என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பராசக்தி அன்னையின் சிறந்த பக்தனாக திகழ்ந்தவன் முக்தராஜன் என்ற மன்னன். அவன் தன்னுடைய நாட்டை எந்த வித குறைகளும் இல்லாதபடிக்கு ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வறுமை இன்றும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அசுரனால் இடையூறு ஏற்பட்டது.

    ஜானுசுமண்டலன் என்னும் அந்த அசுரனுக்கு, முக்த ராஜனின் பக்தியைக் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அந்த அசுரன், முக்தராஜனுக்கு இடையூறு செய்வதையே வேலையாக மாற்றிக்கொண்டான். முக்தராஜனுக்கு, ஜானுசுமண்டலனின் இடையூறுகளை சமாளிப்பதே பெரும் சுமையாக இருந்தது. ஆகையால் நாட்டையும், நாட்டு மக்களின் குறைகளையும் உடனடியாக கவனித்து, சரி செய்ய முடியாமல் திணறினான்.

    இப்படியே போனால் என்னதான் முடிவு. ஒரு நாள் இதுபற்றி முக்தராஜன் சிந்தித்தபோது, தன் அன்னையான பராசக்தியிடமே தன் குறையை கூறி வேண்டுவது என்று முடிவு செய்தான். ஜானுசுமண்டலனை அழிக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். மனமுருகி வேண்டும் பக்தனுக்கு மனம் இறங்காமல் இருப்பது தெய்வம் அல்லவே!

    யாகத்தில் உதித்த நிமிஷாம்பாள் :

    யாகத்தில் இருந்து உதித்த அம்பிகை, முக்தராஜன் மற்றும் அவனது நாட்டு மக்களின் வேண்டுகோளின் படி, ஜானுசுமண்டலனைப் பார்த்து ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள். அந்த நொடிப் பொழுதில் அசுரனான ஜானுசுமண்டலன் சாம்பலாகிப் போனான். கண நேரத்தில் தன் பக்தன் முக்தராஜனுக்கு அருள்புரிந்ததால், ‘நிமிஷாம்பாள்’ என அழைக்கப்பட்டாள்.

    அசுர வதம் செய்ததால், அம்பிகைக்கு உண்டான தோஷம் நீங்க, நிமிஷாம்பாள் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தின் அருகில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்தாள். அதைத் தொடர்ந்து அம்பிகையின் தோஷம் நீங்கியது. அம்பிகை வழிபட்ட அந்த லிங்கம், ‘முக்தீஸ்வரர்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.

    ஆலய அமைப்பு :

    இந்த இறைவனை கர்நாடகாவில் ‘மவுத்திகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். தனக்கு அருள்புரிந்த அன்னைக்கு, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சம் என்னும் இடத்தில் கோவில் எழுப்பினான் முக்தராஜன். அந்த அம்பிகைக்கு, ‘நிமிஷாம்பாள்’ என்று பெயரிட்டான். சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி.

    அம்மனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நிலை கோபுரம் முதலில் வரவேற்பு அளிக்கும். அதன் வழியாக கருவறைக்கு சென்றால், அங்கு அன்னை கிழக்கு நோக்கி நான்கு திருக் கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார். நிமிஷாம்பாள் தேவியின் முன்பாக சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள் உள்ளன.

    நிமிஷாம்பாள் வழிபட்ட சிவலிங்கமான மவுத்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கிறார். அதன் அருகிலேயே லட்சுமி நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகர், அனுமன், சூரியன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.

    இத்தலத்தில் சிவராத்திரி, மாத பவுர்ணமி, நவராத்திரி, நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



    சென்னையில்...

    கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. இதுதவிர பெங்களூரில் அக்கிப்பேட் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர், கர்நூல், தவணகிரி ஆகிய இடங்களிலும் நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவில் நிமிஷாம்பாள் கோவில் இருக்கிறது.

    சென்னை காசிச்செட்டி தெருவில் உள்ள கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதனுள் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்த வண்ணம் நிமிஷாம்பாள் எழுந்தருளி உள்ளாள். அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் உள்ளன. நிமிஷாம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சூட்டி தொடர்ந்து 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டும்.

    கோவில் அமைப்பு :

    கருவறை வெளிப்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி, முக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகின்றனர். நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவக்கிரக சன்னிதி உள்ளது. இதில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பது போன்ற சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தலத்தில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும், துர்க்கா ஹோமமும் நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகிறது.

