search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேச அரசு"

    உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாநிலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த கிராம மக்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் நேற்று விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.

    குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    உத்தர பிரதேசத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. #UPBudget2019 #UPAssembly
    லக்னோ:

    பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அவர் உரையாற்றி முடிந்ததும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால், 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

    அயோத்தியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பட்ஜெட்டில் 101 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கங்கை நதிக்கரையில் இருந்து வாரணாசியில் உள்ள விஸ்வநாத் கோவில் வரையிலான சாலையை விரிவாக்கம்  செய்து அழகுபடுத்தும் திட்டத்திற்கு ரூ.207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாரணாசி, மதுரா, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.3522 கோடி, புதிய அதிவிரைவு சாலைகள் அமைக்க ரூ.3194 கோடி, பொதுப்பணித் துறையின் கீழ் சாலைகள் அமைக்க ரூ.13,135 கோடி, பாலங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.2100 கோடி என பல்வேறு திட்டப்பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #UPBudget2019 #UPAssembly
    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக தொகுதிகள். அங்கு 80 தொகுதிகள் இருப்பதால், நாட்டை ஆளத்துடிக்கும் கட்சிகளின் அதீத பார்வை அந்த மாநிலத்தின் மீது எப்போதுமே விழுகிறது. #ParliamentElection #Election2019
    மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவு பெற இருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி வரவேற்க தொடங்கி உள்ளன. நாட்டு மக்களும் பாராளுமன்ற தேர்தலை விவாதத்துக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக தொகுதிகள். அங்கு 80 தொகுதிகள் இருப்பதால், நாட்டை ஆளத்துடிக்கும் கட்சிகளின் அதீத பார்வை அந்த மாநிலத்தின் மீது எப்போதுமே விழுகிறது. அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி தொடர்பாக அந்த மாநிலத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டி இருக்கிறது. இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி கரம் கோர்த்து விட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட, கடந்த தேர்தலில் 71 தொகுதிகளை அள்ளி ஆட்சி மகுடம் சூட்டிக்கொண்ட பா.ஜனதாவும் பதறி போய் நிற்கிறது.

    தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேவேகவுடா பாணியில் பிரதமர் பதவியை கைப்பற்றுவது அல்லது பெரும்பான்மை பலம் இன்றி யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் மீது சவாரி செய்வது தான் மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் திட்டம்.

    இந்த மாநிலத்தை குறிவைத்து காங்கிரசில் திடீரென பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டு விட்டதை போல வேறு என்ன அதிசயம் நடக்கபோகிறது என்பது எல்லாம் போகப்போக தெரியும்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 2-வது பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு 48 தொகுதிகள் உள்ளன. இதனால் இந்த மாநிலத்தையும் தேசிய கட்சிகள் குறிவைக்கின்றன.

    இந்த மாநிலத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என மாநில கட்சிகளும் கோலோச்சி வருகின்றன.



    கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 42 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 23 தொகுதிகளை கைப்பற்றி மோடி அரியணை ஏற மராட்டியம் உதவியது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 6 இடங்களில் மட்டுமே தடம் பதித்தது.

    நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியவற்றில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முந்திக்கொண்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. இருகட்சிகளும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினிலும் சில தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு விட்டு கொடுத்து மகா கூட்டணிக்கும் ஆயத்தமாகி வருகிறது.

    ஆனால் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசில் அங்கம் வகித்து கொண்டு இருக்கும் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு போக்கு காட்டி வருகிறது.

    அவர்கள் (காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூடி விட்டார்கள், இதனால் நாமும் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் தேர்தல் முடிவு எதிர் அணிக்கு சாதகமாகி விடும் என்று பா.ஜனதா கூவி கூவி பார்க்கிறது. சிவசேனாவோ டிமிக்கி கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைத்தே போட்டியிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மராட்டியத்தை பொறுத்தவரை நாங்கள் தான் பெரிய அண்ணன். எனவே எங்களுடன் கூட்டணி பேச பா.ஜனதா தான் முன்வர வேண்டும் என்று சிவசேனா அதிரடியாக அறிவித்து உள்ளது.

    இதுஒருபுறம் இருக்க அரசில் அங்கம் வகித்து கொண்டே மோடிக்கு எதிராக பேசுவதையும் சிவசேனா நிறுத்தி கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியோ பா.ஜனதா அரசு மீது ரபேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த, அதைபோலவே மத்திய அரசின் பயிர்காப்பீட்டு திட்டத்திலும் மகா ஊழல் நடந்து இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவ்வப்போது புகழ்ந்து வந்த சிவசேனா, புதிதாக அரசியலுக்கு வந்த பிரியங்கா காந்தியையும் வரவேற்க தயங்கவில்லை. இதற்காக காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி சேரப்போவதும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்த சிவசேனாவின் நிலைப்பாடு புதிராக தான் உள்ளது.

    போகப்போகத் தான் தெரியும், பாராளுமன்ற தேர்தலில் நாற்பத்து எட்டு தொகுதிகளை கொண்டுள்ள மராட்டியம் மத்தியில் ஆட்சியமைக்க யாருக்கு உதவும் என்று!.#ParliamentElection #Election2019
    பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நாளில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடினர். #KumbhMela
    பிரயாக்ராஜ் :

    6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கோலாகலமாக தொடங்கியது.

