என் மலர்tooltip icon

    கார்

    இந்திய சந்தையில் அடுத்த தலைமுறை ஹோன்டா அமேஸ் வெளியீடு 2018 ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை அமேஸ் இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழா பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. அந்த வகையில் ஹோன்டாவின் காம்பாக்ட் செடான் மாட் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களின் படி அடுத்த தலைமுறை ஹோன்டா அமேஸ் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் சிட்டி மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    2018 ஹோன்டா அமேஸ் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் உள்புற கேபின் அதிக இடவசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமேஸ் கார் சப்-காம்பேக்ட் ரக பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. 



    இந்தியாவில் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில் 2,50,000 ஹோன்டா அமேஸ் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இந்திய சந்தையில் அதிக எஸ்.யு.வி. மற்றும் கிராஸ்ஓவர் மாடல்கள் வெளியீடு காரணமாக அமேஸ் விற்பனை குறைந்திருக்கிறது. அந்த வகையில் புதிய அமேஸ் வெளியீடு சரியான நேரத்தில் அமைந்திருக்கிறது. 

    அடுத்த தலைமுறை அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம். இவை முறையே 88 பி.எச்.பி. பவர் மற்றும் 100 பி.எச்.பி. பவர் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். 2018 ஹோன்டா அமேஸ் மேம்படுத்தப்பட்ட பிளஷ் இன்டீரியர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் 2018 மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை வெளியிட தயாராகி வரும் நிலையில், இதன் விலை சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் 2018 மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இதற்கேற்ப அந்நிறுவனம் ஏற்கனவே இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட் தயாரிப்பு பணிகளை நிறுத்தி விட்டது. மாருதி சுசுகி இந்தியா மூத்த நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கல்சி சமீபத்திய பேட்டியில் 2018 ஸ்விஃப்ட் சார்ந்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக புதிய ஸ்விஃப்ட் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்கலாம் என்றும் டாப்-எண்ட் மாடல் ZDi டீசல் விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    இந்தியாவில் ஹோன்டா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோன்டா எலெக்ட்ரிக் மாடல் கார் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான ப்ரியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹோன்டா ப்ரியோ அந்நிறுவனத்திற்கு வெற்றிகர மாடலாக இருக்கிறது. எனினும் ஹோன்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மாடல் ஹேட்ச்பேக் மாடலாக இருக்குமா அல்லது செடான் மாடலாக இருக்குமா என்பதை ஹோன்டா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஹேட்ச்பேக் மற்றும் செடான் மாடல்களை விரும்புவோர் அதிகம் கொண்ட இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் மாடலை எலெக்ட்ரிக் பதிப்பாக வெளியிட இருக்கிறோம். டாடா மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் இவெரிட்டோ மாடல்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளன.



    அந்த வகையில் ஹோன்டா நிறுவனமும் இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஹிடாச்சி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் கார் பேட்டரிகளை தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது. என ஹோன்டா இந்தியா நிறுவன மூத்த துணை தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.

    ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி 43 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை தொடர்ந்து ஹைப்ரிட் வாகனங்களை குறைத்து, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது கவனம் செலுத்த ஹோன்டா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பதிப்பை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன.

    மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் கார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான டென்சோக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மஹேந்திரா நிறுவனத்திற்கான எலெக்ட்ரிக் கார் பிரிவு இயங்கி வருவதோடு, டாடா நி்றுவனமும் டிகோர் எலெக்ட்ரிக் மாடலை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதேபோன்று ரெனால்ட் நிறுவனமும் குவிட் எலெக்ட்ரிக் காரை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
    ஜீப் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்.யு.வி. மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஜீப் காம்பஸ் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பிரீமியம் எஸ்.யு.வி. மாடல்களை வெளியிட்டு அமெரிக்க நிறுவனமான ஜீப் இந்தியாவில் பிரபல நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கிராண்ட் மற்றும் செரோக்கியை தழுவி உருவாக்கப்பட்டுள்ள வடிவமைப்பை கொண்டு வெளியிடப்பட்ட ஜீப் காம்பஸ் ரூ.25 லட்சத்திற்குள் கிடைக்கும் தலைசிறந்த பிரீமியம் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது.

    அந்த வகையில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் 10,000 யுனிட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கையை கடந்துள்ளது. ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் 600 யுனிட்களை ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

    ஜீப் காம்பஸ் நிறுவனத்தின் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியா முழுக்க 47 நகரங்களில் 50 விற்பனை மையங்களில் ஜீப் காம்பஸ் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தயாரிப்பு பணிகளை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.



    ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது. டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது.

    இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது. ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் புதிய அவுட்லேண்டர் வெளியீடு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி விரைவில் புதிய அவுட்லேண்டர் மாடல் காரினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராஸ் ஓவர் மாடல் ஏற்கனவே அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி்யுள்ள தகவல்களின் படி மிட்சுபிஷி அவுட்லேண்டர் முன்பதிவு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் துவங்கி விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் பெட்ரோல் மாடல் மட்டுமே வெளியிடப்படும் என்றும் கூடுதலாக டீசல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கிராஸ்ஓவர் மாடல் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 169 பி.எச்.பி. பவர் மற்றும் 225 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    புதிய அவுட்லேண்டர் மாடல் மிட்சுபிஷியின் சூப்பர்-ஆல் வீல் கண்ட்ரோல் AWD சிஸ்டம் வழங்கப்படும், இது அனைத்து சக்கரகங்களுக்கும் தேவையான திறனை வழங்கும் என கூறப்படுகிறது. கிராஸ்ஓவர் மாடலில் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை 6.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் சீட், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்களும், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் மாடலில் ஆறு ஏர்பேக், ABS, EBD, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவிட்டி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. மிட்சுபிஷி அவுட்லேண்டர் இரண்டாம் தலைமுறை மாடல் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு மோசமான விற்பனை காரணமாக நான்கு ஆண்டுகளில் திரும்ப பெறப்பட்டது.
    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இவற்றில் எக்ஸ்.யு.வி. ஏரோ மாடலும் ஒன்று என்ற வகையில் தகவல் வெளியான நிலையில், இம்முறை ஏரோ குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி எஸ்.யு.வி. ஏரோ தயாராவது உறுதி செய்யப்பட்டு இந்தியாவில் 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக எக்ஸ்.யு.வி. ஏரோ 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான கம்பஷன் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    எக்ஸ்.யு.வி. ஏரோ மாடல் மஹேந்திராவின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் உயர் ரக அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றும் இந்த மாடல் வேகமாகவும், சிறப்பான டிரைவிங் ரேன்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி எலெக்ட்ரிக் பவர்டிரெயின் எக்ஸ்.யு.வி. ஏரோ 200 பி.எச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்கியூ கொண்டிருக்கும்.



    மஹேந்திராவின் புதிய எஸ்.யு.வி மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 8 நொடிகளில் செல்லும் என்றும், இது மஹேந்திரா உருவாக்கியதில் அதிவேக வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மணிக்கு 190 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.

    கூப் ஸ்டைல் வடிவமைப்பு கொண்டிருக்கும் எஸ்.யு.வி. ஏரோ ஐந்து பேர் வரை அமரக்கூடியதாக இருக்கும் என்றும் ஃபிளாக்ஷிப் மாடல் என்பதால் பல்வேறு ஆடம்பர வசதிகள் மற்றும் உயர் ரக அம்சங்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹேந்திரா எக்ஸ்.யு.வி. ஏரோ விலை ரூ.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூன்டாய் நிறுவனம் புதிய சாதனையை படைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்திய சந்தையில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

    இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தயாரித்த 50 லட்சத்து மாடலை வெளியிட்டுள்ளது. புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா மாடலை அந்நிறுவனம் 50 லட்சம் மாடலாக தயாரித்துள்ளது. இந்திய பயணர் வாகன பிரிவில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது வேகமாக இந்த மைல்கல் சாதனையை ஹூன்டாய் படைத்திருக்கிறது.

    1998-ம் ஆண்டு இந்திய சந்தையில் கால்பதித்த ஹூன்டாய் நிறுவனம் 10 லட்சம் கார் தயாரித்த சாதனையை ஏப்ரல் 2007-ம் ஆண்டு கடந்தது. ஹூன்டாய் சான்ட்ரோ மாடல் கார் ஹூன்டாய் தயாரித்த 10 லட்சத்து மாடலாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கழித்து 50 லட்சம் கார் தயாரித்த சாதனையை எட்டியுள்ளது.



    10 லட்சம் கார்களை தயாரிக்க ஹூன்டாய் நிறுவனம் எட்டு ஆண்டுகளை எடுத்து கொண்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மும்முரம் காட்டிய ஹூன்டாய் 2010-ம் ஆண்டில் 20 லட்சம் கார் தயாரித்தது, பின் 2013-ம் ஆண்டிலேயே 30 லட்சம் மற்றும் 2015-ம் ஆண்டில் 40 லட்சம் கார்களை ஹூன்டாய் தயாரித்துள்ளது.

