search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழடி அருங்காட்சியகம்"

    • கீழடி அருங்காட்சியகத்தை வார இறுதி நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை முதன்மை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். தற்போது 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் நடைபெறுகிறது.

    கீழடி அருங்காட்சியகத்தை தமிழக அரசின் முதன்மை செயலர் (சிறப்பு ெசயலாக்க திட்டம்) உதயசந்திரன் பார்வையிட்டார். இங்கு கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு செய்தார். பின்னர் உதயசந்திரன் கூறியதாவது:-

    அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அவற்றை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ18.42கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதி களை மேம்படுத்தும் வகையில் அரசின் அறிவுரையின்படி துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறை, சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்ப தற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில் மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும், அருங்காட்சியத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதில்அ றிந்துகொள்ளும் வகையில் நிறுவுவதற்கும், கூடுதலாக காற்றோட்ட வசதி களை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறைசார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த பகுதிகளை சேர்ந்தவர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வார இறுதி நாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக ஒரு மணிநேரம் மாலை வேளையில் அதிகரிக்கவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்தம், அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்களை நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகளிர் சுயஉதவி குழுக்களின் சார்பில் இயங்கிவரும் சிற்றுண்டி உணவ கத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கவும், அதற்கான விலை பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிபடுத்துவது என இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • கீழடி அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி முதல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசி ரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அனைவருக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அதிகளவில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொல்லி யல் ஆர்வலர்கள், பொது மக்கள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

    கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின் இந்தியாவிற்கான தூதர் குழுவினரோடு வந்து பார்வையிட்டு வியந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் பொது தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகளின் வருகை குறைவாக உள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அரசு செலவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும். மதுரையில் உள்ள விமான நிலையம், ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள், வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் பெரிய அளவிலான ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும்.

    இதேபோல் மதுரை- விரகனூர் ரிங்ரோட்டில் இருந்து கீழடி அருங்காட்சிய கம் வரை அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
    • வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். மறுநாளில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் உள்நாட்டினை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படும். வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கீழடி அருங்காட்சியகம் சென்றால் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
    • தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா இன்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, வெங்கடே சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், பொது நூலகங்களின் இயக்குநர் இளம் பகவத், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான் ஷுநிகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும். உலக தமிழ்ச் சங்கம் உருவாகிய மதுரையில் வைகை இலக்கிய விழா நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

    கீழடி அகழாய்வு மூலம் தமிழ் சமூகம் பழமை வாய்ந்தது என்பதை வாய்மொழியாக கூற வில்லை. அறிவியல் பூர்வ மாக நிரூபித்து உள்ளோம். எனவே தமிழகம் முழுவதும் வசிக்கும் மாணவர்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்றால் கீழடி அருங்காட்சியகத்துக்கு வாழ்நாளில் ஒரு முறை யாவது வந்து பார்க்க வேண்டும்.

    தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும். தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் வைகை இலக்கிய விழா நடத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
    • 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்ல உள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    மேலும் இன்று மாலை, சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி களஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பங்கேற்கிறார். இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    • கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதாக அமைச்சர் கூறினார்.
    • மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன.

    மதுரை

    மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, "உலக மரபு வார விழாவை" முன்னிட்டு நடத்திய 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கல்வெட்டு மைபடிகளை பாதுகாப்பதற்கோ, ஆய்வு கள் மேற்கொள்வதற்கோ, மைபடிகள் குறித்து வடிவ ங்களை உருவாக்குவதற்கோ இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் அளவீட்டுத்துறைக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இது வரலாற்றில் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது.

    1919-ம் ஆண்டு வரைதான் தென் இந்தியாவில் இருந்து மைல்படிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 50 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத கல்வெட்டுக்களும் கிடைத்து விட்டால் அவற்றின் மூலம் நாம் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? என்றும், காட்சிப்படுத்தும் பொருள் குறித்து குறிப்புகள் இடம் பெற வேண்டும், பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும்? என்று திட்டமிடப்பட்டு 2 மாத காலங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று முதலமைச்சரால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில் கலெக்டர்அனீஷ் சேகர் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×