என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
    • இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.


    செம்பி

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    செம்பி போஸ்டர்

    அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படம் ‘டிஎஸ்பி’.
    • இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.


    டி.எஸ்.பி

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.


    டி.எஸ்.பி

    இந்நிலையில், 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது. தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    எஸ்.ஜே.சூர்யா

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இதையடுத்து வதந்தி படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். வதந்தி படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் சூர்யா, "போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீட்டர் மட்டுமே கடந்திருக்கிறேன். எனக்கு ஆஸ்கர் விருது வாங்குவது தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



    • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.


    ரம்யா எழுதிய புத்தகம்

    இந்நிலையில், இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • விக்ரம், ஜெய்பீம் போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் இளங்கோ குமரவேல்.
    • சமீபத்தில் மர்ம நபர்கள் இவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

    தமிழ் சினிமாவில் 'அபியும் நானும்', 'சர்வம் தாளமயம்', 'ஜெய் பீம்', 'காற்றின் மொழி', 'விக்ரம்', உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இளங்கோ குமரவேல். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தின் திரைக்கதை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.


    இளங்கோ குமரவேல்

    இவர் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சமீபத்தில், ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடிகர் இளங்கோ குமரவேல் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


    இளங்கோ குமரவேல்

    இந்நிலையில், போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து செல்போனை மீட்டனர்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.


    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.


    லால் சலாம்

    இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


    ஏ.ஆர்.ரகுமான் பதிவு

    இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட்டுள்ளார். இவரின் இசையை கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருக்கு சலாம் செய்கிறார். இந்த வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.


    ஜவான்

    இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரியாமணி

    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தில் நடிகை பிரியாமணி நடனமாடியுள்ளதாகவும் இந்த பாடல் படத்தின் முக்கிய பாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் பிரியாமணி நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன்.
    • இவர் இரண்டுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவர். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குட்பை', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அமிதாப் பச்சன்

    இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.


    அமிதாப் பச்சன்

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • இயக்குனர் ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’.
    • இப்படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    யசோதா

    மேலும், 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், யசோதா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, இப்படத்தில் இடம் பெறும் மருத்துவமனை பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயக்கி வருகிறது.


    யசோதா

    இந்த மருத்துவமனை நிர்வாகம் தங்கள் மருத்துவமனையின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் 'யசோதா' படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'யசோதா' திரைப்படத்தை டிசம்பர் 19-ஆம் தேதிவரை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதித்து படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • நடிகர் கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • இவர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

    நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன்தினம் மதியம் சென்னை திரும்பினார்.


    கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தது.


    கமல்ஹாசன்

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். இவரை வீட்டிலேயே ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×