    இந்த ஆண்டு 50 லட்சம் கார்களை தயாரித்த சாதனையை ஹூன்டாய் கடந்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஹூன்டாய் நிறுவனம் பத்து லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, i20, வெர்னா மற்றும் கிரெட்டா எஸ்.யு.வி. போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றது.



    புதிய மாடல் கார்களை வெளியிடுவது மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய ஹூன்டாய் திட்டமிட்டு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஹூன்டாய் நிறுவனம் சப்-4 மீட்டர் அளவுள்ள எஸ்.யு.வி. ரக கார் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஹூன்டாய் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்சமயம் வரை நாடு முழுக்க 2200க்கும் அதிகமான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களும், 422 ஊரக பகுதிகளில் மையங்களை இயக்கி வருகிறது. 
    ரெனால்ட் நிறுவனத்தின் குவிட் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு இந்தியாவில் வெளியிடப்படலாம் என ரெனால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரெனால்ட் நிறுவனம் தனது குவிட் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை உருவாக்கி வருவதாகவும், இது சீன சந்தையில் வெளியிடப்படுகிறது.

    சமீபத்தில் ரெனால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் அளித்த பேட்டியில், ரெனால்ட் குவிட் எலெக்ட்ரிக் பதிப்பு முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டாலும் விரைவில் இந்தியா, பிரேசில் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வெளியிடப்படலாம் என தெரிவித்துள்ளார்.



    ரெனால்ட் குவிட் எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடலை ஏற்கனவே ஓட்டியுள்ள கோஸ்ன் இந்த கார் தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். குவிட் எலெக்ட்ரிக் பதிப்பு சீன சந்தையை குறிவைத்து வெளியிடப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து மற்ற சந்தைகளில் குவிட் எலெக்ட்ரிக் பதிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

    குவிட் எலெக்ட்ரிக் மாடலின் விலையை இந்திய சந்தைக்கு ஏற்ப குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை ரெனால்ட் நிறவன வாகனங்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதோடு, நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு ஏற்ற அம்சங்களை ரெனால்ட் வழங்கி வருகிறது.

    இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களில் குவிட் எலெக்ட்ரிக் மாடல் இ-குவிட் என அழைக்கப்படும் என்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களில் பயன்படுத்த இ-குவிட் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய இ-குவிட் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டு சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. சீனாவில் லித்தியம் அதிகளவு கிடைக்கும் என்பதாலும், உள்நாட்டிலேயே லித்தியம்-அயன் பேட்டரிகளை அதிக போட்டியான விலையில் நிர்ணயம் செய்ய முடியும். இ-குவிட் மாடலில் வழங்கப்படவுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிக திறன் கொண்டிருக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    இந்தியாவில் போதுமான சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்ட பின் ரெனால்ட் குவிட் எலெக்ட்ரிக் பதிப்பு வெளியிடப்படும். தற்போதைய இன்ஜின் கொண்ட மாடல்களை விட இ-குவிட் தயாரிப்பு பணிகளின் விலை 60 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என ரெனால்ட் பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
    ஹூன்டாய் வெர்னா செடான் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை விற்பனையாகியுள்ள மாடல்களில் 90 சதவிகிதம் டாப் எண்ட் மாடல் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஹூன்டாய் வெர்னா விற்பனையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. மேலும் இந்த மாடலை தேர்வு செய்வோரில் 90 சதவிகிதம் பேர் டாப் எண்ட் மாடல்களையே வாங்கியிருக்கின்றனர்.

    பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையை விட அதிக அம்சங்கள் மற்றும் ஆடம்பரத்தையே விரும்புவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. 60 சதவிகிதம் வெர்னா வாங்குவோர் டீசல் இன்ஜின்களையும், 25 சதவிகிதம் பேர் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்ட ஆட்டோமேடிக் ஆப்ஷன்களை தேர்வு செய்கின்றனர்.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் சி-செக்மென்ட் பிரிவில் புதிய வெர்னா தற்சமயம் ஹோன்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் உள்ளிட்ட மாடல்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.



