search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிகேவாசன்"

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    ×