என் மலர்
வழிபாடு
- மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
- இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.
ஈரோடு:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.
கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
- 40 நாட்கள் உபவாசம் இன்று முதல் தொடங்குகிறது.
- திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சென்னை:
இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை லெந்து காலம், தபசு காலம் என்று கூறுவது உண்டு. சாம்பல் புதன் கிழமையான இன்று முதல் இந்த நாட்கள் தொடங்குகிறது.
லெந்து காலத்தில் பிரவேசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று முதல் வரும் 40 நாட்கள் அர்ப்பணிப் போடும், உபவாசத்தோடும் நினைவு கூறுவார்கள். இந்த நாட்களில் தங்களை வெறுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
கொண்டாட்டங்களை தவிர்த்து பயபக்தியோடு ஆராதனையில் பங்கு பெறுவார்கள். சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த வழிபாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பாதிரியார் சபை மக்களின் நெற்றியில் பூசுவார். சிலுவையின் அடையாளமாக இடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புகழ் பெற்ற சாந்தோம் ஆலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், பெரம்பூர் லூர்து ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதே போல சி.எஸ்.ஐ. இ.சி.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து உள்ளிட்ட திருச்சபைகளில் இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆராதனையில் சிறப்பு செய்தியாளர்கள் `லெந்து காலம்' குறித்து பேசுவார்கள். பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக இது நடைபெறும்.
இதைத் தொடர்ந்து வரும் 6 வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு தவக்காலம் முன்னதாக தொடங்கி விட்டதால் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31-ந்தேதி வருகிறது.
- சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
- பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்..
2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
5. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சம் பழ தீபம் விளக்கை கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
11. திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.
15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும், வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது.
23. இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே, மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம், சுபகாரிய நிகழ்வும், தீர்க்காயுளும் உண்டாகும்.
24. சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
25. தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும். நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.
26. முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.
27. உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.
28. அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
29. ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
30. அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.
- அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்.
- எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.
அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.
இந்திரன்
இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
அக்னி தேவன்
இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
யமன்
இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.
நிருதி
இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
வருண பகவான்
இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.
வாயு பகவான்
வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.
குபேரன்
இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
ஈசானன்
இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.
- இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.
- 11 ஆண்டுகளாக தினமும் சிவனுக்கு வில்வ இலையை வழங்கி வருகிறார்.
இந்த உலகை படைத்தது இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. அந்த வகையில் சிவன் என்பவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். அந்த சிவனுக்கு தொண்டு செய்ய தனது கனவில் பணித்ததையடுத்து தினமும் சிவனுக்கு வில்வ இலையை அர்ச்சனைக்கு வழங்கி வருகிறார் ஒரு முதியவர். அதுவும் ஒரு நாள், 2 நாள் அல்ல, கடந்த 11 ஆண்டுகளாக, அதாவது 133 மாதங்களாக அவர் வில்வ இலையை வழங்கி வருகிறார்.
அவ்வாறு வில்வ இலையை வழங்கி வருபவர், 71வயது முதியவரான கணேசன். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்.சுத்திப் பட்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தம் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தார்.
சிவனுக்கு வில்வ வழங்கும் சிவபக்தரான கணேசன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
பிரதோஷம் நடைபெறும் நேரத்தில் கருவூரார் சன்னிதியில் யாரும் வழிபடுவது இல்லை. அந்த நேரத்தில் 48 நாட்கள் தியானம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தியானம் செய்வதற்கு அனுமதிகேட்டார். அன்று இரவு அவருடைய கனவில் இறைவன் தோன்றி, குருப்பெயர்ச்சி அன்று திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து தியானம் செய்' என்று கூறினாராம்.
அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு திருச்செந்தூர் சென்று வழிபட்டு விட்டு வந்து கருவூரார் சன்னிதியில் தியானம் செய்து வழிபட்டார். 48 நாட்கள் தொடர்ச்சியாக தியானம் செய்து முடித்த நிலையில், மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், தினமும் பெருவுடையாருக்கு (சிவன்) அர்ச்சனைக்கு வில்வ இலை கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அதன்படி 2011-ம் ஆண்டு மார்கழி 1-ந்தேதி முதல் தற்போது வரை தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக வில்வ இலை கொடுத்து வருகிறார்.
இது பற்றி கணேசன் கூறும்போது,
"எனக்கு மங்கையற்கரசி என்ற மனைவியும், சுகன்யா, திவ்யா, ஆனந்தி என்ற 3 மகள்களும், மணிகண்டன் என்ற கண்பார்வை தெரியாத மகனும் உள்ளனர். 3 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிராம நிர்வாக அதிகாரி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின், மளிகைக் கடை நடத்தி வந்தேன். தற்போது அந்தக் கடையையும் மகளிடம் கொடுத்துவிட்டேன்.
