என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய குஷக் மாடல் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை மாற்றியமைத்து இருக்கிறது.
ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை அடியோடு மாற்றியமைத்து இருக்கிறது. குஷக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் குஷக் மாடல் அறிமுகமாகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனம் 28 ஆயிரத்து 629 குஷக் யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. ஜூன் 2022 வரையிலான விற்பனையில் இத்தனை யூனிட்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரத்து 386 யூனிட்களை ஸ்கோடா நிறுவனம் விற்றுள்ளது.

விற்பனையை மேலும் அதிகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மற்றொரு புது வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. செமி கண்டக்டர் குறைபாடு மற்றும் விலை உயர்வு காலக்கட்டத்தில் மற்றொரு புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது அசத்தல் முடிவாக பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா அறிமுகம் செய்த புதிய குஷக் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குஷக் ஸ்டைல் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல் ஆகும். இதில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது.
- பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
- முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இன்பினிட்டி தனது E1 ஸ்கூட்டர் மாடல்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்ய துவங்கி இருக்கிறது. முதற்கட்டமாக தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புது டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இன்று (ஜூலை 22) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் ஸ்கூட்டரை வாங்குவோர், அதற்கான தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். பதிவு கட்டணம், அக்சஸீஸ் மற்றும் கூடுதல் சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவைகளை நேரடியாக டீலரிடம் தான் செலுத்த வேண்டும்.

"இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தை பல்வேறு புதுமைகளுக்கு வழிவகை செய்து இருக்கிறது. அந்த வகையில், நாங்கள் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகன தீர்வுகளை இன்பினிட்டி E1 மூலம் வழங்கி வருகிறோம். ஆன்லைன் விற்பனை மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகம் பல்வேறு எல்லைகளை கடந்து வாடிக்கையாளர்களை சென்றடையும். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்."
"எங்கள் வாகனங்களை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர் தேவைகளை சீராக பூர்த்தி செய்ய முடியும்," என பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான விவேகானந்த ஹலெகரெ தெரிவித்தார்.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த மாடலாக கிராண்ட் விட்டாரா இருந்து வந்தது.
- இந்த மாடல் ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. புதிய மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்.ஜி. ஆஸ்டர் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் இருவித என்ஜின்கள் - 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்ட 1.5 லிட்டர் K15C என்ஜின் மற்றும் 114 ஹெச்.பி. பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த காரின் 1.5 லிட்டர் K15C என்ஜின் கொண்ட வேரியண்ட் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 21.11 கி.மீ. மைலேஜும், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் 20.58 கி.மீ. மைலேஜூம் வழங்குகிறது. இதன் ஆல்வீல் டிரைவ் வெர்ஷன் லிட்டருக்கு 19.38 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது. 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் e-CVT ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27.97 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை புது கிராண்ட் விட்டாரா மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், முற்றிலும் புது கிரில், க்ரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி நிறம் கொண்ட ORVM-கள், பிளாக் ரூஃப், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், டூ பீஸ் எல்இடி லைட் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 9 இன்ச் பிரீஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.
- போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.
போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் அதிக பிரபலமான நேக்கட் மாடல்களில் ஒன்றாக யமஹா MT-15 V2.0 இருக்கிறது.
- சமீபத்தில் இந்த மாடலின் புது வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா MT-15 V2.0 மாடலுக்கு இந்திய சந்தையில் அறிமுகம் தேவையில்லை. யமஹா R15 V4 மாடலின் ஸ்டிரீட் நேக்கட் வெர்ஷன் தான் யமஹா MT-15. குறிப்பிடத்தக்க மாற்றங்கள், சில புது அம்சங்களுடன் அறிமுகமான காரணத்தால் யமஹா MT-15 V2.0 எனும் பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்திய அப்டேட் காரணமாக இந்த மாடலின் தோற்றம் மற்றும் ரைடிங் அனுபவம் மாறி இருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா MT-15 V2.0 அன்றாட பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது, இதன் மைலேஜ், டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

