என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சீர்காழியில் உள்ள திருக்கோலக்கா திருத்தல சுவாமி, அம்பாளை வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    உமையவளிடம் தனது மூன்றாம் வயதில் ஞானப் பால் பருகி, ஞானம் கைவரப் பெற்றவர் திருஞானசம்பந்தர். இவர் முருகப்பெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவர் சீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி, ஈசனின் இறையருள் கைவரப் பெற்றார். அந்த மூன்று வயது பிஞ்சுக் குழந்தை, சீர்காழிக்கு மேற்கில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றது. அங்குள்ள கொன்றை வனத்தில் எழுந்தருளி இருந்த ‘கொன்றைவன நாதரை’ வழிபட்டார். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருஞானசம்பந்தரின் சிவ தல யாத்திரை தொடங்கியது.

    திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியின் முன்பாக நின்று, தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி கைத் தாளம் போட்டுக் கொண்டே இறைவனைத் துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.

    ‘மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
    சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
    உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’

    என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின.

    தன் பிஞ்சு கரங்கள், சிவக்க சிவக்க கைத்தாளம் இட்டு துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்தார் சிவபெருமான். ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ ஈசன் முடிவெடுத்தார். அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை.

    உடனடியாக இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையான அபிதகுசாம்பாள், அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்று முதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும், ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.

    சுந்தரர் இத்தலம் பற்றி பாடிய திருமுறைப் பதிகத்தில், சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிவு செய்திருப்பதே இதற்குச் சான்றாகும். ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே’ என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர்.



    இந்தக் கோவிலில் தற்போது ஓசை கொடுத்த நாயகி அம்பிகையின் சிலை இரண்டு உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன், புதியவர். கருவறையின் முன்மண்டபத்தில் வடபுறமாய் தனி சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி பழைய அம்மன்.

    முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. அந்தச் சிலையில் சிறிது சேதம் ஏற்படவே, அதனை ஊர் மக்கள் மாற்றி விட்டு தற்போதுள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அன்று இரவு ஊர் மக்கள் கனவில் வந்த அம்மன், ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் ஊனம் ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த மக்கள், பழைய சிலையையும் மூலஸ்தானத்தின் அருகிலேயே தனிச் சன்னிதியில் வைத்து பூஜிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இத்தல அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்கிறார்கள். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் விநாய கரும், முருகரும் துவார பாலகர்களாக இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அழகும், அமைதியும் ஒருங்கே நிலவும் அதி அற்புத திருத்தலமான திருக்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது.

    பிரம்மா, திருமால், லட்சுமி, இந்திரன், வருணன், எமன், அக்னி, வாயு, அகத்தியர், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இந்த ஆலயத்தை தரிசித்துள்ளனர்.

    மந்தாகினி எனும் பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டுள்ளார். மேலும் இங்குள்ள கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வணங்கியுள்ளார். சிறிது காலத்தில் அந்தச் சிறுவன் பேசத் தொடங்கியிருக்கிறான் என்கிறார்கள் இந்தப் பகுதி பக்தர்கள். தன் மகன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தாய், நன்றிப் பெருக்குடன் இத்தல இறைவனுக்கு 42 கிராம் தங்கத்தில் தாளம் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார்.

    இப்படி வாய் பேச வராதவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளையும், இறைவனையும் தரிசித்துச் சென்றுள்ளனர். அதில் இறைவனின் அருளால் வாய் பேச வந்தவர்கள், கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர். இதன் எண்ணிக்கை 600-யைத் தாண்டிச் செல்கிறது என்பதே, இத்தலத்திற்கு இருக்கும் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.



    திக்குவாய் உள்ளவர்கள், பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகள் ஆகியோரை, இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து, தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்ய வேண்டும். மேலும் 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததன் பயனாக, மகாவிஷ்ணுவை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. திருமகள் திரு மணக்கோலம் கண்ட திருத்தலம் என்பதால் இது, ‘திருகோலக்கா’ என்று பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள், இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். அதோடு சுவாமி, அம்பாளையும் வழிபாடு செய்து வர திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களின் தலைமை பதவியை சூரியனுக்கு, இந்த தலத்தில் தான் ஈசன் வழங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த பேரருளை சூரியன் பெற்ற நாள், கார்த்திகை மாத ஞாயிறு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சூரிய பூஜைசெய்ய, பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி அப்போது காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த ஆலயத்தின் முன்புறம் உள்ள திருக்குளமே, சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தமாக திகழ்கிறது.

    பக்தர்களால், ‘தாளமுடையார் கோவில்’ என்று அறியப்படும், இந்த ஆலயத்திற்கு கோபுரம் இல்லை. பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை உள்ளன. சனி மற்றும் அஷ்டமி நாட்களின் அந்திப்பொழுதில் இத்தல சனிபகவானையும், பைரவரையும் தொடர்ந்து அதே நாட்களில் 8 முறை வழிபட்டுவர நவகிரக தோஷங்கள் யாவும் அகலும்.

    ஆண்டுதோறும் சித்திரைமாத திருவாதிரை நாளில் காலையில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் சம்பந்தருக்கு அம்பிகை ‘திருமுலைப்பால் வழங்கும் விழா’ நடக்கும். அன்று இரவில் சீர்காழி ஆலயத்தில் உள்ள சம்பந்தர் திருக்கோலக்கா திருத் தலம் வந்து பதிகம் பாடி, ஈசனிடம் ‘பொற்றாளம் பெறும் விழா’ வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டால், கல்வியில் மேன்மை மற்றும் சகல நற்குணமும் அடையலாம்.

    சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் இருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது.
    ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் போக்கும் கோவில்களை பார்க்கலாம்.
    (1) காளஹஸ்தி

    ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்குக் காலா காலத்தில் திருமணம் நடைபெறாது; தள்ளிக்கொண்டே போகும்.

    குழந்தை பிறக்காது; சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காது. சிலருக்குக் கர்ப்பம் தங்காது; கருச்சிதைவு ஏற்படும். சில பெண்களுக்குத் தாலி தங்காது.
    இதனால் இதை களத்திர தோஷம் என்றும், மாங்கல்ய தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் கூறுவார்கள்.

    ராகு கேது தோஷம், நாகதோஷம், களத்திர (திருமண) தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எது இருந்தாலும் தகுந்த பரிகாரம் செய்து கொண்டு தோஷம் நீங்கி நன்மை பெற முடியும். அப்படிப்பட்ட பரிகாரத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஆந்திராவில் உள்ள ‘காளத்தி’ எனப்படும் காளஹஸ்தி அங்கு நாள்தோறும் பரிகார பூஜை நடை பெறுகிறது.

    சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் காளஹஸ்தி உள்ளது. காளத்தி வேடனான கண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற இடம் இது.
    மலையில் வாழ்ந்த ஒரு யானை இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தால், ‘காளத்தி’ என்று பெயர் பெற்றது.

    காளத்திநாதர் இங்கு நாகலிங்க வடிவில் காட்சி தருகிறார். இறைவன் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாக விளங்கு கிறது.
    நாள்தோறும் ராகு காலத்தில் தோஷ பரிகார பூஜை நடைபெறுவது இக்கோவிலில் உள்ள தனிச்சிறப்பு. இங்குள்ள ‘ராகு, கேது சாந்தி நிலையம்’ என்ற மண்டபத்தில் இந்த பூஜை நடக்கிறது. மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பரிகார பூஜை செய்யலாம். பரிகார மந்திரம் தமிழில் சொல்லப்படுவது தனிச்சிறப்பு ஆகும்.

    பூஜைக்குரிய கட்டணத்தை முதலில் செலுத்தி சீட்டு வாங்கி வரிசையாகக் காத்திருக்க வேண்டும். பூஜைக்கு வேண்டிய துளசிப்பூ, வெள்ளெருக்கன் பூ, தர்ப்பை, அருகு போன்ற பூஜை சாமான்கள் கோவிலில் கொடுக்கிறார்கள்.

    இது தவிர, கோவிலினுள்ளே இன்னொரு பரிகார பூஜை நடக்கிறது. மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், ராகு, கேது தசாபுக்தி நடப்பவர்கள் இந்த சிறப்புப் பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

    காளஹஸ்தி கோவிலில் மிகப்பெரிய விசேஷம் என்னவெனில் அது வாயு ஸ்தலம் என்பதை விட சர்ப்பதோஷ சாந்தி ஸ்தலம் என்பதுதான் விசேஷம்.
    காரணம் அங்குள்ள அம்பாளுக்கு 180 டிகிரி நேர் கீழாக- எதிர்புறத்தில் பாதாள விநாயகர் இருக்கிறார்.

    அந்த பாதாள விநாயகர் கோவில் அமைப்பு கூட - பாம்பின் புற்றின் தலை போல் சிறியதாக அமைந்திருக்கும். பாம்பு புற்றுக்குள் செல்வதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.

    முதலில் புற்றுக்குள் தலையை நுழைத்ததும் சட்டென்று தலையை வெளியே கொண்டு வந்து பின்பு தன் உடல், வால் புறத்தை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். இது இயற்கை. இதே போல் நாமும் இந்த பாதாள விநாயகர் கோவிலுக்குள் செல்லும்போது பாம்பைப் போல் தலையை முதலில் உள்ளுக்குள் நுழைத்து பின்பு மற்ற பாகங்களை நுழைந்து கொண்டு குனிந்து செல்ல வேண்டும்.

