என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டேட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
டேட்சன் நிறுவனம் தனது ஹேட்ச்பேக் மாடலான ரெடிகோ காரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்ய உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பி.எஸ் 6 புகை விதி சோதனையை பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன.

டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
பாதுகாப்பு அம்சமாக பயணிகள் பகுதியில் ஏர் பேக் கூடுதலாக உள்ளது. அதேபோல பின்புற பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் கேமரா வசதி உள்ளது. இது 0.8 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகவும் 5 கியர்களை உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியோடு நான்கு மாடல்களில் இது வெளிவர உள்ளது. இந்தியாவில் மாருதி ஆல்டோ, ரெனால்ட் கிவிட், மாருதி எஸ் பிரஸ்ஸோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்பதால் விலையும் இந்த தயாரிப்புகளின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவன வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான வேலிடிட்டியை மேலும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதிக்குள் நிறைவுற்ற வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுற்ற வாகனங்களுக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி வரை சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய அறிவிப்பின் படி பஜாஜ் ஆட்டோ நிறுவன வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நிறைவுற்றதும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் பயன்களை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் வகையில் இவற்றுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.
இதுதவிர பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. விற்பனை மையங்களை மீண்டும் திறப்பதற்கு தேவையான அனுமதிகளை உள்ளூர் அதிகாரிகளிடம் பெற்று இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
கேடிஎம் நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை மீண்டும் திறந்துள்ளது.
கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்துள்ளது.
இவற்றில் விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த பணிகள் மீண்டும் துவங்கி வழக்கம் போல நடைபெறும் என தெரிகிறது. நாடு முழுக்க தற்பசமயம் எத்தனை விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் திறக்கப்பட்டு இருக்கும் என்பதையும் கேடிஎம் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சில விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்சமயம் திறக்கப்படும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் இயங்கி வந்த கேடிஎம் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
கொரோனா பாதிப்பு இருந்த போதும் துருக்கியில் கார்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் பஸ், ரயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து விதமான வாகன போக்குவரத்தும் முடங்கிக் கிடக்கின்றன. நாடுகளின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.
குறிப்பாக முன்பு எப்போதையும் விட வாகன விற்பனை அடியோடு சரிந்துள்ளது. வசதி படைத்த நாடுகளான இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றில் வாகன விற்பனையே இல்லை என்று கூறும் அளவிற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. பல நகரங்களில் ஊரடங்கால் வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதும் இதற்கு காரணம்.

அதேநேரம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் மட்டும் இதற்கு நேர்மாறாக வாகன விற்பனை எப்போதும்போல் அமோகமாக நடந்து வருகிறது.
அதுவும் கடந்த 4 மாதங்களில் துருக்கியில் கார்கள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடும் போது 26.3 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 1.5 லட்சம் கார்கள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை இந்த காலகட்டத்தில் துருக்கி விற்பனை செய்துள்ளது.
அதாவது 1,21,445 கார்களும் 29,105 இலகு ரக வர்த்தக வாகனங்களும் விற்பனையாகி உள்ளன. கார்கள் விற்பனை 30 சதவீதமும் வர்த்தக வாகனங்கள் விற்பனை 12 சதவீத உயர்ந்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 கேம்ரி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 37.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 93 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், முன்புற இருக்கை மற்றும் ஓட்டுனர் இருக்கைகள் வென்டிலேட் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் அட்ஜஸ்ட் ஸ்டீரிங் காலம், பின்புற சன் பிளைன்ட்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஒன்பது ஏர்பேக்குகள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
பிஎஸ்6 கேம்ரி மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 176 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார் 118 பிஹெச்பி பவர், 202 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஆடி நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் விநியோக விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது ஏ6 செடான், ஏ8 எல் செடான் மற்றும் கியூ8 எஸ்யுவி மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. மூன்று மாடல்களையும் வாடிக்கையாளர்கள் ஆடி ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 50 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
மூன்று ஆடி மாடல்களும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் முன்பதிவு மற்றும் விற்பனை நடைபெறாமல் இருந்தது. தற்சமயம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதால், ஆடி நிறுவனம் மீண்டும் முன்பதிவை துவங்கியுள்ளது.

தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் மாடல்கள் ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆடி ஏ6 துவக்க விலை ரூ. 54.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டும் 45TFSI பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
புதிய ஆடி ஏ8 எல் மாடலில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆடி கியூ8 மாடலிலும் ஏ8 எல் மாடலில் உள்ளது போன்று 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் பெயருக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது.
இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அடுத்த ஆண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் டிவிஎஸ் புதிய வாகன பெயருக்கு காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி டிவிஎஸ் நிறுவனம் புதிய வாகனத்திற்கு ரோனின் எனும் பெயரை பயன்படுத்த பதிவு செய்துள்ளது. காப்புரிமை விண்ணப்பம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.

