என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் டீசர் வெளியாகி இருக்கிறது.
    • பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் மாடல்கள் வரிசையில் எலெக்ட்ரிக் கார்கள் இணைய உள்ளன.

    2023 ஷாங்காய் மோட்டார் நிகழ்வில், ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை 'e:N' சீரிசின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை ஹோண்டா நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் தலைச்சிறந்த பத்து எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

    புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் 'e:NS1' மற்றும் 'e:NP1' சீரிசை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மாடல்கள் டாங்ஃபெங் ஹோண்டா மற்றும் GAC ஹோண்டா கூட்டணியில் 2021 அக்டோபர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

    தற்போது டீசரில் காணப்படும் இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் கிராஸ்ஒவர் எஸ்யுவி போன்று காட்சியளிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மாடல்களும் ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா அறிவித்துள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் சீன சந்தையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படுகின்றன. இதே போன்ற மாடல்கள் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவற்றுடன் ஹோண்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'கனெக்ட் 4.0' கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்தது.
    • நைட்ஸ்டர் சீரிஸ் ஸ்பெஷல் வேரியண்ட் இந்தியாவில் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் 2023 நைட்ஸ்டர் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நைட்ஸ்டர் சீரிஸ் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. 2023 நைட்ஸ்டர் சீரிஸ்- ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்பெஷல் வேரியண்டில் ஹெட்லைட் கௌல், பில்லியன் சீட், உயரமான ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்பெஷல் வெர்ஷன் அதிக நிற ஆப்ஷன்கள் மற்றும் வித்தியாச டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடல்- விவிட் பிளாக் மற்றும் ரெட்லைன் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல்- விவிட் பிளாக், பிளாக் டெனிம், பிரைட் பில்லியர்ட் புளூ மற்றும் இண்டஸ்ட்ரியல் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    இரண்டு வேரியண்ட்களிலும் விவிட் பிளாக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மற்ற நிற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் வரை அதிகம் ஆகும். மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2023 ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் சீரிசில் 975சிசி, வி-டுவின், லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 88.5 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 5.5. லிட்டர் /100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18 கிலோமீட்டர்) வரை செல்லும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஷோவா முன்புற ஃபோர்க்குகள், டுவின் ஸ்ப்ரிங்குகள், இரண்டு வீல்களிலும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ரோட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டு நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம் என்றும் நைட்ஸ்டர் ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 29 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 19 கார்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்யும் 22 வாகனங்களில் புதிய மாடல்கள் மற்றும் மேம்பட்ட மாடல்கள் இடம்பெற்று இருக்கும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் 2023 ஆண்டில் மட்டும் 19 கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். இந்திய சந்தை விற்பனையில் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில், இந்த திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு அதிக விற்பனையை ஈட்டிக் கொடுப்பதாக பிஎம்டபிள்யூ ஏற்கனவே தெரிவித்து இருந்தது. கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனையில், 15 சதவீதம் வாகனங்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். பிஎம்டபிள்யூ அறிவித்து இருக்கும் 22 வாகனங்களில் 19 கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் அடங்கும்.

     

    இதில் முற்றிலும் புதிய வாகனங்கள் மற்றும் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் இடம்பெற்று இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 20 வாகனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதிலும் புதிய வாகனங்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அடங்கும்.

    இத்தனை வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வளர்ச்சியை 15 சதவீதமாக அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. 

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய Revuelto ஹைப்ரிட் சூப்பர் கார் 1015 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.
    • புதிய சூப்பர் காரில் அவெண்டெடார் மாடலில் உள்ளதை விட மேம்பட்ட 6.5L L545 V12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி நிறுவனம் முற்றிலும் புதிய ஹைப்ரிட் சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. அவெண்டெடார் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சூப்பர்கார் Revuelto என அழைக்கப்படுகிறது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட லம்போர்கினி சூப்பர் கார் மாடலாக புதிய Revuelto ஹைப்ரிட் உள்ளது.

    புதிய Revuelto ஹைப்ரிட் மாடலில் 6.5L L545 V12 எஞ்சினின் மேம்பட்ட வெர்ஷன் உள்ளது. இந்த எஞ்சின் 825 பிஎஸ் பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுவரை லம்போர்கினி வழங்கியதில் சக்திவாய்ந்த V12 எஞ்சின் இது ஆகும். இதில் உள்ள V12 எஞ்சின் பின்புற வீல்களை மட்டுமே இயக்கும். முன்புற வீல்களுக்கான திறனை இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்குகின்றன.