    இது மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சாகாவரம் பெற்ற அமிர்தத்தின் துளிகள், வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் (பானை) இருந்து அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய 4 இடங்களில் விழுந்தது என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    அந்த அமிர்தத்தின் துளிகள் விழுந்த இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் பிராயக்ராஜ் நகரில் (அலகாபாத்) நடக்கிற கும்பமேளா மிகவும் பிரபலமானது. உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் இங்கு வந்து புனித நீராடுவதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.

    பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியபோது, முதல் நாளில் லட்சக்கணக்கான சாமியார்கள், வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

    முதல் நாள் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் பக்திப்பெருக்குடன் புனித நீராடுவது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக அமைந்துள்ளது.

    வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவை கண்டு செல்கின்றனர்.

    உத்தரபிரதேச மாநில அரசு, கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி உள்ளது.

    இந்த கும்பமேளாவில் பவு‌ஷ் பூர்ணிமா (வரும் 21-ந் தேதி), மவுனி அமாவாசை (பிப்ரவரி 4-ந் தேதி), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 10-ந் தேதி), மாகி பூர்ணிமா (பிப்ரவரி 19-ந் தேதி), மகாசிவராத்திரி (மார்ச் 4-ந் தேதி) முக்கிய நாட்கள்.

    இந்த நாட்களில் பக்தர்கள் கடலென திரண்டு வந்து திரிவேணி சங்கமத்தில் சங்கமிப்பார்கள். கும்பமேளாவையொட்டி இந்த நகரில் மக்களுக்கு 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியவைதான் அந்த 6 மொழிகள் ஆகும்.

    ஜனாதிபதி செல்கிறார்

    பிரயாக்ராஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) காந்திய எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். #KumbhMela
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தரமான மது விற்கப்படும் என சட்டசபையில் மந்திரி இன்று தெரிவித்தார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முஹம்மது பயீம் இர்பான் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. அமான் மானி திரிபாதி ஆகியோர் மதுவிலக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் பதில் அளித்தார்.

    மதுவிலக்கு என்பது இந்த மாநில அரசின் கொள்கை. ஆனால், மாநில அரசின் வருமானத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள், பீர் அல்லது நாட்டு மது வகைகளின் விற்பனையை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

    அப்படி மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளத்தனமான மது விற்பனை பெருகிவிடும். இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடும். மது வகைகளின் மீதான ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மதுவை விற்பதில் மாநில அரசு அக்கறை செலுத்தும் என்று ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் குறிப்பிட்டார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #KumbhMela #UPGovt #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன.

    அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதனால் விசே‌ஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள்.


    அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #KumbhMela #UPGovt #YogiAdityanath
    ராமரின் அவதார பூமியான அயோத்தி நகரில் தீபாவளி திருநாளன்று 3 லட்சம் தீபங்களை ஏற்றி உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளது. #AyodhyaDiwali #Guinnessrecord
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமஜென்ம பூமியான அயோத்தி நகரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தீபங்களை ஏற்றி, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கடந்த ஆண்டு தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    அதேவகையில், இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையையொட்டி  3 லட்சம் தீபங்களை ஏற்றி  உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தீபாவளியன்று சரயு நதிக்கரையில் 300 அடி உயரம் கொண்ட ராமரின் சிலை நிறுவப்படும். 3 நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளி விழாவில் கடந்த ஆண்டைப்போலவே கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். #AyodhyaDiwali #Guinnessrecord
    வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. #Vajpayee #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

    டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் வீட்டில் இருந்து உடல் தகனம் நடந்த இடம் வரை 7 கி,மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள், முதல்- மந்திரிகள், தலைவர்கள் நடந்து சென்றனர்.

    சரியாக 4.14 மணி அளவில் இறுதிச்சடங்கு தொடங்கியது. 5.05 மணிக்கு வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா தீ மூட்டினார். முழு அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.


    வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

    மேலும் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் புனித நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது. ஆக்ராவில் யமுனையிலும், அலகாபாத், கான்பூர், வாரணாசி, கோரக்பூர், காக்ரா, பைசாபாத், அசம் கார், ஆகிய இடங்களில் கங்கையிலும், லக்னோ, அமேதியில் கோமதி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    ஆக்ராவில் பதேஸ்வர் என்ற இடம்தான் வாஜ்பாயின் பூர்வீகம். கான்பூரில் கல்விகற்றார். பலராம்பூர் அவர் முதன்முதலில் தேர்தலில் நின்றார். லக்னோவில் அவர் 5 முறை எம்.பி.யானார் என்பதால் இந்த 4 இடங்களில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் வாஜ்பாய் பிறந்த குவாலியரிலும் நினைவிடம் கட்டப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.  #Vajpayee #AtalBihariVajpayee
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மாநில மைய கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என அம்மாநில மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். #MohsinRaza #Madrassa
    லக்னோ:

    நாடு முழுவதும் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தை பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை மந்திரி மொஹ்சின் ராஜா, மதரசாக்களை மாநில மைய கல்வி திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள மதக்கல்வி நிறுவனங்களை அந்தந்த மாநில மைய கல்வித்திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடியை தாம் சந்தித்து பேச இருப்பதாகவும் மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக மதரசாக்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என இவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. #MohsinRaza #Madrassa
    ×