என் மலர்tooltip icon

    கோவில்கள்

    ராகு தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரமுடையார் கோவிலில் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
    ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் ஆலயம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில்.

    ஆலய அமைப்பு :

    கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது. அதனை அடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறாள்.

    தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிரகாரத்தின் தென் மேற்குத் திசையில் நாக மாணிக்கத்தை வைத்து பூஜை செய்த மாணிக்க விநாயகரும், மேற்கு திசையில் வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும், வடமேற்கு திசையில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு திசையில் சூரியன், விநாயகர் மற்றும் பைரவரும், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர்.

    இக்கோவிலில் ஆகம விதிப்படி துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகள் இல்லை. ராகுவின் நண்பன் சனி என்பதால் சனி தன் மனைவியுடன் ராகுவின் சன்னிதியில் இருக்கிறார். மேலும் ராகு, கேதுவுக்கு இந்த ஆலயத்தில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் ஆதி ராகு தலமாகவும் அழைக்கப்படுகிறது.

    அமுதம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது தவிர பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவையம், கழுமலம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

    ராகுவுக்கும் கேதுவுக்கும் கிரகப்பதவி கிடைத்தது அல்லவா? அது என்ன கதை?

    பூர்வ காலத்தில் தேவரும், அசுரரும் கூடி மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தாமணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலியன தோன்றின. தொடர்ந்து நரை, திரை, பிணி, மூட்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாகிய தேவாமிர்தம் தோன்றியது.

    அசுரர்கள் இந்த தேவாமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. மேலும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். எனவே, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார்.

    மோகினியின் அழகைக் கண்ட அசுரர்கள் மதிமயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு, தேவர் களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்.

    அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்கை என்பவளுக்கும் பிறந்த ‘சியிங்கேயன்’ என்பவன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் குறிப்பால் உணர்த்தினர். அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த அசுரனை ஓங்கி அடித்தார்.

    அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை ‘சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் ‘செம்பாம்பின் குடி’யிலும் விழுந்தது. தேவார்மிதம் உண்டதால், அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாயிற்று.

    இந்த அரவங்கள் சிவபெருமானைத் தியானித்து, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடும் தவம் புரிய, இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அரவங்கள் சிவபெருமானிடம் சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கு அருளுமாறு வேண்டினர்.

    ‘சூரிய, சந்திரர்கள் உங்களுக்குப் பகைவர்கள்தான். ஆனால், அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே, அமர பட்சம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.

    மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் தோன்றினார்கள். அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் சேர்ந்து ஒன்பது கிரகங்களாக (நவக்கிரகங்களாக) அவர்கள் விளங்கும்படி வரமளித்தார் சிவபெருமான் என்பது புராண வரலாறு.

    இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

    ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று நாகேஸ்வரமுடையாருக்கு, 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அபிஷேகம் அன்னத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

    பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.

    இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தைப் பாதுகாப்பதற்காக விநாயகர், காகம் வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து விட்டதால் வந்த தீர்த்தமே கழுமல நதியாகும். இதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தம். இந்த நதி ஆலயத்தின் மேற்குத் திசையில் ஓடு கிறது.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

    நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.

    இந்த கோவில் பற்றிய தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்: 9443785862
    கடன் பிரச்சினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி, மனமகிழ்ச்சியுடன் வாழ உதவும் தலமாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் திகழ்கிறது.
    கடன் பிரச்சினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி, மனமகிழ்ச்சியுடன் வாழ உதவும் தலமாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    வில்வமங்களம் சுவாமிகளும், அந்தப் பகுதியை ஆண்ட அரசன் செம்பகச்சேரியும் ஒரு படகில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தனர். ஆற்றின் கரையை நெருங்கிய போது, அவர் களுக்கு இனிய புல்லாங்குழல் ஓசை கேட்டது. இனிய இசையில் மயங்கிய இருவரும் ‘ஓசை எங்கிருந்து வருகிறது?’ என்று சுற்றிலும் பார்த்தனர்.

    வில்வமங்களம் சுவாமிகளுக்கு மட்டும் ஆற்றின் கரையிலிருந்த ஆலமரம் ஒன்றில், அமர்ந்த நிலையில் கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. உடனே அவர் அங்கிருந்த கிருஷ்ணனைப் பார்த்து வணங்கினார்.

    அரசனுக்கு எதுவும் தெரியாததால், ‘சுவாமி! கரையிலிருக்கும் ஆலமரத்தைப் பார்த்து வணங்குகிறீர்களே! அந்த ஆலமரத்தில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.

    ‘மரத்தில் கிருஷ்ணன் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பது, உமக்குத் தெரியவில்லையா?’ என்று அரசனைப் பார்த்து கேட்டார், வில்வமங்களம் சுவாமிகள்.

    உடனே அரசன், ‘இறைவா! சுவாமிகளுக்குக் காண்பித்த தங்களின் திருவுருவை எனக்கும் காட்டியருளுங்கள்’ என்று வேண்டினான். அவனின் வேண்டுதலைக் கேட்ட இறைவன் அரசனுக்கும் தன் திருக்காட்சியை காட்டியருளினார். புல்லாங்குழல் இசைத்தபடி அம்மரத்தில் அமர்ந்திருந்த இறைவனின் அழகிய தோற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த அரசன், அந்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவனுடைய வேண்டுதலுக்காக அங்கே கோவில் கொள்வதாகச் சொன்னார்.

    அரசன் செம்பகச்சேரி, வில்வமங்களம் சுவாமி களின் ஆலோசனையுடன் ஆலமரம் இருந்த ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினான். ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் அந்த இடம் அம்பலப்புழை (அம்பலம் - கோவில், புழை -ஆறு) என்று பெயர் பெற்றது. அம்பலப்புழை என்பதே பின்னர் அம்பலப்புழா என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர் சிலர்.

    இன்னும் சிலரோ, ‘அம்பலப்புழா என்று பெயர் வந்ததற்கு அது காரணமில்லை, அதற்கு வேறு ஒரு கதை இருக்கிறது’ என்கின்றனர். வாருங்கள் அந்தக் கதையையும் பார்த்து விடுவோம்.

    கோவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த செம்பகச்சேரி, அந்தக் கோவில் கருவறையில் நிறுவுவதற்காகக் கண்ணன் சிலை ஒன்றைச் செய்யச் சொன்னான். அரசன் சொன்னபடி கண்ணன் சிலை உருவாக்கப்பட்டது. சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான நாளும் குறிக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நாளுக்கு முன்பாக, கண்ணனின் சிலையைப் பார்த்த அர்ச்சகர், அந்தச் சிலையில் குறைபாடு இருப்பதாகவும், அதை கோவில் கருவறையில் நிறுவ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.



    அதைக் கேட்ட அரசன், ‘சிலையில் என்ன குறைபாடு இருக்கிறது?’ என்றான்.

    உடனே அர்ச்சகர், சிலையில் ஒரு கையில் தனது விரலால் லேசாகத் தொட்டார். அவ்வளவுதான், சிலையின் கை உடைந்து கீழே விழுந்து விட்டது.

    அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன், கோவிலில் தான் திட்டமிட்ட நாளில் சிலையை நிறுவ முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினான். அங்கிருந்தவர்களில் சிலர், ‘குறிச்சி என்ற பகுதியில் சிலைகளை செய்யும் பணி நடக்கிறது. அங்கிருந்து நல்ல தொரு கண்ணன் சிலையை வாங்கி வரலாம்’ என்று மன்னனிடம் ஆலோசனை தெரிவித்தனர்.

    ஆனால் அரசன் செம்பகச்சேரிக்கும், குறிச்சிப் பகுதியை ஆண்ட அரசனுக்கும் பகை இருந்தது. அதனால் அங்கிருந்து சிலையை வாங்குவதில் மன்னன் தயக்கம் காட்டினான். இந்த நிலையில் மன்னனின் பணியாள் ஒருவர், குறிச்சி பகுதிக்குச் சென்று ஒரு சிலையைக் கடத்தி வந்துவிட்டார். ஆனால் அந்த சிலை கண்ணன் சிலையாக இல்லாமல், பார்த்தசாரதி சிலையாக இருந்தது. கண்ணனின் சித்தம் அதுதான் என்பதால், பார்த்தசாரதி சிலையையே கோவிலில் நிறுவ முடிவு செய்தனர். அதுவரை அந்த சிலையை மறைத்து வைத்தனர்.

    குறிப்பிட்ட நாளில் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவிலுக்குக் கொண்டு சென்றனர். கருவறை பீடத்தில் சிலையை வைத்தபோது, அது சமநிலை இல்லாமல் ஒரு பக்கமாக சாய்ந்தது. அப்போது அங்கு வந்த வில்வமங்களம் சுவாமிகள், ஒரு வெற்றிலையை எடுத்து சிலையின் கீழ் பகுதியில் வைத்தார். சிலை அசையாமல் அப்படியே சம நிலையில் நின்றது. இதனால் இந்தக் கோவிலுக்கு ‘தாம்பூலப்புழா’ என்ற பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி, ‘அம்பலப்புழா’ என்று மாறிப்போனதாக சொல்கிறார்கள்.

