என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சார்பில் வாட்ஸ்அப் சார்ந்து இயங்கும் ஜியோ மார்ட் வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்னதாக ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் ஆன்லைன் பிரிவாக ஜியோமார்ட் சேவை முதற்கட்டமாக மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது.
புதிய தளத்தின் மூலம் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை கைப்பற்றும் மும்கேஷ் அம்பானியின் திட்டத்தை செயல்படுத்தும் முதல் படியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை சந்தை 2027 ஆம் ஆண்டு வாக்கில் 200 கோடி டாலர்கள் மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் உடன் கூட்டணி அமைப்பதன் மூலம் சிறு வியாபாரங்களுக்காக முதன்மை தகவல் பரிமாற்ற தளமாக வாட்ஸ்அப் செயலி மாறும் என ஃபேஸ்புக் நம்புகிறது.
ஜியோமார்ட் சேவை நாட்டில் பொருட்களை விநியோகம் செய்ய மிகவும் கடினமான சூழ்நிலை இருக்கும் போது துவங்கப்பட்டுள்ளது. எனினும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் நிறுவனம் சோதனையை விரிவுப்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் ஜியோமார்ட் சேவையை விரிவுப்படுத்துவதில், வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.
புதிய சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட் வாட்ஸ்அப் நம்பரை தங்களது மொபைல் போன்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பின் பொருட்களை வாங்குவதற்கான இணைய முகவரி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ்அப் மூலம் மளிகை பொருட்கள் முன்பதிவு செய்யப்பட்டதும், வாடிக்கையாளருக்கு கடையின் விவரங்கள் அனுப்பப்படும்.
எல்ஜி நிறுவனத்தின் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எல்ஜி நிறுவனம் தனது வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வு மூலம் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை எல்ஜி நிறுவனம் 15 விநாடிகள் ஓடும் வீடியோ டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.
புதிய எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 5ஜி வசதி, வாட்டர் டிராப் நாட்ச், 3டிஆர்க் டிசைன் மற்றும் ரெயின்டிராப் கேமரா வழங்கப்பட இருப்பதை எல்ஜி ஏற்கனவே உறுதிப்படுத்தி இருக்கிறது.
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா சென்சார்கள் ரெயின்டிராப் வகையில் பொருத்தப்படுகிறது. புதிய வெல்வெட் சாதனம் பார்ப்பதற்கும் கையில் வைத்து பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தோற்றத்தில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக இருக்கும். சிறப்பம்சங்களள் தற்போதைய வழக்கத்தையொட்டி இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒரே வடிவமைப்பை தழுவி அதிக மாடல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில், எல்ஜி வெல்வெட் முற்றிலும் புதிதாக இருக்கும்.
மொபைல் சாதனங்களில் புதிய பிராண்டிங் பெறும் எல்ஜி நிறுவனத்தின் முதல் சீரிஸ் ஆக எல்ஜி வெல்வெட் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு எண் அடிப்படையில் பெயரிடும் வழக்கத்தை மாற்றி பிரபலம் மற்றும் கவர்ச்சிகர பெயர்களை சூட்ட எல்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய எல்ஜி வெல்வெட் அதிக மென்மையாகவும், பிரீமியம் அனுபவத்தை கொண்டது என்பதை தெரியப்படுத்தும் நோக்கில் சூட்டப்பட்டு இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது.
ரெட்மி பிராண்டின் ரெட்மி 10எக்ஸ் ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்ப்போம்.