தினமும் இறைவன் எனக்கு வில்வ இலையை கொடுக்குமாறு கட்டளை இட்டதால் நான் தினமும் வில்வ இலையை பறித்து அர்ச்சனைக்காக வழங்கி வருகிறேன். தினமும் காலை 5.45 மணிக்கெல்லாம் கோவிலுக்கு குருக்கள் வரும் போது அவரிடம் அர்ச்சனை செய்வதற்கான வில்வ இலையை வழங்கி வருகிறேன். என்னிடம் இருசக்கர வாகனம், சைக்கிள் எதுவும் கிடையாது.
எனவே நடந்தே கோவிலுக்கு சென்று வில்வ இலையை வழங்கி வருகிறேன். இறைவன் மீதான பக்தியால் பெருவுடையார் கோவிலுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள சங்கரநாராயணன் கோவிலுக்கும், கொங்கணேசுவரர் கோவிலுக்கும் கூட வில்வ இலையை வழங்கி வருகிறேன்.
கடந்த 11 ஆண்டுகளாக எந்தமழை பெய்தாலும், புயல் அடித்தாலும் என் பணியை தவறவிட்டதில்லை. அதேபோல கோவில் குருக்களும் நான் தினமும் வழங்கி வருவதால், என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். வில்வ இலையை கொடுத்துவிட்டு அர்ச்சனை முடிந்து, சாமி தரிசனம் செய்த பிறகுதான் அங்கிருந்து மற்ற கோவிலுக்கு புறப்படுவேன். கொரோனா காலக்கட்டத்தில் கூட, ஒரு நாள் விடாமல் வில்வ இலையை வழங்கினேன்.
ஊரடங்கின் போது காலை 6 மணிக்கு பிறகுதான் போலீசார் கெடுபிடி இருக்கும். அதேநேரம் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால், அதிகாலை 4.30 மணிக்கே வில்வ இலையை பறித்துக்கொண்டு, பெரியகோவில் வாசலில் குருக்கள் வரும் வரை காத்திருந்து கொடுத்து விட்டு வீடு திரும்புவேன்.
காசு, பணம் எல்லாம் கடவுளின் முன்பு ஒன்று மில்லை. பக்திதான் உயர்ந்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டில் ஒரு தேங்காய் வைத்து வழிபட்டேன். அதைத்தான் தற்போதும் விநாயகராக போற்றி வணங்கி வருகிறேன்.
ஒரு முறை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு அகோரி வந்து என்னை மளிகைக் கடையில் சந்தித்தார். அதோடு சிவன் தரச் சொன்னதாக ருத்ராட்ச மாலை ஒன்றையும் கொடுத்தார். அதைத்தான் தற்போதும் அணிந்திருக்கிறேன்.
என்னுடைய உடலை விட்டு உயிர் பிரியும் வரை, வில்வத்தை வழங்க, இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றார்.
- திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 2 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 6.28 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: ரேவதி மாலை 4.39 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வசந்த பஞ்சமி. திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், சுவாமி பெரிய தந்தப் பல்லக்கில் பவனி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம். வேதாரண்யம் சிவபெருமான் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கோவை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-வலிமை
மிதுனம்-நட்பு
கடகம்-ஆர்வம்
சிம்மம்-அன்பு
கன்னி-ஆதரவு
துலாம்- அமைதி
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- உயர்வு
மகரம்-வெற்றி
கும்பம்-சுகம்
மீனம்-இன்பம்
- ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
- 21-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவொற்றியூர்:
சென்னை, திருவொற்றி யூரில் உள்ள வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாசி திருவிழாவையொட்டி கோவிலில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணியளவில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (15-ந்தேதி) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சந்திர சேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.
தொடர்ந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக் கல்யாண உற்சவமும், பிற் பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் சேவை உற்சவம் நடக்கிறது.
- காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம்.
- மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
காதல், முறை தவறிய உறவுகள் போன்றவற்றில் சிக்கி இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் அவலம் அதிகமாக காணப்படுகிறது. காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம். அந்த நேசத்தைக் கண்டறிவது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. தூய அறிவாலும், மாசற்ற உள்ளத்தாலும் உணர்வெழுச்சி பெற்று ஒருவரை ஒருவர் நேசிப்பது இன்று மிகமிகக் குறைவே.