    இந்தக் கோவிலில் மூலவராக இருக்கும் பார்த்தசாரதி ஒரு கையில் சாட்டையுடனும், மறு கையில் சங்குடனும் ருத்ர நிலையில் காட்சி தருகிறார். விஷ்ணு கோவில்களில் உள்ள அனைத்துத் தோற்றங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் இருக்கும் விஷ்ணுவை இக்கோவிலில் மட்டுமே பார்க்க முடியும்.

    ஆலயம் தினமும் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும். தினமும் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை இறைவனுக்குப் பால் பாயாசம் படைத்து உச்சி கால பூஜை செய்யப்படுகிறது. இங்கு படைக்கப்படும் பால் பாயாசத்திற்காகக் குருவாயூரப்பன் தினமும் இப்பூஜையில் கலந்து கொள்ள வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    சிறப்பு விழாக்கள் :

    இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதம் தவிர்த்து, அனைத்து மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேரள நாட்காட்டியின் மீனம் (பங்குனி) மாதத்தில் 10 நாட்கள் வரை நடைபெறும் ‘ஆறாட்டு விழா’ முதன்மை விழாவாக இருக் கிறது. இவ்விழாவின் போது, வேலக்களி எனும் ஆட்டம் நடத்தப்பெறுகிறது.

    கேரள நாட்காட்டியின் மிதுனம் (ஆனி) மாதம் மூலம் நட்சத்திர நாளில் அம்பலப்புழா மூலக் கலசா எனப்படும் மூலநாள் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுதவிர கிருஷ்ணஜெயந்தி, ராம நவமி போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால், அவர் களது அனைத்துக் கடன்களும் தீர்ந்து, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்துவிடும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது.



    அம்பலப்புழாவில் குருவாயூரப்பன்:

    மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான், 1789-ம் ஆண்டு மலபார் மீது படையெடுத்தார். அவர்களிடமிருந்து குருவாயூர் கோவிலில் இருக்கும் குருவாயூரப்பன் சிலையைக் காப்பாற்ற நினைத்த சிலர், கோவிலின் மூலவர் சிலையை அருகிலிருந்த கிணற்று நீரில் மறைத்து வைத்தனர். உற்சவர் சிலையை அம்பலப்புழாவிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்குக் கொண்டு வந்து வைத்தனர். அந்தக் கோவிலில் குருவாயூர் உற்சவர் சிலைக்கு, தொடர்ச்சியாக வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, அந்தச் சிலை மீண்டும் குருவாயூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், அம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலில் குருவாயூரப்பன் சிலை புதியதாக வைக்கப்பட்டு, பூஜை செய்யும் முறை வழிமுறைக்கு வந்தது.

    குஞ்சன் மிழவு :


    அம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலின் ஓலைக்கூரை மண்டபத்தின் நடுவில், ‘மிழவு’ எனும் பெரிய அளவிலான இசைக்கருவி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இசைக் கருவியைக் ‘குஞ்சன் மிழவு’ என்று சொல்கின்றனர்.

    1705-ம் ஆண்டு முதல் 1770-ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த குஞ்சன் நம்பியார் என்பவர், இக்கோவிலில் புராணக் கதைகளுக்கான சாக்கியர் கூத்து எனும் நிகழ்வினைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அந்தக் கூத்தில் ‘துள்ளல்’ எனும் நகைச்சுவையுடனான வடிவத்தை உருவாக்கி மக்களிடம் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை எளிமையாகக் கொண்டு சேர்த்துப் பெருமை பெற்றார் என்றும் சொல்கின்றனர். அதற்காக இந்தக் கருவியை பயன்படுத்தியிருக்கிறார்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், ஆழப்புழாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அம்பலப்புழா. அங்கிருந்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது.
    குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்தத் தலம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு:

    சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் பனச்சிக்காடு என்னும் இடத்தில், கீழப்புரத்து இல்லத்தைச் சேர்ந்த தாமோதர நம்பூதரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் வேதனையில் துவண்டு வந்தார். அவர் அங்கிருந்த விஷ்ணு கோவிலில் தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி, தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இந்தநிலையில் ஒருநாள் அவரது கனவில், ‘கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், அவர் விருப்பம் நிறைவேறும்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. அதன்பின்னர் தாமோதர நம்பூதரி, ஆண்டுதோறும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று, தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வழிபட்டு வந்தார்.

    இவ்வாறு ஒரு முறை அவர் கொல்லூர் சென்று அம்பிகையை வழிபட்டு பின்னர் பனச்சிக்காடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு கோவிலுக்கு தென்புறம் உள்ள குளக்கரையில், தன் குடையை வைத்துவிட்டு நீராடினார். நீராடிய பின் கரைக்குத் திரும்பிய நம்பூதரி, தான் கரையில் வைத்துச் சென்ற குடையை எடுத்தார். அவரால் அந்தக் குடையை எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

    அப்போது, ‘தாமோதரா! உனக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்காதது பற்றி வருந்தாதே. ஆதிசங்கரர் இங்கிருந்த மூகாம்பிகையை, கொல்லூருக்குக் கொண்டு சென்று எழுந்தருளச் செய்தார். இப்போது அவளது வடிவமான சரஸ்வதி, உனது குடையில் அமர்ந்து உன்னுடன் இங்கே வந்திருக்கிறாள். நீ இங்குள்ள காட்டிற்குள் சென்று பார். அங்கு உனக்குக் குழந்தை வடிவிலான சரஸ்வதி சிலை ஒன்று கிடைக்கும். அதை இத்தலத்தில் நிறுவி, குடையில் இருக்கும் சரஸ்வதியை அதில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வா!’ என்று ஓர் அசரீரி கேட்டது.



    அதனைக் கேட்ட நம்பூதரி காட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு குழந்தை வடிவிலான சரஸ்வதி சிலை கிடைத்தது. அந்தச் சிலையை எடுத்து வந்த அவர், தான் குளக்கரையில் வைத்து எடுக்க முடியாமல் போன, குடை இருந்த இடத்தில் அந்தச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். நம்பூ தரியைத் தொடர்ந்து தற்போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சரஸ்வதி தேவியை வழிபட்டு வருகின்றனர்.

    நம்பூதரி வழிபட்ட சரஸ்வதி தேவியின் சிலையைச் சுற்றிலும் தற்போது வெற்றிலைக் கொடிகள் சூழ்ந்து விட்டன. இதற்கு அடியில் மூகாம்பிகை கோவிலில் இருந்து, சரஸ்வதி எழுந்தருளிய குடை இருக்கிறது. இதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால், குழந்தை சரஸ்வதி சிலையைப் பார்க்க முடியாது. ‘சரஸ்’ என்றால் தண்ணீர் என்றும், ‘வதி’ என்றால் தேவி என்றும் பொருள். இதனடிப்படையில் இந்தக் கோவிலை ஒரு குளம் சூழ்ந்துள்ளது என்று இங்குள்ளவர்கள் சொல்கின்றனர்.

    தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி, அதனைச் சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலில் இருக்கும் சரஸ்வதி தேவி, கொல்லூரிலிருந்து தெற்காக வந்து கோவில் கொண்டிருப்பதால், இந்த மூகாம்பிகையைத் ‘தெற்கு மூகாம்பிகா’ (தட்சிண மூகாம்பிகா) என்றும் அழைக்கின்றனர்.

    நவராத்திரி வழிபாடு :

    இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நாட்களில் சரஸ்வதி தேவிக்குக் குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமி அன்று அதிகமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.

    இந்நாளில் பலர் தங்கள் குழந்தையுடன் வந்து தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) வழிபாடுகளைச் செய்கின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் புத்தகம், எழுதுகோல்களைக் கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்து, குழந்தைகளின் கல்வி மேலும் சிறப்படைய வணங்கிக் கொள்கின்றனர். நடனம், இசை, சிற்பம் போன்ற பல்வேறு துறையில் இருக்கும் கலைஞர்கள் தங்கள் கலை மேலும் வளர்ச்சியடைந்து, அந்தக் கலையில் சிறப்புகளைப் பெற்றிட வேண்டுமென்று வழிபட்டுச் செல்கிறார்கள்.



    குழந்தைப் பேறு:

    குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    கல்வித் தொடக்க வழிபாடு :

    தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர்.

    இவ்வழிபாட்டின் போது, பெற்றோர் தங்கள் குழந்தையினை நீராட்டி, புத்தாடை அணிவித்து, சரஸ்வதி தேவியை வணங்கி, தங்கள் குழந்தையின் விரல் பிடித்து அரிசியில் எழுத வைக்கின்றனர். இதற்காக இந்தக் கோவிலைச் சுற்றி மூன்று பக்கங்களில் குழந்தைகள் எழுதுவதற்கு வசதியாக கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு, அதில் அரிசி நிரப்பப்பட்டிருக்கும்.

    சிலர், இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் குழந்தையின் நாவில் ‘ஹரிஸ்ரீ’ என்று எழுதுகிறார். அதன் பிறகு, பெற்றோர் தங்கள் குழந்தையின் விரல் மூலம் தட்டில் நிரப்பப்பட்டிருக்கும் அரிசியில் எழுத வைக்கின்றனர். குழந்தையின் பெற்றோர் இந்த அரிசியில் சிறிதைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காகக் கேட்டுப் பெற்றுச் செல்கின்றனர்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து சங்கனாச்சேரி செல்லும் வழியில், 11 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் பனச்சிக்காடு திருத்தலம் அமைந்துள்ளது.
    காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் தாமல் வராகீசுவரர் கோவில்.
    காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், தொண்டை மண்டலத் திருக்கோவில், மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் வழிபட்ட சிவன் வாழும் தலம், சரபேஸ்வரருக்கு லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆலயம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னன் என பலரும் போற்றி வணங்கிய கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.