    உள்ளே நுழைந்ததும் நாம் நிமிர்ந்து நடக்கலாம். கீழேயுள்ள விநாயகருக்கு நாமே நமது கையால் அர்ச்சனையோ அபிஷேகமோ பூச்சூடுவதோ செய்யலாம். இந்த விநாயகர் கேது சொரூபம்.



    (2) திருநாகேஸ்வரம் :

    நாக தோஷத்துக்கு மிகச் சிறந்த பரிகாரத்தலம் - திருநாகேஸ்வரம் கும்பகோணத்துக்குக் கிழக்கே காரைக்கால் செல்லும் பேருந்து மாக்கத்தில் சுமார் ஆறு கி.மீ தூரம் சென்றால் திருநாகேசுவரத்தை அடையலாம்.

    நாகேசுவரம் கோவில் மிகப் பெரிய கோவில். நாற்திசைக் கோபுரங்களும், மண்டபங்களும், கற் தூண்களும், அரிய சிற்பங்களும் நம்மை அசத்தும்.
    சந்நிதி நிறைந்த கூட்டம் கால சர்ப்பதோஷம், நாக தோஷம், ராகுதசை, இராகுபுத்தி இவற்றினால் முன்னேற்றம் காண இயலாதவர், ராகுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சாந்தி பெற தினமும் இங்கு திரள்கிறார்கள்.

    கருவறையில் வீற்றிருப்பவர் சண்பகாரணியே சுவரர். இவரே நாகநாதமூர்த்தி என்ற பெயரிலும் மூர்த்தி கரகமாக வீற்றிருக்கிறார். ஐந்து தலை பாம்பு வழிபட்ட மூர்த்தி யாதலினாலே நாகநாதர் என்ற பெயரையே சிறக்கத் தாங்கியருளுகிறார்.

    நாகநாதர் சந்நிதியை அடுத்துள்ள சந்நிதியில் சண்முகப் பெருமானும், சண்முகப் பெருமானது சந்நிதியை அடுத்து பிறையணிவாள் நுதல் அம்மை யார் சந்நிதியையும் காணலாம்.

    இப்படி ஐயன் இடையே குமரன், அடுத்து அம்பிகையும் காட்சியளிப்பதால் சோமாஸ் கந்தர் அமைப்புடைய கோயில் எனப்படுகிறது. இத்தலத்தில் மற்றொரு பிராட்டியார் தலத்தின் பெரும் பிராட்டியாராக தனிக் கோயில் ஒன்றில் தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். குன்றாமுலை நாயகியாகிய இந்த அம்மையின் இரு மருங்கும் கலைமகளும் திருமகளும் அணிபெற காட்சி அளிப்பது சிறப்பு.

    பெரும்பாலும் அர்த்த நாரீஸ்வரர் நின்ற வண்ணம் காட்சியளிப்பதே வழக்கம், இதற்கு மாறாக அப்பொருமான் இங்கே வீற்றிருந்த கோலத்திலேயே ஒரு காலை தொங்க விட்டும் மற்றொரு காலை பீடத்தின் மீது ஊன்றியும், வெகு சொகுசாக அமர்ந்திருப்பதைக் காணலாம். விநாயகர், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களும், வசிட்டர், கவுதமர், பராசரர் முதலான முனிவர்களும், பாண்டவர், நளன் முதலிய மன்னர்களும் வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.

    இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத் தின் தென் மேற்கு பகுதியில் ஐந்து தலை பாம்பு நாக ராஜா என்று அழைக்கபெறும் ராகு பகவான் சந்நிதி சிறக்க அமைந் துள்ளது. மக்கள் திரள் திரளாக வந்து ராகு பகவானின் அருளாசியை பெறுகிறார்கள்.

    மடித்த கால் ஒன்றின் தொடையில் இடக்கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அபயமளிக்கும் மாதெய்வமாக வீற்றிருக் கிறார். பாலாபிஷேகம் கண்டருளும் போதெல்லாம் பாலை நீல நிறமாக செய்து திருவிளையாடல் புரிகிறார். ராகுபகவானின் அரசருக்கேற்ற அரசிகளாக இரு தேவியர் உள்ளனர். நாகவல்லி நாக கன்னி என்பது அவர்கள் பெயர். இப்படி குடும்ப சமேத ராய் காட்சி அளிப்பது அரிய காட்சி. இவ்விதம் தேவியர் புடைசூழ வீற்றிருக்கும் இத்தல ராகுபகவானுக்கு நம்மனம் குளிர சிறப்பு செய்தால் நாக தோஷம் உடனே விலகிவிடும்.



    (3) திருப்பாம்புரம் :

    மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் திருபாம் புரம் பாம்பு புரேஸ்வர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

    திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம்.

    ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.

    மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன.

    சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

    இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

    ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.



    (4) கீழ்ப்பெரும்பள்ளம்

    கேதுவுக்கான பரிகார தலம் நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம் பாடி வட்டத்தில் கீழ்ப்பெரும் பள்ளம் என்ற இடத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோவில். இதற்கு ராஜகோபுரம் கிடையாது. கோவிலின் முன்பு நாகத் தீர்த்தம் அமைந்துள்ளது. அதன் கீழ்க்கரையிலும், மேல்கரையிலும் அரசும் வேம்பும் உள்ளது. நாகதோஷ முள்ளவர்கள் இம்மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்யலாம். கோவிலைச் சுற்றி உயரமான மதில்கள் உள்ளன.

    ஆலயத்தின் உள் நுழைந்து வலது பிரகாரத்திற்கு வந்தால் மேற்குப் பிரகாரத்தின் திருமாளிகைப் பத்தியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்கை, லட்சுமி நாராயணர், மகேஸ்வரி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்களைக் காணலாம். கிழக்குப் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியில் சனீஸ்வரர், பைரவர், சம்பந்தர், நாகர், சூரியன் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. இங்கு மேற்கு நோக்கிய நிலையில் கேது எழுந்தருளியுள்ளார்.

    தேகம் தெய்வ வடிவிலும் தலை ஐந்து தலை நாக வடிவிலும் இருகைகளும் கூப்பிய நிலையில் உள்ளார். இவரை வழிபட்ட பின் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியையும் பலிபீடத்தையும் வணங்கி மஹா மண்டபத்தில் உள்ள கருவறையில் எழுந்தருளி இருக்கும் லிங்கவடிவில் உள்ள நாகநாத சுவாமியையும் தரிசிக்கலாம்.
    மூலவரை வணங்கியப்பின் அர்த்த மண்டபத்திலுள்ள, பஞ்சமூர்த்திகள், நடராஜப் பெருமாள் மற்றும் கேது ஆகிய தெய்வங்களைத் தரிசித்து, திரும்ப மஹா மண்டபத்திற்கு வரும்போது தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் சவுந்தர நாயகியைத் தரிசிக்கலாம். இத்திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். நாலு காலப் பூஜை இங்கு நடைபெறுகிறது.

    இத்தலத்திற்குச் செல்ல சீர்காழியிலிருந்து திருவெண்காடு வந்து அங்கிருந்து இத்தலத்திற்குச் செல்லலாம்.

    மண் மருது

    நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

    சித்ர குப்தரை வழிபடுங்கள்

    மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கோடங்கிபட்டியில் அருளும் சித்திரகுப்தரை பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்குகிறது. கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தர் ஆவார்.

    தடைகள்விலகும்

    சென்னை, பல்லாவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு குளக்கரையில் தூமகேது கணபதி அருள்கிறார். தூமம் ராகுவையும் கேது கேதுவையும் குறிக்கும். ராகு-கேது அம்சமாய் விளங்கும் இவரை தரிசித்தால் அரவு கிரகங்களால் ஏற்படும் சுபகாரியத் தடைகள் விலகி மங்களங்கள் உண்டாகும்.

    புனுகு சட்டம் சாற்றுங்கள்

    நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ மணல்மேடு வழியில் கோயில் கொண்டிருக்கிறார் புற்று வடிவான சிவலோகநாதர். இவருக்கு திங்கட்கிழமைகளில் புனுகுச்சட்டம் சாற்றி வழிபட ராகு-கேது தோஷங்கள் விலகுகின்றன.



    (5) திருவேற்காடு

    சென்னை-பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில், வேலப்பன் சாவடி என்ற இடத்திற்கு அருகே திருவேற்காடு என்ற இடம் உள்ளது. இங்கு தேவி ஸ்ரீகருமாரி அம்மன் இரண்டு வடிவம் கொண்டு பக்தர்களை காக்க எழுந்தருளியுள்ளாள். ஓர் உருவத்தில் நாகப்பாம்பாக தோற்றம் அளித்து காக்கின்றாள்.

    இரண்டாவது உருவத்தில், அம்பிகையாக- சுயம்புவாக அழகிய உருக்கொண்டு, நம்பும் பக்தர்களை பரிவுடன் காக்க தோன்றியுள்ளாள். ஒரு காலத்தில் பூவுலகில் ஈஸ்வரனும் அம்பிகையும் வாழ்ந்தனர். அகத்தியர் தேவியையும், ஈசனையும் வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

    எழில்மிகு பாரத பூமியைக் கண்ட தேவி, பூவுலகில் தங்க விரும்பி அகத்தியரிடம் - தனக்கு ஐந்தொழில்களான ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை திறம்பட செய்திட சரியான இடத்தினை தேர்ந்தெடுக்கும்படி தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அகத்தியரும் திருவேற்காடு என்ற பகுதியே அதற்கு சரியான இடமென்று கூறினார்.

    தேவியும் மனம் மகிழ்ந்து காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரக்கன்னி, ஆகாயக்கன்னி கருமாரி போன்ற எழில் கோலங்களுடன் ஏழு உருவங்களாக மாறிமாறித் தோன்றினாள்.

