search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    தாராள மைலேஜ், அசத்தல் தோற்றம் - யமஹா MT-15 V2.0 ரிவ்யூ!
    X

    தாராள மைலேஜ், அசத்தல் தோற்றம் - யமஹா MT-15 V2.0 ரிவ்யூ!

    • இந்திய சந்தையில் அதிக பிரபலமான நேக்கட் மாடல்களில் ஒன்றாக யமஹா MT-15 V2.0 இருக்கிறது.
    • சமீபத்தில் இந்த மாடலின் புது வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    யமஹா MT-15 V2.0 மாடலுக்கு இந்திய சந்தையில் அறிமுகம் தேவையில்லை. யமஹா R15 V4 மாடலின் ஸ்டிரீட் நேக்கட் வெர்ஷன் தான் யமஹா MT-15. குறிப்பிடத்தக்க மாற்றங்கள், சில புது அம்சங்களுடன் அறிமுகமான காரணத்தால் யமஹா MT-15 V2.0 எனும் பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்திய அப்டேட் காரணமாக இந்த மாடலின் தோற்றம் மற்றும் ரைடிங் அனுபவம் மாறி இருக்கிறது.

    அந்த வகையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா MT-15 V2.0 அன்றாட பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது, இதன் மைலேஜ், டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.


    டிசைன் மற்றும் அம்சங்கள்:

    யமஹா MT-15 V2.0 பாடி பேனல்களில் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், MT-15 V2.0 முற்றிலும் புது நிறங்களில் கிடைப்பதால், இவற்றின் தோற்றம் பெருமளவு மாறி இருக்கிறது. ரிவ்யூக்காக நாம் பயன்படுத்திய மாடல் சியான் புளூ நிறம் கொண்டிருந்தது. இதன் நிறம் எத்தனை பெரிய போக்குவரத்து நெரிசல்களிலும் தனித்து காட்டும் வகையில் உள்ளது. மேலும் இந்த மாடலின் வீல்கள் பாடி நிறத்திற்கு ஏற்ப பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது இதன் தோற்றத்தை அழகாக மாற்றி இருக்கிறது.

    மற்ற அப்டேட்களை பொருத்தவரை புதிய யமஹா MT-15 V2.0 மாடலில் ரிவர்ஸ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிஸ்ப்ளேவில் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் மற்றும் போனின் பேட்டரி நிலவரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.

    புது மாடலின் பிளாஸ்டிக் தரம் தவிர இதில் வேறு எந்த குறையும் கூற முடியாத வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் ஹாரன் மற்றும் இண்டிகேட்டர் ஸ்விட்ச் மாற்றி வைக்கப்பட்டு இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், இது நாளடைவில் பழகி விடும் என்றே கூறலாம்.


    ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:

    யமஹா MT-15 V2.0 மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், அலுமினியம் ஸ்விங்-ஆர்ம் உள்ளன. இவை தவிர இந்த மாடலின் வீல்பேஸ் 10 மில்லிமீட்டர் அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் காரணமாக மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவம் மாறுவதோடு, ஹேண்ட்லிங் மிகச் சிறப்பாக இருந்தது. புது மாடலின் ஹேண்ட்லிங் எத்தகைய நகர நெரிசல்களையும் எளிதில் இலகுவாக கடக்க செய்கிறது.

    இதில் உள்ள அகலமான ஹேண்டில்பார்கள் ஸ்டீரிங் அனுபவத்தை நேர்த்தியாக்குவதோடு, கூடுதல் சவுகரியம் மற்றும் சிறப்பான ஹேண்ட்லிங் வழங்க உதவுகிறது. அன்றாட பயன்பாடுகளின் போது, இந்த மாடலின் பிரேக்கிங்கில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படவில்லை. எனினும், இதன் பின்புறம் ஏபிஎஸ் வழங்கப்படாதது சிலருக்கு குறையாக தெரிய வாய்ப்பு உண்டு.


    செயல்திறன் மற்றும் மைலேஜ்:

    யமஹா MT-15 சீரிசில் அதன் என்ஜின் திறனுக்கு பெயர் பெற்றது ஆகும். புது மாடலில் என்ஜின் சற்றே அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை உணர முடிந்தது. சமயங்களில் சட்டென சீறிப் பாய்வது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல்களில் கியரை குறைக்காமலே, வேகத்தை குறைக்கும் போது என்ஜின் அதிக இடையூறை கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே இதன் மைலேஜ் சிறப்பானதாக இருக்கிறது.

    இதில் உள்ள நான்கு வால்வுகள் கொண்ட 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் நகர பயன்பாடுகளிலேயே கிட்டத்தட்ட 45 முதல் 50 கி.மீ. வரையிலான மைலேஜ் வழங்கியது. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மைலேஜ் மேலும் அதிகரிப்பதை நிச்சயம் கவனிக்க முடியும். புது மாடலின் மைலேஜ் பி.எஸ்.4 மாடல் வழங்கியதை விட அதிகமாகவே இருக்கிறது. அதிக மைலேஜ் காரணமாக இதன் செயல்திறன் சற்றே குறைகிறது.

    யமஹா R15 V4 மாடலுடன் ஒப்பிடும் போது MT-15 அதிவேகமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கிறது. எனினும், இதில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுவதில் R15 V4 முந்துகிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கி.மீ. வரை எளிதில் செல்கிறது.

    யமஹா MT-15 V2.0: மொத்தத்தில் அழகிய தோற்றம், அதிக மைலேஜ், நகர பயன்பாட்டுக்காக அசத்தலான ஸ்டிரீட் நேக்கட் மாடலை வாங்க விரும்புவோருக்கு தலைசிறந்த தேர்வாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×