    புராண வரலாறு :

    ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. உலக இயக்கம் நின்று போனது. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

    இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதையடுத்து அவர் கடலை கலக்கிக் கொண்டிருந்தார். இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர்.

    சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து, அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், சிவபெருமானை வழிபட்டு வேடன் வடிவில் தோன்றி, வராகனை வீழ்த்தி அதன் கொம்புகளை உடைத்து அவற்றைத் தனது அணிகலன் ஆக்கினார். பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது.

    வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் வராகீசுவரர் என்றும், பன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தாமல் என்ற திருத்தலமாகும்.

    தொன்மைச் சிறப்பு :

    பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர் களும் போற்றி வழிபட்ட திருக்கோவிலாக தாமல் சிவாலயம் திகழ்கின்றது. மன்னர்கள் காலத்திலேயே இவ்வூர் பல்வேறு போர்களைச் சந்தித்ததை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. தாமல் என்ற பெயர், மூன்றாம் சிம்மவர்மனின் செப்பேட்டில் (கி.பி. 1556) குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டல தாமல் கோட்டத்தில், தாமர் நாட்டு, தாமநல்லூர் என பழங்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாமல் என்பதற்கு தடாகம் அல்லது குளம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஊரில் மிகப்பெரிய பல்லவர் காலத்து ஏரி இருப்பது இதனை உறுதி செய்கின்றது.

    புறநானூற்றில் தாமல் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. நலங்கிள்ளியின் சகோதரர் மாவலத்தான் பற்றி, தாமலைச் சேர்ந்த தமப்ப கண்ணனார் என்ற புலவர் இயற்றிய பாடல் வாயிலாக தாமலைப் பற்றி அறிய முடிகிறது.

    ஆலய அமைப்பு :

    35 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தினை ஒட்டி அழகிய திருக்குளம் உள்ளது. மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், அண்மையில் திருப்பணியின் போது அடியார்களால் எழுப்பப்பட்டுள்ளது. பல்லவர், சோழர், ராஷ்டிரகூடர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என அனைத்து மன்னர்களின் கலைப்பாணியும் இக்கோவிலில் காணப்படுகிறது.

    வெளிப்புற மண்டபம் விஜயநகர மன்னர் காலம், இதன் தூண்களில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ராவணன் என ராமாயணக் காவியக் காட்சிகள் புடைப்புச் சிற்பங் களாகக் காட்சி தருகின்றன. உண்ணாழி எனும் உள்சுற்று மண்டபம் 50 தூண்களைக் கொண்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர் பாணியில் அமைந்துள்ளது. இதில் சிவபுராணச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன.

    வராகீசுவரர் :

    கருவறையில் மேற்கு முகமாய் இறைவன் வராகீசுவரர் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் இறைவன் ஆசி வழங்குகின்றார். இவரே பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் எனப் பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டவர். இன்று இவரது திருப்பெயர் வராகீசுவரர் என்பதாகும்.
    வெளிப்புற மண்டபத்தினையட்டி, தெற்கு முகமாக கவுரி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்மன், திருக்கோவில் புனரமைப்பின்போது புதிதாக உருவாக்கியதாகும். எனினும் அன்னை நின்ற கோலத்தில் எழிலோடு காட்சி தந்து அருளாசி வழங்குகின்றார். அம்மனின் எதிரே சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருக்கிறது. அன்னை சகல சம்பத்துக்களையும் அள்ளித் தருபவள் என்பதால், அன்னையை சம்பத்கவுரி என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

    தனிச் சிறப்புகள் :

    மாசி மாத ரத சப்தமி அன்றும், மகத்தன்றும் மாலை வேளையில், இத்தல இறைவனை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவது தனிச்சிறப்பு. சரபேஸ்வரருக்கு, லிங்கத் திருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. நூற்றியெட்டு லிங்கம் அமைந்துள்ளதும், காளாஸ்திரிக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குவதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

    பிரதோஷம், கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு -கேது பூஜை, அஷ்டமி பூஜை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    பிற ஆலயங்கள் :

    இத்தலத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமோதரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கி.பி. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்ட செய்தியை வரலாறு கூறுகிறது. இதுதவிர இவ்வூரில், நரசிம்மர் பூஜித்த நரசிங்கேஸ்வர ஆலயம், திரவுபதி அம்மன் ஆலயம், பொன்னியம்மன் ஆலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் அமைந்துள்ளன. இத்தலத்தைச் சுற்றி ஜடாயுவுக்கு மோட்சம் தந்த திருப்புட்குழி என்ற திவ்ய தேசம், திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர், அம்பி சிவாலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் உள்ளன.

    ராகு- கேது பரிகாரத் தலம் :


    தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகு-கேது யாக பூஜைகளில் கலந்து கொண்டால், ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம் வட்டத்தில் தாமல் அமைந்துள்ளது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில சென்னைக்கு மேற்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தாமல் அமைந்துள்ளது.
    -பனையபுரம் அதியமான்.
    ஆழ்வார்குறிச்சி அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.
    உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

    தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.

    திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

    அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

    அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

    தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

    அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.


    அத்ரி பரமேஸ்வரர், அத்ரி பரமேஸ்வரி

    சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள்.

    அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார்.

    இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தை களாக இருந்த மூன்று தெய்வங் களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப் பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.

    சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.

    குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

    பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

    இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

    மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கடைசி வெள்ளி மற்றும் தமிழ் வருடப்பிறப்பாகிய சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.


    அத்ரி கங்கை தீர்த்தகுளம்

    சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்:

    அத்ரி மகரிஷியின் பிரதான சீடர், கோரக்கர். சித்தர்களின் வரிசையில், பிறப்பிலேயே விசேஷத் தன்மை கொண்டவர் இவர். விபூதி என்றால் ‘சாம்பல்’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. சிவ ஞானத்துடன் பிறந்தவர் மச்சேந்திரர். இவர் கடும் தவம் செய்து சித்தரானார். மச்சமுனி என்று அழைக்கப்பட்டார்.

    மச்சமுனி ஒருநாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றார். அந்த வீட்டுப் பெண், மச்ச முனிக்கு பிச்சையிட்டாள். அப்போது அவளது முகம், அவளுக்கு ஏதோ மனக்குறை இருப்பதை உணர்த்தியது.

    அதைக் கண்ட மச்சேந்திரர், ‘உனக்கு துன்பம் யாது?’ என்று கேட்டார்.

    அதற்கு அந்தப் பெண், தனக்கு மகப்பேறு இல்லாததைக் கூறி வருந்தினாள். இரக்கம் கொண்ட மச்சேந்திரர், சிறிது திருநீற்றை அள்ளி அவளிடம் கொடுத்தார். ‘இந்த திருநீற்றை, சிவநாமம் கூறி உண்பாயானால், உனக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். அந்த பாலகனை காண நிச்சயம் ஒருநாள் வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

    மச்சமுனி சென்றதும், அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். பக்கத்து வீட்டுப்பெண்ணோ, ‘உன்னிடம் பிச்சை வாங்கி சென்றவர் மாயாவியாக இருக்கலாம். விபூதியை கொடுத்து உன்னை மயக்கி அடையலாம். எனவே அந்த விபூதியை சாப்பிடாதே’ என்று கூறினாள்.

    பயந்து போன அந்தப் பெண், மச்சமுனி கொடுத்து விட்டு சென்ற விபூதியை அடுப்பில் போட்டாள். ஆண்டுகள் சில சென்றன. திருநீறு கொடுத்த மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பெண்ணை வந்து சந்தித்தார். ‘திருநீற்றால் பிறந்த பாலகன் எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்’ என்று கேட்டார். மச்சமுனியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அந்தப் பெண், முடிவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

    பின்னர், ‘சிவ சித்தர்தானே? அடுப்பில் போட்ட சாம்பலில் இருந்தும் குழந்தையை உருவாக்கலாமே?’ என்று சந்தேகக் கண்கொண்டு கேள்வியை எழுப்பினாள்.

    அவளது கேள்வியால் கோபம் கொண்ட மச்சமுனி ‘அடுப்பு சாம்பல் எங்கே?’ என்றார்.

    ‘கோபத்தில் குப்பை மேட்டில்தான் கொட்டினேன்’ என்றாள் அந்தப் பெண்.

    உடனே மச்சேந்திரர், ‘குழந்தை உன் கருப்பைக்குள் வளர உன் கர்மா இடம் கொடுக்கவில்லை. ஆனால் கோசலையாகிய இது, அதற்கு இடம் கொடுத்து விட்டது. நான் சிவசித்தன் என்பது சத்தியமானால் இந்த கோவகம், ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல.. கோரக்கனும்கூட. கோவாகிய பசுவின் இரக்கம் இவனிடம் இருக்கப்போவது சத்தியம். கோரக்கனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்தார்.