    இவைகளில் கருமாரி என்ற அழகிய வடிவம் கொண்டு திருவேற்காட்டில் நிலைபெற்றாள். கருமாரி தெய்வமாக அம்மா- சுயம்பு உருவமாகவும் நாக உருவம் கொண்டும் இரண்டு வடிவத்தில் கருணைக்கடலாக காட்சியளிக்கிறாள்.

    கருமாரி அம்மன் ஆலயம் அருகில் கரு நாகப்புற்று ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்தப் புற்றில் பால் ஊற்றி வழிபடுகின்றனர். அம்பிகை நாகரூபமாக இருப்பதாலும், புற்று வழிபாடு இருப்பதாலும் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு தங்களது தோஷம் நீங்க வழிபடலாம்.

    இந்த ஆலயத்தில் அம்மன் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இந்த அம்மனை வழிபட்டால், கடன் நீங்கி வளம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.
    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் எழிலாக அருள்பாலிக்கிறாள் தேவி.

    சர்வேஸ்வரியும், அன்னபூரணியும், அபயம் தேடி வருப வர்களுக்கு அருளை வாரி வழங்கும் தெய்வமுமான ஸ்ரீசக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பெண்கள் பலர் புண்ணிய சுமையாக, இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்து அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து சக்குளத்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    பொங்கல் விழா :

    சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தேவி சந்தோஷத்தோடு அருள் புரிகிற கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நிவேத்தியமான பொங்கல் வைத்து தேவியின் அருளை பெறு கிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக் கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரிய தரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.

    அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நிவேத்ய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர் களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது.

    இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாரி பூஜை (பாத பூஜை) :

    உலகின் பல பகுதிகளில் பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில், உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பிரதாயமாக இக்கோவிலில் நாரி பூஜை நடக்கிறது. பெண்களை பீடத்தில் அமரச் செய்து, தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் நீர் ஊற்றி கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குகிறார்.



    எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும்.

    தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை :

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் பறந்துவிடுகிறது என்பது நம்பிக்கை. முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து ஜாதி- மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. இது ஐஸ்வரியத்துக்கு வழிகாட்டுகிறது.

    குடிகாரர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி சில மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பின் குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இது இன்றும் நடந்து வருகிறது. சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக அதற்குரிய தண்டனை கிடைக்கிறது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது.

    வெற்றிலை ஜோதிடம் :

    தேவியின் அருள்பெற்ற இக்கோவிலின் முக்கிய காரிய தரிசியான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாகும்.

    கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர் காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தரு கிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்லும் புண்ணிய தலமாக சக் குளத்து அம்மன் கோவில் திகழ்கிறது.

    தனது சொந்த அனுபவங்களை ஒருவர் மற்றவரிடம் சொல்லி தகவல் பரவுவதால் இன்று தேவியின் புகழ் கேரளாவில் மட்டும் இன்றி பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது.
    பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!.
    பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய்யை எடுத்து, இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக ஒரு புராண வரலாறு உள்ளது.

    அப்படி அன்னை பார்வதிதேவி பெற்ற சாபம் தான் என்ன?

    பார்வதி பெற்ற சாபம் :

    பார்வதிக்கு ஒரு நாள் திடீரென்று ஓர் ஆசை உண்டானது. பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே, சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார்.

    பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடிய வில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன், அஸ்தமிக்காது தயங்கி நின்றது. கோபங்கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும், தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார்.

    தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார். இதைஅடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின் தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

    சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் ‘நீ சுயரூபம் பெற்றுவிட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்’ எனச் சொல்லி மறைந்தார்.

    உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனைநல்லூர். இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால், அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள நெய்குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது.

    அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு, இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்தத் தலமே நெய்குப்பை திருத்தலமாகும். அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்கு உள்ள ஆலயமே சுந்தரேசுவரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூடம் என்றாகி, பின்னர் மருவி தற்போது நெய்குப்பை என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது.


    சுந்தரேஸ்வரர்

    ஆலய அமைப்பு :

    மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது இக்கோவில். பலிபீடம், நந்தி தேவனைக் கடந்து உள்ளே சென்றால் மணிமண்டபம். அம்மன் அருள்மிகு சவுந்திர நாயகி தென்புறம் நோக்கி சாந்தமான முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அடுத்து உள்ளது மகாமண்டபம்.

    வடபுறம் நடராஜர், சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அருள்மிகு சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

    தேவ கோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும் தென் புறம் துர்க்கையும் உள்ளனர். துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் மேற்கில் மும்மூர்த்தி கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பால கணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் எதிரே வெளியே வலஞ்சுழி விநாயகர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

    சூரியன் பெற்ற சாபம்:

    சூரியன் அஸ்தமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? தான் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று ஆதவன் சிவபெருமானிடம் கேட்டார்.

    ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத் தலத்தில் பூஜை செய்ய, சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

    இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

    இத்திருக்கோவிலுக்கு எதிர்புறம் சூரிய தீர்த்தமும், வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப் பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப்பட்டது. நாளடைவில் சுப்பிரமண்ணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது.



    சவுந்திரநாயகி
    இக்கோவிலின் தலவிருட்சம் பவளமல்லி. தினசரி இங்கு காலை, சாயரச்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளியமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றேத் தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒரு முறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமோசனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    ஆராதனைகள் :

    இங்கு மாதப் பிரதோஷங்கள் பல நூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரியில் நான்கு கால பூஜையும், கார்த்திகை சோம வாரங்களில் இறைவன், இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

    அன்னாபிஷேகம் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக நடைபெறுகிறது.

    2.7.2006-ல் இந்த ஆலயத்திற்கு குடமுழுக்குத் திருவிழா நடைபெற்றது. ஆண்டு தோறும் ஜூலை 2-ம் நாள் இறைவன், இறைவி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு வீதியுலா வருவதுண்டு.

    பிரிந்த தம்பதியர் இந்த ஆலயம் வந்து, இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு, 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திர ஹோமம் நடத்துவதினால், அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!.

    கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இத்தலம் கும்பகோணத்தின் வடகிழக்கில் 29 கி.மீ தொலைவிலும், பந்தநல்லூர் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் பந்தநல்லூரில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
    பெங்களூருவில் உள்ள பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால் பெங்களூருவில் உள்ள பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ‘ஊதுகுழல் குன்று’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    பெங்களூருவில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. மலையில் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிகளை ஒட்டி சாலையும் உள்ளது. ஆலய கோபுரம் வரை வாகனங்கள் செல்ல முடியும்.

    முன் காலத்தில் இந்தப் பகுதி சுங்கனஹள்ளி என்று அழைக்கப்பட்டது. விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதியில் வேர்க் கடலை பயிரிடப்பட்டிருந்தது. ஒரு மாடு அந்த கடலைச் செடிகளை தின்று சேதப்படுத்தி வந்தது. அதனால் நஷ்டமடைந்த விவசாயிகள், ஒரு முறை தடியால் அந்த மாட்டை தாக்கினர்.



    அங்கேயே காலை மடக்கி அமர்ந்த அந்த மாடு, அப்படியே கல்லாக மாறிவிட்டது. அத்துடன் நில்லாமல் அந்த கல் சிலை வளரவும் தொடங்கியது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது ஒலித்த அசரீரியின் வாக்குப்படி, நந்தியின் காலடியில் கிடந்த திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் வைத்தனர். உடனடியாக நந்தி சிலை வளர்வது நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக அந்தப் பகுதி மக்கள் நந்திக்கு சிறிய கோவிலை அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்த கோவிலின் வரலாறு.

    திராவிடக் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கருவறையில் பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரே கல்லில் இந்த சிலை காணப்படுகிறது. நந்தியின் பின்புறம் வாலின் அருகில் சிறிய அளவிலான கணபதியின் சிற்பம் இருக்கிறது.

    நந்தியின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறிய கருவறைக்குள், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அனைத்து சிவன் கோவில்களிலும், சிவபெருமான் முகத்தை தரிசித்துக் கொண்டிருக்கும் நந்தி, இந்த ஆலயத்தில் மட்டும் ஈசனுக்கு தன்னுடைய முதுகைக் காட்டிக் கொண்டிருக் கிறது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடைபெறும் வேர்க்கடலை சந்தை மிகப் பிரபலமானது. தங்களுடைய நன்றிக் கடனாக விவசாயிகள் பலரும் நந்தியம் பெருமானுக்கு வேர்க்கடலையை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
    மரமே மூலவராக விளங்கும் ஆலயம், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், என்ற பெருமைகளை கொண்டு திகழ்வது, புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயம்.
    மரமே மூலவராக விளங்கும் ஆலயம், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், புதுச்சேரி மாநிலத்தின் புகழ்பெற்ற அம்மன் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட திருக்கோவிலாகத் திகழ்வது, புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயம்.

    ஆண்டுதோறும் எல்லாக் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவதும், அதில் முக்கிய விழாவாகத் தேர்த் திருவிழா கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவை, மாநில ஆளுநரும், முதல்- அமைச்சரும் சேர்ந்தே வடம் பிடித்து இழுத்து வைப்பார்கள். இது இன்று, நேற்றல்ல.. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கம்.

    தல வரலாறு :

    செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் வரலாறு மிகவும் சிறப்பானது. சுமார் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன்னர், வீரராகவன் என்ற மீனவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் மிகுந்த தெய்வப் பக்தி கொண்டவர்.

