search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி இடைத்தேர்தல்"

    • வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 10 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் குவிந்து இருந்தனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுப்பராயன் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 4,510 வாக்காளர்களில் 2,597 பேர் வாக்களித்து இருந்தனர். 57.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    ஆரம்பம் முதலே தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 1759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வேணுகோபால் 568 வாக்குகள் பெற்று இருந்தார். தி.மு.க.வேட்பாளர் சுப்பராயன் 1191 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 34 ஆக அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.-8, பா.ம.க.-2, பா.ஜனதா-1, சுயேட்சைகள்-6 உறுப்பினர்கள் உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 15-வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சுதா உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சுதா முதல் சுற்றில் 478 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் யோகசுந்தரி 311 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

    இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் கிராம ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக வேணி கண்ணன் வெற்றி பெற்றார். பதிவான 603 ஓட்டுகளில் அவர் 368 வாக்குகள் பெற்று இருந்தார். 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சேகா் உள்பட 7 பேர் போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக சீத்தாராமன் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் உள்ள 259 வாக்குகளில் 152 வாக்குகள் பெற்று இருந்தார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக செல்வன் வெற்றி பெற்றார். பதிவான 509 வாக்குகளில் 187 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

    பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 329 ஓட்டுகளில் அவர் 161 வாக்குகள் பெற்று இருந்தார். 7 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
    • நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 1 மற்றும் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண்- 4, வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 7, வேப்பூர் ஒன்றியம் கீழப்புலியூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 8 என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவி ஜெகவள்ளியும், இரூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்லில் மொத்தம் 5 ஆயிரத்து 592 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 11 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    இதில் மேலப்பூலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆயிரத்து 604 ஆண்களும், ஆயிரத்து 908 பெண்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 512 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 71.87 சதவீதமாகும். அதே போல் பிலிமிசை ஊராட்சி 1 வது உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 76 ஆண்களும், 108 பெண்களும் என மொத்தம் 183 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இது 84.32 சதவீதமாகும். வி.களத்தூர் 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 86 ஆண்களும், 152 பெண்களும் என மொத்தம் 238 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 64 சதவீதமாகும்.தேர்தல் பணியில் 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 120 போலீசாரும் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.

    ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஓட்டு பெட்டிகள் வைக்கும் அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு அறை கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    வரும் 12ம்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வரும் 14ம்தேதியுடன் தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் வரும் 15ம் தேதி பதவி ஏற்கவுள்ளனர்.

    • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.
    • திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர் மொத்தம் 346 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாலையில் வாக்குப்பதிவு முடிந்தபோது பூத் ஏஜெண்டுகள் அ.தி.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் 289 வாக்குகள் பதிவானதாக தெரிவித்தனர்.

    ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 329 வாக்குகள் பதிவானதாக கூறினர். இதனால் 40 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதிவானது என தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாக்குகள் பதிவான எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி களைந்து போகச்செய்தனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது, ' புகார் அளித்தால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டது.

    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
    • அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    செங்கல்பட்டு:

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 ஊரக உள்ளாட்சி பதவிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளன. இந்த 15 பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடந்தது.

    3 மாவட்டங்களிலும் இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்லச்செல்ல வாக்குப் பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 36-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம. மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, ஒரு சுயேட்சை என 6 பேர் போட்டி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த வார்டில் 2,154 ஆண் வாக்காளர்கள், 2,356 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,510 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுளன.

    ஓட்டுபோட வந்த வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தனர். இன்று மாலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து வாக்களித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிவபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 2 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை முதல் பொதுமக்கள் வந்து வாக்களித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான 15-வது வார்டில் பாக்கம் மற்றும் சிலாவட்டம் ஊராட்சி ஆகியவை உள்ளன. இந்த வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    இங்கு 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ரூ.3,800 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காலையில் இருந்தே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திம்மாவரம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேட்சையாக 2 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடைபெற்றது.

    நன்மங்கலம் ஊராட்சியில் 2,850 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 4 பேர் போட்டியிட்டனர். இங்கு வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டு வருகிறார்கள். இதேபோல் திரிசூலம் 1-வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் 10-வது வார்டு பதவிக்கும், பொன்பதிர் கூடம் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் மேல் ஊராட்சியில் 3-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை என 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

    காலை 7 மணிக்கு அகரம் மேல் சன்னதி தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள்.

    மீஞ்சூர் ஒன்றியம் மெதுர் ஊராட்சியில் காலியாக உள்ள 3-வது வார்டில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு 328 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள அரசு பள்ளியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 8 மணி வரை ஓட்டுபோட யாரும் வரவில்லை. அதன்பிறகு ஒருசில வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.

    சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இங்கு 1014 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காந்திநகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிகரம் 1-வது வார்டில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் இணையவழி, கண்காணிப்பும், மற்ற வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.சி. கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுகின்றன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்குச்சாடியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கி 27ந் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பதவிகளுக்கு 14 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்காளர்கள் உள்ளனர். இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். வாக்குச்சாடியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.
    • எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக இன்று (7-ந் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும். வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

    மேற்படி நேரத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

    மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியும், மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • விடுமுறை வழங்காத பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி ஒன்றியத்தில் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், அய்யம்பாளையம் 6-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் இச்சிப்பட்டி 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் 1-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இடைத்தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேர்தல் நடக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.

    தவறும்பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×