என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengazhuneer Amman Temple"

    • வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான்.
    • கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர்.

    செங்கழுநீர் அம்மன் கோவில்

    புதுச்சேரியில் வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது செங்கழுநீர் அம்மன் கோவில். பல பெருமைகளை கொண்ட இக்கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இக்கோவிலை பற்றி இங்கு பார்ப்போம்.

    தல வரலாறு

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் வீரராகவன் என்ற மீனவன் வசித்து வந்தான். இவன் அதீத தெய்வ பக்தி கொண்டவன். ஒரு நாள் காலை வேளையில், அருகிலுள்ள ஓடையில் மீன்பிடிக்கச் சென்றான். காலையில் இருந்து மீன் பிடிப்பதற்கு வலை வீசியும் சூரியன் மறையும் வரை ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்தான்.

    வீடு திரும்புவதற்கு முன்பு இறுதியாக ஒருமுறை ஓடையில் வலையை வீசினான். அவன் வலையை இழுக்கும்போது, வலை கனமாக இருப்பதை உணர்ந்தான். வலையில் சிக்கி இருப்பது ஒரு மீன் தான் என்று மகிழ்ச்சியுடன் வலையை இழுத்தான். ஆனால் வலையில் ஒரு பெரிய மரத்துண்டு இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அவன் அந்த மரத்துண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டான்.

    ஒரு நாள் அவரது மனைவிக்கு சமையல் செய்வதற்கு விறகு கிடைக்கவில்லை. அதனால் கொல்லைப்புறத்தில் போட்ட விறகுத்துண்டை எடுத்து கோடரியால் வெட்ட முயன்றான். ஆனால் கோடரியால் வெட்டியும் மரத்துண்டு பிளக்கவில்லை. கோடரி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. இதை பார்த்ததும் அவரும், அவர் மனைவியும் அதிர்ந்து போனார்கள்.

    உடனே வீரராகவன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தான். இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து பார்த்து வியந்தனர். இதையடுத்து வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் ஏற்பட்டது.

    சில நாட்களுக்குப் பிறகு, வீரராகவனின் கனவில் தோன்றிய அம்மன், ''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக அருள் பெற்ற ரேணுகைதான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதியில் வாழும் மக்கள் செய்த தவத்தின் பயனாக, இங்கு கோவில் கொண்டு மக்களுக்கு அருள் வழங்க வந்துள்ளேன். என்னுடைய வருகையை உணர்த்தவே, எனது அடையாளமாக உனக்கு இந்த மரத்துண்டு கிடைத்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர்பீடம் ஒன்று உள்ளது. அதுவே எனக்கு ஏற்ற இடம். அங்கு இந்த மரத்துண்டை வைத்து, அதன்மேல் எனது திருவுருவை பிரதிஷ்டை செய்யுங்கள். என்னை செங்கழுநீர் அம்மன் என்று அழைத்து வழிபட்டு வாருங்கள்'' என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் வீரராகவன், தான் கண்ட கனவுப் பற்றி கிராம மக்களுக்குத் தெரிவித்தான். உடனே கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். அப்போது ஒரு அடர்ந்த புதர் பகுதியில் ஒரு எறும்புப் புற்று இருப்பதை கண்டனர். அதிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்து, படம் எடுத்து தரையில் மூன்று முறை அடித்து, சிலையை நிறுவ வேண்டிய இடத்தைக் காட்டியது. அதன்பின் ஊர் மக்கள் அந்த இடத்தை தோண்டி சுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து வலையில் இருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு கொண்டு வரப்பட்டு பீடம் அமைத்தனர். அதன்மேல், அம்மன் சிரசை நிறுவி அம்மனை எழுந்தருள செய்து, 'செங்கழுநீர் அம்மன்' என்ற திருநாமம் இட்டு அழைத்து வருகின்றனர்.

    ஆலயம் அமைய வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டிய அந்த பாம்பு, புற்றுக்கும் கோவிலுக்கும் இடையே போய்வந்துகொண்டிருந்தது. அடிக்கடி அன்னையின் திருமேனியில் ஏறி அணிகலன் போல் சுற்றிக்கொண்டும் காட்சி தந்தது. இதனால் அந்த நாகத்தையும் தெய்வச் சின்னமாகவே கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். சில காலங்கள் கழிந்த பிறகு, பீடமும் சிரசும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில் தேவதாரு மரத்தால் தேவியின் முழு உருவமும் அமைக்கப்பட்டது.

    கோவில் அமைப்பு

    பல நூற்றாண்டுகளாக ஒரு சிறிய குடிசையிலிருந்த இந்தக் கோவில், படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு பெரிய கோவிலாக உருவெடுத்தது. கோவில், முன் கோபுரம், சுற்று மதில்கள், பிரகார மண்டபம், அழகிய சுதைச் சிற்பங்கள் என்று அழகுற காட்சி தருகிறது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை பார்த்தவாறு அருள்பாலிக்கிறார். அன்னையின் திருக்கரங்களில் உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவை உள்ளன. தொடக்கத்தில் இந்த செங்கழுநீர் அம்மனை மீனவ இன மக்கள் மட்டுமே வணங்கி வழிபட்டு வந்தனர். பின்னர், புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள மக்களும் செங்கழுநீர் அம்மனை தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு கோவில் தேர் உருவாக்கப்பட்டது, மேலும் புதுச்சேரி மாகாணத்தில் கோவில் தேர் கொண்ட முதல் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கும் தேர்த் திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

    தீராத நோய்கள் அகலவும், கண் பார்வைக் கோளாறு நீங்கவும், திருமணப் பேறு, குழந்தைப் பேறு கிடைக்க வேண்டியும் வருபவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இந்த அம்மன் விளங்குவதால், அன்னையை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.

    திருவிழா

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகள் வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீர் அம்மன் திருவீதி உலா வருவார்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது அரியாங்குப்பம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீராம்பட்டினம் உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு டவுன் பஸ் வசதியும் உண்டு.

    ×