காதல் என்ற பெயரில் நடப்பதெல்லாம் உடல் மீதான வேட்கையே. பெரும்பாலான காதலர்களின் வாழ்வு, திருமணத்திற்குப் பின் ஜொலிக்காமல் இருப்பதற்கான காரணம் இதுதான். சமூகத்தில் பரவி நிற்கும் `ஓடிப்போதல்' என்ற நோய்க்கு பெரும்பாலும் இந்த உடல் வேட்கையே காரணமாக அமைந்துள்ளது.
அதே சமயம் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை உடல் வேட்கையின்றி உண்மையாகவே திருமணம் செய்துகொள்ள விரும்புவதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.
அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன்பு, ஓர் இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அந்தப் பெண் உறுதியளித்தார். பிறகு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்று, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் என்பது வரலாறு.
தனிமையில் சந்தித்தல்
அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருப்பதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. திருமண உடன்படிக்கை நடக்காதவரை மணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் அந்நியப் பெண்ணே. திருமணம் செய்வதற்காக அவளைப்பார்ப்பதற்கு மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டதாகவே தொடர்ந்து இருக்கும்.
நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் எவரும் ஓர் அந்நியப் பெண்ணுடன் - அப்பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவரும் உடன் இல்லாதபோது - தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்". (நூல்: அஹ்மத்)
தனித்திருப்பதால் ஏற்படும் ஆபத்து
மக்களில் பலர் தங்களது குடும்ப பெண்களை, திருமண ஆலோசனை மட்டுமே நடந்த அந்நிய ஆடவருடன் தனிமையில் இருப்பதற்கும், மனம்போன போக்கில் பேசிப்பழகவும், ஊர் சுற்றுவதற்கும் அனுமதிக்கின்றனர். இதன் பிரதிபலன் என்னவென்றால், பெண்ணுக்கு அவளுடைய கண்ணியம், மரியாதை, சில சமயம் கற்பும் நஷ்டமடைகின்றது.
இன்னும் சிலர் நேர்மாறாக உள்ளனர். திருமண ஆலோசனை வேளைகளிலோ, பெண் பார்க்கும் போதோ தன்னுடைய பெண் பிள்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை. முதல் இரவில் தம்பதிகள் ஒருவரையொருவர் பார்ப்பதைத்தவிர அதற்குமுன் பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதே இவர்களுடைய வாதம். முதன்முதலாக அந்த இரவில் திடீரென ஒருவரையொருவர் சந்திக்கும்போது மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக இருந்து விட்டால் அதுவே நிரந்தர கருத்து வேற்றுமைக்கும், பின்னர் பிரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
திருமணமே அழகு
பெரும்பாலும் பெற்றோர்களின் அலட்சியப் போக்கு, வறுமை, ஒழுக்கமின்மை என்பவை தவறுகளுக்கான காரணங்களாகத் திகழ்கின்றன. வயது வரும்போது அந்தந்த பருவத்திற்கே உரிய உணர்வுகள் உடலில் தோன்றுவது இயல்புதான். அவை கட்டு மீறாது, ஒழுங்குபடுத்தி மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
மனிதன் தனது பாலுணர்வையும், இச்சையையும் தீர்த்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையே திருமணம். மன உளைச்சலில் இருந்து மனிதனை அது தடுக்கிறது. பதற்றத்தில் இருந்து மனித மனங்களை சாந்தப்படுத்துகிறது. தடை செய்யப்பட்டவற்றை (ஹராமான) பார்க்கும் மனோபாவங்களில் இருந்து உள்ளங்களை அது திருப்புகிறது. இறைவன் அனுமதித்த வழிமுறையின் மூலம் அன்பும் மனநிறைவும் அடையும்படிச் செய்கின்றது.
திருக்குர்ஆன் இதனையே பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: "மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக!
மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21)
குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒருபோதும் கிடைப்பதில்லை. தற்காலிக இன்பத்திற்காக நிலையான இன்பத்தை இழந்து விடுவதும் மூடத்தனம். ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு திருமணத்தைவிடச் சிறந்த உறவு எதுவுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது புனிதமானது. அது ஓர் அறச்செயல். அதனை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளாமல் மணம் செய்து காதல் செய்வதே உகந்தது. அழகான பெண்ணை அல்லது ஆணை அடைவதல்ல காதல். அடைந்த மனைவியை அல்லது கணவனை அழகாக நேசிப்பதே காதல்.
- இன்பமும், துன்பமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
- துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு.
இன்பமும், துன்பமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. துன்பங்கள் குறித்த திருமறையின் பார்வை வேறுபட்டதாக இருக்கிறது. ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பார்த்து `உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்' என்றார் (யோவான் 16:33).
