என் மலர்
வழிபாடு
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது.
இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.
பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
- மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.

விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சிவபெருமான், பிரம்மாவுக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
- பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.
பிரம்மா சிவனிடம் ஞான உபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட வில்வ மரம் ஒரு நாழிகைக்குள் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வ வனநாதராக தனிச்சன்னிதியில் அருள்கிறார்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு அமிர்தகடம் வந்தது முதல் ஈசன் அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் பெற்றார்.
திருக்கடையூர் கோவிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.
இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.
புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னிதி இருக்கிறது. இச்சன்னிதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.

சிறப்பு தகவல்கள்
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.
* கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில் வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் உள்பட திருக்கடையூருக்கு பல பெயர்கள் உண்டு.
* மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* பிரம்மதேவன், இத்தலத்தில் சிவபெருமானிடம் இருந்து உபதேசம் பெற்றுள்ளார்.
* ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.
* இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
* திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
* குங்கிலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

* அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர இவ்வாலயம் எழுந்தருளி, இறைவனை தொழுது, குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.
* மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108-வது தலமாகும். அமிர்த கடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.
* பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்கிரகம் பெற்று திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய, தமிழ்நாட்டில் 100 சதவீதம் ஏற்புடைய தலமாக இது உள்ளது.

* இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில், கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும்.
* திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பனிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.
* சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந்திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.
* திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
* தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47-வது தலமாக போற்றப்படுகிறது.
* திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
- கோவிலை சுற்றி எட்டு திசைகளில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன.
- தேவாரப் பாடல் பெற்ற தலம்.
கோவில் தோற்றம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களை பற்றி நாம் அறிந்துள்ளோம். அதுபோல தொண்டை நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஒரு தலம் திருவேற்காடு ஶ்ரீ பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரா் திருக்கோவில். இத்திருக்கோவிலை சுற்றி எட்டு திசைகளில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன.

ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் திருவேற்காடு தலத்திற்கு வருகை தந்தார். அப்போது சிவபெருமானை பாடி வணங்கிய போது சிவபெருமான் பார்வதி தேவியோடு அவருக்குக் காட்சி கொடுத்தார்.
அகத்தியர் வேண்டிய உடனேயே காட்சி கொடுத்த ஈசனிடம் பார்வதிதேவி, `மாமுனிவர்களும், மகரிஷிகளும் கேட்டதும் தாங்கள் திருக்காட்சியை அருளுகிறீர்கள். ஆனால் தங்கள் பக்தர்கள் தங்கள் திருக்காட்சியைக் காண விரும்பினால் அவர்களுக்கு அவ்வாறு நீங்கள் உடனே காட்சி தராமல் தாமதிக்கிறீர்களே அது ஏன்?' என ஒரு கேள்வியைக் கேட்டார்.
உடனே ஈசன் அனைத்து பக்தர்களும் வழிபட்டு தனது அருளைப் பெறுவதற்காக திருவேற்காடு பகுதியில் வேதபுரீஸ்வரர் திருத்தலத்தைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட லிங்கத் திருமேனிகளை வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.
வள்ளிக்கொல்லைமேடு என்ற ஊரில் கிழக்கு திசைக்கான கோவிலான (இந்திரலிங்கம்) ஞானாம்பிகை சமேத இந்திரசேனா பதீஸ்வரர் திருக்கோவிலும்,
நூம்பல் என்ற கிராமத்தில் தென் கிழக்கு திசைக்கான கோவிலான (அக்னிலிங்கம்) ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலும்,
சென்னீர்குப்பம் என்ற ஊரில் தெற்கு திசைக்கான கோவிலான (எமலிங்கம்) மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோவிலும்,
பாரிவாக்கம் என்ற ஊரில் தென் மேற்கு திசைக்கான கோவிலான (நிருதிலிங்கம்) பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற திருக்கோவிலும்,
மேட்டுப்பாளையம் என்ற ஊரில் மேற்கு திசைக்கான கோவிலான (வருணலிங்கம்) ஜலகண்டீஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டீஸ்வரர் திருக்கோவிலும்,
பருத்திப்பட்டு என்ற ஊரில் வட மேற்கு திசைக்கான கோவிலான (வாயுலிங்கம்) விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரர் திருக்கோவிலும்,
சுந்தரசோழபுரம் என்ற ஊரில் வடக்கு திசைக்கான கோவிலான (குபேரலிங்கம்) வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் திருக்கோவிலும்,
சின்னகோலடி என்ற ஊரில் வட கிழக்கு திசைக்கான கோவிலான (ஈசானலிங்கம்) பார்வதி சமேத ஈசான லிங்கத் திருக்கோவிலும் அமைந்துள்ளன.
மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ள வருணலிங்க தலமான ஜலகண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் திருக்கோவில் எளிமையாக சிமெண்டு ஓடு கூரை வேயப்பட்ட ஒரு கோவிலாக அமைந்துள்ளது.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு மேற்கு திசையில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் ஜலகண்டீஸ்வரர், காசி விஸ்வநாதரைப் போல காட்சி தருகிறார்.
இத்தலத்து லிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈசனுக்கு முன்னால் நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். அருகில் பலிபீடம் அமைந்துள்ளது.

