என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சியை காண குவிந்த பக்தர்கள்
    X

    திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சியை காண குவிந்த பக்தர்கள்

    • கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.
    • ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையதாகும்.

    ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த தலமாக கருதப்படும் இங்கு நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் 'மங்கள ராகு'வாக ராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது, அந்த பாலானது நீல நிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும். இதனால் இத்தலம் ராகு பரிகார தலமாக விளங்குகிறது.

    இந்த நிலையில், ராகு பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த விழாவானது கோவிலில் விமரிசையாக நடைபெறுவது உண்டு. அதன்படி, இன்று மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவிலில் முதல்கால யாகசால சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, நேற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று மாலை மகா பூர்ணாஹூதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு ஆகி மூலவர் நாகவல்லி, நாககன்னி சமேத ராகுபகவானுக்கு கலசாபிஷேகம், பாலாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, தங்க கவசத்துடன் கூடிய சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்ய உள்ளனர்.

    தொடர்ந்து, கோவிலில் லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கத்தில் இருந்து விடுபட ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.

    ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஹோமங்கள், லட்சார்ச்சனை, அபிஷேகங்கள், தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பு ஏற்பாடுளும் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன், உதவி ஆணையர் உமாதேவி, அறங்காவலர்கள் கண்ணையன், பானுமதி, சின்னையன், ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×