    கோரக்கனும் அந்த குப்பை மேட்டில் கொட்டிய சாம்பலில் இருந்து வெளிவந்தார். திருநீறு கொடுத்த காலம் முதல் அப்போது வரை என்ன வளர்ச்சியோடு இருக்க வேண்டுமோ அதே வளர்ச்சியோடு இருந்தான் அந்த பாலகன். அவரே கோரக்கர்.

    மச்சமுனி, சாம்பலில் இருந்து வந்த பாலகனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் சிறுவன் கோரக்கனோ, தாயிடம் போகாமல், மச்சேந்திரநாதரை பின் தொடர்ந்தான். கோரக்கரும் பெரிய சித்தராகி குருவை மிஞ்சும் சீடராக விளங்கினார். அதன்பிறகே அவர் அத்ரி மகரிஷியை சந்தித்தார்.

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.
    திருச்சி வரகனேரியில் உள்ளது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.

    திருச்சியில் வரகனேரி பகுதியில் வசித்து வந்தார் தீவிர முருக பக்தர் ஒருவர். அவருக்கு ஒரே மகள். வயதுக்கு வர வேண்டிய வயது அவளுக்கு, தீடிரென அந்தச் சிறுமிக்கு தாய்மை பெற்ற பெண்ணைப் போல் மார்பில் பால் சுரக்கத் தொடங்கியது. பதற்றமடைந்த அந்த பெண், தன் தாயிடம் விவரம் கூறினாள். அவள் தன் கணவரிடம் விவரம் கூற அவருக்கும் ஏக அதிர்ச்சி.

    என்ன செய்வது என்று புரியாத அந்த பக்தர், முருகனிடம் தன் வேதனையைக் கூறி கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்து புலம்பினார். பின், உறங்கச் சென்றார். உறக்கத்தில் அவர் கனவில் முருகன் வந்தார். ‘கவலை வேண்டாம். உன் மகள் குணமாவாள். என்னை பழனியில் வந்து பார்’ என்று கூறிவிட்டு முருகன் மறைய, பக்தரின் உறக்கம் கலைந்தது. என்ன ஆச்சரியம்? மறுநாள் அந்த சிறுமி குணமானாள். எல்லாம் முருகன் அருள் என்று மகிழ்ந்த அந்த பக்தர், பழனிக்கு புறப்பட்டுப் போய் பால தண்டாயுதபாணியை தரிசித்தார்.

    ‘இந்த பால தண்டாயுதபாணியை தினசரி தரிசிக்க நம் ஊரில் இவருக்கு ஒரு ஆலயம் அமைத்தால் என்ன?’ என எண்ணினார். திரும்பி ஊருக்கு வந்தவர் தான் நினைத்த படியே பழனியில் உள்ளது போலவே, பால தண்டாயுதபாணியின் சிலையை வடிவமைத்தார். அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஓர் ஆலயம் கட்டினார்.

    இது செவி வழி வரலாறு :

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உருவான அந்த சிறிய ஆலயம் காலப்போக்கில் பலமுறை புதுப்பிக்கப்பட்டு மூலவராய் வள்ளி- தெய்வானை சமேத முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

    இந்த ஆலயமே வரகனேரியில் உள்ள சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம்.

    இங்குள்ள இறைவன், சிவசுப்ரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையின் அமைப்பிலேயே இங்கு மூலவர் உருவாக்கப்பட்டுள்ளார். பக்தர் பிரதிஷ்டை செய்த பால தண்டாயுதபாணி, ஆலய மேற்கு திருச்சுற்றில் தனி சன்னிதியில் அருள்கிறார்.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் ராஜ கோபுரத்துடன் அழகுற விளங்குகிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. நடுவே மயிலும் சூலமும் இருக்க, அர்த்த மண்டப நுழைவு வாசலில் இரண்டு துவார பாலகர்கள் காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனையுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.



    இங்கு முருகனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சக்தி ஆயுதத்தையும், வஜ்ராயுதத்தையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் முருகப்பெருமான் காணப் படுகிறார்.

    திருச்சுற்றுகளில் இடும்பன், அருணகிரி நாதர், மகா கணபதி, உண்ணாமலை அம்மன், அண்ணாமலையார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் நடராஜன், சிவகாமி சன்னிதியும், வடகிழக்கு, மூலையில் நவக் கிரக நாயகர்களும் அருள் புரிகின்றனர். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கை அம்மனும் அருள் பாலிக்கின்றனர்.

    திருவிழாக்கள் :

    இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு குறைவில்லை.

    மாத கார்த்திகை நாட்களில் முருகப்பெருமான் சன்னிதியின் முன் ஹோமம் வளர்க்கப்பட்டு, இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அன்று இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு.

    கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கு வெகு கோலாகல மாக நடைபெறுகிறது.

    ஆடி மாதம் கார்த்திகை அன்று பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் முருகபிரான் தன் துணைவியருடன் வீதியுலா வருவார். பங்குனி உத்திரத்தின் போது இங்கு மூன்று நாட்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களும் சுமார் 1000 பேர் கலந்து கொள்ளும் அன்னதானமும் நடைபெறும். கந்த சஷ்டி மற்றும் வைகாசி விசாகம் போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் ஏராளமான பேர் பங்கு பெறும் அன்னதானமும் நடைபெறும்.

    ஆடி வெள்ளியில் இங்கு நடைபெறும் திரு விளக்குப் பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள்.

    ஐப்பசி பவுர்ணமியில் இங்குள்ள அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்குள்ள நடராஜர் - சிவகாசி அம்மனுக்கு திருமஞ்சன விழா சிதம்பரத்தில் நடைபெறுவது போல் நடைபெறுவதுடன் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

    ஒவ்வொரு மாதக் கார்த்திகையின் போதும் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படும். அந்த அழகைக்காணவே ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருவார்கள். வயலூர் முருகபெருமான் ஆலயத்தில் உள்ளது போல் இங்கும் அருணகிரி நாதருக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.
    திருநெல்வேலி செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மானுட வாழ்க்கையில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள குரு பகவான், “புளியறை” கிராமத்தில் அபூர்வ வடிவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் ஒரே தீபாராதனையில் மூன்று தெய்வங்களை தரிசனம் செய்யலாம். சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படும் இந்த விசேஷ திருத்தலம், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    திரிகூடாசலம் வந்த தில்லை :

    ஈசன், தான் எழுந்தருள விரும்பும் ஷேத்திரத்தில் நடத்தும் திருவிளையாடல்கள் மிகச்சிறப்பானவை. தில்லை நடராஜர், புளியறைக்கு வந்த விதமும் இப்படித்தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துவந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது. திடீரென நடராஜர் குடிகொண்டிருந்த சிதம்பரம் உள்ளிட்ட சோழ நாடும், பாண்டிய நாடும் சமணர்களின் ஆளுகைக்கு உள்ளானது.

    அப்போது நடராஜர் விக்ரகத்துக்கு பாதிப்பு எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என்றெண்ணிய சிவ பக்தர்கள், சிலையை எங்காவது அடர்ந்த காட்டுக்குள் மறைத்து வைக்க முடிவு செய்தனர். வளர்பிறை தொடங்கியதும் ஒரு நல்ல நாளில் ஐந்து சிவ பக்தர்கள், நடராஜர் சிலையை சுமந்து கொண்டு மனம்போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

    பகலில் யார் கண்ணிலும் படாதவாறு தங்கிக்கொண்டு, இரவு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டனர். எங்கு தேடியும் பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை. இறுதியில் அவர்கள் வந்து சேர்ந்தது தென் திசையில் உள்ள திரிகூடாசலம் என்னும் மலைப்பகுதி. சேர நாட்டின் ஆரம்ப பகுதியான திரிகூடாசலம் பக்தர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கு திரும்பினாலும் ஓங்கி வளர்ந்த பசுமையான மரங்களுக்கிடையே பயணித்து அம்மலைக்கு தென் மேற்கில் மலைச்சாரலில் உள்ள வேணு வனத்தை அடைந்தனர். அவ்வனத்தில் பெரிய மலைகளும் அடர்ந்து நெருங்கி வானளாவி வளர்ந்த மூங்கில் பண்ணைகளும், புளிய மரங்களும் இருந்தன.

    நடராஜர் சிலையை மறைத்து வைக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்தனர். மறைவுப் பகுதியைத் தேடியபோது, ஓரிடத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டு இடம் காட்டியது. அங்கே புளிய மரம் ஒன்றில் பெரிய பொந்து இருந்தது. அப்பொந்தினுள் நடராஜர் சிலையை வைத்து, இலை, தழைகளை வைத்து மூடி விட்டு, சிவ பக்தர்கள் ஐவரும் தில்லைக்குத் திரும்பிச் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து, புளியந்தோப்பின் உரிமையாளரான செல்வந்தர் அங்கு வந்தார். அப்போது இலை, தழை அகன்று நடராஜர் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். தில்லை அம்பலம் தன் தோப்பில் எழுந்தருளி காட்சியளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் செல்வந்தர். எனினும் அக் காலத்தில் நிலவிய மதச் சூழலை மனதில் கொண்டு, இதுபற்றி யாரிடமும் சொல்லாமல், இறைவனை தினமும் பூஜித்து வழிபட்டு வந்தார்.

