என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அறநிலையத்துறை"

    • இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
    • கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.

    அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.

    பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.

    அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.

    • தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது.
    • கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன.

    பல்லடம் :

    இந்து அறநிலையத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு நிலம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறையில், அலுவலர் மற்றும் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு அலுவலரே பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.

    மேலும் கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம், ஓய்வூதிய திட்டம், வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற திட்டப் பணிகள் தேங்குவதால் பூசாரிகள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்து அறநிலையத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

    காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
    • இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

    இன்றைய நாள்,

    1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

    இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

    இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது.
    • முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்டமாக கலாச்சார மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    இந்த மையத்தை பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது.

    4 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரைதளத்தில் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான காட்சி அரங்குகள் மற்றும் உணவு அறைகள் இடம் பெறும்.

    முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும். 2வது தளத்தில் 3 பல்நோக்கு கூடங்கள், 233 பேர் அமரும் வகையில் உணவு அறை இடம்பெறும்.

    3-வது தளத்தில் 231 பேர் அமரும் வகையில் ஒரு பல்நோக்கு கூடம் 90 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும் உணவு அறை இடம் பெறும். இதுதவிர ஆன்மீக நூலகம், மீட்கப்பட்ட சாமி சிலைகள், பாதுகாப்பு அரங்கம் இடம் பெறும்.

    விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். இந்த கட்டிடத்தில் நியாயமான வாடகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
    • தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொதுதீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

    இருந்தாலும் இந்த கோவிலின் சொத்துக்கள் 1976-ம் ஆண்டிலிருந்து தனி தாசில்தாரால் பராமரித்து நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் பொதுதீட்சிதர்களிடம் கிடையாது.

    2006-ல் உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, இந்த கோவில் நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கரிலிருந்து கோவிலுக்கு வரும் நிதி சொற்பமாக உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு கோவில் நிலங்களில் இருந்து வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் கொடுக்கிறது.

    தற்போது திடீரென அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.

    1976- ஆண்டிலிருந்து நிலங்கள் உங்களிடம் உள்ளது. எப்படி விற்க முடியும். இடையில் 2006-லிருந்து 2014 வரை அரசாங்கத்திடம் இருந்தது. 2006-ல் கருணாநிதிஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பொதுதீட்சிதர்களிடம் இருந்து, அரசாங்கம் எடுத்துக்கொண்டது.

    2014 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் மீண்டும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் வந்தது. ஆனால் இன்னமும் நிலங்கள் தனி தாசில்தார் பொறுப்பில் உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விற்க முடியும். இதற்கான ஆதாரத்துடன் கோவில் வக்கீல் சந்திரசேகர் மற்றும் தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் நிலங்கள் எங்களிடம் உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ளார். 22,600 கட்டடங்கள், 33,600 மனைக்கட்டுகள் உள்ளது என கூறுகிறார்.

    இவ்வளவு கோவில் சொத்துக்களை வைத்துக் கொண்டு தற்போதைய நிலவரப்படி வரி வசூலிக்க வேண்டும். அப்படியென்றால் வருடத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வர வேண்டும். ஆனால் வசூலிக்கவில்லை.

    7-6-2021 சுயமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரி வசூலிக்கவில்லை என தீர்ப்பு அளித்துள்ளனர். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது பொய்யை சொல்லி நடராஜர் கோவிலை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமாகும்.

    அரசு கோவிலை அபகரிக்க சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டுகிறோம். நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது. அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது. அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில். தரிசனம் கட்டணம் இல்லாத கோவில்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
    • திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் அமராவதி மற்றும் உப்பாறு படுகையில் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.இதில் சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலில், இந்து அறநிலையத்துறை உதவிப்பொறியாளர் அருள், செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது:- பழங்கால கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தொல்லியல்துறை மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கோவில்களில் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.

    அவர்கள் வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில், கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவிலை புதுப்பிக்க அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. திருப்பணிக்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி பல கட்டமாக நடந்து வருகிறது.திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பிறகு நன்கொடைதாரர்கள் பங்களிப்புடன் விரைவில் திருப்பணிகள் துவங்கும். கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து கோவில்களின் அருகிலும் கோவிலுக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    ×