ஜலகண்டீஸ்வரருக்கு அருகில், ஜலகண்டீஸ்வரி என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக அம்பாள் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வெளியில் விநாயகப்பெருமான் ஒரு சிறிய சன்னிதியில் காட்சி தருகிறார்.
ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரரை வழிபட்டால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வந்துசேரும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஈசனின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் வீடு கட்டுவதில் உள்ள தடைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
இத்தலத்தில் மாதப்பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் நவராத்திரி முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்
சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லி-ஆவடி சாலையில் சென்னீர்குப்பத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
பூவிருந்தவல்லி - ஆவடி மார்க்கத்தில் செல்லும் 'எஸ் 50' என்ற சிற்றுந்தில் பயணித்து பாரிவாக்கம் எமரால்டு பார்க் என்ற நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.
- திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
- இன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. முருக பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மாலை 4.45 மணிக்கு முருகபெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
- இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம்.
- ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-22 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 8.22 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.37 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். குமார வயலூர், திருச்செந்தூர், மதுரை சமீபம் சோலைமலை தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம். சிக்கல் ஸ்ரீசிங்கார வேலவருக்கு காலையில் சூர்னோற்சவம். திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் சந்திர பிரபையில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-தாமதம்
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- நட்பு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- மேன்மை
மகரம்-உறுதி
கும்பம்-புகழ்
மீனம்-இன்பம்
- தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
வேங்கிக்கால்:
நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.
வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
- பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்.
- ரூ1.57 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள்.

பத்மநாபசுவாமி கோவிலுக்கு கட்டிடங்கள், சிறப்பு பூஜைகள், யானை ஊர்வலத்துக்கான வாடகை, படங்கள்-உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை என பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. அவற்றில் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.
ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ1.57கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த நிலுவை தொகையை கோவில் நிர்வாகம் செலுத்தாமல் இருந்திருக்கிறது.
ஆகவே நிலுவையாக உள்ள ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்துமாறு பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் விலக்கு உள்ள பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவில் அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர்.
- ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.
- 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடை முறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பைக்கு வந்து செல்ல ஆன்லைன் மூலமாகவே பஸ் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.
கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தலைமையில் நடந்த முன்னேற்காடு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மந்திரி கணேஷ்குமார் கூறி யிருப்பதாவது:-
சபரிமலைக்கு யாத்திரை வரும் 40 பேர் கொண்ட குழுக்கள் 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே 220 பஸ்கள் அரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
- தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள்
சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.
ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான்.

அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்த திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.
வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?
இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் முருகனை போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னி ரண்டு விழிகளும் பன்னி ரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக் காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், ரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
நோய்களை எடுத்துக் கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
- கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது.
- கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள்.
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.
அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.
கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்த கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.
வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன. அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்தது.
'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
- சூரசம்ஹாரம் முடிந்த பிறகு ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
- சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்.
சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான்.

இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?
மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார்.
ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர்.

தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.
அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.
சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.
இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.
கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.
இதைத்தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.
இதைத்தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள்.
அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான். இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றிக் கொண்டே இருப்பான். அவனை ஜெயந்திநாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.
இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார். நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும்.
மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூரசம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.
சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.

தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.






