search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் கொள்ளை"

    • நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
    • மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம், சாங்வி நகரை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகுவில் தங்கத்தை உருக்கி நகை செய்தல், அடகு கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார்.

    ராம்தேவ் நகை கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.

    சூரஜ் குமார், ராம்தேவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நட்பாக பழகினார். இதனால் ராம்தேவ் குடும்பத்தினர் சூரஜ் குமாரை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்குள் அனுமதித்தனர்.

    இதனால் சூரஜ்குமார் ராம்தேவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது எந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சூரஜ் குமாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சூரஜ் குமார் சமீபத்தில் சொந்த ஊரான சாங்லிக்கு சென்றார். தனது நண்பர்களான நிதின் பாண்டுரங்க ஜாதவ், ஓம்கார் ஜாதவ் ஆகியோருடன் சேர்ந்து முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

    சூரஜ்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் தனுகுவிற்கு வந்தார். நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் முகமூடி அணிந்து முதலாளி வீட்டிற்கு சென்ற சூரஜ் குமார் கும்பல், ராம்தேவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கினர்.

    பீரோவை உடைத்து அதிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். மொத்தம் 8 கிலோ தங்கம் கொள்ளை போனது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூரஜ் குமார் தலைமையிலான கும்பல் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
    • கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை.

    தருமபுரி:

    காரிமங்கலம் அருகே 6 கிலோ தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்தது அம்பலமானது. மேலும், கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கோவையைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர் கடந்த மாதம் 28-ந்தேதி கர்நாடகாவில் இருந்து தங்க நகைகள் வாங்கி காரில் புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    அவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, வண்டியை வழிமறித்து உள்ளே இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி காருடன் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனை அடுத்து நகை கடை உரிமையாளர் பிரசன்னா காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

    அதில் அவர்கள் கொள்ளையடித்து தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காரில் சுற்றி அலைந்து விட்டு மறுநாள் தப்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த குற்றவாளிகளை 10 தனிப்படையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதில் சென்னையில் கடத்தப்பட்ட தங்கம் 6 கிலோ மற்றும் ரூ. 19.50 லட்சம் பணம் பிடிப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் சுஜித், சரத், பிரவீன் தாஸ், ஆகிய 3 பேரை கோவையில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சீரல் மேத்யூ ஆகிய 2 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 9 குற்றவாளிகளிடம் இருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் பணத்தில் இருந்து ரூ. 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு கார் வாங்கியுள்ளனர். இதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார் என மொத்தம் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஆகியோர் நேரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், நகைக்கடை வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து திட்டம் போட்டு அவர்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களின் செல்போன் அழைப்புகளை எளிதில் கண்டுபிடித்து விடாத படியான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும், இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

    கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை. அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் பணத்தை மட்டுமே குறி வைத்து திட்டமிட்டு கொள்ளையடித்து பங்கு பிரித்துக்கொண்டு தப்பி செல்லும் கும்பல் என்றும், பெங்களூரில் இருந்து வந்த காரில் பணம் மற்றும் தங்கம் இருப்பதை நோட்டமிட்டு அறிந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.

    உடனடியாக தங்கத்தை விற்றால் எப்படியும் பிடிபட்டு விடுவோம் என நினைத்து பதுக்கி வைத்திருந்தனர். அதனையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    தலைமறைவாகியுள்ள கும்பலின் முக்கிய தலைவன் உட்பட 6 பேரை பிடிக்க போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது.

    கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் 9 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்பெங்களூரு சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் 5 கிலோ கொள்ளை சம்பவம் நடந்தது. கோவையை சேர்ந்த பிரசன்னா என்பவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தி்ல் தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் கோவை ராஜவீதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு பெங்களூரில் 5 கிலோ தங்க நகைகள் வாங்கி கொண்டு கார் ஒன்றில் தருமபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது, காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தங்கம் எடுத்து வந்தவர்களை தாக்கி விட்டு காருடன் தங்கத்தை கடத்தி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த 4 பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.

    இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரி்ல் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரைண நடந்து வருகிறது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தருமபுரி-சென்னை ரோட்டில் திப்பப்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையிலுள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாடி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில், தங்கம் எடுத்து வரப்பட்ட கார் கடத்தலில் ஈடுபட்டவர்களின் கார் பதிவெண்களின் விபரம் எதாவது கிடைக்கிறதா? என்பது குறித்தும் காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களில் கார்கள் பயணித்தது பதிவாகியிருக்கிறதா? என்பதும் குறித்தும் தனிப்படை சோதனை செய்து வருகிறது.

    இந்நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். 

    • தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி சேஷாராம் என்பவரை திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சரவணன், ஆதித்யா என்கிற 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எழிலரசன் என்ற வாலிபர் 3-வதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கண்காட்சி போல் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    • சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.
    • தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை நகை வியாபாரியை வெட்டி கொள்ளைகும்பல் ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று நகைகள் விற்று வந்தார். அவரே மோட்டார் சைக்கிளில் நகைகளை எடுத்து சென்று கொடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை சேஷாராம் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்துவிட்டு மோட்டார் சை்ககிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் வைத்திருந்த கைபையில் மேலும் 1 கிலோ தங்கம் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்தது.

    மாலை 5 மணி அளவில் திருவள்ளூர் அருகே சென்னை-ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் வளைவில் திரும்பிய போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் திடீரென சேஷாராமை வழிமறித்தனர். அவர்கள் அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி நகை-பணத்தை கொடுக்கும் படி மிரட்டினர். ஆனால் சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளைகும்பல் சேஷாராமை கத்தியால் வெட்டிவிட்டு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சேஷாராம் வைத்திருந்த ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் இருந்த பையை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும்ட சேஷாராம் வந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம கும்பல் பறித்து விட்டு ஓட்டிச்சென்று விட்டனர்.இந்த தாக்குதலில் சேஷாராமின் இடது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    நகை-பணம் கொள்ளைபோனதால் அதிர்ச்சி அடைந்த சேஷாராம் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்த வந்து விசாரணை நடத்தினர். மேலும் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அருகில் உள்ள மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே வெள்ளக்குளம் அருகே நகை-பணத்துடன் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென பழுதானது. அதனை 2 கொள்ளையர் சரிசெய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட கொள்ளையர்கள் இருவரும் ஓதிக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன்(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவர்களிடம் சேஷாராமிடம் இருந்து பறித்துச் சென்ற 1 கிலோ தங்கம் ரூ.5 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேஷாராம் நகை-பணத்துடன் வந்து செல்வதை அறிந்து கொள்ளையர் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். ஆனால் நகை-பணத்துடன் சென்ற கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் பழுதானதால் அவர்கள் சிக்கியதுடன் நகை-பணமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் தப்பி செல்லும் வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பெரியபாளையம்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால். இவர் நெற்குன்றத்தில் தங்கநகை செய்து விற்கும் தொழிலும் அடகுகடையும் நடத்தி வருகிறார். இவர் வியாபாரிகளிடம் மொத்தமாக ஆர்டர் பெற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு ஊழியர்கள் மூலம் நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கடை ஊழியர் சோகன், காலுராம் ஆகியோர் 1½ கிலோ தங்கநகை மற்றும் வசூலான ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி வந்தனர்.

    வெங்கல் அருகே மாகரல்-காரணி கிராமத்துக்கு இடையே வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென நகைக்கடை ஊழியர்கள் சோகன், காலுராமை வழிமறித்து 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்த பையை பறித்தனர்.

    இதனை தடுக்க முயன்ற சோகனை அரிவாளால் வெட்டி விட்டு கொள்ளையர் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை தொடர்பாக நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
    • அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    திருச்சி :

    திருச்சி ஏர்போர்ட் அன்பு நகர், அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் (வயது 29). இவர் திருச்சியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது வழக்கம். இவரது வீட்டின் அருகில் இவரது தாத்தா சுப்பிரமணியன் (65) ஓய்வு பெற்ற ரயில்வே பரிசோதனராக பணிபுரிந்து வந்தவரின் வீடு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மாலை சுமார் 5 மணியளவில் நித்திஷின் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாத்தா சுப்பிரமணியன், வீட்டின் உள் நுழைவதற்கு முற்பட்டபோது, அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.

    வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதி வுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • மீனா தினமும் தனது வீட்டில் இருந்து தங்க தட்டு, விசிறி, குவளை போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்து பூஜை செய்வார்.
    • பூஜை முடிந்தவுடன் தங்க பூஜை பொருட்களை ஒரு பையில் போட்டு மீனா ஓரமாக வைத்தார்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம், ரங்கநாதன் அவென்யூவில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலின் துணை தலைவர் கிம்ராஜ் (வயது 50). இவருடைய மனைவி மீனா, தினமும் தனது வீட்டில் இருந்து தங்க தட்டு, விசிறி, குவளை போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்து பூஜை செய்வார்.

    இதேபோல நேற்று காலை மீனா தங்க பூஜை பொருட்களை தனது வீட்டில் இருந்து கொண்டு வந்து பூஜை செய்தார். பூஜை முடிந்தவுடன் தங்க பூஜை பொருட்களை ஒரு பையில் போட்டு ஓரமாக வைத்தார். பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சாமி கும்பிட்டார்.

    3 முறை சுற்றி வந்தவுடன் தங்க பூஜை பொருட்கள் உள்ள பையை எடுக்க வந்தார். ஆனால் அதை காணவில்லை. மர்ம நபர் ஒருவர் அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக கீழ்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோவில் கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் தங்க பூஜை பொருட்கள் அடங்கிய பையை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×