இதன் மூலம் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதரின் வாழ்விலும் உபத்திரவங்கள் தவிர்க்க முடியாதது என்றாலும், வாழ்வின் துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு.
ஆவிக்குரிய வாழ்வில் பற்று தருகின்றது!
உபத்திரவங்கள் அல்லது துன்பங்கள் பற்றி திருப்பாடல்கள் நூலின் ஆக்கியோன் `எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே' என்கிறார். (திபா.119:71)
முதலாவது, உபத்திரவங்கள் ஆவிக்குரிய வாழ்வின் மீது தீவிர பற்றுதலையும், மிகுந்த வாஞ்சையையும், தணியாத தாகத்தையும் உருவாக்குகிறது.
`நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன். இப்பொழுதோ நான் உமது வார்த்தைகளைக் காத்து நடக்கிறேன்' (திபா.119:67).
உபத்திரவங்கள் நம் ஆவிக்குரிய வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கவும், சீர்படுத்தவும் உதவுகின்றது. தவறுகளை உணர்ந்து திருந்துவதற்கும், மனம் வருந்தி ஆண்டவரிடம் திரும்புவதற்கும், அவர் வார்த்தைகளை விரும்புவதற்கும், மிக முக்கிய காரணிகளாக அமைகின்றது.
ஆசீர்வாத வாழ்வைக் கற்றுத்தருகின்றது!
தூய பவுல் அடியார் ரோமா திருச்சபையாருக்கு எழுதிய கடிதத்தில் உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங் களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம் (ரோமர்:5:3-4) என்கிறார்.
இரண்டாவதாக, உபத்திரவங்கள் கடவுள் விரும்புகின்ற, அவருக்குப் பிரியமான, ஆசீர்வாதமான வாழ்வு என்றால் என்ன? என்பதை நமக்கு கற்பிக்கின்றது. ஆசீர்வாதமான வாழ்வை பெறுவதற்கான உரிய நெறிமுறைகளை, வழிகாட்டுதல்களைக் கற்றுத்தருகின்றது.
உபத்திரவத்தில் பொறுமையாய் இருக்கவும் வேண்டுகிறார். நம்பிக்கையும் உபத்திரவமும் கைகோர்த்துச் செல்கின்றன என்று திருமறை நமக்கு தெளிவாக கூறுகிறது என்கிறார் பில்லிகிராம். பரலோக வாழ்வை பெற்றுத்தருகிறது!
திருத்தூதர் பவுலும், பர்னபாவும் நற்செய்தி அறிவித்தபின் சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தி 'நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்'. (தி.ப.14:22)
இறுதியாக, உபத்திரவங்கள் நம்மை கடவுளோடு இணைந்து வாழுகின்ற வாழ்க்கை முறையை கட்டமைக்கவும், தொடர்ந்து அதில் நிலைத்து இருந்து கனி கொடுக்கும் வாழ்வு வாழவும், இறுதி நாட்களில் சாட்சி கொடுக்கின்றவர்களாய் வாழ்ந்திடவும், நமக்கு சிறந்த ஊன்றுகோலாய் அமைகின்றது.
வெள்ளை அங்கி தரித்தவர்கள் இவர்கள் யார்? என்று கேட்கப்பட்டதற்கு 'இவர்கள் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்' என்று திருவெளிப்பாடு 7-வது அதிகாரம் 14-வது வசனத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
நீங்களும் ஒரு வேளை இன்று உங்கள் வாழ்வில் பகிர்ந்து கொள்ள முடியாத பல்வேறு உபத்திரவங்களின் வழியாய் சென்று கொண்டிருக்கலாம். கொடிய வியாதி, நெடுநாள் பலவீனம், யாருமற்ற தனிமை, எதிர்பாராத பேரிழப்புகள், தீராத கடன் பிரச்சினை, பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்த கவலை-கண்ணீர் நிமித்தமாக, தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம்.
கடவுள் உங்கள் துன்பங்களையும், துன்பத்திற்கான காரணத்தையும் உங்களைவிட மிகத்தெளிவாக அறிவார். இது மாற்ற இயலாத துன்பம் என்ற உங்கள் எண்ணத்தின் விரக்தி நிலையையும் ஆண்டவர் அறிவார். நம் வாழ்வின் துன்பங்களை கடவுள் அருளும் நம்பிக்கையுடன் நேர்மறையாக எதிர்கொள்ளத் துணிவோம்.
திருப்பாடல்களில் இறைப்பற்றாளன் `உம் ஊழியனுக்கு நன்மையைச் செய்துள்ளீர். நீர் நல்லவர் நன்மையே செய்பவர்' என்று சொல்வதோடு இறைவன் மீதுள்ள நம்பிக்கை மிகுதியால் 'எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே' என்ற பற்றுறுதியை வெளிப்படுத்துகிறார்.
