search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை தொழிலாளர் உதவித்தொகை"

    ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #SpecialAssistance #TNgovt
    சென்னை:

    வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என்றும், மனுதாரர் அந்த அரசாணை நகலை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அத்துடன், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அரசாணை மற்றும் தமிழக அரசின் வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க தடையில்லை என அறிவித்தனர்.



    அதன்பின்னர் அரசாணையில் திருத்தம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி கருணாநிதி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த அரசாணை வரைவு அரசாணை என்றும், அரசு தாக்கல் செய்தது அசல் அரசாணை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வரைவு அரசாணை வெளியானது குறித்து விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SpecialAssistance #TNgovt
    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். #LSPolls
    சென்னை:

    விவசாயிகளுக்கு 3 கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியை மத்திய அரசும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியை தமிழக அரசும் அறிவித்தது.

    இதற்காக தமிழகம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு முதல் தவணையாக மத்திய அரசின் ரூ.2 ஆயிரம், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் இப்போது ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்படாது என்றும் தேர்தல் முடிந்த பிறகுதான் வழங்கப்படும் என்றும் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 45 லட்சம் குடும்பத்துக்கு பணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் இன்னும் 15 லட்சம் பேருக்கு மட்டும்தான் வழங்க வேண்டி உள்ளது” என்றும் தெரிவித்தனர். #LSPolls
    60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #EdappadiPalaniswami
    சென்னை:

    ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.

    விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

    இதற்காக ரு.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துணை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ரூ.2 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள்.

    இந்த திட்டத்தில் பட்டியல் எடுக்கும் போது விடுபட்ட பயனாளிகள் இருந்தால் அவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்புநிதி வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ministerkamaraj #SpecialAssistance

    திருவாரூர்:

    தமிழ்மொழி காவலர் உ.வே.சாமிநாதய்யர் 165வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலைக்கு அமைச்சர் இரா.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டக் கலெக்டர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்வர் அறிவித்திருந்த இந்த சிறப்புநிதியினை பெற அனைத்துவகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்றசில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, தொழிலாளர்கள் தங்களுக்கு சிறப்புநிதி கிடைக்குமா? என்று கேட்டு வருகின்றனர். அவர்களின் கருத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    அப்போது சிறப்புநிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்துவகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்புநிதி வழங்கப்படும். இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்புநிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministerkamaraj #SpecialAssistance 

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழை மக்களுக்கு போய் சேராது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #Elangovan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.

    அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கூட சரியான கூலி கொடுக்காமல் குறைந்த கூலியை கொடுக்கிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
    வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #specialfinancialassistance #MadrasHC
    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி 110-வது விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

    தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.



    இதில் சுமார் 60 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த தொகை இம்மாத இறுதிக்குள் அனைவரது வங்கி கணக்கிலும் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

    முதலமைச்சரின் இந்த திட்டத்துக்கு எதிராகவும் பணம் அளிப்பதற்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் முறையீடு செய்தார்.

    இன்று இம்மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில விளக்கங்களை அளித்தார்.

    கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலும், மாநிலத்தில் உள்ள 17 தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக கண்டறிடப்பட்டுள்ளன.

    இவற்றில் 32.13 லட்சம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும் 23.54 லட்சம் குடும்பங்கள் நகர்புறங்களிலும் வசித்து வருகின்றன. அரசின் இந்த சிறப்பு நிதியுதவியை பெறுவதற்கு தகுதியான குடும்பங்களை கணக்கெடுக்கும் பணியில் 55 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பரிமாற்ற முறையில் இந்த சிறப்பு உதவித்தொகையை அரசு நேரடியாக செலுத்தவுள்ளது என அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    இதைதொடர்ந்து, அரசின் இந்த உத்தரவுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #specialfinancialassistance #MadrasHC  #BPLfamilies #BPLfamiliesinTN
    ×