    வழிகாட்டிய ஈசன் :

    காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது. சைவ சமயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆயினும் நடராஜர் இல்லாத அம்பலம் வெறிச்சோடிக் கிடந்தது. மீண்டும் எப்படியாவது தேடிக் கொண்டு வந்து அம்பலவாணனை ஆலயத்தில் சேர்க்க வேண்டும் என்று உறுதி பூண்டனர் பக்தர்கள். எனவே, தென்திசை நோக்கி நடராஜர் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்தேடி விரைந்தனர்.

    பல ஊர்களைக் கடந்து திரிகூடாசலம் வந்தடைந்து அங்குள்ள கானகம் முழுவதும் தேடியும் எம்பெருமானைக் காணாது தவித்தனர். அப்போது வானிலிருந்து, ‘திரிகூடாசலத்திற்குப் பஸ்யம் திசையில் உள்ள வேணுவனம் செல்க’ என்று அசரீரி ஒலித்தது. அந்தக் காட்டிலிருந்து வேணுவனம் செல்லும் பாதை தெரியாமல் தயங்கி நின்றபோது மீண்டும் அசரீரி, ‘சாரை சாரையாகச் செல்லும் எறும்புத் தொடரைப் பின்பற்றுக’ என்று ஒலித்தது.

    பக்தனுக்காக சுயம்பு :

    மட்டில்லா மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அவ் விதமே எறும்புகளைப் பின்தொடர்ந்து வேணு வனம் அடைந்தனர். மிகுந்த சிரமப்பட்டு இறைவன் வீற்றிருந்த புளியமரத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். இறைவன் சிலையை எடுத்துக்கொண்டு தில்லையம்பதி திரும்பினர். சில நாட்கள் கழித்து செல்வந்தர் தன் தோப்புக்குச் சென்றார். ஆனால், அங்கு நடராஜர் இல்லாதது கண்டு வருந்திப் புலம்பினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. செல்வந்தரின் பக்திக்கு மனமிளகிய ஈசன், திடீரென பூமிக்குள் இருந்து சிறியதொரு லிங்கமாகத் தோன்றினார்.

    இதைக்கண்டு அளவிலா ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டார் செல்வந்தர். இந்தத் தகவல் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. தீவிர சிவபக்தனான, அச்சன்குன்றம் பகுதி குறுநில சேர மன்னன் விரைந்து வந்து சுயம்பு லிங்கத்தை வழிபாடு செய்தான்.



    அன்றிரவே மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் கோவில் அமைப்பாயாக. கோவிலின் முன்பு சடாமகுட தீர்த்தம் ஏற்படுத்து. 27 நட்சத்திரங்களையும் படிக்கட்டுகளாக அமைத்து, குரு பகவானை வலம் வந்து வழிபட ஏதுவாக கோவிலை உருவாக்கு’ என்று உத்தரவிட்டார். ஈசனின் ஆணைப்படியே கோவில் அமைத்து பெரும் பாக்கியசாலி ஆனான் மன்னன். புளியமரம் தல விருட்சமானது. ஊரும் ‘புளியறை’ எனப் பெயர் பெற்றது.

    ருக் வேத சாஸ்திரப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. கொடிமரம் இருப்பதற்கு பதிலாக அந்த இடத்தில், குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சுயம்புலிங்கம், தட்சிணாமூர்த்தி, நந்தி மூவரும் ஒரே நேர்கோட்டில் வீற்றிருக்கின்றனர். இவ்விதம் அமைந்திருப்பது இந்தியாவிலேயே புளியறையில் மட்டும் தான். ஒரே தீபாராதனையில் மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசித்து அருள் பெறலாம்.

    அபூர்வ தட்சிணாமூர்த்தி :

    பேராற்றலுடன் தோன்றியிருக்கும் சுயம்பு லிங்கத்திடம் இருந்து அதீத ஆற்றலைப்பெற்று, அதனுடன் தன் அருளையும் சேர்த்து இரட்டிப்பாக பக்தர் களுக்கு வழங்குகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இவரின் பாதத்தில் ஒரே சதுரக்கல்லில் ஒன்பது ஆவர்த்த பீடம் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கோவிலில் வழி படும் பக்தர்களின் குறைதீர வழிவகுப்பதோடு அவர்களின் வருங்காலமும் வளமோடு அமைய வரமளிக்கிறது. சுற்றுப் பிரகாரத்தில் ஒன்பது கன்னிமார் நதிகளாக இருந்து பக்தர் களின் பாவங்களைப் போக்கு வதாக ஐதீகம். இந்தக் கோவிலின் தென்மேற்கே சந்தான பாக்கியம் அருளும் நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது.

    விரைவான பலன்கள் :

    இத்தலத்தில் ஈசன் சுயம்புமூர்த்தியாக சதாசிவமூர்த்தி என்னும் திருநாமத்துடனும் அவரின் வலப்புறம் அம்பாள் சிவகாமி என்னும் திருநாமத்துடனும் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இருவரும் நித்ய திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்து வேண்டுவோருக்கு, கிரக தோஷங்கள் அகன்று விரைவில் திருமணம் கைகூடும். தினமும் ஆறுகால பூஜை சிறப்புற நடைபெறும் இங்கு பள்ளியறை பூஜை கிடையாது.

    இவ்வாலயத்தை தரிசித்தால் சிதம்பரம் கோவிலை தரிசித்த புண்ணியம் கிட்டும். கிரக தோஷமுள்ளவர்கள் வியாழக் கிழமை தோறும் இங்கு வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். தாலி பாக்கியம் கிட்டும். தார தோஷம் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், தொழில் வளம், விவசாய நற்பலன்களும் வாய்க்கப் பெறுவார்கள்.

    வழிபடும் முறை :

    சடாமகுட தீர்த்தத்தில் நீராடி, அருகிலுள்ள விநாயகரை வணங்கி, 27 நட்சத்திரப் படிகள் வழியாக ஆலயத்திற்குள் சென்று கோடி தீபம் (நெய் தீபம்) ஏற்றி சிவன், அம்பாளை தரிசித்து, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குருவருளும் திருவருளும் பூரணமாகக் கிட்டும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருநெல்வேலியில் இருந்து முறையே 67 கி.மீ., தென்காசி 14 கி.மீ., குற்றாலம் 12 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் புளியறை உள்ளது. தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புளியறைக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து பேருந்துகளும் புளியறை வழியாகச் செல்லும்.
    வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

    திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

    வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

    பூவராகப் பெருமாள் :

    நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், ‘பாவன விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

    திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது... ஆனால் கீர்த்தி மிகப்பெரியது.

    அவரின் தோற்றம் கொள்ளை அழகு. மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படு கிறது.

    பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திரு மகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.

    வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.



    பூமியை மீட்டவர் :

    மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு.

    தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்கு கிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.

    குழந்தை வரம் :

    பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச் சுற்றில் உள்ளன.



    தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மதநல்லிணக்கம் :

    மற்ற தலங்களை விட இத்தலத்துக்கு என்று ஒரு பெரிய சிறப்பு உண்டு, ஆம் அது மத நல்லிணக்கத்தைக் காப்பது தான்.

    15 தினங்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது மாசி மக நாளில், உற்சவர் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமியப் பெரியவர்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள். பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்குப்பட்டது. பக்தர்கள் தங்குவதற்கான விடுதி வசதியும், மதியம் இலவச அன்னதானமும் திருக்கோவில் சார்பில் செய்யப்படுகிறது.
    தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அது 119-வது ஆலயமாக திகழ்கிறது திருக்காரவாசல் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல், தானே உருவான இயற்கை வடிவங்களை ‘சுயம்பு’ அல்லது ‘விடங்கம்’ என்று குறிப்பிடுவார்கள். ‘டங்கம்’ என்றால் ‘கல் சிற்பியின் சிற்றுளி’ என்று பொருள். ‘விடங்கம்’ என்றால் ‘சிற்பியின் உளி இல்லாமல்’ என்று அர்த்தம். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    சப்த விடங்க தலங்கள் :

    ஒரு சமயம் அசுரர்களால், இந்திரனுக்கு பேராபத்து வர இருந்தது. அந்த ஆபத்தை இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியுடன் வெற்றி கொண்டான். தன்னுடைய வெற்றிக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தியிடம் ‘என்ன வேண்டும்,’ என்று கேட்டான் இந்திரன்.

    அதற்கு முசுகுந்தன், ‘நீங்கள் பூஜை செய்து வரும் விடங்க லிங்கங்களைப் பரிசாகத் தாருங்கள்’ என்று வேண்டினான். ஆனால் இந்திரனுக்கு அந்த லிங்கங்களை கொடுக்க மனமில்லை. தேவ சிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப் போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றை, முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட எண்ணினான்.

    இந்த நிலையில் முசுகுந்தன், செங்கழுநீர் பூவின் வாசம் கொண்ட ஒரு விடங்க லிங்கத்தை, தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடித்தார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன், தன்னிடம் உள்ள விடங்க லிங்கத்தையும், முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டான். அந்த ஏழு சிவலிங்கங்களையும், 7 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் முசுகுந்த சக்கரவர்த்தி. இவையே ‘சப்த விடங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    அவை திருவாரூரில் உள்ள வீதி விடங்கர், திருநள்ளாறில் உள்ள நகர விடங்கர், நாகப்பட்டினத்தில் உள்ள சுந்தர விடங்கர், திருக்குவளையில் உள்ள அவனி விடங்கர், திருவாய்மூரில் உள்ள நீல விடங்கர், வேதாரண்யத்தில் உள்ள புவனி விடங்கர் மற்றும் திருக்காரவாசலில் உள்ள ஆதி விடங்கர் ஆகியவைகளாகும்.

