என் மலர்
நீங்கள் தேடியது "குடியரசு தினம்"
- மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
- பொங்கல் பண்டிகையின் போது ‘டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
சென்னை:
'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் மது பிரியர்கள் உஷாராகி முந்தைய நாளே கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைப்பதில் கவனம் செலுத்துவார்கள்.
அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது 'டாஸ்மாக்' கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
- காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது.
அந்த வகையில், நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் செல்வராஜ், அசோக்ராஜ், தங்கம் நடேசன், பால்துரை, மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மயிலாடி நகர தலைவர் நடேசன், காங்கிரஸ் அமைப்பு சாரா துறை மாவட்ட ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது.
- 2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது.
சென்னை:
மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை திருப்பூர் மாவட்டம் பூநூல் காடு 3-வது வீதியில் வசித்து வரும் மு.கலிமுல்லா என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவித்தார்.
அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலிமுல்லா காங்கேயன் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கி உள்ளார். கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.
இவர் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லீம் சமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜி.வீரமணிக்கு வழங்கினார்.
விருதுடன் பரிசுதொகை ரூ.5 லட்சம், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்தையும் வழங்கினார். இந்த விவசாயி வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல்சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இவர் செய்த சாகுபடியால் ஹெக்டருக்கு 14,925 கிலோ நெல் மகசூல் கிடைக்கப் பெற்றது. இது மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால் இந்த விருது இவருக்கு கிடைத்து உள்ளது.
போலி மதுபான ஆலை, கள்ளச்சாராயம் கடத்தல் ஆகியவற்றை கண்டறிந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1.விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.நடராஜன், 2.ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.சத்திய நந்தன், 3. சின்ன சேலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன், 4. கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கே.நடராஜன், 5. சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு வி.பி.கண்ணன்.
சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் கோப்பையை வழங்கினார்.
2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் பிரேமா, சின்னகாமனன் பெற்றுக் கொண்டனர்.
- 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .
- எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இந்திய அரசியலமைப்பு அளித்த சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கவர்னரை வரவேற்றார்.
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.
தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் கவர்னர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
- இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை.
சென்னை:
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள் இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.
நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரதின நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள்.
- வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம் என்று கூறியுள்ளார்.
- இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.
விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.
நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.
'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.
- தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
- விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத் தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு 'தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
- விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்பார்.
காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருவார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.
பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.
அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.
பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார்.
அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- இந்தியாவின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் குடியரசு தினம் நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்துச் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.
- சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித் தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மெரினா காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
இதனையொட்டி காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் முனையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரபடுத்தப்பட உள்ளன. மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவல் அதிகாரிகள் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படைபிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித் தடங்கள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