    ஒருநாள் காலையில் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக வலையைத் தோளில் சுமந்து, அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன் எதுவும் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவன், கடைசியாக ஒருமுறை முயற்சி செய்தார். வலையில் மிகப்பெரிய மீன் சிக்கியதற்கான அறிகுறி தென்பட்டது. மகிழ்ச்சியில் திளைந்த அவர் வலையைக் கரைக்கு இழுத்து வந்தார். ஆனால் வலையில் சிக்கியது மீனல்ல, மிகப்பெரிய மரக்கட்டை. என்றாலும் அதை அங்கேயே விட்டுச் செல்ல மனம் இல்லாமல், அந்த மரக்கட்டையைத் தன் வீட்டுத் தோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.

    மரக்கட்டையின் மகத்துவம் :

    நாட்கள் பல கடந்தன. ஒரு நாள் அடுப்புஎரிக்க விறகு இல்லாததால், வீரராகவனின் மனைவி கொல்லை புறத்தில் கிடந்த மரக்கட்டையை எடுத்தாள். அதை கோடாரியைக் கொண்டு பிளக்க முயன்றாள். மரத்துண்டு மீது கோடாரி பட்டதும், அது உடைவதற்கு பதிலாக, மரக்கட்டையில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதைக் கண்ட அந்தப் பெண் அச்சம் கொண்டாள். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது.

    இந்த நிலையில் வீடு திரும்பிய வீரராகவன், அந்த மரக்கட்டையை தன் வீட்டிற்குள் வைத்து அதை தெய்வமாக நினைத்து பூஜித்து வரத் தொடங்கினார். அதன்பிறகு அவரது வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வ வளமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஒருநாள் இரவு வீரராகவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது ஒரு கனவு தோன்றியது. அதில் பிரகாசமான ஒளியுடன் அழகிய அம்மன் தோன்றி, ‘பக்தனே! தெய்வீகத்தன்மை பெற்ற ரேணுகை நான்தான். அன்னை பராசக்தியின் ஒரு பகுதி. இவ்வூர் செய்த தவத்தின் பயனால் இங்கே குடியேற வந்துள்ளேன். அதன் முன்னோட்டமாகவே ஒரு மரத்துண்டு உன்னிடம் வந்து சேர்ந்துள்ளது.

    அந்த மரத்தை நான் குறிப்பிடும் இடத்தில் நிறுவி, அதன்மீது என் திருவுருவை விக்கிரகத்தால் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா!. அந்த இடம் பல்லாண்டு காலம் சித்தர் வழிபட்டு வரும் சித்தர் பீடமாகும். அதுவே எனக்கு ஏற்ற இடம். என்னை செங்கழுநீர் அம்மன் என்ற திருப்பெயரில் அழைக்கலாம்’ என்று கூறி, அன்னை ரேணுகா மறைந்தாள். திடுக்கிட்டு எழுந்த வீரராகவன் மனதில் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. இதனை ஊர் மக்களுக்கும் தெரிவித்தார். அனைவரும் வியந்தனர்.



    செங்கழுநீர் அம்மன் :

    மறுநாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அன்னை குறிப்பிட்ட இடத்தைத் தேடினர். அப்போது புதர்கள் அடர்ந்த பாம்புப் புற்று ஒன்றைக் கண்டனர். அதிலிருந்து வெளிப்பட்ட பெரிய நாகம் ஒன்று, படம் விரித்து ஆடியது. பின்பு மூன்று முறை பூமியில் அடித்து இடத்தை அடையாளம் காட்டி மறைந்தது.

    அந்த இடத்தைத் சுத்தம் செய்து, வலையில் சிக்கிய மரத்துண்டை பீடமாக அமைத்தனர். பிறகு கழுத்துக்கு மேற்பட்ட அருள்பூத்த முகத்தை உருவமாக வடித்து வைத்தனர். செங்கழுநீர் ஓடையில் கிடைத்ததன் நினைவாக அன்னைக்கு ‘செங்கழுநீர் அம்மன்’ என்ற திருப்பெயரே நிலை பெற்றது. அதன்பிறகு தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் ஒன்று, ஏற்கனவே இருந்த அம்மனின் பின்புறம் அமைக்கப்பட்டது.

    புதுவை மாநிலத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது, அரிக்கமேடு பகுதி. இங்கு பழங்காலத்தில் ரோமானியர்களோடு நெருங்கிய வாணிபத் தொடர்பு இருந்து வந்ததை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய சிறப்புமிகு அரிக்கமேடு பகுதியை அடுத்து உள்ள கடலோர கிராமம் தான் வீராம்பட்டினம். இங்கு தான் பழம்பெருமை வாய்ந்த செங் கழுநீர் அம்மன் திருக்கோவில் கொண்டுள்ளாள்.

    பரிகாரத் தலம் :

    தீராத நோய் தீர, கண் பார்வைக் கோளாறு நீங்க, திருமணப் பேறு, குழந்தைப் பேறு வேண்டுவோர் எனப் பலருக்கும் கண்கண்ட தெய்வமாக இவ்வம்மன் விளங்குவதால், அன்னையை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் இருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை வீராம்பட்டினம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    ஆடி ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா நடைபெறும். இந்த நாளில்தான் புதுவை மாநிலத்தின் ஆளுநர், மாநில முதல்-அமைச்சர் இருவரும் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.

    கோவில் நிர்வாகத்தை அறங்காவலர் குழுவும், கிராம பஞ்சாயத்தும், கிராமப் பொதுமக்களும் சேர்ந்து கவனித்து வருகின்றனர். பூஜைகள் செய்யும் பணியினை சிவாச்சாரியார்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    புதுச்சேரி- கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது அரியாங்குப்பம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீராம்பட்டினம் உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு டவுன் பஸ் வசதியும் உண்டு.
    புதுக்கோட்டை மாவட்டம் தளிஞ்சி என்ற ஊரில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது தளிஞ்சி என்ற ஊர். இங்கு அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் பெயர் அகஸ்தீஸ்வரர், இறைவி பெயர் அகிலாண்டேஸ்வரி அம்மன். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

    கோவிலின் முகப்க் கடந்தவுடன் அகன்ற பிரகாரம் உள்ளது. நாகர், நந்தி, பலி பீடம் இவைகளைக் கடந்ததும், மகாமண்டபம் உள்ளது. மகா மண்டப நுழை வாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி அகிலாண்டேஸ்வரி அம்மனின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் முகத்துடன் வீற்றிருக்கிறாள்.

    அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் லிங்கத்திருமேனியுடன் காட்சிதரும் அகஸ்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்யலாம். இறைவனின் ஆவுடையார் பூமியில் இரண்டு மீட்டர் ஆழத்திற்கும் கீழ் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது. இறைவனின் முக அமைப்பு யாளியின் உருவத்தில் அமைந்துள்ளது. இறைவனின் வலது புறம் சிரசில் 15 செ.மீ அளவில் வடு ஒன்றும் காணப்படுகிறது.

    இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணா மூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையம்மனும், கிழக்கில் ஜேஷ்டா தேவியும் அருள் பாலிக்கின்றனர். இறைவியின் தேவக் கோட்டத்தில் மேற்கே வைஷ்ணவி தேவியும், வடக்கில் பிராம்ஹி தேவியும், கிழக்கே மகேஸ்வரியும் உள்ளனர். பிரகாரத்தில் வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

    மன்னனின் கதை :

    இந்தப் பகுதியை ஆட்சி செய்த கம்பராஜா என்ற மன்னன் சிறந்த சிவ பக்தன். சிவபூஜை செய்யாமலோ அல்லது சிவாலயத்தை தரிசிக்காமலோ இரவு உண்ணமாட்டான். ஒருமுறை புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த வழியில் இருந்த ஒரு கிராமத்தை அடைந்த போது இருட்டி விட்டது. அந்த ஊரில் கோவில் எங்குள்ளது என்று மன்னனுக்கோ, அவனுடன் வந்தவர்களுக்கோ தெரியவில்லை. ஊரில் இருந்த சிலரும் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.

    ‘யாரைக் கேட்பது?’ மன்னனுக்குப் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தபோது, சற்றுத் தொலைவில் ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கை நோக்கி நடந்த மன்னனுக்கு, அந்த கரிய இருளில் நடைபாதை பிடிபடவில்லை.

    எனவே இது இறைவனின் ஆலயமாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய மன்னன், தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக அந்த விளக்கு இருந்த இடத்தை நோக்கி வணங்கினான். சிவ தரிசனம் முடிந்த திருப்தியில் இரவு உணவை உண்டுவிட்டு உறங்கத் தொடங்கினான். பொழுது விடிந்தது. காலையில் நீராடிவிட்டு, இரவு வணங்கிய அகல் விளக்கு இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

    அந்த இடத்தை அடைந்த மன்னனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அது இறைவனின் ஆலயமல்ல.. ஒரு தாசியின் வீடு. தனது வாடிக்கையாளர்களுக்கு இடம் தெரிய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அடையாளச் சின்னம் தான் அந்த அகல் விளக்கு என்ற உண்மை தெரிந்து மன்னன் வேதனைப்பட்டான்.



    சிவாலயம் என எண்ணி ஒரு தாசிவீட்டை வணங்கியதால் தான் தீராத தோஷத்துக்கு ஆளாகிவிட்டதாக மனம் புழுங்கினார். அதே வேதனையோடு அந்த ஊரில் இருந்த சிவாலயத்தை தேடிச் சென்றார். இறைவனிடம் தன் தோஷத்தை தீர்த்து வைக்கும்படி மன்றாடினார். இறைவனை வழிபட, வழிபட மன்னனின் மன வருத்தம் மறைந்து மகிழ்ச்சி குடிகொண்டது. இதையடுத்து அந்தக் கிராமம் முழுவதையும் இறைவனின் ஆலயத்திற்கு தானமாக வழங்கினான் அந்த மன்னன் என்பது செவிவழி செய்தியாகும். அது முதல் அந்த கிராமம் ‘கம்ப ராஜபுரம்’ என்றே அழைக்கப்படலாயிற்று.