    புதிய தலைமுறை வெர்னா வில் K2 பிளாட்ஃபார்ம் சார்ந்து வடிவமைக்கப்பட்டு ஃப்ளூயிடிக் 2.0 டிசைன் கொண்டுள்ளது. இதன் இன்டீரியர் பெய்கீ மற்றும் பிளாக் என டூயல்-டோன் கலர் கொண்டுள்ளது. இதன் சீட்கள் லெதர் மற்றும் சாதாரான துணி என வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 பிஎச்பி பவர் மற்றும் 151 என்.எம். டார்கியூ வெளிப்படுத்துகிறது.

    இதன் டீசல் இன்ஜின் 126 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது. புதிய வெர்னா இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்கியூ வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னா 2017 மாடலில் டூயல் ஏர்பேக், ABS, EBD, ஸ்டான்டர்டு ஃபிட்மென்ட், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் 2017 வெர்னா மாடல் விலை ரூ.7.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.12.61 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    முதற்கட்டமாக ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து, பின் எலெக்ட்ரிக் வாகனங்களாக அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கென எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான யுக்தியை ஹோன்டா நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் அதிகப்படியான மாடல்கள் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று மஹேந்திரா மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியுள்ளது.



    ஹைப்ரிட் மாடல்களை் இல்லாமல் ஹூன்டாய் நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் பல்வேறு முன்னேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஹோன்டா நிறுவனம் போட்டியில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தளம் உருவான பின்பே ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும், அதுவரை ஹைப்ரிட் மாடல்களை வெளியிடும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜாஸ் மற்றும் சிட்டி மாடல்களின் ஹைப்ரிட் வாகனங்களை ஹோன்டா வெளியிட இருக்கிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 6 புதிய ஹோன்டா கார்களை வெளியிட இருக்கிறது. 
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஐதராபாத் மற்றும் புதுடெல்லியில் உள்ள தயாரிப்பு ஆலைகளில் தயாரிக்கப்பட இருக்கிறது.

    முதற்கட்ட பணிகளை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் கீழ் 1900 கோடியில் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உபெர் தளத்தில் இந்தியா முழுக்க இயக்கப்பட இருக்கிறது.

    மஹேந்திரா நிறுவனத்தின் e2oபிளஸ் ஹேட்ச் மற்று்ம இவெரிடோ செடான் உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் பதிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன. உபெர் ஓட்டுநர்கள் மஹேந்திரா எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலை, கவர்ச்சிகர நிதியுதவி மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றில் பெற முடியும்.



    இத்துடன் நகரங்களில் பொது பயன்பாடுகளுக்கு என கட்டமைக்கப்பட இருக்கும் சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மஹேந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்ற இருக்கிறது. மஹேந்திரா சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென ஓட்டுநர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கப்பட இருக்கிறது.

    மஹேந்திரா மட்டுமின்றி ஈச்சர் மோட்டார்ஸ், வால்வோ, மாருதி சுசுகி என பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக ஈச்சர் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்து ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல காம்பஸ் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஜீப் இந்தியாவின் பிரபல காம்பஸ் மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தின் போது ஏர் பேக் பயனற்று போகும் கோளாறு ஏற்படுவதால் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

    சர்வதேச அளவில் பிரபல எஸ்.யு.வி. மாடல் சிறிய எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 8,000 காம்பஸ் எஸ்.யு.வி. விற்பனையாகியுள்ளது. இவற்றில் 1200 யுனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

    தற்சமயம் திரும்ப பெறப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் மாடல்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான யுனிட்களிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முன்பக்க ஏர் பேக்களை மாற்றுவதற்கான நேரம் ஒதுக்குவது குறித்து கேட்கப்படும் என கூறப்படுகிறது.



    விற்பனையாளர்களிடம் ஏர் பேக்களின் டேஷ்போர்டு இலவசமாக மாற்றித்தரப்படும். பிழை காரணமாக காயங்கள், விபத்து அல்லது வாரண்டி உள்ளிட்டவை ஏற்படவில்லை என ஜீப் தெரிவித்துள்ளது.

    ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ஏர்பேக் பன்ச்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் ஆபத்து காலங்களில் ஏர்பேக் பயன்படாமல் இருக்கும். இந்த பிரச்சனை வலது புற ஓட்டுநர் இருக்கை இருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்காவில் மட்டும் 7000 இடது புற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களை திரும்ப பெறுவதாக ஜீப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காம்பஸ் எஸ்.யு.வி.க்களை தயாரிக்கும் பணிகள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை தயாரிக்கப்பட்டது.
    ×