டிசைன் மற்றும் அம்சங்கள்:
யமஹா MT-15 V2.0 பாடி பேனல்களில் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், MT-15 V2.0 முற்றிலும் புது நிறங்களில் கிடைப்பதால், இவற்றின் தோற்றம் பெருமளவு மாறி இருக்கிறது. ரிவ்யூக்காக நாம் பயன்படுத்திய மாடல் சியான் புளூ நிறம் கொண்டிருந்தது. இதன் நிறம் எத்தனை பெரிய போக்குவரத்து நெரிசல்களிலும் தனித்து காட்டும் வகையில் உள்ளது. மேலும் இந்த மாடலின் வீல்கள் பாடி நிறத்திற்கு ஏற்ப பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது இதன் தோற்றத்தை அழகாக மாற்றி இருக்கிறது.
மற்ற அப்டேட்களை பொருத்தவரை புதிய யமஹா MT-15 V2.0 மாடலில் ரிவர்ஸ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிஸ்ப்ளேவில் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் மற்றும் போனின் பேட்டரி நிலவரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
புது மாடலின் பிளாஸ்டிக் தரம் தவிர இதில் வேறு எந்த குறையும் கூற முடியாத வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் ஹாரன் மற்றும் இண்டிகேட்டர் ஸ்விட்ச் மாற்றி வைக்கப்பட்டு இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், இது நாளடைவில் பழகி விடும் என்றே கூறலாம்.

ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:
யமஹா MT-15 V2.0 மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், அலுமினியம் ஸ்விங்-ஆர்ம் உள்ளன. இவை தவிர இந்த மாடலின் வீல்பேஸ் 10 மில்லிமீட்டர் அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் காரணமாக மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவம் மாறுவதோடு, ஹேண்ட்லிங் மிகச் சிறப்பாக இருந்தது. புது மாடலின் ஹேண்ட்லிங் எத்தகைய நகர நெரிசல்களையும் எளிதில் இலகுவாக கடக்க செய்கிறது.
இதில் உள்ள அகலமான ஹேண்டில்பார்கள் ஸ்டீரிங் அனுபவத்தை நேர்த்தியாக்குவதோடு, கூடுதல் சவுகரியம் மற்றும் சிறப்பான ஹேண்ட்லிங் வழங்க உதவுகிறது. அன்றாட பயன்பாடுகளின் போது, இந்த மாடலின் பிரேக்கிங்கில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படவில்லை. எனினும், இதன் பின்புறம் ஏபிஎஸ் வழங்கப்படாதது சிலருக்கு குறையாக தெரிய வாய்ப்பு உண்டு.