    கம்பராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரின் தற்போதைய பெயர் ‘தளிஞ்சி’ என்பதாகும். ஏன் இந்த பெயர் மாற்றம்?. இதற்கும் அரவான் ஆலயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவும் ஒரு செவி வழி கதைதான்.

    கம்பராஜபுரத்தில் இருந்த ஆலயத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞன், அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் வசித்த ஒரு பெண்ணை காதலித்தான். யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு கம்பராஜபுரம் அழைத்து வந்தான். பெண்ணின் உறவினர்கள் வசதியானவர்கள் மட்டுமல்ல; வலிமையானவர்கள்.

    தங்கள் வீட்டுப் பெண்ணை கவர்ந்து சென்ற இளைஞனின் குடும்பத்தையே வெட்டிச் சாய்த்தனர். உறவினர் அனைவரும் இறந்த நிலையில் தாயம்மா என்ற கர்ப்பிணி பெண் மட்டும் தப்பிப் பிழைத்து தன் தாய்வீடான புதுக்கோட்டைக்குச் சென்று விட்டாள். அகஸ்தீஸ்வரரின் தீவிர பக்தையான அவளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இருபது ஆண்டு காலம் ஓடியது. தான் வாக்கப்பட்ட பூமியையும், தன் இஷ்ட தெய்வமான அகஸ்தீஸ்வரரையும் தரிசிக்க விரும்பிய தாயம்மா கம்பராஜபுரம் வந்தாள். தன்னுடன் இரண்டு சேவல்களை எடுத்து வந்தாள்.

    வழியில் ஒரு சேவல் பறந்து போய் ஓர் ஆல மரத்தின் மேல் அமர்ந்து கொண்டது. அந்த மரத்தடியில்தான் அரவான் காப்பு கட்டும் உற்சவம் இன்றும் நடக்கிறது. தன் இரு மகன்களுடனும், இன்னொரு சேவலுடனும் அகஸ்தீஸ்வரர் ஆலயம் வந்து அமர்ந்தாள் தாயம்மா. அங்கு வந்த ஊர் பெரியவர்களிடம் தாயம்மா தன் கதையை கூற அவர்கள் நம்ப மறுத்தனர்.

    சிவபெருமானின் பக்தையான அவள் ‘நான் என்ன செய்தால் என்னை நம்புவீர்கள்?’ என்று கேட்டாள்.

    அதற்கு ஊர் பெரியவர்கள் ‘அதோ இருக்கும் பட்டுப்போன புளியமரத்தை துளிர்க்க வைக்க முடியுமா?’ என்று கேட்க, தன் கையிலிருந்த சேவலை பறக்க விட்டாள் தாயம்மா. அது புளியமரத்தில் போய் அமர்ந்ததும் அந்த மரம் துளிர்த்தது. இதையடுத்து அவளை அந்த ஊரிலேயே வசிக்க ஊர் மக்கள் அனுமதித்தனர். அவள் தினமும் அகஸ்தீஸ்வரரை வணங்கி தன் இறுதி நாட்களை அங்கு கழித்தாள். பட்டுப்போன மரம் தழைத்து வளர்ந்ததால் கம்பராஜபுரம் என்ற அந்த ஊர், ‘தழைஞ்சூர்’ எனப் பெயர் மாறியது, பின் அதுவும் மருவி, தளிஞ்சி என அழைக்கப்படுகிறது.

    அகஸ்தியரால் வழிபடப்பட்ட சிவபெருமான், இத்தல இறைவன் என்பதால் அவருக்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள். தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கும் இந்த ஆலயத்தில், இறைவனுக்கோ, இறைவிக்கோ உற்சவ மூர்த்திகள் கிடையாது. எனவே, இறைவன்-இறைவி வீதியுலா வருவது கிடையாது.

    நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மார்கழி 30 நாட்கள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமியில் இறைவனுக்கு மிகச் சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    தளிஞ்சி என்ற அந்த அழகிய கிராமத்திற்குச் சென்றால், அகஸ்தீஸ்வரர் ஆலயம், நல்லரவான் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம் என்று மூன்று ஆலயங்களையும் மனம் குளிர தரிசித்து விட்டு திரும்பலாம்.
    கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருள்பாலிக்கிறார். இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    இந்த உலகம் எதிலிருந்து தோன்றியது?. ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவம் இதற்குத் தகுந்த பதிலைத் தரும். அவரது நான்கு திருக்கரங்களில், இரண்டு திருக்கரங்கள் நடனத்திற்கேற்ப அபிநயம் பிடிக்க, மற்ற இரண்டு கரங்களும் அக்னியையும், உடுக்கையையும் பிடித்தபடி உள்ளது. ஒலியினைக் குறிப்பது உடுக்கை. ஒளியை குறிப்பது அக்னி. ஒலியையும், ஒளியையும் உருவாக்கி, இறுதியில் அவற்றைத் தன்னில் ஒடுக்குவதும் நடராஜப் பெருமானே.

    ஆம்! ‘அவனின்றி அணுவும் அசையாது’. உலக இயக்கமே நடராஜப் பெருமானின் திருநடனத்திலேயே இயங்குகிறது. ஒலியாலும், ஒளியாலும் உலகைப் படைத்து, பின் தனக்குள்ளே ஒடுக்கிக் கொள்ளும் தத்துவத்தை வெளிப்படையாக உணர்த்தும், அதி அற்புதக் கோலம் நடராஜரின் திருவடிவம். உணர்வதற்கு அரிதான இந்த உருவத்தை சிவாலயங்களில் கண்டு தரிசிக்கலாம். இப்படிப்பட்ட நடராஜரின் திருமேனி பெரும்பாலும் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

    ஆனால், கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருள்பாலிக்கிறார். சிற்பி ஒருவர், உலைக் களத்தில் நடராஜரை வார்க்கும் போது, சிவபெருமானே நேரில் வந்து நடராஜராய் சமைந்த அதி அற்புத சுயம்பு நடராஜர் விக்கிரகம் இங்கு உள்ளது. இவரது திருவுருவத்தில், மனித உடலில் இருப்பது போன்று மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும் , நகங்கள், முடியும் காணப்படுகின்றன.

    இந்த உயிரோட்டமான விக்கிரகம் இத்தலத்திற்கு எப்படி வந்தது?. வாருங்கள், கொஞ்சம் கோனேரிராஜபுரம் ஆலயத்தை தரிசித்து தெளிவுபெறுவோம்.

    அப்பர், சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.

    சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.

    அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.



    சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

    ‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.

    ‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

    மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் அபிஷேகம் இத்தல சுயம்பு நடராஜருக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. ஈசனே மனித வடிவில் வந்து, இத்தலத்தில் இருக்கும் நடராஜராய் உருவானதால், ஆனி திருமஞ்சன நாளில் இவரை வணங்கி வழிபட்டால் வேண்டியன யாவும் நமக்கு கிடைக்கும்.

    திருவீழிமிழலை, திருமணஞ்சேரி போலவே இங்கும் ஈசன், ‘மாப்பிள்ளை சுவாமி’யாக திருக்கல்யாண கோலத்தில் உற்சவராக எழுந்தருளியுள்ளார். திருமால் அம்பிகையை தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன் எழுந்தருளியிருக் கிறார். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர் ஆவார். இவர் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனி சன்னிதியில் அங்கவளநாயகி அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல ஈசனை ‘பூமி நாதன்’ என்றும் அழைக்கிறார்கள். நிலம், வீடு வாங்க, வீடு கட்ட இந்த இறைவனின் வழிபாடே சிறப்பு. மேலும் வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்சினை உள்ளவர்களும் இங்கு வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

    பூமாதேவி வழிபடுவதற்காக தேவ சிற்பியான விஸ்வகர்மா ‘திருநல்லம்’ என்னும் கோனேரி ராஜபுரத்தில் ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி, சூட்சுமாகம முறைப்படி சிவலிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.இத்தல மூலவர் உமாமகேஸ்வரர் தேவகுரு பிரகஸ்பதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். எனவே இத்தல ஈசனை வழிபட்டால் குருபார்வை கிட்டும். பல தலங்களிலும் அகத்தியருக்கு, ஈசன் தமது திருக்கல்யாண காட்சியை காட்டி அருளியுள்ளார். அதில் ஒன்று கோனேரிராஜபுரம் திருத்தலம். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தல மூலவரையும், உற்சவர் மாப்பிள்ளை சுவாமியையும் நெய் தீபம் ஏற்றி, வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், திருமணத் தடைகள் அகன்று நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

    திருவிடைமருதூரில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாவடுதுறையில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், எஸ்.புதூரில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருநல்லம்.

    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 91- 435 - 244 9830, 244 9800.
    இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம் இதுவாகும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இந்த ஊரில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் முருகப் பெருமான், கழுகாசலமூர்த்தி என்கிற சுப்பிரமணியராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். அவருடன் வள்ளி- தெய்வானை தேவியரும் அருள்புரிகின்றனர். ஆலயத்தின் தீர்த்தம், ‘குமார தெப்பம்’. தல விருட்சம் மலைக்குன்று.