    புராண காலத்தில் இந்தத் தலம் இருக்கும் இடம் முழுவதும், ‘காரகில்’ என்று மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாக இருந்துள்ளது. எனவே ‘திருக்காரகில்’ என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதுவே காலப்போக்கில் மருவி, ‘திருக்காரவாசல்’ என்று மாறியதாக கூறுகிறார்கள். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அது 119-வது ஆலயமாக திகழ்கிறது.

    இந்தத் திருத்தலத்தில் உள்ள சிவபெருமான், ‘குக்குட நட னம்’ ஆடியபடி தரிசனம் தருகிறார். இந்த இறைவனை, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் தரிசனம் செய்து பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி பகவான், ‘ஞான தட்சிணாமூர்த்தி’யாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்ணகர்ஷண கால பைரவர் சன்னிதி உள்ளது. இந்த பைரவரை வழிபாடு செய்தால், இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

    பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இந்த திருத்தலத்தில் இருக்கின்றன. பிரம்மதேவர், தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, இங்கு ஒரு குளம் உண்டாக்கி ஈசனை வழிபட்டுள்ளார். அவர் உண்டாக்கிய குளமே பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதே போல் ஆதிசேஷன், இங்குள்ள கிணற்றின் வழியாக கோவிலுக்குள் சென்று, இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். எனவே அந்த கிணற்று தீர்த்தத்திற்கு, சேஷ தீர்த்தம் என்று பெயர் வழங்கப்படுகிறது.



    ‘பிரமோதம்’ என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இந்தத் தலத்தில் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், நினைத்த காரியம் நிறைவேறி, வாழ்வில் பெரும் மகிழ்ச்சி வந்தடையும் என்பதால், விநாயகருக்கு, பிரமோத விநாயகர்’ என்று பெயர்.

    கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உருவம் உள்ளன. ஆலயத்தில் உள்ள உள் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டதாக காணப்படுகிறது. வாசலைத் தாண்டி உள்ளே சென்று வலம் வரும் போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சன்னிதி, தியாகராஜ சபை, விநாயகர், மகாவிஷ்ணு, ஆறுமுக சுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் மற்றும் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. ஆலய கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர், சிவலிங்க வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் கயிலாச நாயகி என்பதாகும்.

    இங்குள்ள சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால், பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்தில் தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், பவுர்ணமி நாட்களில் கோவிலில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இத்தல இறைவனிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கடுக்காய் விநாயகர் :

    இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான், ‘கடுக்காய் விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை, மூட்டைகளாகக் கட்டி ஏற்றிக்கொண்டு தன்னுடைய ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரவு நேரம் என்பதால் இந்த ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், ‘வண்டியில் இருப்பது என்ன?’ என்று கேட்டார். ஜாதிக்காய் என்று கூறினால் அதிக வரி கட்ட வேண்டியது இருக்கும் என்பதால், வணிகன் ‘வண்டியில் உள்ள மூட்டைகளில் கடுக்காய் இருக்கிறது’ என்று பொய் கூறினான்.

    அந்த நபர் மூட்டைகளை திறந்து காண்பிக்க கூறியபோது, அந்த மூட்டைகளில் கடுக்காய்களே இருந்தன. இதைக்கண்டு திடுக்கிட்ட வணிகன் கோவிலில் அமர்ந்து பொய் கூறியதை நினைத்து வருந்தினான். பின்னர் இத்தல விநாயகரை வழிபட்டு வேண்டியதை அடுத்து, கடுக்காய் முழுவதும் ஜாதிக்காயாக மாறின. இதனால் இத்தல விநாயகருக்கு ‘கடுக்காய் விநாயகர்’ என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

    ஆலயத்தில் வைகாசி விசாகம் அன்று பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் மாதப் பிறப்பு, தியாகராஜர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, வியாழன் தோறும் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர் பூஜை, அமாவாசை, பவுர்ணமி ஆகியவை விசேஷமாக நடைபெறுகின்றன.

    திருவாரூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்காரவாசல் திருத்தலம். திருவாரூரில் இருந்து பஸ்வசதி உள்ளது.
    கடலூர் மாவட்டம் நக்கருகந்தகுடி கிராமத்தில் உள்ளது திரவுபதி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சாதிக்க நினைப்பவரே அதிக சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது அனுபவ மொழி. ஆனால் அதுபோன்ற சோதனை சமயங்களில், தைரியத்தை தரவல்ல சக்தி வழிபாட்டை மேற்கொள்வதும் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். எதையும் எதிர்கொள்ள முடியும் என்கின்ற மனோபலத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்ற சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமே திரவுபதி வழிபாடு.

    திரவுபதி தமிழ் தெய்வமல்ல என்றாலும், தன்னுடைய பொறுமை, சகிப்புத்தன்மை, மனஉறுதி ஆகியவற்றால் தமிழ் மக்களால் தெய்வமாக ஏற்கப்பட்டவள். பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனின் மகளாக பிறந்து, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனை மணந்தவள். கவுரவர்கள், பாண்டவர்களின் அரச போட்டியையும், அங்கு தர்மத்தை நிலைநாட்ட நடந்த முயற்சிகளையும் கூறும் மகாபாரத காவியத்தின் மகத்துவம் மிக்க நாயகி திரவுபதி.

    தமிழகத்தில் திரவுபதிக்கான ஆலயங்களை, பழைய வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணமுடிகிறது.

    இத்தகைய ஆலயங்களில் ஒன்றே கடலூர் மாவட்டம் நக்கருகந்தகுடி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் ஆலயம். தற்போது நக்கரவந்தன்குடி, நற்கந்தன்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. மற்ற ஊர்களில் உள்ள ஆலயத்தை விட திரவுபதியோடும், அவள் வரலாற்றுடனும் நேரடி தொடர்புகொண்டதாக இந்த ஊரும், ஆலயமும் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இதற்கான ஆதாரம், இந்த ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருவேட்களம் (அண்ணாமலைநகர்) பாசுபதேஸ்வரர் ஆலய வரலாற்றில் இருக்கிறது. அடுத்ததாக வேறு எங்கும் காண இயலாதபடி மிகப்பெரிய மூலவர் திருமேனியை கொண்டிருப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.

    ஒருசமயம் வியாச பகவான், வனவாசத்தில் இருந்த பாண்டவர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘அஸ்தினா புரத்தில் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாவீரர்களை தன்னோடு வைத்துக் கொண்டிருப்பது போதாதென, துரியோதனன் மேலும் பல அரசர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றான். அவன் அப்படி பலம் பெற்றுவிட்டால் நீங்கள் அவனை வெல்ல முடியாது. ஆகவே தெய்வீக ஆற்றல் மிக்க அஸ்திரசஸ்திரங்களை வேண்டிப்பெறுவது அவசியம்’ என்று கூறினார்.

    அவரது பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த தருமன், அர்ச்சுனனை அழைத்தான். ‘தெய்வீக அஸ்திரங் களைப் பெறுவதற்கான தகுதி உன் ஒருவனுக்கே உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபடு’ என்று கூறினான்.

    இதையடுத்து அர்ச்சுனன் அங்கிருந்து புறப்பட்டான். அவனை வழியில், முதியவர் வேடத்தில் சந்தித்த இந்திரன், ‘சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தால் பலன் கிடைக்கும்’ என்று அறிவுறுத்தினான்.

    ‘சரி சிவனை நினைத்து தவம் செய்ய எங்கு செல்லலாம்’ என்ற கேள்வி எழுந்தபோது, கிருஷ்ணனை மனதில் நினைத்தான் அர்ச்சுனன். அவன் முன் தோன்றிய கிருஷ்ணர், ‘தில்லையின் எல்லையில் ஒரு மூங்கில் வனம் உள்ளது. அங்கு சென்று தவம் செய்’ என்று ஆசீர்வதித்தார். அந்த இடமே இன்றைய திருவேட்களம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதி களாகும்.

    அர்ச்சுனன் ஆயுதம் பெறுவதற்காக தவம் செய்வதை ஒற்றர் மூலம் அறிந்த துரியோனன், மூகாசுரன் என்னும் பன்றி வடிவ அசுரனை அனுப்பி, அவன் தவத்தை கலைக்கும்படி கூறினான். அந்த அசுரனும் அப்படியே செய்ய முற்படுகிறான். இத்தருணத்தில் எம்பெருமான் அர்ச்சுனனை காப்பதற்காக உமையம்மையுடன் சேர்ந்து வேடுவ வடிவெடுத்து, வேதங்கள் நான்கையும் நாய்க்குட்டிகளாக மாற்றிக்கொண்டு வந்தார்.

    தன் தவத்தை பன்றி வடிவ அசுரன் கலைக்கவே, நினைத்ததும் கைக்கு வரும் அஸ்திரத்தை வைத்து பன்றியை வீழ்த்துகிறான் அர்ச்சுனன். பின்னர் அடிபட்ட பன்றியை பார்த்தபோது, அதன் மீது இரண்டு அம்புகள் இருப்பதைக் கண்டு வியந்தான். அப்போது வேடன் உருவில் இருந்த சிவ பெருமான் அங்கு வந்து, ‘நான்தான் அம்பை எய்தேன். வேட்டைப் பொருள் என்னுடையது’ என்று உரிமை கோரினார்.



