என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது.
    • மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

    பூண்டி, சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

    வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, வேளாண் விஞ்ஞானி சிவகாமி, வேளாண்மை அலுவலர் செல்வகுமார் பங்கேற்றனர். முகாமில் விவசாயிகள் ஜானகிராமன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விஜயகுமார், தாரா, தேவராஜ், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 6 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
    • உதயகுமாருக்கு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார்.

    திருவொற்றியூர், காந்தி நகரை சேர்ந்த உதயபாஸ்கர். அடிக்கடி, அந்த பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்பி உள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து பழகியுள்ளார்.

    அந்த பெண்ணுக்கு காதல் வலை வீசி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அந்த பெண்ணுக்கு தெரியாமல் நெருங்கி பழகியதை தன் செல்போனில் வீடியோ எடுத்து வைத்து அவரை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் அந்த பெண், பெற்றோரிடம் சொல்வதற்கு பயந்து, உதயபாஸ்கருடனான பழக்கத்தை துண்டித்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற உதயபாஸ்கர், அவரை மிரட்டி தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு மிரட்டினார். இல்லையென்றால், வீடியோவை வெளியிடுவேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் பெண்ணின், பெற்றோர், உறவினர்கள் அங்கு ஒன்று கூடி, உதயபாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரது மோட்டார் சைக்கிளையும் நொறுக்கினர். இதனால் பயந்துபோன உதயபாஸ்கர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். உதயகுமாருக்கு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதை மறைத்து, கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி. முடித்துள்ளார்.

    • கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்டசமாாக பொன்னேரியில் 7.6 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீர் வெளியேற முடியாததால் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி அடுத்த கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின் மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், அங்காள பரமேஸ்வரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோர் மழைபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தடப்பரம்பாக்கம் ஊராட்சி ஏ.ஏ.எம் நகர், துரைசாமி நகர் தட பெரும்பாக்கம் காலனி, பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிநிற்கிறது

    மேலும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலையான மீஞ்சூர்-வல்லூர்சாலை, வல்லூர்-திருவொற்றியூர்- மணலி சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 தீயணைப்பு வாகனங்கள், 6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

     

    இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் நிலைய போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மற்றும் தீயணைப்பு குழுவினர் மழைவெள்ளம் பாதித்தபகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் போது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன எந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் ஆபத்துக் காலங்களில் 101,112 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை தாண்டி உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,112 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. 166 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் நீர்வரத்து 258 கனஅடியாக சரிந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 3300 மி.கனஅடி. இதில் 2751 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3231 மி.கனஅடி. இதில் 1867 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 120 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 81 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 434 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 8806 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதால் தொடர்ந்து கனமழை பெய்தால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போரூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போரூர், குன்றத்தூர் சாலையில் உள்ள ஏரியில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மீட்கப்பட்டது பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த கலாவதி (வயது37) என்பது தெரிந்தது.

    திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் சண்முகம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது கலாவதியும் தற்கொலை செய்து உள்ளார்.

    • சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது.
    • அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் உள்ள மழை நீர் அவ்வப்போது சென்னை மக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை கொல்லசேரி அருகே கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியில் பீய்ச்சி அடித்து அருவி போல் மேல் நோக்கி பாய்ந்து கொட்டுகிறது. இதனால் தண்ணீர் வீணாக ஆறாக தரையில் ஓடுகிறது.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    பொன்னேரி:

    வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடியாததால் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து செல்கிறார்கள். பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் முடிக்கப்படாததால் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கடபுரம் சாஸ்திரி தெரு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. துரைசாமி நகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மழைகால முன்எச்சரிக்கையாக மின்மோட்டார், நீர் மூழ்கி மோட்டார், 500 மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி ஆணையர் கோபிநாத் தெரிவித்து உள்ளார். இன்று காலையும் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    • வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை ரேகா கடக்க முயன்றார்.
    • திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பலியானவர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா (வயது22) என்பது தெரிய வந்தது.

    இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். ரேகாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த விரைவு ரெயில் மோதி ரேகா பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
    • சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    திருவள்ளூர்:

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில்,

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும்.

    உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

    சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • கனமழையால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனமழை எதிரொலியால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8 ஆயிரத்து 744 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 74 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து எதிர்பாத்த அளவு இல்லை. இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 930 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. 200 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் கொள்ளளவை எட்டி உள்ளது. 

    சென்னையை சுற்றி உள்ள 12 ஏரிகள் பாதி அளவு மட்டுமே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் மாமல்லபுரம், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி பகுதியில் உள்ள ஏரிகளிலும் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம், பருத்திப்பட்டு, அத்திப்பட்டு, திருத்தணி மற்றும் ராமாபுரம் பெரிய ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விடும். தற்போது தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் ஏரி, குளங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    ×