சீனாவின் TENAA வலைதளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்று M2003J15SC எனும் மாடல் நம்பருடன் சான்று பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 என கூறப்பட்டது. இந்நிலையில், இதே ஸ்மார்ட்போன் சீன டெலிகாம் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் எல்சிடி ஸ்கிரீன், 13 எம்பி செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெட்மி 10எக்ஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ஆக்டா கோர் பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 13 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5020 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ரெட்மி 10எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்கை புளூ, கிரீன் மற்றும் வைட் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை 999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 10,750 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ரேசர் போன்ற தோற்றத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. வெவ்வேறு வடிவமைப்புகளில் சியோமி நிறுவன காப்புரிமை விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ ரேசர் மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஸ்மார்ட்போனிற்கென சியோமி நிறுவனம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலில் வழங்கப்பட்டது போன்ற டிஸ்ப்ளேக்களை சாம்சங்கிடம் இருந்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் சியோமிக்கு இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் OLED டிஸ்ப்ளேக்களை விநியோகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

சாம்சங் டிஸ்ப்ளே சார்பில் சியோமிக்கு மடிக்கக்கூடிய பேனல்களை வழங்குவதற்கான காலக்கெடு மாற்ற பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலில் உள்ளதை போன்று சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்புறம் இருக்கும் சிறிய டிஸ்ப்ளே நேரம் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கும். உள்புற டிஸ்ப்ளே திறக்கப்பட்டதும் வழக்கமான ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்தலாம்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான தகவல்களில் சியோமி உருவாக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஐந்து பாப் ரக கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனை பயனர் வைத்திருக்கும் நிலைக்கு ஏற்ப ஐந்து கேமராக்களை பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2021 ஆண்டு வாக்கில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதில் மிகவும் மெல்லிய பெசல்கள், டிஸ்ப்ளே நாட்ச் இருக்காது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் மாடல்களில் இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய புதிய செயலியை வெளியிட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மாடல்களில் பயனர்கள் தங்களின் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் ஹெல்த் மாணிட்டர் செயலி முதற்கட்டமாக கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் வெளியிடப்படுகிறது. இதிலுள்ள இதய துடிப்பு சென்சார்களை கொண்டு இரத்த அழுத்தம் டிராக் செய்யப்படுகிறது.
செயலியை வெளியிட சாம்சங் நிறுவனம் முதலில் தென் கொரிய உணவு மற்றும் மருத்துவ பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து மென்பொருளை மருத்துவ சாதனமாக அனுமதி பெற வேண்டும். இதை கொண்டு செயலியை அரசு அனுமதி பெற்ற இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் மென்பொருளாக வெளியிட முடியும்.

இதை பயன்படுத்த பயனர் முதலில் சென்சாரை வழக்கமான இரத்த அழுத்த சோதனை செய்யும் சாதனத்துடன் பொருத்த வேண்டும். பின் ஒவ்வொரு முறை இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய, வாட்ச் இதய துடிப்பு சென்சார் வழங்கும் தகவல்களை கொண்டு இரத்த அழுத்தத்தை கணக்கிடும்.
இரத்த அழுத்த விவரங்கள் சரியானதாக இருக்க ஒவ்வொரு நான்கு வாரத்திற்கு ஒருமுறை சென்சாரில் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய செயலி இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 512 ஜிபி மெமரியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த வகையில், புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சில தகவல்களில் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டெவலப்பர்கள் சார்ந்த வட்டாரங்களின் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிராஜக்ட் சேம்ப் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிராஜக்ட் வின்னர் 2 எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இரண்டும் வெவ்வேறு சாதனங்களா அல்லது ஒரே மாடலா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.59 இன்ச் ஃபிளெக்சிபில் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் வழங்கவும், பேட்டரி பயன்பாட்டை குறைவாக எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் 2213x1689 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இரண்டு பன்ச் ஹோல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும், இதன் முன்புறம் 6.23 இன்ச் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 2267x819 பிக்சல் ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 865 அல்லது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், எஸ் பென் சப்போர்ட், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஏற்படும் இழப்பை சரிகட்ட குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஆண்டின் மீதமுள்ள காலக்கட்டத்தில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஏற்படும் இழப்பீடை சரி செய்து கொள்ள சாம்சங் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது. கேலக்ஸி ஏ51 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன்களை சாம்சங் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களை 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ள சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன்கள் முறையே 499.99 டாலர்கள் மற்றும் 599.99 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்லாம் என கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை சாம்சங் விற்பனைக்கு வெளியிட்ட 11 மாதங்களில் சுமார் 62 சதவீதம் வரை குறைத்தது.
கேலக்ஸி ஏ71 5ஜி மாடல் ஸ்டான்டர்டு மாடலை விட சற்றே வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களில் கேலக்ஸி ஏ71 5ஜி மாடல் புளூ, பிளாக் மற்றும் வைட் நிறங்களில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர கேலக்ஸி ஏ71 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் தவிர குறைந்த விலையில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விவரங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மாடல் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக ஸ்மார்ட் கனெக்டர் இருக்கிறது.
