என் மலர்
வழிபாடு
- மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
- வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்திற்கான அமாவாசை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும், இரவு சித்திரை கரக (பெரிய பூங்கரகம்) ஊர்வலமும் நடைபெற உள்ளது.
ஆகையால் வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
- கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.
- ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையதாகும்.
ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த தலமாக கருதப்படும் இங்கு நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் 'மங்கள ராகு'வாக ராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது, அந்த பாலானது நீல நிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும். இதனால் இத்தலம் ராகு பரிகார தலமாக விளங்குகிறது.
இந்த நிலையில், ராகு பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த விழாவானது கோவிலில் விமரிசையாக நடைபெறுவது உண்டு. அதன்படி, இன்று மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவிலில் முதல்கால யாகசால சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று மாலை மகா பூர்ணாஹூதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு ஆகி மூலவர் நாகவல்லி, நாககன்னி சமேத ராகுபகவானுக்கு கலசாபிஷேகம், பாலாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, தங்க கவசத்துடன் கூடிய சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்ய உள்ளனர்.
தொடர்ந்து, கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கத்தில் இருந்து விடுபட ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஹோமங்கள், லட்சார்ச்சனை, அபிஷேகங்கள், தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பு ஏற்பாடுளும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன், உதவி ஆணையர் உமாதேவி, அறங்காவலர்கள் கண்ணையன், பானுமதி, சின்னையன், ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
- 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி.
- பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
- பெண்கள் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு கிராமத்தின் அருகே உள்ளது, அர்ச்சுனாபுரம். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த ஊரில் பச்சை பசுமை வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, நல்லதங்காள் திருக்கோவில்.
கோவை, கடலூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள், நல்லதங்காளை குலதெய்வமாக வழிபடுகின்றனர். அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொழிந்த அன்புத் திருக்கோவிலே 'நல்லதங்காள் திருக்கோவில்' ஆகும்.

தல வரலாறு
அர்ச்சுனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்தனர்.
சிறிது காலத்தில் நல்லநம்பி ஆட்சிக்கு வந்தான். தாய்-தந்தையை இழந்த போதிலும் நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து வந்தான். தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையை ஆண்டு வந்தவர், காசிராஜா. இவருக்கு தன் தங்கை நல்லதங்காளை மிகுந்த சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்தார், நல்லதம்பி.
திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். சிறிது காலத்தில் நல்லதங்காளின் கணவன், அவளை விட்டு நீங்கினான்.
இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் வறுமையில் வாடினர், பலரும் மாண்டனர்.
நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்று பசியை போக்கினாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.
அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்லதங்காள் அங்கு சென்றாள்.
ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.
மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.
அப்போது, அவளது குழந்தைகள், 'அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...' என்று அழ ஆரம்பித்தன. அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.
குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு, அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள். பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்ட பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அவன் மனைவியை கொன்று விட்டு பின்பு அந்த கவலையில் அவனும் இறந்து போனான்.
அண்ணன் - தங்கை பாசத்தைக் கண்டு மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்லதம்பியையும் உயிர்ப்பித்தனர்.
அப்போது நல்லதங்காளும், நல்லதம்பியும், "நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாகக் கருதி அருள்புரிய வேண்டும்" என கூறினார்கள்.
சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக நல்லதங்காள் தெய்வ ஜோதியில் ஐக்கியமாகி தெய்வமாகிவிட்டாள்.

கோவில் அமைப்பு
நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, தனியே இன்னொரு சன்னிதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இந்த கிணற்றில்தான் என்று சொல்கிறார்கள். மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்துள்ள அர்ச்சுனா நதியின் கரையில் உள்ளது நல்லதங்காளின் கிணறு.

இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும். தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.
திருமணமாகாத பெண்கள் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோவில் பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சுனாபுரம் சிற்றூர். திருவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. இந்த ஊரின் அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம். இங்கு வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.
- ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
- மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது.
தெய்வ வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போன்று பூஜை அறையிலோ அல்லது தனியொரு இடத்திலோ அமர்ந்து, தெய்வீக மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடும் அத்தகைய சிறப்புக்குரியது. அது தொடர்பான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்..

* மந்திர ஜெபம் செய்வதற்கு, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்துவதே சிறப்பானது.
* நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையை பயன்படுத்த வேண்டும்.
* ஜெபிப்பதற்கான மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
* ஜெபிக்கும் வேளையில் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்வது அவசியம். ஏனெனில் மந்திர ஜெபம் செய்கையில், நம் உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான் மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளித் துணியை பயன்படுத்துகிறோம்.

* ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஒரு துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
* முக்கியமாக, ஒரு குருவிடம் தீட்சைப் பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்று அழைப்பார்கள்.
* எந்த ஒரு செயலும் அதற்குரிய இடத்தில் செய்யும்போதுதான் சிறப்பு பெறும். உணவு தயாரிக்கும் பணியை, சமையல் அறையில் அல்லாமல் வேறு அறையில் செய்தால் அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அது போலவே, மந்திர ஜெபத்தை அமைதியான இடத்தில், அமைதியான சூழலில்தான் செய்ய வேண்டும்.
* சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால், அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் காலங்களில், எளிமையாக ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் மென்மையான ஆடைகளை அணிய வேண்டும்.

திசையும்.. பலனும்..
* தென்கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் நோய் தீரும்.
* வடமேற்கு நோக்கி ஜெபம் செய்தால் தீயசக்திகள் மறையும்.
* வடக்கு நோக்கி ஜெபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும்.
* வடகிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் முக்தி கிடைக்கும்.
* தெற்கு நோக்கி ஜெபம் செய்தால் பெரும் தீமை வந்துசேரும்.
* தென்மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் வறுமை உண்டாகும்.
* மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும்.
* கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் வசியம் ஏற்படும்.

பலன் தரும் இடங்கள்
ஜெபம் செய்யும்போது அமைதியான இடம் தேவை. அது எந்த இடம் என்பதைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கும்.
வீடு - பத்து மடங்கு பலன்
காடு - நூறு மடங்கு பலன்
நீர்நிலைகள் - ஆயிரம் மடங்கு பலன்
மலை உச்சி - கோடி மடங்கு பலன்
சிவன் கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி - பல கோடி மடங்கு பலன்
- இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-12 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி காலை 8.30 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.17 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ வீரராகவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-முயற்சி
கடகம்-துணிவு
சிம்மம்-நற்சொல்
கன்னி-பக்தி
துலாம்- மேன்மை
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- ஆதரவு
மகரம்-லாபம்
கும்பம்-உயர்வு
மீனம்-ஈகை
- இன்று சர்வ ஏகாதசி.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-11 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 10.26 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சதயம் காைல 6.50 மணி வரை பிறகு
பூரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.53 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருசெங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குரு பகவானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-உண்மை
கடகம்-ஆர்வம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-பண்பு
துலாம்- பணிவு
விருச்சிகம்-அன்பு
தனுசு- விருத்தி
மகரம்-சிந்தனை
கும்பம்-தேர்ச்சி
மீனம்-மகிழ்ச்சி
- இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.
- விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.
விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
- தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
- செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.

பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.
இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும்.

பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
- தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு.
- அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.
எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிற பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளை நிறத்திற்கு பிளாட்டினம் வாங்கலாம். மஞ்சள் நிறத்திற்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ஆன்மீக ரீதியாக சரியானதல்ல. ஏற்புடையதும் அல்ல. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.
பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.
அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.
(கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்.
மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது.
அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.

காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.
அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.
- அட்சய திரிதியை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
- சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதி என்பர்.
அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.
அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.
ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.

பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.
கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான்.
மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.
இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.
கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.