     

    டிசைனை பொருத்தவரை புதிய சூப்பர்காரின் முன்புறம் Y வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், டெயில் லேம்ப் கிராஃபிக்ஸ், பாடி லைன்கள், Y வடிவ வீல்கள், சிசர் டோர்கள், ஆக்டிவ் ரியர் விங், அதிகளவு டவுன்ஃபோர்ஸ் ஏற்படுத்தும் ரியர் டிஃப்யசர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    உள்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 8.4 இன்ச் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், U வடிவ ரிவர்ஸ் லீவர், 13 டிரைவிங் மோட், இரண்டு சுழலும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரின் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களின் ஒருங்கிணைந்த செய்லதிறன் 1015 பிஎஸ் ஆகும். இதை கொண்டு காரில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டிவிட முடியும். மேலும் ஏழு நொடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் X3 மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பிஎம்டபிள்யூ X3 சீரிசில் லக்சரி எடிஷன் நீக்கப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது X3 சீரிசில் இரண்டு புதிய டீசல் வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிஎம்டபிள்யூ 20d Xலைன் மற்றும் 20d M ஸ்போர்ட் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம் என்றும் ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ X3 டீசல் வேரியண்ட்களில் பாரம்பரியம் மிக்க கிட்னி கிரில், செங்குத்தான ஏர் இண்டேக், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. இதன் M ஸ்போர்ட் பேக்கேஜ்-இல் காரின் முன்புற குவாட்டர் பேனல், டெயில்பைப்களில் கிளாஸ் க்ரோம் ஃபினிஷ், முன்புற அப்ரனில் பெரிய ஏர் இன்லெட்கள், விண்டோ கிராஃபிக்ஸ், ரூஃப் ரெயில்கள், பிஎம்டபிள்யூ கிட்னி ஃபிரேம், 19-இன்ச் வை ஸ்போக் M அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     

    காரின் உள்புறம் மல்டி-பன்ஷன் M ஸ்போர்ட் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், HUD, வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, 464 வாட் ஹார்மன் கார்டன் 16 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ X3 டீசல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின், 190 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் இரு கார்களில் சக்திவாய்ந்த எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சக்திவாய்ந்த எஞ்சினுடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் 1.5 லிட்டர் TSI எஞ்சின் கொண்ட ஆம்பிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்றும் ஸ்லேவியா ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இந்த எஞ்சின் முன்னதாக குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதே எஞ்சின் தற்போது மிட் வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சக்திவாய்ந்த எஞ்சினை எதிர்பார்க்கும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

     

    புதிய வேரியண்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது 1.0 லிட்டர் எஞ்சினை விட 34 ஹெச்பி மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் சிலிண்டர் டிஆக்டிவேஷன் வசதி வழங்கப்படுகிறது. இது எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு சிலிண்டர்களை முழுமையாக ஆஃப் செய்துவிடும். குஷக் ஆம்பிஷன் 1.5 லிட்டர் MT மாடலின் விலை அதன் 1.0 லிட்டர் வேரியண்டை விட ரூ. 1.8 லட்சம் அதிகம் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 79 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 24 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சிட்ரோயன் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மிட்சைஸ் எஸ்யுவி இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
    • புதிய சிட்ரோயன் 7 சீட்டர் மாடல் கியா கரென்ஸ், மாருதி XL6 கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலின் டிசைன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட C5 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் C3 ஹேச்பேக் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இருவித இருக்கை அமைப்புகள்: ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும். அந்த வகையில், புதிய மாடல் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடல் கியா கரென்ஸ் மற்றும் மாருதி சுசுகி XL6 போன்ற மாடல்களுக்கும், இதன் எம்ஜி ஹெக்டார் பிளஸ், ஹூண்டாய் அல்கசார் மற்றும் டாடா சஃபாரி மாடல்களின் பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்களுக்கு போட்டியாக அமையும்.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இது அதிகபட்சம் 110 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் தற்போது விற்பனை செய்யப்படும் C3 ஹேச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மெர்சிடிஸ் AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் மாடல் 843 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
    • புதிய மெர்சிடிஸ் AMG மாடல் போர்ஷே பனமெரா டர்போ S E-ஹைப்ரிட் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    மெர்சிடிஸ் AMG பிராண்டின் முற்றிலும் புதிய AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் மாடல் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பிரான்டு அறிமுகம் செய்யும் முதல் ஹைப்ரிட் கார் எனும் பெருமையை இந்த சூப்பர் செடான் பெற இருக்கிறது.

    இதுதவிர மெர்சிடிஸ் AMG இதுவரை உற்பத்தி செய்ததில், அதிக சக்திவாய்ந்த மாடலாக இந்த செடான் கார் உருவாகி இருக்கிறது. இதில் 639ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 எஞ்சினுடன் 2-4 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 843 ஹெச்பி பவர், 1400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

     

    புதிய மெர்சிடிஸ் AMG GT 63 S E மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 316 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 6.1 கிலோவாட் ஹவர், 400 வோல்ட் பேட்டரி வெறும் 89 கிலோ எடை கொண்டிருப்பதாக மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

