search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் எரிப்பு"

    • அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.

    இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

    இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.

    மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    • மதுபோதையில் அனீஸ்குமார் தான் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்பட்டது.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள குதிரைப்பந்தி விளை பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ்குமார் (வயது 28), தொழிலாளி.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (38). இவருக்கும் அனீஷ்குமாருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெங்கடேஷ் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரின் மேல்பக்கம் மற்றும் முன்பக்கம் சேதமடைந்தது.

    மதுபோதையில் அனீஸ்குமார் தான் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்பட்டது.

    இதுகுறித்து இரணியல் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அனீஷ் குமாரை கைது செய்தனர்.

    • காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.
    • போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள குளக்கரை அருகே பென்ஸ் சொகுசு கார் ஒன்று நேற்று இரவு நின்றது. அதில் இருந்த காதல் ஜோடி தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதல் ஜோடி காரில் இருந்து இறங்கி கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் ஆவேசம் அடைந்த காதலன் திடீரென காருக்கு தீவைத்தார். காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.

    இரவு நேரத்தில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறில் கார் எரிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    போலீசார் அங்கிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். இதில் காதலன் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. அவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு மருத்துவம் படித்து முடித்து உள்ளார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.

    நேற்று மாலை மாணவியை சந்திக்க காதலன் வந்து உள்ளார். பின்னர் அவர்கள் காரில் சுற்றியபடி காஞ்சிபுரம் ராஜகுளம் குளக்கரை அருகே வண்டியை நிறுத்திவிட்டு பேசியபடி இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மாணவி பேச மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த காதலனான டாக்டர் தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை தீவைத்து எரித்து இருப்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் எரிப்பு தொடர்பாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    காதலி பேச மறுத்ததால் காதலன் தனது சொகுசு காரை தீவைத்து எரித்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனோஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.
    • அதன்படி ராமநாதபுரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

    ராமநாதபுரம் கேணிக்கரை திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பா.ஜ.க. ஆதரவாளரான அரசு டாக்டர் மனோஜ்குமார் கிளினிக்கில் நிறுத்தப்பட்ட 2 கார்களுக்கு 3 மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து டூவீலரில் தப்பினர்.

    தீப்பற்றியதும் பக்கத்து வீட்டாரின் சத்தம் கேட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அதிக சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து டாக்டர் மனோஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

    அதன்படி ராமநாதபுரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் விசாரணை நடந்தது.

    இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (28), அப்துல் அஜிஸ் (30) ஆகியோரையும் கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

    • நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர்.
    • போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் கார், ஆட்டோக்களையும் உடைத்து சென்றனர்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விடிய விடிய ரோந்தும் சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூலப்பாளையம் பகுதியில் பா.ஜனதா பிரமுகர் தட்சிணாமூர்த்தி என்பவர் பர்னிச்சர் கடைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி ஜன்னல் வழியாக தீ வைத்து வீசினர். இதில் கடைக்குள் மேஜை மற்றும் ஜன்னல் லேசாக எரிந்து அணைந்து விட்டது.

    இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பா.ஜனதா பிரமுகரின் கார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி 4-வது வீதியை சேர்ந்தவர் சிவசேகர் (51). இவர் பு.புளியம்பட்டி நகர பா.ஜனதா பிரச்சார அணி முன்னாள் துணை தலைவராக பதவி வகித்தார். தற்போது இவர் பா.ஜனதாவில் இருந்து கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான 5 கார்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நேற்று இரவு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு சிவசேகர் வெளியே ஓடி வந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    பின்னர் பு.புளியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற 4 கார்களும் தப்பியது.

    இதுபற்றி தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் நீலகண்டன், சேகர், இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், குருசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் யாரோ காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை சோதனை செய்தனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் பு.புளியம்பட்டி போலீசில் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீ வைத்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 200 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • திண்டிவனத்தில் மர்மமான முறையில் வக்கீல் கார் எரிந்து நாசமானது.
    • மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லிக்கோண்டான் திமுக பிரமுகர். ஒலக்கூர் வழக்கறிஞர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று இரவு ஊரல் கிராமத்தில் உள்ள தனது வயல்வெளியில் 4 சக்கரவாகனத்தை நிறுத்துவது வழக்கம். அதேபோல தனது மகேந்திரா பொலிரோ காரை நிறுத்திவிட்டு திண்டிவனத்துக்கு சென்று விட்டார். அங்கு திடீரென அந்த காரானது தீ பற்றி எரிந்தது இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக திண்டிவனம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் காரில் பரவியை தீயை அணைத்தனர். அதற்கு முன்பாக கார் முழுவதும் தீயில் கருகியது. இது குறித்து ரோசனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். வழக்கறிஞரின் கார் மர்மமான முறையில் எரிந்து நாசமானது பரபரப்பு ஏற்பட்டது.தீயை மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×