    அர்ச்சுனனுக்கு உரிமை கோர விருப்பம் இல்லையென்றாலும், தான் விட்ட அம்பால் இறந்த பன்றியை இன்னொருவர் உரிமை கொண்டாடுவதை அவனால் ஏற்க முடியவில்லை. ஈசனுடன் சொற்போர் நடத்தினான். வாய்ச் சண்டை, கைச் சண்டையாக மாறியது. போரில் அர்ச்சுனனால் வெல்ல முடியவில்லை.

    அப்போதுதான் தன்னை எதிர்த்து நிற்பது சாதாரண மனிதன் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது. இருப்பினும் வீரனான அவன் தோற்க மனமின்றி தொடர்ந்து போரிடுகிறான். வேடுவன் உருவில் இருந்த ஈசனை வீழ்த்த அக்னிதேவனிடம், காண்டீபம் தருமாறு வேண்டிப் பெற்றான். தன் அனுமதியின்றி தரப்பட்ட காண்டீபத்தை வேடுவ சிவன் வேடிக்கையாக முறித்து எறிகிறார். இதை ஏற்கமுடியாத அர்ச்சுனன் முறிந்த வில்லால் சிவனின் தலையில் அடித்தான். (அர்ச்சுனன் அடித்த அடியால் சிவனின் தலையில் தழும்பு ஏற்படுகிறது. இந்த தழும்புடனேயே திருவேட்களம் பாசுபதேஸ்வரர் இருப்பதை இன்றளவும் காணலாம். அர்ச்சுனன் சிவனோடு போர் புரிந்ததை கிராதார்ச்சுனீயம் என்ற வடமொழி காவியம் விரிவாக கூறுகிறது).

    சிவன் கோபத்தில் அர்ச்சுனனை எட்டி உதைக்க, உயரேச்சென்று தலைகீழாக தரையை நோக்கி விழ வந்தவனை காக்க, உமையம்மை கிருபாசாகரம் என்னும் தீர்த்தத்தை (பாசுபதேஸ்வரர் ஆலய தீர்த்தம்) உருவாக்கி அதில் விழச்செய்கிறாள். குளத்திலிருந்து எழுந்து வந்த அர்ச்சுனன், தன் பிழை பொறுக்குமாறு இறைவனை வேண்டினான். சிவபெருமானும் அவன் வீரத்தைப் பாராட்டி அவனை ஆசீர்வதித்து பாசுபத அஸ்திரத்தை தந்தருளினார்.

    அர்ச்சுனனுடன் ஏற்பட்ட சண்டையால் களைப்புற்ற சிவன், ஓய்வெடுப்பதற்காக உகந்த ஒரு இடத்தைத் தேடி வந்தார். சிவனுக்கு ‘நக்கர்’ என்ற பெயருண்டு. இப்படி நக்கருக்கு உகந்த இடமாக அமைந்த ஊராதலால், சிவன் அமர்ந்த இடம் ‘நக்கருகந்தகுடி’ என்றாயிற்று. வேடுவ சிவன் ‘பள்ளமுடையார்’ என்றும், வேடுவ அன்னை ‘பள்ளமுடைச்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். வேடுவ தம்பதியினராகவும் வேதங்களை நாயாகவும் உருமாற்றி வந்ததால், இவரை கானக தெய்வமாகவே இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். இக்கோவில் திரவுபதி அம்மன் ஆலயத்திற்கு இரண்டு கிலோமீட்டர் வடமேற்கு திசையில் நக்கருகந்தங்குடி- கொடிப்பள்ளம் எல்லையில் அமைந்துள்ளது.

    மகாபாரத வரலாற்றுடன் நீண்டதொரு தொடர்பை நேரடியாகக் கொண்ட இந்த ஊரில், அதன் அடிப்படையில் கட்டப்பட்டதாகவே இந்த திரவுபதி அம்மன் கோவில் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இது பிற திரவுபதி அம்மன் கோவில்களுக்கெல்லாம் மூலக்கோவிலாக இருந்திருக்கலாம் என்பதும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். மேலும் இந்த ஆலயத்திலிருந்து அரவானின் தலையை எடுத்துச் சென்று, பிற ஊர்களிலுள்ள திரவுபதி அம்மன் ஆலயங்களில் திருவிழா நடத்தியிருப்பதற்கான செய்திகள் இதன் பழமையையும் பெருமையையும் உறுதி செய்கின்றன.

    பொதுவாக சிவாலயங்களில் உள்ள அம்பாள் மட்டுமே பெரிய திருமேனியுடன் காட்சியளிப்பதை காணலாம். விதிவிலக்காக சக்தி வழிபாடு கொண்ட ஓரிரு ஆலயங் களில் மூலவரை பெரிய திருவுருவத்துடன் காண முடியும். மற்ற ஆலயங்களில் அம்பாள் சிறிய திருமேனி கொண்டவராகவே இருப்பார். அதிலும் திரவுபதி அம்மனுக்கான ஆலயங்களில் மூலவர் சிலை சிறியதாகவே இருக்கும். ஆனால் விதி விலக்காக இவ்வாலயத்தில் ஐந்தடி உயரத்தில் அழகுப்பதுமையாய் திரவுபதி அம்மன் காட்சியளிப்பது காண கண்கொள்ளாக் காட்சியாகும். சிற்பக்கலை சாஸ்திரப்படி கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை வடிவத்தை வர்ணிப்பது அவ்வளவு சுலபமல்ல. எழிலார்ந்த தோற்றத்துடன் சற்றே வலப்புறம் சாய்ந்து, ஒரு கையில் கிளியுடன் ஒயிலாக நிற்கும் தோற்றத்தில் திரவுபதி அருள்புரிகிறாள்.

    வரலாறு மற்றும் அமைப்பின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த ஆலயம் காலப்போக்கில் சிதறுண்டு போனது. பின் வந்தவர்களால் படிப்படியாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியாக 108 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2011-ம் ஆண்டு இந்த ஆலயம் கும்பாபிஷேக விழாவை சந்தித்திருக்கிறது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வசந்தகால அக்னி உற்சவ விழா வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான அக்னி உற்சவ விழா வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    கிழக்கு நோக்கிய இக்கோவிலின் இடதுபுறத்தில் விநாயகருக்கு தனி ஆலயமும், தீர்த்தகுளமும் இடம்பெற்றுள்ளது. பிரகாரச் சுற்றில் உள்ள சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காலபைரவர், ஆஞ்சநேயர் மூர்த்தங்கள் யாவும், கும்பாபிஷேக விழாவில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். ஆலயத்தின் உள்ளே விநாயகர், முருகன், அய்யப்பன், கிருஷ்ணர், அர்ச்சுனர், கருடாழ்வார் ஆகியோரின் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

    சிதம்பரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நக்கரவந்தன்குடி. சிதம்பரத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
    ஸ்ரீரங்கம் மேம்பாலத்தின் தென் திசையில் வெள்ளி திருமுத்தம் பகுதியில் நேரு வீதியில் உள்ளது அன்ன காமாட்சி கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பல ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மற்றும் தென்னந்தோப்புகள். சாலையில் உள்ள முகப்பைத் தாண்டியதும் தென்றல் தவழும் குளிர்காற்று நம்மை தாலாட்டு பாடி வரவேற்கும். இந்த தோப்பின் நடுவே உள்ளது அன்ன காமாட்சி ஆலயம்.

    ஆலய அமைப்பு :

    அழகான முன் முகப்பு. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் வலதுபுறம் சித்தி விநாயகரும், இடதுபுறம் முருகன், வள்ளி- தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர்.

    உள்ளே கருவறையில் அன்னை அன்ன காமாட்சி நின்ற கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை தாமரை பீடத்தில் நிற்க அதன் அடியில் அன்ன பீடம் உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பாசம் மற்றும் அங்குசத்தை சுமந்தும் கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு.

    அன்னையின் தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாலட்சுமியும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற வஸ்திரமும் சாத்தி வேண்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் ஆராதனைகள் செய்தால் தடைப்பட்ட திருமணம் உடன் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் செல்வ வளம் பெருகும்.

    திருச்சுற்றில் தென்புறம் காசி விசுவநாதர் - விசாலாட்சி தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் விசுவநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    சிவராத்திரியின் போது 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தோப்பின் உள்ளே தனிமையில் இருப்பதால் 5-வது கால பூஜை நடைபெறுவதில்லை.

    இந்த ஆலயத்திற்கு நான்கு தல விருட்சங்கள். இறைவன் விசுவநாதர் சன்னிதிக்கு எதிரே முதல் தல விருட்சமான நாகலிங்க மரம் உள்ளது.



    மேற்கு பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி அருள்பாலிக் கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது தல விருட்சங்களான அரசும் வேம்பும் வடமேற்கு திசையில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. தல விருட்சத்தின் அடியில் நாகர்சிலை உள்ளது. நாகபஞ்சமி அன்று நாகருக்கு அரைத்த மஞ்சளில் அபிஷேகம் செய்கின்றனர் பக்தர்கள். இதனால் அவர்களைப் பற்றியிருக்கும் நாகதோஷத்தின் வீரியம் குறைகிறது என்பது நம்பிக்கை.

    வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிரகப் பெயர்ச்சி நாட்களில் நாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சன்னிதியின் அருகிலேயே நான்காவது தலவிருட்சமான வில்வமரம் உள்ளது.

    ஆராதனைகள் :

    இங்கு அன்னை அன்னகாமாட்சியின் முன் ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெறுகிறது. சுமார் 200 பேர் இந்த பாராயணத்தில் பங்கு பெறுகின்றனர். 100 பாடல்கள் பாடும் போது ஒவ்வொரு பாடல் பாடி முடிந்ததும் அன்னைக்கு தீபாராதனை நடைபெறும். இப்படி 100 முறை தீபாராதனை நடைபெறுவது இங்கு சிறப்பு அம்சமாகும்.

    நவராத்திரியின் போது அன்னையை 9 நாட்களும் விதவிதமாக அலங்காரம் செய்வார்கள். மறுநாள் 10-ம் நாள் விஜயதசமி அன்று விசேஷ அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகளில் தாழம்பு, மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, ரோஜாப்பூவால் அன்னைக்கு அலங்காரம் நடைபெறுகிறது.

    தினசரி 2 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், கற்பூரம் தவிர்க்கப்பட்டு நெய் தீபமே பயன்படுத்தப்படுகிறது. அர்த்த மண்டப நுழைவுவாசலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும், கார்த்திகை நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.

    இங்கு நிலவும் ஏகாந்த சூழலில் அன்னை அன்ன காமாட்சியை வழிபடுவதால் பாசமிக்க தாயை சந்தித்த உணர்வும், மன மகிழ்ச்சியும், மன நெகிழ்வும், மன அமைதியும் ஏற்படும். மன பாரம் குறையும். மனக்குறை நீங்கும் என பக்தர்கள் நம்புவது நிஜமே. சைவ வைஷ்ணவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் தரிசிக்கும் அன்னை அன்ன காமாட்சியை நாமும் ஒரு முறை தரிசிக்கலாமே.

    ஸ்ரீரங்கம் மேம்பாலத்தின் தென் திசையில் வெள்ளி திருமுத்தம் பகுதியில் நேரு வீதியில் உள்ளது இந்த ஆலயம். நகரப் பேருந்து வசதி நிறைய உண்டு.
    தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் திரும்பக் கிடைக்கவும், அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச் செழிப்பைப் பெறவும் உதவும் தலமாக, அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அமைந்திருக்கிறது.
    தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கவும், அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச் செழிப்பைப் பெறவும் உதவும் தலமாக, கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    வில்வமங்களம் சுவாமிகள் எனும் முனிவர், காட்டுக்குள்ளிருந்த தனது ஆசிரமத்தில் விஷ்ணு சிலையை நிறுவி, அதனைத் தினமும் மலர்களால் அலங்கரித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவருடைய ஆசிரமத்தின் முன்பாக இருந்த நந்தவனத்தில், ஒரு அழகிய சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

    ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்த அவர், அந்தச் சிறுவனிடம், ‘தம்பி நீ யார்? இந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாய்? வழி தவறி வந்து விட்டாயா?’ என்று அவனைப் பற்றி விசாரித்தார்.

    அவன், ‘சுவாமி! நான் ஒரு அனாதை. எனக்கென்று யாருமில்லை. எனவே ஒவ்வொரு இடமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

    இரக்கம் கொண்ட முனிவர் அவனிடம், ‘தம்பி, என்னுடன் இந்த ஆசிரமத்தில் தங்கிக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.

    சிறிது நேரம் யோசித்த சிறுவன், ‘சுவாமி! நான் உங்கள் விருப்பப்படி இங்கேயேத் தங்கிக் கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைச் சிறிது கூடக் கடிந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால், நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்’ என்றான்.

    முனிவரும் அவனுடைய நிபந்தனைக்குச் சம்மதித்தார். அதன் பிறகு, அந்தச் சிறுவன் முனிவருடன் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டான்.

    அந்தச் சிறுவன், ஆசிரமத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான். முனிவரது விஷ்ணு வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் மற்றும் இதரப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பான். அவனுடைய சிறு சிறு வேலைகள் முனிவருக்குப் பிடித்துப் போனது. ஆனால், அவன் அவ்வப்போது விளையாட்டாகச் செய்யும் சிறிய தவறுகள், அவரை எரிச்சலடையச் செய்யும். இருப்பினும், அவனைக் கண்டித்தால், அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானே என்கிற அச்சத்தில் பேசாமலிருந்து விடுவார்.

    ஒரு நாள், அந்தச் சிறுவன் விஷ்ணு வழிபாட்டுக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான். அதனால் கோபமடைந்த முனிவர், அவனைச் சத்தம் போட்டார். உடனே அந்தச் சிறுவன், ‘சுவாமி! நான் உங்களுடன் இருப்பதற்காகச் சொன்ன நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி, நான் இங்கிருக்க மாட்டேன். இனிமேல் நீங்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும்’ என்று சொல்லியபடி அங்கிருந்து சென்று விட்டான்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவனைத் திட்டியதற்காக வருத்தப்பட்ட முனிவர், அந்தச் சிறுவனிடம் பேசி, அவனை மீண்டும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவனைத் தேடிச் சென்றார்.

    அந்தச் சிறுவனைக் கண்டு பிடிக்க ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்த அவர், அனந்தக் காடுகள் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது, அங்கிருந்த இலுப்பை மரம் ஒன்றில் அந்தச் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார்.

    அங்கு அந்தச் சிறுவன் இல்லை. அந்த இடத்தில், விஷ்ணு படுக்கை நிலையில் (அனந்த சயனம்) இருப்பது அவருக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான், அவருக்குத் தன்னுடன் இருந்த சிறுவன் விஷ்ணு என்பது புரிந்தது. விஷ்ணுவை வணங்கிய முனிவர், தனக்குக் காட்சியளித்த அதே இடத்தில் கோவில் கொண்டருள வேண்டும் என்று வேண்டினார். இறைவனும், அவருடைய வேண்டுதலுக்காக அங்கேயே கோவில் கொண்டார் என்கிறது ஆலய வரலாறு.

    கோவில் அமைப்பு :

    இந்தக் கோவில் அகலமான புல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கும், செவ்வக வடிவிலான ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக் கிறது. கேரளாவில் ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோவில் இதுதான் என்கின்றனர். இக்கோவிலுக்குச் செல்ல ஏரியின் கரையிலிருந்து சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.



    கோவிலின் கருவறையில் அனந்தன் எனும் பாம்பின் மேல் விஷ்ணு அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரை அனந்த பத்மநாபன் என்று அழைக்கின்றனர். அவரின் இருபுறமும் பூதேவி, சீதேவி ஆகிய இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக, அனுமன் மற்றும் கருடன் ஆகியோர் வணங்கிய நிலையில் இருக்கின்றனர். இக்கோவிலைத் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவில் என்றும் சொல்கின்றனர்.

    இக்கோவில் வளாகத்தில் மகாகணபதி, மகிஷாசுரமர்த்தினி, கோசலகிருஷ்ணர் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலய வெளிப்புறச் சுவர்களில் புராணங்களை மையப்படுத்திய அழகிய ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.

    ஆலயம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும். தினமும் காலை 7.30 மணி, மதியம் 12.30 மணி மற்றும் இரவு 7.30 மணி என்று மூன்று வேளைகளில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள சிலைகளுக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு விழாக்கள் :

    இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதத்தில் முதல் நாள், ‘நாவண்ணா’ எனும் விழாவும், கும்பம் (மாசி) மாதத்தில் 14-ம் நாள் ‘தபோத்ஸவம்’ எனும் விழாவும் சிறப்பு விழாக்களாக நடத்தப்படுகின்றன. பவுர்ணமி நாட்களிலும், கிருஷ்ண அஷ்டமி நாளிலும் சிறப்புப் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதுபோல், கேரளாவில் ராமாயண மாதமாகக் கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டுபவர்களுக்குத் தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, அவர்களது அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பதும் பொதுவான நம்பிக்கையாகும்.

    திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவிலாக இக்கோவில் இருப்பதால், அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் இக்கோவிலில் வழிபட்டுப் பெற முடியும் என்றும் சொல்கின்றனர்.

    சிலைக்கு அபிஷேகம் இல்லை :

    இந்தியாவில் உள்ள கோவில் களில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் கற்களாலோ, உலோகத்தாலோ செய்து நிறுவப்பட்டிருக்கும். கேரளக் கோவில்களில் மரங்களினால் கூட சிலைகள் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில கோவில்களில் மட்டுமே சிலைகள், மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்வார்கள். அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மூலவர் சிலை, ‘கடுசர்க்கரா’ எனும் எட்டு விதமான (அஷ்டபந்தன) மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் இங்குள்ள மூலவர் சிலைக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்பாலா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனந்தபுரம். காசர்கோடுவிலிருந்து, மங்களூர் செல்லும் வழியில் கும்பாலா இருக் கிறது. இந்த நகரங்களிலிருந்து கும்பாலாவிற்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கும்பாலா சென்று, பின்னர் அங்கிருந்து வாடகைக் கார் அல்லது ஆட்டோ மூலம் இத்தலத்திற்குச் செல்லலாம்.
    ×