    இந்தக் கோவிலில் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மயிலின் தலைப்பகுதி இறைவனின் இடப்பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வள்ளி- தெய்வானை தேவியர் இருவரும் முருகப்பெருமானின் முன்பு பக்கவாட்டில் நின்ற கோலத்தில், இறைவனை நோக்கும் விதத்தில் அமைந்திருப்பதும் மிகவும் வித்தியாசமான கோலமாக உள்ளது.

    பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் தோஷத்தை நீக்கி மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் இத்தல சுப்பிரமணியர் திகழ்கிறார். எனவே இத்தலம் ‘குரு-மங்கள ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது. இறைவனின் கருவறை மலையின் குகையில் அமைந்து இருப்பதால், இக்கோவிலின் மலையே ஆலயத்தின் கோபுரமாக விளங்குகிறது. இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம் இதுவாகும்.

    தல வரலாறு :

    முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு வந்தான். அப்போது ஓய்வெடுக்க விரும்பி வனத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் அமர்ந்தான். மிகுந்த களைப்பின் காரணமாக தூங்கிப் போனான்.

    நண்பகலில் பூஜை செய்வது போன்றும், மணி ஒலிக்கும் சத்தம் கேட்டும் கண் விழித்துப் பார்த்தான். அப்போது அங்கு பசு ஒன்று பாறையில் தானாக பாலை சுரந்து கொண்டு இருந்ததைக் கண்டான். சிறிது நேரம் கழித்து அந்த பாறையை அகற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையும், அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானும் காட்சியளித்தனர். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த மன்னன், இறைக் காட்சியால் உள்ளம் நெகிழ்ந்து வழிபட்டான்.

    மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படாமல், தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும், தேவர்கள் வந்து பூஜிக்கின்ற மூர்த்தி என்றும் உணர்ந்து மக்கள் வழிபட வசதிகள் செய்து வைத்தான் என்கிறது தல வரலாறு.



    இந்தக் கோவிலுக்கு உள்ள இலக்கிய சிறப்பை தெரிந்து கொள்வோம்.

    தேவார காலத்திற்கு பிறகு பாடப்பட்ட பக்தி பாடல்களுள், மிகவும் புகழ் பெற்று விளங்கி வருபவை திருப்புகழ் பாடல் களாகும். இது 13-ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதரால் இயற்றப்பட்டதாகும். இந்த பாடல்கள் அனைத்தும் முருகப்பெருமானை போற்றுவதாக அமைந்தவை. கழுகுமலை முருகப்பெருமானை குறித்து தனது திருப்புகழில் மூன்று பாடல்களை அருணகிரி நாதர் இயற்றியுள்ளார். 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட கந்தபுராணத்தை இயற்றியுள்ளார்.

    அதில் குன்றுதோராடிய குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும், அவற்றில் ராஜயோகமாக முருகன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த எட்டயபுரம் காளிப்புலவரும், சிதம்பர கவிராயர் எனும் புலவரும், ‘கழுகுமலை பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் இரண்டு நூல்களைப் படைத்துள்ளார்கள். இசைவாணர் களில் சிறப்பு பெற்ற முத்துசாமி தீட்சிதரால் கீர்த்தனைகளும், பாம்பன் சுவாமிகளால் திருப்பாக்களும் இந்த ஆலயத்தின் மேல் பாடப்பட்டுள்ளன.

    மதுரையை தலைமையாக கொண்ட பாண்டிய நாட்டின் தென்பகுதியில் அமைந்திருந்தது கழுகு மலை. இத்தலத்திற்கு தெற்கேயுள்ள திருநெல்வேலியும், அதனைச் சார்ந்த பகுதியும் தென்பாண்டி நாடு என்று அழைக்கப்பட்டது. பாண்டியர்களை வென்ற சோழ மன்னர்கள், தங்களை சோழ பாண்டியர்கள் என்று குறிப்பிட்டு 11-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தனர். அந்த நூற்றாண்டில் சோழ நாட்டு தலைநகரமாகிய திருவானைக்காவலில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் போன்று கழுகுமலையில் ஜம்புலிங்கேசுவரர், அகிலாண்டேசுவரி அம்மன் ஆகியோருக்கு கோவில் எழுப்பியுள்ளது வரலாற்று செய்தியாகும்.

    ராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயம் :

     
    இத்தலத்திற்கு புராணச் சிறப்பு ஒன்றும் உண்டு. அதைப்பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

    ராமபிரானும், சீதாப்பிராட்டியாரும் வனத்தில் இருந்தபோது, ராவணன், சீதையை கவர்ந்து சென்றான். அதனை தடுத்த சடாயுவின் இறக்கையை வெட்டினான் ராவணன். பின்னர் அங்கிருந்து சீதையோடு தப்பித்துச் சென்றான். சீதையின் குரல் கேட்டு ஓடி வந்த ராமனும், லட்சுமணனும் ரத்தக் காயத்துடன் விழுந்து கிடந்த சடாயுவை கண்டனர். அவர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு தன் உயிரை விட்டது சடாயு பறவை. இதனால் ராமபிரான் மிகவும் மனம் வருந்தி, சடாயுவிற்கு செய்ய வேண்டிய சடங்குகளை தானே செய்தார்.


    கழுகாசலமூர்த்தி

    சடாயு இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது உடன்பிறப்பான சம்பாதி முனிவர், ராமபிரானை அடைந்து சடாயுவின் இறப்பிற்கு மிகவும் வருந்தியதோடு, தமது உடன்பிறந்தவனுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைக்கூட செய்ய இயலாத பாவியாகி விட்டேனே என்று புலம்பினார்.

    அதைக்கேட்ட ராமபிரான், சம்பாதி முனிவரை தேற்றி, ‘தென்னாட்டில் 300 அடி உயரம் உள்ள மலையடிவாரத்தில், ஒரு குகையில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கி உன் பாவத்தைப் போக்கிக்கொள்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

    கழுகு முனிவராகிய சம்பாதி, இத்தலத்திற்கு வந்து இந்த மலையிலேயே தங்கியிருந்து, ஒரு முகமும், ஆறு கைகளும் கொண்டு விளங்கும் முருகப்பெருமானாகிய சுப்பிரமணியரை வணங்கி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை கொண்ட முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இத்தலத்தில், கழுகு முனிவர் வசித்து வந்ததால் இம்மலை ‘கழுகுமலை’ என்ற பெயரைப் பெற்றது. கழுகுமலையில் அருள்பாலிக்கும் மூர்த்தி என்பதால், இத்தல இறைவனும் ‘கழுகாசலமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

    சிறப்பு வாய்ந்த இந்தக் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவிலில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடக்கிறது. கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 21 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    நெல்லை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து இக்கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி உள்ளது.
    திருமால் காட்சி தந்த இடத்தில் உருவான கோவிலே, அகரம் தசாவதாரக் கோவில். பெருமாளை இங்கு ‘தசாவதார பெருமாள்’ என்கின்றனர். பத்து அவதார மூர்த்திகளையும், இங்கு தரிசிக்கலாம்.
    தமிழகத்தில் தசாவதாரக் கோவில்கள் குறைவு. ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி அருகிலுள்ள அகரம் போன்ற இடங்களில் மட்டுமே இத்தகைய கோவில்கள் உள்ளன.

    ஒரு காலத்தில், ராமாயணமும், மகாபாரதமும் மட்டுமே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ராமர், கிருஷ்ணர் பற்றி தெரிந்த அளவு, திருமாலின் மற்ற அவதாரங்களின் சிறப்பு குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை. இது, அகரம் கிராமத்தில் வசித்த, மித்ரசகா என்ற இளைஞரின் மனதில், தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அவர் தசாவதார நாடகக்குழு ஒன்றைத் தொடங்கி, அனைத்து அவதார வரலாற்றையும் நாடகங்களாக வெளிப்படுத்தினார். இந்த தகவல், தமிழகமெங்கும் பரவவே, பல ஊர்களிலும் அவரை அழைத்து, நாடகம் நடத்தினர்.

    காஷ்மீர் மன்னன் குங்குமாங்கதன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு இந்த தகவல் கிடைக்கவே, தன் தேசத்திற்கு மித்ரசகாவை வரவழைத்தான். இங்கிருந்து குதிரை வண்டிகளில் பல மாதங்களாக பயணம் செய்து, காஷ்மீரை அடைந்தார் மித்ரசகா.

    அவரது நடிப்பு மக்களை மட்டுமல்ல, குங்குமாங்கதனின் மகள் சந்திர மாலினியையும் கவர்ந்தது. அதனால், அவள் மித்ரசகா மேல் காதல் வயப்பட்டாள். மன்னன் முதலில் மறுத்தாலும், மகளின் பிடிவாதத்தால் மித்ரசகாவுக்கே பெண்ணைக் கட்டிக் கொடுத்தான். மணமக்கள் அகரம் கிராமத்துக்கே திரும்பினர். மாலினி, பாடும் திறன் கொண்டவள் என்பதால், கணவரின் நாடகங்களில் அவளே பாடி வந்தாள்.



    முதுமையடைந்த மித்ரசகா ஒரு நாள் இறந்து போனார். சோகம் தாளாத மாலினி, தங்கள் கிராமத்தில் ஓடும் தாமிர பரணி வெள்ளத்தில் குதித்தாள். அப்போது, ஒரு அந்தணர் அவளைத் தூக்கி, ‘அஞ்சேல்’ என்று கூறி, ‘ஓம் வாசுதேவாய நம’ என்ற மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மீதி காலத்தை கழிக்க வேண்டினார். அவளும் அவ்வாறு சொல்லி வரவே, அவளின் பக்தியால் மகிழ்ந்த திருமால், அவளுக்கு தசாவதார காட்சி அளித்தார்.

