search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    7.6 செ.மீட்டர் மழை கொட்டியது: மீஞ்சூர்-பொன்னேரி பகுதியில் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
    X

    7.6 செ.மீட்டர் மழை கொட்டியது: மீஞ்சூர்-பொன்னேரி பகுதியில் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது

    • கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்டசமாாக பொன்னேரியில் 7.6 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீர் வெளியேற முடியாததால் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி அடுத்த கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின் மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், அங்காள பரமேஸ்வரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோர் மழைபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தடப்பரம்பாக்கம் ஊராட்சி ஏ.ஏ.எம் நகர், துரைசாமி நகர் தட பெரும்பாக்கம் காலனி, பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிநிற்கிறது

    மேலும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலையான மீஞ்சூர்-வல்லூர்சாலை, வல்லூர்-திருவொற்றியூர்- மணலி சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 தீயணைப்பு வாகனங்கள், 6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் நிலைய போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மற்றும் தீயணைப்பு குழுவினர் மழைவெள்ளம் பாதித்தபகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் போது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன எந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் ஆபத்துக் காலங்களில் 101,112 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×