நாமும் இப்பற்றுறுதியை வெளிப்படுத்தி வாழ்வின் துன்பங்களைக் கண்டு அஞ்சாமல், துஞ்சாமல் துணிவுடனே பெருமகிழ்வுடனே எதிர்கொள்வோம்.
ஆவிக்குரிய வாழ்வில் சீர்படுவோம்!
ஆசீர்வாத வாழ்வில் பெலப்படுவோம்!
மாட்சிமிகு இறையாட்சி வாழ்வில் இணைந்திடுவோம்!
- காசிக்கு நிகரான புண்ணியத்தலம்.
- இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது.
கோவில் தோற்றம்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது, நடுச்சத்திரம். இங்கே காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. காசிக்கு நிகரான புண்ணியத்தலம் என்று சொல்லப்படும் இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார்கள்.
இத்தலத்தில் இறைவன் பெயர் `காசி விசுவநாதர்'. இறைவியின் பெயர் `அன்னபூரணி'. பெரும்பாலான தலங்களில் அன்னபூரணி அம்மன் கிழக்கு நோக்கி வீற்றிருப்பார். ஆனால் இந்த தலத்தில் மட்டும் அம்மன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
அதேபோல சிவனை பார்த்தபடி நந்தி இருக்கும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் அன்னபூரணி அம்மனை பார்த்த படி கழுத்தை மட்டும் வடக்கு திசையில் திருப்பி நந்தி இருப்பது சிறப்பு ஆகும். இந்த நந்தியின் ஒரு கண் சிவனை பார்த்தும், மற்றொரு கண் அன்னபூரணியை பார்த்த படியும் தலை சாய்ந்த நிலையில் உள்ளது.
இந்த தலத்தில் தனி சன்னிதியில் சனி பகவான், `பொங்கு சனி'யாகவும், `குபேர சனி'யாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் சங்கடங்களை தருவார் என பக்தர்கள் கூறுவர். ஆனால் இங்குள்ள சனி பகவான் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு குபேரர் போல் செல்வத்தை வாரி வழங்குகிறார். ஆதலால் தான் இந்தக் கோவிலில் உள்ள சனி பகவானை 'குபேர சனீசுவரர்' என அழைக்கின்றனர்.
சண்டிகேசுவரர் பெரும்பாலான கோவிலில் தியான நிலையில் பீடத்தில் அமர்ந்து இருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் நந்தி மேல் அமர்ந்து இருப்பது கூடுதல் சிறப்பினை சேர்க்கிறது.
இந்த கோவிலில் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஈசானிய மூலையில் பைரவர் உள்ளார்.
இந்த தலத்தில் உள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரை பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. தென்திசை நோக்கிய படி குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலது புறம் சூரியனும், இடது புறம் சந்திரனும் அமைந்துள்ளன.
கோவிலில் ஆங்காங்கே மீன் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் இது 1200 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோவில் என்றும் கூறப்படுகிறது.

கோவில் அமைந்துள்ள இடம் முன்பு வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொண்டதாக கூறுகிறார்கள். கோவிலுக்கு அருகே நீர்நிலை இருந்துள்ளது.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பாண்டிய மன்னர்கள் இங்கு கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாக பிளந்து 108 வெள்ளை மிளகு எடுத்து பாதியாக பிரித்து பூசணிக்காயின் இரு பகுதிகளிலும் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
பிரதோஷம் அன்று அன்னபூரணியை வணங்கி எலுமிச்சை மாலையை அம்மனுக்கு சாத்தி இறைவன், இறைவியை மனமுருக வேண்டினால் நல்ல வரன் கிடைக்கும். அதேபோல ஆண்கள் பிரதோஷத்தன்று இங்குள்ள அம்மனுக்கு பூ மாலை சாற்றி 3 பிரதோஷங்கள் வந்து வழிபாட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இளநீர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ௬ கி.மீ. தொலைவிலும், சாத்தூரில் இருந்து 22 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
- இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர்.
- திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.
மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறை வனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.
விளக்கம்:-
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், எத்தனை மிருகங்கள் உள்ளனவோ அவை அனைத்துமாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லாகவும், அதன் அடியில் வாழும் உயிராகவும், மனிதரவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும், அசைவதும், அசைவற்றதும் கொண்டு உருவான இந்த பிரபஞ்சம் முழுவதும் சென்று, எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்து விட்டேன், எம்பெருமானே.