    திருமால் காட்சி தந்த இடத்தில் உருவான கோவிலே, அகரம் தசாவதாரக் கோவில். பெருமாளை இங்கு ‘தசாவதார பெருமாள்’ என்கின்றனர். பத்து அவதார மூர்த்திகளையும், இங்கு தரிசிக்கலாம்.

    மாசி வளர்பிறை துவாதசியன்று, ‘தசாவதார ஜெயந்தி’ நடைபெறும். இதுதவிர, தனித்தனியாகவும் ஜெயந்தி நடத்தப்படும். கூர்ம ஜெயந்தி, ஆனி மாத தேய்பிறை துவாதசியன்று நடக்கிறது. சனி திசை, ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச்சனி நடந்தால், கூர்ம ஜெயந்தியன்று, தாமிர பரணியில் உள்ள தசாவதார தீர்த்தத்தில் நீராடி, அகரம் பெருமாளை வணங்கி வரலாம்.

    திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால், அகரம் என்ற கிராமத்தை அடையலாம்.
    வில்லிப்பாக்கம் சிவன் கோவில் விலங்குகளுக்கு அறியாமல் செய்த தீங்குகளுக்கு தோஷம் நீக்கும் தலமாக விளங்குவது சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    இறைவனின் தலங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சிறப்புக்களுடன் திகழ்கின்றன. சில நோய் தீர்க்கும் தலங்களாகும். சில தோஷம் நீக்கும் தலங்களாகவும் இன்னும் சில சிவப்பேறு அளிக்கும் தலங்களாகவும் விளங்குகின்றன. அந்த வகையில் விலங்குகள், பறவைகள் போன்றவை வணங்கி தலமாகவும் திகழ்கின்றன. இந்த வகையில் பூனை வணங்கிப் பேறு பெற்ற தலமாகத் திகழ்வது சூணாம்பேடு வில்லிப்பாக்கம் தலமாகும். இத்தலம் விலங்குகளுக்கு அறியாமல் செய்த தீங்குகளுக்கு தோஷம் நீக்கும் தலமாக விளங்குவது சிறப்பாகும்.

    பூனை - வேடுவன் :

    சிவபெருமானின் வாயில் காப்பாளராகத் திகழும் நந்திதேவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். ஒருவன் காந்தன், மற்றொருவன் மகா காந்தன். இவர்கள் இருவரும் நந்திதேவரின் சிவபூஜைக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பது வழக்கம். அதன்படி ஒரு நாள் காலை பூக்கள் கொண்டுவர இருவரும் சென்றனர். ஒரு குளத்தில் இருந்த வெண்தாமரைப் பூக்களைப் பறித்தனர். அப்போது கைதவறி ஒரு பூ நீரிலும், மற்றொன்று கரையிலும் விழுந்தன. நீரில் விழுந்த பூ மீனாகவும், கரையில் விழுந்த பூ கிளியாகவும் மாறின. இதனால் வியப் படைந்த அவர்கள், மீண்டும் அதைச் செய்தனர். அந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போகவே, மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருந்தனர்.

    இதற்கிடையில், காலை நேர பூஜைக்கு பூக்கள் வராததைக் கண்டு கோபமடைந்த நந்திதேவர், குளக்கரைக்கு வந்தார். சீடர்களின் விளையாட்டுப் போக்கினைக் கண்ட நந்திதேவர், கோபக்கனலுடன் சீடர்களை நோக்கிய போது, காந்தன் பூனை போல் விழிக்கவும், மகா காந்தன் சுரட்டுக்கோலை வைத்துக் கொண்டு நின்றனர். உடனே நந்திதேவர், காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் மாற சாபமிட்டார். பூனையாகவும் வேடுவனாகவும் மாறிய சீடர்கள், தங்கள் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்டினர்.

    இதனால் மனமிரங்கிய நந்திதேவர், ‘காஞ்சி மாநகருக்குத் தென்கிழக்குத் திசையில் ஐந்து காத தூரத்தில் புண்டரீகப் புஷ்கரணி என்ற தீர்த்தமும், அதனருகில் அகஸ்தீஸ்வரர் என்ற மகாலிங்கமும் உள்ளன. நீங்கள் இருவரும் தனித்தனியே அங்குச் சென்று ஒருவருக்கொருவர் அறியாமல் குளத்தில் மூழ்கி, அகஸ்தீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். அப்போது நீங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் போது உங்கள் சாபம் விலகும்’ எனக் கூறினார்.

    அதன்படியே பூனையான காந்தன், முதலில் சிவ வழிபாடு செய்து முடிப்பதும், அதன்பின் வேடுவனான மகா காந்தன் பூஜை செய்வதும், தனித்தனியே தொடர்ந்து வந்தது. வேடுவனுக்கு ஒரு ஐயம் இருந்து கொண்டே வந்தது. நாம் பூஜை செய்வதற்கு முன்பாகவே வேறு யாரோ பூஜைசெய்து விடுகின்றனரே. அது யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. ஒரு வழியாக அதற்கான நேரமும் வந்தது. சீக்கரமாகவே பூஜை செய்ய முனைந்த வேடுவன் ஆலயம் சென்றான். அப்போது அங்கே ஒரு பூனை சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து கோபமடைந்த வேடுவன், பூனை மீது அம்பெய்தான். பூனை சற்று நகர்ந்துவிட, அம்பானது சிவ லிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. இந்நிலையில், பயந்த வேடுவனும் பூனையும் ஒருவரையொருவர் நோக்க, சாப விமோசனம் கிடைத்தது.

    பூனை காந்தனாகவும், வேடுவன் மகா காந்தனாகவும் பழைய நிலைக்கே உருமாறினர். இருவரும் வியப்பும் நடுக்கமும் மேலிட்டு சிவபெருமானை வேண்டி நின்றனர். பெருமானுக்கு ஏற்பட்ட இடையூறினை மன்னிக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனும் அவர்களுக்கு அருள் வழங்கினார். அன்றுமுதல் இறைவன் திருப்பெயர் கிராத மார்ஜாலீஸ்வரர் என்றும், இவ்வூர் கிராத மார்ஜாலபுரம் என்றும் வழங்கப்பட்டது. கிராதன் என்பதற்கு வேடுவனும், மார்ஜாலம் என்பதற்கு பூனை என்பது பொருள்.

    கங்கையின் பாவம் நீங்கிய தலம் :

    அனைவரின் பாவத்தைப் போக்கும் அன்னையாக விளங்கும் கங்கை, தன் தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனை வேண்டி நின்றாள். அப்போது தோன்றிய இறைவன் இத் தலத்தின் பெருமையைக் கூறி, புண்டரீக தீர்த்தத்தில் நீராடி, மகாலிங்கத்தை வணங்கினால், தோஷம் நீங்குமென்று அருளினார். அவ்வாறே செய்த கங்கை தன் தோஷங்களை நீக்கியதாகப் புராணம் கூறுகிறது. அன்று முதல் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும் வழங்கப்பட்டது.

    அகத்தியர் வழிபட்டது :

    கயிலையில் நடந்த சிவன், பார்வதி திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்களும் ரிஷிகளும் கயிலாய மலையில் கூடி நின்றதால், பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது. இதனால் தென்திசை மேலெழும்ப ஆரம்பித்தது. உயிரினங்கள் பீதியடைந்தன. இதனைச் சரிசெய்ய இறைவன், அகத்தியரிடம் தென்திசை நின்று பாரத்தைச் சரிசெய்ய பணித்தார். அதன்படியே அகத்தியர் தன் கமண்டலத்தில் எண்ணற்ற பாணலிங்கங்களை எடுத்துக் கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றார்.

    வழியில் சிவபூஜைக்குரிய காலங்களில் தன் கமண்டலத்திலிருந்து பாணலிங்கங் களில் ஒவ்வொன்றாக வைத்து பூஜை செய்து காஞ்சி மாநகரம், திருக்கழுக்குன்றம் கடந்து ஒரு வில்வ வனத்தைக் கண்டார். அப்போது பூஜைக்குரிய நேரம் வந்துவிட்டது. அங்கிருந்து தீர்த்தத்தில் நீராடி, வெளியே வந்தபோது அங்கே கொன்றை மரத்தடியில் ஒரு மகாலிங்கம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரை வணங்கி தனது பூஜையை நிறைவு செய்தார். அதன் அருகில் வழக்கமான முறையில் ஒரு பாண லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் அந்த இறைவனுக்கு மகாலிங்கம் என்றும், அகஸ்தீஸ்வரர் என்றும் பெயர் விளங்கியது. இதன்பின் பொதிகை மலை சென்று பூமியைச் சமன்படுத்தினார்.


    உற்சவர் சிலை

    தெய்வங்கள் பூசித்தது :

    மகாபலி சக்ரவர்த்தி வதம் செய்த திருமால் தன் தோஷம் நீங்க, இத்தலத்து இறைவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதாகவும், இதேபோல, பிரம்மதேவன் படைப்புத் தொழிலில் மேம்படவும், தேவேந்திரன் அகலிகை வஞ்சித்த தோஷம் நீங்கவும், சந்திரன் தட்சன் செய்த யாகத்திற்குத் தடையாக இருந்ததால் ஏற்பட்ட தோஷத்தையும் இத்தலத்து இறைவன் நீக்கியதாகக் கூறப் படுகிறது.