மேலும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் மெல்லியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் இதன் வடிவமைப்பு பார்க்க ஐபேட் ப்ரோ போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் முழு வடிவமைப்பை தெரியப்படுத்துகிறது.

அதன்படி புதிய ஐபோன் 7.39 எம்எம் அளவு தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 11 ப்ரோ 8.10 எம்எம் தடிமனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஐபோன் மெல்லியதாக இருந்தாலும், இதன் கேமரா பம்ப் முந்தைய மாடலை விட தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய ஐபோன் நாட்ச் முந்தைய மாடல்களில் உள்ளதை விட சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஃபிளாட் எட்ஜ்கள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் கனெக்டர் வழங்குவது பற்றிய தகவலும் இடம்பெற்று இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை மூன்று வெவ்வேறு அளவுகளில் வெளியிட இருக்கிறது. இவற்றில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ப்ரோ மாடலுக்கான மேஜிக் கீபோர்டு இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் மேம்பட்ட பிராசஸர், லிடார் சென்சார், கீபோர்டு, மவுஸ் சப்போர்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பில்ட் இன் டிராக்பேட் கொண்ட புதிய மேஜிக் கீபோர்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தற்சமயம் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபேட் ஓஎஸ் இயங்குதளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஐஓஎஸ் 13.4 இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் மவுஸ் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இதை கொண்டு ஐபேட் ப்ரோ மாடலை மிக சுலபமாக இயக்க முடியும். கீபோர்டு கொண்டு டெக்ஸ்ட் எடிட், ஸ்பிரெட்ஷீட் உள்ளிட்டவற்றை இயக்க முடியும்.

ஐபேட் ப்ரோ 11 இன்ச் மாடலுக்கான மேஜிக் கீபோர்டு விலை ரூ. 27900 என்றும், 12.9 இன்ச் மாடலுக்கான மேஜிக் கீபோர்டு விலை ரூ. 31900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 30 மொழிகளுக்கான லே-அவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை மாடல் விலை ரூ. 71900 என்றும், வைபை+செல்லுலார் மாடல் விலை ரூ. 85,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை மாடல் விலை ரூ. 89900 என்றும் வைபை+செல்லுலார் மாடல் விலை ரூ. 103900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் அறிமுகமான இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ. 10900 என்றும் மேம்மபட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ 11 இன்ச் மாடலுக்கான விலை ரூ. 7500 என்றும் 12.9 இன்ச் மாடலுக்கான விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 108 எம்பி கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் புதிய நோக்கியா 9.3 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் அதிக ரெசல்யூஷன் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 120 ஹெர்ட்ஸ் வரையிலான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதில் எல்சிடி பேனல் வழங்கப்படுமா அல்லது OLED பேனல் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேலும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதில் சாம்சங்கின் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி, 24 எம்பி, 20 எம்பி மற்றும் 48 எம்பி சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீடு சிலமுறை மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6.29 இன்ச் QHD+ P-OLED டிஸ்ப்ளே, 2கே ரெசல்யூஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 4500 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது அதிகபட்சமாக 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD + ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன், ஹெச்டிஆர் 10 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி இன்ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS
- 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4300 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் குளோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 53,100 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 58,345 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் HD+ 120 ஹெர்ட்ஸ் 19.8:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.78, OIS + EIS
- 48 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.44, OIS
- 5 எம்பி கலர் ஃபில்ட்டர் கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4510 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்
- 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 68,290 என்றும் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 74,880 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வடிவமைப்பு ஐபேட் ப்ரோ மாடலை தழுவி உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் சீரிஸ் ஐபேட் மாடல்களை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு உயர் ரக மாடல்கள் ஃபிளாட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எட்ஜ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இவை பார்க்க 2018 ஆண்டில் வெளியிடப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் பிளாட் ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஹோம்பாட் ஸ்பீக்கரினை சிறிய அளவில் குறைந்த விலையில் அறிமுகம்செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனம் ஆப்பிள் டேக்ஸ் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதை கொண்டு சாவி மற்றும் வாலெட் போன்றவற்றை டிராக் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதிய ஐபோன் மாடல்களின் வெளியீடு சில வாரங்களாவது தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முன்னதாக வெளியான தகவல்களில் 2020 ஐபோன்கள் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






