search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எவரெஸ்ட் சிகரம்"

    • விருதுநகர் இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
    • ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் நாராயணன்-மூர்த்தி அம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி(வயது33). இவர் சென்னையில் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்செல்வி அதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே 23-ந்தேதி முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதற்காக ஏற்கனவே தமிழக அரசு அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. இந்த நிலையில் முத்தமிழ்செல்வி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தனது 2-வது முயற்சியாக தற்போது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    • எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகிறார்.
    • மலை ஏறும் பருவத்தின்போது மலை ஏறுபவர்கள் மீட்கப்படுவது முன்னிலை படுத்தப்படுகிறது.

    எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய மலை ஏறுபவரை தைரியமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெஸ்மன் தமாங் என்ற மலையேற்ற வீரர் டூவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந்தேதி தமாங் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகிறார். மீட்பு பணியாளர்கள் அவரது தோள்களில் கயிற்றை கட்டி மீட்பது போன்று காட்சிகள் உள்ளது. இதுதொடர்பான அவரது பதிவில் எவரெஸ்ட் சிகரத்தில் பல துணிச்சலான மீட்புகள் நடைபெறுகின்றன.

    மலை ஏறும் பருவத்தின்போது மலை ஏறுபவர்கள் மீட்கப்படுவது முன்னிலை படுத்தப்படுகிறது. ஆனால் வழிகாட்டிகளையும் மீட்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். மலையேறிகளின் கனவுகளை நனவாக்கும் வழிகாட்டிகளின் தியாகங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அனைத்தையும் நாம் நினைவு கூற வேண்டும் என்ற குறிப்புடன் வெளியான இந்த வீடியோவை பார்த்த இணையதள பயனர்கள் மீட்பு பணியை செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார்.
    • 60 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி

    கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷரத் குல்கர்னியும், அவரது மனைவி அஞ்சலியும் மலையேற்ற வீரர்கள். இருவரும் உலகின் உயரமான ஏழு சிகரங்களிலும் ஏற முடிவு செய்தனர். இதற்காக தீவிர பயிற்சி எடுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து 2019ம் ஆண்டு மே 22ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயாரானார்கள். ஆனால், மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார். அப்போது எப்படியும் சிகரத்தில் ஏற வேண்டும் என அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்.

    எனவே, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவு செய்தார். அதன்படி, மனைவி இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    இந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்தமிழ்செல்வி கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார்.
    • முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ''ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்'' மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார்.

    நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.

    இவர் கடந்த ஏப்ரல் 2- ந்தேதி சென்னையில் இருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19-ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075அடி 6119 மீட்டர் உயரம்) அடைந்தார். மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.

    உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28-3-2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

    இந்நிலையில், சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
    • மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார்.

    காத்மாண்டு:

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர்.

    அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் இன்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.

    அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

    கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். மலையேற்றம் தடை செய்யப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தில் ஏறி உள்ளார்.

    தென்கிழக்கு மலைமுகட்டு பாதையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் பயன்படுத்தினர். அதன்பின்னர் இந்த பாதையில் அதிக வீரர்கள் பயணிக்கத் தொடங்கி, தற்போது மிகவும் பிரபலமான பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கமி ரீட்டாவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார். அவர் கடந்த வாரம் இந்த சாதனையை எட்டினார்.

    பிரிட்டனைச் சேர்ந்த கென்டன் கூல் என்ற வீரர், 17வது முறையாக கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இவர் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • மரண மண்டலம் என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார்.
    • எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக 'மரண மண்டலம்' என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், 'சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்' என்றார்.

    எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

    • முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார்.
    • 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

    பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

    43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.

    இரட்டை கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், அந்த பிரிவில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

    2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

    பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள்.
    • பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

    எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்ற பெற தமிழக வீராங்கனை முத்தமிழ்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள் என்றும் பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்.

    எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

    எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.
    • முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    சென்னை :

    எந்தவொரு சாதனையின் உச்சத்தையும் நாம் எவரெஸ்ட் சிகரத்தோடுதான் ஒப்பிடுகிறோம். அத்தகைய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார்.

    இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற முத்திரையோடு தமிழகம் திரும்புவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் அவர் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

    சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவு. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதித்தார். அதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஏசியன் டிரெக்கிங் நிறுவனத்தின் 37 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது பயணத்தை தொடங்கினார்.

    இதுகுறித்து முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

    எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்ததும் ஏசியன் டிரெக்கிங் எனும் தனியார் நிறுவனத்தை அணுகினேன். அப்போது அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதென்றால் மலையேறும் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 5 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நான் மலையேறும் படிப்பை முடிக்காததால் காஷ்மீர் லடாக்கில் உள்ள 6 ஆயிரத்து 496 மீட்டர் உயர மலையில் ஏறுவதாக தெரிவித்தேன். அதன்படி, அந்த மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதிபெற்றேன். எவரெஸ்ட் சிகரம் ஏற தகுதிபெற்ற அதேவேளையில் இந்த சாதனையை நிறைவேற்ற பொருளாதார நெருக்கடி முட்டுக்கட்டையாக இருந்தது.

    எவரெஸ்ட் மலையேற ரூ.45 லட்சம் வரை தேவைப்படும் என தெரிவித்ததும் சாதிக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

    இதன்காரணமாக அடுத்தகட்டமாக தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கினேன். முதற்கட்டமாக எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் ரூ.20 லட்சம் நிதி திரட்டினேன்.

    இந்தநிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் மலையேற இருப்பது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டிக்கு தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர் அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    அதேவேளையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் உதவினார். இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையோடு திரும்புவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மீண்டும் மலையில் இருந்து இறங்குவது என இந்த பயணம் முடிவடைய 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

    முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    • எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
    • முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைய தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இலக்கை அடைபவர்கள் வெற்றியாளர்களாகவும், தவறவிட்டவர்கள் அனுபவ சாலியாகவும் மாறுகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்க ஆர்வம் ஏற்படும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க சிறுவயதில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் கனவு விரைவில் நனவாக உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் தவசியம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வருகிறது. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த 8-ந்தேதி மகளிர் தினத்தன்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ் செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோல் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியையும் தனி பெண்ணாக சென்று முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டி அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    அதன்படி தற்போது முத்தமிழ் செல்வி உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க நிதி உதவியாக தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    இது குறித்து முத்தமிழ் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை முடித்துள்ளேன். அடுத்த கட்ட இலக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைவது தான். அதன் உச்சியை அடையும் முதல் தமிழ் பெண்ணாக இருந்து சாதனை படைப்பேன். இந்த சாதனையை செய்வதற்கு நிதி உதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    எவரெஸ்ட் சிகர பயணத்தை 5-ந் தேதி மேற்கொள்ள உள்ளேன். இதற்காக 2-ந் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரம் அடைவதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மனிஷா வாக்மர் எவரெஸ் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். #ManishaWaghmare #MountEverest
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர்  மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.

    இவர் பல உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மிக உயரமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி மனிஷா புதிய சாதனை படைத்தார். நேற்று இரவு தனது பயணத்தை தொடங்கிய மனிஷா, எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.


    மனிஷா விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மகாராஷ்டிரா அரசு சிவ் சத்ரபதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ManishaWaghmare #MountEverest

    ×