என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • முகாமில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
      • முதலில் பணம் பெற்றுக் கொண்டு முறையாக கட்டும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி சாலை ஓர வியாபாரிகளுக்கு கடனுதவி திட்ட விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

      நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சமுதாய அலுவலர் பாலமுருகன், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

      தொடர்ந்து எவ்வாறு கடனுதவி பெறலாம்? என்ற வழிமுறைகளை விளக்கி கூறினர். மேலும் இதில் முதலில் பணம் பெற்றுக் கொண்டு முறையாக கட்டும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் இருந்து கடன் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், நகரா ட்சி பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

      • வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
      • விண்ணப்பிப்பவர்கள் 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்தரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      50 சதவீதம் மானியம்

      தென்காசி மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்க ளுக்கு இருசக்கர வாகனங் கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி உள்ள நபருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

      இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி யாற்றியிருக்க வேண்டும். 18-45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

      கல்வித்தகுதி

      குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வி தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப் பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

      விண்ணப்ப படிவத்தினை http://tenkasi.nic.in/forms என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்க ளுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி -627 811 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்து பயன்பெறலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • மாணவ, மாணவிகள் சமூகத்தில் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது.
      • மாணவ- மாணவிகள் சமூகத்தில் மருத்துவர், நீதிபதிகள் போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம் கொண்டாடப்பட்டது.

      பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் தன் குடும்பத்திலும், சமூகத்திலும் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

      பள்ளியின் ஆசிரியைகள் நந்தினி, பிரீத்தி மற்றும் சுபாஷினி சமூகப் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் வைத்தனர். மேலும் பள்ளி தாளாளர், முதல்வர் மாணவ, மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினர்.

      நிகழ்ச்சியில் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் சமூகத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய பணியில் இருக்கும் போலீசார், மருத்துவர் மற்றும் நீதிபதிகள் போன்று உடை அணிந்து கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷனா செய்திருந்தார்.

      • கடந்த வாரம் வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
      • விலை அதிகரிப்பால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார், வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் வரை 200 இலைகள் அடங்கிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கோழிக்கூடு, நாடு, மட்டி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைத்தார்கள் விலையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

      வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலை அதிகரிப்பால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது காற்று சீசன் தொடங்கி உள்ளதால் வாழைத்தார் மற்றும் வாழை இலை களின் விலையானது அதிகரித்து ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

      • கேரளா சென்று திரும்பும் சிறிய முதல் கனரக வாகனங்களில் மருத்துவக்கழிவுகளை ஏற்றி அனுப்பி விடுகின்றனர்.
      • கேரள கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      தென்காசி:

      மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள தென்காசி மாவட்டம் பல்வேறு சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

      புளியரை சோதனை சாவடியை கடந்து சென்றால் அண்டை மாநிலமான கேரளாவை சென்றடையலாம். அங்கு காய்கறிகள், மணல், ஜல்லி அனைத்தும் இந்த சோதனை சாவடி வழியாக தான் கொண்டு செல்லப்படும்.

      இந்நிலையில் கேரளாவில் மருத்துவக்கழிவுகள், குப்பை கழிவுகளை கொட்டு வதற்கு பல்வேறு விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து அங்கு சென்று திரும்பும் சிறிய முதல் கனரக வாகனங்களில் மருத்துவக்கழிவு களை ஏற்றி அனுப்பி விடுகின்றனர்.

      வாகனங்களின் டிரைவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு, மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் புளியரை செக்போஸ்டில் முழுமை யாக சோதனை செய்யப் படாததே இந்த நிலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

      இந்த மருத்துவ கழிவுகளை பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கொட்டி செல்கின்றனர்.

      சமீபத்தில் கூட கேரளா மாநிலம் கோட்டயத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு மருத்துவ கழிவுகள் மற்றும் மெத்தை கழிவுகளை கொண்டு வந்து ஆலங்குளம் அருகே கொட்டி எரித்து கொண்டிருந்த குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

      எனவே தென்காசி மாவட்டத்திற்குள் தலை தூக்கி வரும் கேரளா கழிவுகளை முழுமையாக நிறுத்திட தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புளியரை செக்போஸ்டில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அங்கு வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். கேரள கழிவுகளை கொண்டு வருபவர்கள் மற்றும் அதற்கு துணை புரியும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட விவசாயி கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

      • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
      • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

      செங்கோட்டை:

      இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

      கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

      இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

      இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

      தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

      பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

      தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




       


      • வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார்.
      • இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

      நெல்லை:

      ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

      மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

      உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.

      வழக்கு

      அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

      • சோதனை சாவடி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
      • கைதானவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

      நெல்லை:

      புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

      இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவகிரி அருகே குமாரபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 48), களப்பாகுளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 லாட்டரிகள், விற்ற பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

      • மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
      • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள மந்தியூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சிக்கு மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், ஊர் நாட்டாமைகள் சுந்தர், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • முத்தையாசாமி தனது தோட்டத்தில் 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.
      • கோழிகளை திருடியது கார்த்தி, சதீஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது

      நெல்லை:

      கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பார்வதியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்தையாசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அச்சன்புதூரில் உள்ளது. அங்கு 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

      சம்பவத்தன்று காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவை அனைத்தும் திருடப்பட்டிரு ப்பதை அறிந்த முத்தையாசாமி, அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

      அதில், கோழிகளை திருடியது அதே ஊரில் வடகாசி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் கார்த்தி(வயது 19), அவரது நண்பர் சதீஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து 10 கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோழிகளை விற்ற பணம் ரூ.14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

      • பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
      • சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

      விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

      குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.

      • கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் தலைமை தாங்கினர்.
      • மாநாட்டில் 5 சட்டமன்ற தொகுதிகள் சார்பில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

      தென்காசி:

      மதுரையில் வருகிற (ஆகஸ்ட்) 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

      தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தென்காசி இசக்கி மஹால் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் தலைமை தாங்கினர்.

      மாநில அமைப்பு செயலாளர் ஆலங்குளம் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், சாம்பவர்வ டகரை வி.பி.மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பொய்கை மாரியப்பன், வீரபாண்டியன், பசுபதி, மாவட்ட இணை செயலாளர்கள் முத்து லட்சுமி, சண்முகப்பிரியா, மாவட்ட பொருளாளர்கள் சாமிநாதன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள் சார்பில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும், மதுரை எழுச்சி மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மகத்தான வெற்றி பெற அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பேசினார்கள்.

      இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டை யன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா, அமைப்பு செயலாளர் கருப்ப சாமி பாண்டியன் இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் ஆகியோர் பேசினார்கள்.

      இதில் மானூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செந்தில்குமார் மற்றும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை,சுரண்டை சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர செயலாளர் சுடலைநன்றி கூறினார்.

      ×