இவரின் ‘அதிகாரம்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அதிகாரம்
இதனிடையே இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் 'அதிகாரம்' திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றி மாறான் கதை, திரைக்கதை, எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

அதிகாரம் படக்குழு
இதைத்தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாததால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'அதிகாரம்' திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் படப்பிடிப்பு குறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகிறது என்று படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- கமல் மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிடப்படுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கமல்
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. அதில், "23.11.2022 அன்று லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் கமல் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்" என்று குறிப்பிட்டுள்ளது.
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 நபர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 46-வது நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் உங்கள் தலையில் பிரச்சினை போல என்று விக்ரமன், ஜனனியை சுட்டிக்காட்டியது மிகுந்த மனவேதனையை அளித்தது என்று அசீம் ஜனனிகாக வாதாடுகிறார். இதற்கு விக்ரமன் அவர்கள் தமிழில் எனக்கு பிரச்சினை இல்லை எனக்கும் செந்தமிழ் பேசுவது தடுமாற்றம் தான் என்று கூறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6
இதற்கு ஜனனி அவர் உங்கள் தமிழில் என்று கூறியது வருத்தத்திற்கு உள்ளானது என்று கூறுகிறார். இதற்கு உங்கள் தமிழ் என்று கூற முடியாது ஏனென்றால் டாஸ்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வாதிடுகிறார். இதற்கு அசீம் அவர்கள் தமிழ் வகுப்பு அப்போது தூங்கி விட்டார் போல என்று கூறுகிறார். இதனால் கடுப்பான குயின்சி எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் தான் என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
- இவர் இறந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் கோகலே
இந்நிலையில், விக்ரம் கோகலே காலமானதாக நேற்று இரவு செய்திகள் பரவிய நிலையில், இதை அவரது மனைவி விருஷாலி மறுத்துள்ளார். அவரது உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என்றார். விக்ரம் கோகலே பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார். இவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டுவருகின்றனர்.