செயல்திறன் மற்றும் மைலேஜ்:
யமஹா MT-15 சீரிசில் அதன் என்ஜின் திறனுக்கு பெயர் பெற்றது ஆகும். புது மாடலில் என்ஜின் சற்றே அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை உணர முடிந்தது. சமயங்களில் சட்டென சீறிப் பாய்வது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல்களில் கியரை குறைக்காமலே, வேகத்தை குறைக்கும் போது என்ஜின் அதிக இடையூறை கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே இதன் மைலேஜ் சிறப்பானதாக இருக்கிறது.
இதில் உள்ள நான்கு வால்வுகள் கொண்ட 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் நகர பயன்பாடுகளிலேயே கிட்டத்தட்ட 45 முதல் 50 கி.மீ. வரையிலான மைலேஜ் வழங்கியது. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மைலேஜ் மேலும் அதிகரிப்பதை நிச்சயம் கவனிக்க முடியும். புது மாடலின் மைலேஜ் பி.எஸ்.4 மாடல் வழங்கியதை விட அதிகமாகவே இருக்கிறது. அதிக மைலேஜ் காரணமாக இதன் செயல்திறன் சற்றே குறைகிறது.
யமஹா R15 V4 மாடலுடன் ஒப்பிடும் போது MT-15 அதிவேகமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கிறது. எனினும், இதில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுவதில் R15 V4 முந்துகிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கி.மீ. வரை எளிதில் செல்கிறது.
யமஹா MT-15 V2.0: மொத்தத்தில் அழகிய தோற்றம், அதிக மைலேஜ், நகர பயன்பாட்டுக்காக அசத்தலான ஸ்டிரீட் நேக்கட் மாடலை வாங்க விரும்புவோருக்கு தலைசிறந்த தேர்வாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- யமஹா நிறுவனத்தின் புகழ் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக RX100 இருக்கிறது.
- இந்திய சந்தையில் யமஹா RX100 மாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
யமஹா RX100 மாடலுக்கு இந்திய சந்தையில் எந்த வித அறிமுகமும் தேவையில்லை. ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான யமஹா, இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஆழமாக கால் ஊன்ற செய்ததில், RX100 மாடலுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், யமஹா RX100 மாடலை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டு வர தான் விரும்புவதாக யமஹா மோட்டார் இந்தியா தலைவர் எய்ஷின் சிஹானா தெரிவித்து இருக்கிறார். தற்போது அமலில் இருக்கும் புகை விதிகள் காரணமாக புதிய மாடலில் 2 ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்படாது என்பதையும் அவர் தெரிவித்தார்.
எடுத்தவுடன் RX100 பெயரில் வேறொரு மாடலை அறிமுகம் செய்து விட முடியாது. இது அந்த மாடலுக்கு இருக்கும் புகழை வெகுவாக பாதித்து விடும். 2025 வரை புது வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான திட்டமிடல்கள் ஏற்கனவே நிறைவுற்று விட்டன. அந்த வகையில் அடுத்த தலைமுறை RX100 மாடல் 2026 அல்லது அதற்கும் அடுத்த ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் யமஹா RX100 மாடல் 1985 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் எஸ்கார்ட்ஸ் குழுமத்துடனான கூட்டணியில் தான் இந்தியா கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட RX100 மாடல் RX-S மாடலை தழுவி உருவாக்கப்பட்டது ஆகும். இந்த மாடல் ஒரிஜினல் RX100 அல்லது RX100DX மாடல்களை தழுவி உருவாக்கப்படவில்லை.
முதற்கட்டமாக 1985 முதல் 1987 வரையிலான காலக்கட்டத்தில் யமஹா RX100 மாடல் இந்தியாவுக்கு CKD முறையில் இறக்குமதி செய்யப்பட்டன. அதன் பின்பு இங்கு உற்பத்தி துவங்கிய நிலையில், 1986 ஆண்டு வரை யமஹா RX100 இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
ஒரிஜினல் யமஹா RX100 மாடலில் 98.2சிசி, 2 ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11 ஹெச்.பி. பவர், 10.45 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 7 சீட்டர் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- இந்த மாடல் மிகவும் வித்தியாசமான இண்டீரியர் கொண்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய விஷன் 7S கான்செப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஸ்கோடா விஷன் 7S டீசரில் புதிய காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் எனதெரியவந்துள்ளது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் ஆகும்.
ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட் மாடலில் 7 சீட்டர் செட்டப் உள்ளது. இது மிகவும் வித்தியாசமான 6+1 வடிவில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரியவர்கள் ஆறு பேரும், ஒரு இருக்கை குழந்தைகளை அமர வைக்க பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டு கார் கதவுகள் வரை நீள்கிறது. முன்புற இருக்கையில் உள்ள ஹோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய விஷன் 7S மாடல் டிரைவிங் மற்றும் ரிலாக்சிங் என இருவித சூழல்களுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரைவிங் மோடில் கண்ட்ரோல்கள் வழக்கமான கார்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ரிலாக்ஸ் மோடில் பின்புற இருக்கைகள் சற்றே பின்புறம் நகர்ந்து அதிக இடவசதியை ஏற்படுத்துகிறது. இது சவுகரியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
கடந்த மார்ச் மாத வாக்கில் ஸ்கோடா அறிவித்த முற்றிலும் புதிய டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு ஸ்கோடா விஷன் 7S உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் மொழியில் ஸ்கோடா நிறுவனத்தின் மதிப்புகளை எடுத்துரைக்கும் திடத்தன்மை, செயல்பாடு மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை சார்ந்து கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல் ஆகும்.
சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடல் விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த மாடலின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. புதிய சிட்ரோயன் C3 மூலம் அதிக போட்டி நிறைந்த பிரிவில் களமிறங்குவதோடு, ஹேச்பேக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களையும் குறி வைக்க சிட்ரோயன் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