டிவிஎஸ் நிறுவனம் புதிதாக அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் பயன்படுத்தும் 310சிசி பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. புதிய பெயரை டிவிஎஸ் நிறுவனம் தனது குரூயிசர் மோட்டார்சைக்கிளுக்கு சூட்டலாம் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்திய செப்லின் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகும் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் அபாச்சி ஆர்ஆர்310 மாடலின் நேக்கட் வெர்ஷனுக்கு புதிய பெயர் சூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கார் பார்க்கிங் இட பற்றாக்குறையை போக்க இப்படியும் செய்ய முடியுமா என ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் தான் கடந்து வரும் புதிய யோசனைகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. புதுமையை பாராட்டுவது மட்டுமின்றி குறிப்பிட்ட யோசனையை வழங்கியவரை பாராட்டவும் தவறியதில்லை என கூறலாம்.
அந்த வரிசையில் ஆனந்த் மஹிந்திரா புதிய ட்வீட் செய்திருக்கிறார். இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் தனது வீட்டு முன்புறத்தில் அதிக இடவசதியை எடுத்துக் கொள்ளாமல் கார் பார்க்கிங் செய்ய பின்பற்றும் வழிமுறை அடங்கிய வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

மேலும், இதே போன்ற சாதனத்தை ஏற்கனவே பஞ்சாபில் பார்த்து இருக்கிறேன். எனினும், இது அதைவிட சிறப்பானதாக இருக்கிறது. இந்த தீர்வு எனக்கு பிடித்திருக்கிறது. இதை வடிவமைத்தவர், எங்களுக்கு இதைவிட தலைசிறந்த யோசனைகளை வழங்குவார் என நிச்சயமாக கூறமுடியும் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக இதேபோன்ற வழிமுறை அடங்கிய வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் ஏற்கனவே பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் கார்ஸ் இந்தியா நிறுவனம் டிஎஸ்ஐ எடிஷன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரு லிமிட்டெட் எடிஷன் மாடல்களும் ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போலோ டிஎஸ்ஐ விலை ரூ. 7.89 லட்சம் என்றும் வென்டோ டிஎஸ்ஐ விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு ஃபோக்ஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ மாடல்களும் லிமிட்டெட் எடிஷன் என்பதால், இவற்றில் காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

காஸ்மெடிக் மாற்றங்களின் படி ஃபோக்ஸ்வேகன் போலோ டிஎஸ்ஐ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் ஸ்போர்ட் வடிவமைப்பில் பாடி கிராஃபிக்ஸ், பிளாக்டு-அவுட் ORVMகள், கிளாஸி பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பாயிலர்கள், ஹனிகொம்ப் கிரில் மற்றும் டிஎஸ்ஐ பேட்ஜ் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரசி சலுகைகளை வழங்குகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை மே 31 ஆம் தேதிக்குள் புதிய வாகனம் வாங்குவோருக்கானது என ரெனால்ட் தெரிவித்துள்ளது.
புதிய சலுகைகளில் ரெனால்ட் இந்தியா தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும் இந்த மாடல்கள் 'பை நௌ பே லேட்டர்' எனும் பிரத்யேக நிதி திட்டத்திலும் வழங்கப்படுகிறது.

இந்த நிதி திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் புதிய ரெனால்ட் காரை உடனடியாக வாங்கிக் கொண்டு அதற்கான மாத தவணையை வாகனம் வாங்கிய தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகையின் கீழ் ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம், அதாவது ரூ. 15 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ. 25 ஆயிரம் லாயல்டி சலுகை ஆகும். இதேபோன்று ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.
கவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி இந்தியா நிறுவனம் நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நின்ஜா 650 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2020 கவாசகி நின்ஜா 650 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பை விட கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் புதிய மாடலில் முன்புற ஃபேரிங் கம்பீர தோற்றத்தை வழங்குகிறது. இதன் கிராஃபிக்ஸ் சிறிதளவு மாற்றப்பட்டுள்ளது.

இத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருக்கை முந்தைய மாடலில் இருப்பதைவிட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது.
2020 கவாசகி நின்ஜா 650 பிஎஸ்6 மாடலில் 649சிசி பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 65.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
சாலையில் வாகனம் ஓட்டுவோர் இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் போது அதிக கவனமாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களின் செல்லப்பிராணிகளில் நாய் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. தற்சமயம் நாய்களை வாகனத்தில் ஏற்றி பயணம் செய்வோர் சாலையில் அதிக கவனமாக செயல்படுகின்றனர் என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
சியாட் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாய்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்ட பின் வாகன உரிமையாளர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும் என தீர்மானிப்பதாக தெரிவிதுள்ளனர்.
வாகனங்களில் நாய்களை ஏற்றி பயணிப்போரிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் கலந்து கொண்டு பதில் அளித்தவர்களில் 54 சதவீதம் பேர் தங்களது செல்லப்பிராணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டும் போது அதிக கவனமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நாய்களை வாகனத்தில் ஏற்றியதும், வாகனத்தை ஓட்டும் போது அவர்களின் மனநிலை வழக்கத்தை விட அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக 18 முதல் 24 வயதுடைய மோட்டாரிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 69 சதவீதம் பேர் செல்லப்பிராணிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.
ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்தவர்களில் 55 வயதுக்கும் மேற்பட்டோரில் 42 சதவீதம் பேர், தங்களது செல்லப்பிராணி வாகனத்தில் இருந்தால் அதிக கவனத்துடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதனை லண்டன் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வாகனம் ஓட்டுவோரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நாய் வாகனத்தில் இருக்கும் போது மன அழுத்தம் குறைவதாக 35 சதவீத ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓட்டுனர்களில் பலர் நாய்களை ஏற்றிக் கொண்டு வாகனத்தில் பயணம் செய்வது தொடர்பான சட்ட விவரங்கள் தங்களுக்கு தெரியாது என பதில் அளித்திருக்கின்றனர்.