    இறைவன் - இறைவி :


    தெற்கு நோக்கிய எளிய வாயில் ராஜகோபுரமின்றி அமைந்துள்ள வாயிலைக் கடந்ததும் கொடிமரம் நம்மை வரவேற்கிறது. அதன் நேரே வலது புறம் தனி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அன்னையின் பெயர் மவுத்திகாம்பாள் என்றும், முத்தாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது. எளிய வடிவில் அன்னை அருள் வழங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இந்தச் சன்னிதியைக் கடந்து மேற்கு நோக்கினால், கருவறை யில் மூலவர் அகஸ்தீஸ்வரர் கம்பீரமாகக் காட்சி தருகிறார். தெய்வங்களும் தேவர்களும் விலங்குகளும் வழிபட்ட தெய்வம் இவரே. இவ்வாலயத்தில் புடைப்புச் சிற்பமாக ஏகபாத மூர்த்தி சிற்பம் தட்சிணாமூர்த்தியின் அருகே அமைந்துள்ளது. அதேபோல மூலவர் கருவறையின் பின்புறம் ஆலய ஐதீகங்களை நினைவுபடுத்தும் வகையில் கிராதநாதர், கங்காதேவி, வேடுவன் ஆகியோர் சிலைகளும் அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரே புண்டரீக புஷ்கரணி என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலின் தலமரம் சரக்கொன்றை. இது ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி, ஆருத்ரா உற்சவம், நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற அனைத்து விழாக்களும் எளிய முறையில் சிறப்புடன் நடைபெறுகின்றன.

    இத்திருக்கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    பூனைக்குப் பேறு தந்த தலமாக இது விளங்கினாலும், பூனை உள்ளிட்ட எந்த விலங்குகளுக்கும், மனிதர்கள் தாங்கள் அறியாமல் செய்த பாவங்களும் தோஷங்களும் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில், சூணாம்பேடு அருகே அமைந்துள்ளது வில்லிப்பாக்கம். சென்னையில் இருந்து தென்மேற்கே 110 கி.மீட்டர், புதுச்சேரியிலிருந்து வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுராந்தகத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் வில்லிப்பாக்கம் உள்ளது. சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணாங்குபட்டு என்ற இடத்திலிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் இருக்கிறது. வெண்ணாங்குபட்டிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு வழியாகவும் வில்லிப்பாக்கம் வரலாம். சூணாம்பேட்டிற்கும் வில்லிப்பாக்கத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவு மட்டுமே.
    மேட்டுப்பாளையம் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    ஆலய தரிசனம் :

    இந்த திருக்கோவிலை அடைந்ததும் நம்மை ஆலய கோபுரம் வரவேற்கிறது. கோபுர தரிசனம் முடித்து கோவிலுக்குள் செல்கிறோம். கருவறையில் காட்சி தரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாளை இங்கிருந்தே தரிசிக்கலாம். கோவில் முன் மண்டபத்தில் தென்புறத்தில் சக்கரத்தாழ்வாரும், வலதுபுறத்தில் தன்வந்திரி பகவானும் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அவர்களை தரிசித்து விட்டு அர்த்த மண்டபத்திற்குள் நுழை கிறோம். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் அருகே துவாரபாலகர்களான ஜெயன் தென்புறமும், வடபுறம் விஜயனும் எழுந்தருளி உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே செல்கிறோம்.

    நின்ற கோலத்தில் பெருமாள் :

    அங்கே.. அலங்கார பிரியரான எம்பெருமாள் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி உடன் கேசவபெருமாளாக எழுந்தருளி உள்ளார். அவரது திவ்ய தரிசனத்தை பெற்று கொண்டு கருவறையில் காட்சி தரும் மூலவர் கரிவரதராஜபெருமாளை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். சங்கு, சக்கரம், அபய கஸ்தம், சுதையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானுடன் பக்தர் களுக்கு சேவை சாத்தி அருளுகின்றார்கள். இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

    இந்த அர்த்த மண்டபத்திலேயே ஸ்ரீசீதாராம, லட்சுமண, அனுமன் ஆகியோர் தனி சன்னிதியில் எழுந்தருளி தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். பின்னர் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வருகிறோம். அர்த்த மண்டபத்தை ஓட்டி யோகநரசிம்மர் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

    வலப்புறத்தில் ஆண்டாள் :

    பின்னர் கோவில் பிரகாரத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதியை தரிசித்தபடியே காட்சி தரும் 11 ஆழ்வார்களையும், ராமானுஜர், வேதாந்ததேசிகர், மணவாள முனிவர் ஆகியோரையும் தரிசிக்கலாம். மூலவர் சன்னிதிக்கு வலப்புறம், பிரகாரத்தில் தனி சன்னிதியாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி உள்ளார்.

    பொதுவாக பெருமாள் திருத்தலங்களில் இடதுப்புறம் தான் ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்த திருத்தலத்தில் பெருமாளுக்கு வலதுப்புறமாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தான் பெருமாளுக்கு வலப்புறம் தாயார் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இதே போன்று கீழ்திருப்பதி என்று அழைக்கப் படும் கோவிந்தராஜபெருமாள் கோவிலிலும் ஆண்டாள் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு பின்புறம் அமைக்கப்பட்டு உள்ள துளசி மாடத்தை வலம் வந்து வணங்கி விட்டு பிரகாரத்தின் மேற்கு புறம் நின்று கருவறையின் விமான கோபுரத்தை தரிசிக்கலாம். பின்னர் பிரகாரத்தின் வழியே வலம் வரும் போது அங்கு தனி சன்னிதியில் வடபுறம் நோக்கி காட்சி தரும் அஞ்சனையின் மைந்தன் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு மீண்டும் முன்மண்டபத்தை அடையலாம்.


    ஸ்ரீதேவி, பூதேவி சமேத கேசவபெருமாள்

    ஆலய வரலாறு :

    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருத்தலம் இருந்த இடத்தில் ஒரு சுயம்பு இருந்ததாகவும் அப்போதைய மக்கள் அதை வழிபட்டு வந்தனர். அப்போது அந்த சுயம்புவில் திடீரென்று ஒருநாள் ஒரு வைரக்கொடி போன்று பூணூல் தோன்றியதாக தெரி கிறது. அந்த பூணூலை அகற்ற ஆசாரி ஒருவர் சுயம்புவை உளியால் செதுக்கிய போது திடீரென்று கண்பார்வை இழந்தார். இதனால் பயந்து போன மக்கள் அந்த சுயம்புவை தற்போது மூலவர் உள்ள பீடத்தின் கீழ் வைத்து, அதன் மீது கல்லால் ஆன மூலவர் கரிவரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அதன்பிறகு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகளை செய்தனர்.

    இதே போல இந்த திருத்தலத்தில் உள்ள ஸ்ரீராமர் உற்சவர் சிலையை, இப்பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் வைத்திருந்ததாகவும், அதை முறைப்படி பூஜைகள் செய்யாமல் விட்டு விட்டதாகவும், அந்த ராமர் விக்ரகத்தை பெருமாள் கோவிலில் வைத்து வழிபட வேண்டும் என்று ஊர் பெரியவர் கனவில் ராமரே வந்து கூறி சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெரியவரும், ராமர் விக்ரகம் வைத்திருந்த பக்தரை சந்தித்து, தன் கனவில் ராமர் வந்து கூறிய தகவலை தெரிவித்து ராமர் விக்ரகத்தை கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டு உள்ளார். பின்னாளில் சீதா, லட்சுமணர், அனுமன் ஆகியோரது உற்சவ சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. அதன்பிறகு திருவிழா காலங்களில் சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் உற்சவ மூர்த்திகள் புறப்பாடு சென்றதால் சன்னிதியில் சாமி சிலைகள் இல்லாததை அறிந்து அங்கு கற்களால் ஆன சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இந்த திருத்தலத்தில் கடந்த 5.1.1925-ம் ஆண்டு முதலே வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்பட்டு வந்து இருக்கிறது. அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கோவில் முன்மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    தத்து பரிகாரம் :

    இந்த திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோஷம் கொண்டவர்களின் தோஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப பச்சை பயறும், உருண்டை வெல்லமும் கொண்டு வந்து பெருமாளுக்கு படைத்து, பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி தங்கள் தோஷங்களில் இருந்து விடுபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8 முதல் 9 மணியளவில் சுக்ர ஓரையில் சந்தான பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது சாமிக்கு நெய்தீபம் ஏற்றி, தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபாடு நடக்கிறது. கடைசியாக இந்த திருத்தலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த திருத்தலத்தில் பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அஸ்தம் நட்சத்திரத்தன்று சுவாமி புறப்பாடு உண்டு. இது தவிர வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு உள்ளிட்ட விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.

    இந்த திருத்தலத்தில் தினமும் காலை 6.30 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.



    ஆண்டாள் தாயார்
    காரிய சித்திக்கு பூ வழிபாடு :

    இந்த திருத்தலத்தில் புதிதாக மேற்கொள்ளும் காரிய சித்திக்கு பூ வைத்து பெருமாளின் அனுக் கிரகம் கிடைக்கிறதா? என்று பக்தர்கள் பார்க்கின்றனர். இதற்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நற்காரியத்தை மனதில் நினைத்து கொண்டு வெள்ளை அரளி பூவையும், சிவப்பு அரளி பூவையும் ஒரு தாளில் மடித்து கட்டி அதை மூலவர் வீற்றிருக்கும் கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கருவறையில் வைத்த தாளில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பிரித்து பார்க்கும் போது அதில் வெள்ளை அரளி பூ இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியம் கை கூடும் என்பதும், சிவப்பு அரளி பூ வந்தால் தற்சமயத்துக்கு அந்த காரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம் :

    கோவையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த திருத்தலம் அமைந்து உள்ளது. பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லலாம். கோவையில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
    ×