    இதில் உள்ள PHEV 12 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லும், எனினும், இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மட்டும் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் ரிஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி உள்ளது. சில பகுதிகளில் ஒற்றை பெடல் மூலம் காரை இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய பென்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்பட்ட GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்களின் இந்திய விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் டிசைன், லைட் சிக்னேச்சர் உள்ளிட்டவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்இடி லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புற நிறம், வீல் ஆர்ச்களிலும் பூசப்பட்டு இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷன்களில் பிளாஸ்டிக் ரிம்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    காரின் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் இருக்கைகளுடன் லெதர் ஸ்டீரிங் வீல், ஹை-பீம் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. அனைத்து கார்களிலும் மேம்பட்ட MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உள்புறம் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி மாடல்களில் மைல்டு ஹைப்ரிட் திறன் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இந்த கார்கள் பிளக்-இன் மற்றும் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் வழங்கப்படுகிறது. இவை 149 ஹெச்பி முதல் 264 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது.

    புதிய மைல்டு ஹைப்ரிட் மாடல்களில் 48 வோல்ட் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை காரின் செயல்திறனை 10 ஹெச்பி வரை அதிகரிக்கின்றன. இவை குறிப்பிட்ட சிறிது தூரம் வரை மின்சக்தியில் மூலம் பயணிக்க உதவுகிறது. புதிய GLA மற்றும் GLB மாடல்களின் செயல்திறன் மெர்சிடிஸ் AMG மூலம் டியூன் செய்யப்படுகின்றன. 

    • மாருதி சுசுகி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
    • அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காம்பேக்ட் ஹேச்பேக் மற்றும் டிசையர் காம்பேக்ட் செடான் மாடல்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவுகளில் அதிக வரவேற்பை பெறுவதோடு விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

    இந்த வரிசையில், இவற்றின் ஹைப்ரிட் வெர்ஷன் அதிக பிரபலம் அடையும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் ஆகும்.

     

    இத்துடன் வரும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதே யூனிட் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கி வருகின்றன.

    அந்த வகையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இரு கார்களும் அளவில் சிறியது என்பதால், இந்த மைலேஜ் கிடைக்கும் என்றே தெரிகிறது. பாகங்கள் பெரும்பாலும் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்தும் பட்சத்தில், இவற்றின் விலை ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. 

    • கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஏற்கனவே அறிமுகமான EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
    • கியா EV5 கான்செப்ட் மாடலில் சூரிய தகடுகளாக செயல்படும் ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    கியா EV9 கான்செப்ட்-ஐ தொடர்ந்து கியா நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கியா EV5 என அழைக்கப்படும் புதிய கான்செப்ட் மாடல் ஃபிளாக்ஷிப் EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய EV5 மாடலும் EV9 போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய EV5 கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது சீனாவில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. EV5 மாடல் டிஜிட்டல் டைகர் ஃபேஸ் மற்றும் க்ளோஸ்டு-ஆஃப் முன்புறம், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் கொண்டிருக்கிறது.

     

    பக்கவாட்டில் EV5 மாடலில் 21 இன்ச் ஏரோடைனமிக் வீல்கள், ஃபிளஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், தடிமனான பிளாஸ்டிக் கிலாடிங், கிரீஸ்களை கொண்டுள்ளது. பின்புறம் இந்த கார் EV9-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. EV5 மாடலில் லோ-செட் எல்இடி டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ஸ்பாயிலர் இடம்பெற்று இருக்கிறது.

    உள்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. கியா EV5 மாடலில் சுழலும் வகையான இருக்கைகள், ரியர் ஹிஞ்ச் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் சூரிய தகடு போன்று செயல்படுகிறது.

    இந்திய சந்தையில் கியா நிறுவனம் EV6 மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் EV5 மற்றும் EV9 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • ஆடி நிறுவனத்தின் புதிய Q6 எலெக்ட்ரிக் கார் ரேஞ்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    • புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் 2024 வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஆடி நிறுவனம் 2024 வாக்கில் Q6 இ டிரான் மாடலை அறிமுகம் செய்யும் என சமீபத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் 600கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. 2025 வாக்கில் ஆடி அறிமுகம் செய்ய இருக்கும் 20 புதிய மாடல்களில் ஒன்றாக Q6 இ டிரான் இருக்கிறது.

    புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரை (PPE) தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து ஆடி உருவாக்கி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் மக்கன் EV மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் அதிகபட்சம் 270 கிலோவாட் சார்ஜிங் ரேட் வழங்கப்படுகிறது.

     

    முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q6 இ டிரான் கான்செப்ட் மாடல் 469 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. மக்கன் EV மாடலில் உள்ள மோட்டார் 611 ஹெச்பி பவர், 953 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசியை வெளிப்படுத்துகிறது.

    Q6 இ டிரான் எஸ்யுவி-யை தொடர்ந்து கூப் எஸ்யுவி அல்லது ஸ்போர்ட்பேக் மாடலை அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி ஆடி Q6 இ டிரான் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    ×