தற்போது சப்-4 மீட்டல் எஸ்.யு.வி. பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களும் இந்த பிரிவில் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.
இந்த மாடல்கள் மட்டுமின்றி கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கும் புதிய சிட்ரோயன் C3 போட்டியாக அமைகிறது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஹண்டர் 350 மாடல் ஜெ பிளாட்பார்மில் உருவாகும் 350சிசி மோட்டார்சைக்கிள் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய ஹண்டர் 350 மாடலில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று 349சிசி என்ஜின் தான் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹண்டர் 350 மாடலில் இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர் கொண்டுள்ளது. இதன் டார்க் 27 நியூட்டன் மீட்டர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: Bikewale
அளவீடுகளை பொருத்தவரை இந்த மாடலின் வீல் பேஸ் 130 மில்லிமீட்டர் அளவில் இருக்கிறது. இது கிளாசிக் மற்றும் மீடியோர் மாடல்களில் வழங்கப்பட்டதை விட குறைவு ஆகும். மற்ற இரு மாடல்களிலும் முறையே 1390 மில்லிமீட்டர் மற்றும் 1400 மில்லிமீட்டர் அளவு வீல் பேஸ் உள்ளது. புதிய ஹண்டர் மாடலின் மொத்த எடை 180 கிலோ ஆகும்.
இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் இந்த மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்கையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்க முடிவு செய்து இருக்கிறது. புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மூலம் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகி களமிறங்க இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் பேஸ் வேரியண்ட் விலை வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாருதி சுசுகி நிறுவன வலைதளத்தில் சோர்ஸ் கோட் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் முதல் துவங்கும் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
தற்போது ஹூண்டாய் கிரெட்டா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 44 ஆயிரம் என துவங்குகிறது. கியா செல்டோஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் ஆகும். அந்த வகையில், புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் விலை அடிப்படையில் போட்டி நிறுவன மாடல்களை விட விலை குறைவாகவே விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.
- ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
- சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டருக்கு மூவ் ஓ.எஸ். 2 அப்டேட் வழங்கியது.
ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கி.மீ. ரேன்ஜ் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மூவ் ஓ.எஸ். 2 அப்டேட்டிற்கு பின் புதிய இகோ மோட் பயன்படுத்தியதில் இத்தனை கி.மீ. ரேன்ஜ் கிடைத்தது.
ட்விட்டர் பயனரான சத்யேந்திர யாதவ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐந்து சதவீதம் சார்ஜ் மீதம் இருக்கும் நிலையில், 300 கி.மீ. வரை பயணம் செய்து இருக்கிறார். இவரது ஸ்கூட்டரின் டேஷ்போர்டு விவரங்களின் படி ஸ்கூட்டரை மணிக்கு 20 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கிய போது 300 கி.மீ. ரேன்ஜ் கிடைத்து இருக்கிறது. இந்த பயணத்தின் போது அதிகபட்சம் வேகம் மணிக்கு 38 கி.மீ ஆக இருந்துள்ளது.

மற்றொரு பயனர் தனது ஸ்கூட்டரில் நான்கு சதவீதம் சார்ஜ் மீதம் இருந்த நிலையில் 303 கி.மீ. வரை பயணம் செய்து அசத்தி இருக்கிறார். இவரின் டேஷ்போர்டு விவரங்களின் படி ஸ்கூட்டரை மணிக்கு 23 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இவரின் ஸ்கூட்டர் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது.
முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு 200 கி.மீ. ரேன்ஜ் எட்டி வாடிக்கையாளர்களுக்கு லிமிடெட் எடிஷன் குயெரா ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கி இருக்கிறார். புதிதாக 300 கி.மீ. ரேன்ஜ் எட்டியவர்களுக்கு இதே போன்று பரிசு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற லேண்ட் குரூயிசர் LC300 மாடல் உலக சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
- இந்தியாவில் இந்த மாடலுக்கான முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் LC300 மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது. சோதனையில் சிக்கிய யூனிட் லேண்ட் குரூயிசர் LC300 சகாரா ZX வேரியண்ட் ஆகும். இது வலது புற டிரைவ் வசதி கொண்டு இருக்கிறது.
சோதனையில் சிக்கிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலில் நம்பர் பிளேட் எதுவும் இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் சோதனை யூனிட் அல்லது டெமோ வாகனமாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். இந்த மாடலை தனி நபர் யாரேனும் வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்து இருக்கலாம்.

Photo Courtesy: Instagram | carcrazy.india
இந்த எஸ்.யு.வி. மாடல் கோயம்புத்தூரில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்திகேயன் பிறந்த ஊர் தான் கோயம்புத்தூர் ஆகும். முன்னதாக டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டன. எனினும், அதிக வரவேற்பு காரணமாக இதன் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிகிறது. இந்தியா மட்டும் இன்றி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கு சர்வதேச சந்தையிலும் அதிகளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. சில நாடுகளில் இந்த மாடலை டெலிவரி பெற அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.






