என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்திக்கல்யாணம்"

    • பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நந்தி கல்யாணம்.
    • நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும்.

    நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார்.


    திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வார். இதைத்தான் 'வருவது வைத்திய நாதன் பேட்டை, போவது புனல்வாசல் என்பர்.

    நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும். திருப்பழனத்தில் இருந்து பழ வகைகள் வரும். திருப்பூந்துருத்தியில் இருந்து மலர் மாலைகள் வரும், திருநெய்த்தானத்திலிருந்து யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வரும்.


    திருச்சோற்றுத்துறையில் இருந்து அறுசுவை அன்ன வகைகள் வரும். இந்தத் தலங்களெல்லாம் திருமழபாடியைச் சுற்றி அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமண விழா மார்ச் அன்று நடைபெறும்.


    இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். 'நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும், சுபகாரியங்கள் நடைபெறும்.

    ×