    அம்பிகை வழிபட்ட லிங்கம் :

    கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சத்தில் அமைந்துள்ளது நிமிஷாம்பாள் ஆலயம். இங்கு அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் இருக்கிறது. மவுத்திகேஸ்வரர் என்னும் முக்திகேஸ்வரருக்கு, முகம் போன்ற கவசம் இந்த தலத்தில் சாத்தப்பட்டுள்ளது. இத்தல ஈசனை பிரதோஷ நாட்களில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
    சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது. இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்புக்குரியது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும்.

    தல வரலாறு :

    இந்தக் கோவிலின் தலவரலாறு குறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், திப்பு சுல்தான் காலத்திற்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. குறிப்பாக, 1131-ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818-ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் காணப்படுகின்றன. மற்றபடி ஆலய வரலாறு குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இந்த கோவிலில் நடைபெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது.

    உதய தேவரீஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமி இரவு பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், பிரதோஷ வழிபாடு தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் நினைத்தனர். எனவே சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். பொதுவாக அம்மன் சன்னிதி உள்ள சிவன் ஆலயத்தில் தான் பிரதோஷ வழிபாடு நடத்த வேண்டும் என்ற ஐதீகம் தான், உதயதேவரீஸ்வரி அம்மன் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க செய்தது என்றால் மிகையில்லை.

    இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். இந்த தெய்வீக மணம் எப்படி வருகிறது என்பதற்கு விடை தெரியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் அருள் வந்து குறி சொன்னார். அதில் இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பாலாம்பிகை அம்மன் வீற்றிருப்பதாக கூறினார்.



    அவர் குறிப்பிட்ட இடத்தில் அம்மனை வைத்து வழிபட தொடங்கிய போது தான், காலாங்கி சித்தர் உள்பட 3 சித்தர்கள் அந்தக் கோவிலுக்கு சிவனை வழிபட வருவதாகவும், ஆனால் அவர்களுக்கு கோவில் பிரசாதம் படைக்கப்படாமல், பசியுடன் அங்கிருந்து செல்வதாகவும் சாமியின் அருள் வாக்கு கிடைத்தது. 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது.

    பிறகு அம்மன் அருள்வாக்கு படி, பாலாம்பிகை அம்மனுக்கு முன்பாக உள்ள 2 சிறிய பாறைகளுக்கு நடுவே கல் உருவில் தோன்றிய காலாங்கி சித்தரை கண்டறிந்து, அவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    இங்குள்ள விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.

    உதயதேவரீஸ்வரி அம்மன் எதிரில் உள்ள வேப்ப மரத்தில், பிரார்த்தனை செய்து மஞ்சள் கட்டி வந்தால் மூன்று மாதத்தில் மேற்படி காரியங்கள் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோவிலின் தல விருட்சம் மஞ்சள் அரளி ஆகும்.

    இந்த தலத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இருந்து கொடிமரம் கொண்டு வரப்பட்டு நடப்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு, குன்றின் மேல் பாதி தூரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதி தூரத்திற்கு மண் பாதையில் தான் செல்ல வேண்டும். கோவில் முன்பு பக்தர்கள் அமர மேற்கூரை இருக்கிறது. சிறிய ஆலயமாக இருந்தாலும் சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது.

    மனக்கஷ்டத்தில் வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு சித்தர்கள் மலை அடிவாரத்தை தழுவியபடி வைகை ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆஞ்சநேயர். மனக்கஷ்டத்தில் வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

    தல வரலாறு :

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான கதை வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம். அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, ‘வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தைத் தேடலானார். அப்போது கனவில் கண்டபடி, தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டிப் பார்க்க முயன்றார். என்ன அதிசயம்! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    செவி வழிக் கதை :

    இந்த ஆணைப்பட்டி ஆஞ்ச நேயருக்கு புராணகால செவிவழி கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    அதாவது மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே சித்தர்கள் மலையின் அடிவாரத்தில் வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி கூறினாள். பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து ஆற்றுக்கு வந்தான்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்ததாம். இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்குத் திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மன் தனது ஞானத்தால் அறிந்து கொண்டார். அதன்படி ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்று கூறினார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மன், தம் தம்பியான பீமனிடம், ‘ஆஞ்ச நேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா’ என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டான். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார்.

    பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்தச் செவி வழிக் கதை சொல்கிறது.


    நவக்கிரகங்கள்

    இந்தக் கோவிலில் ஆஞ்சநேயரை, பீமன் வழிபட்டதால் வீரஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். வாலை மேலே உயர்த்தியபடி, வலது கையில் சஞ்சீவி பர்வத மலையை தாங்கிக் கொண்டு, இடது கையை தொடையில் ஊன்றியவாறு நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ஆஞ்சநேயரின் இடது கண் அயோத்தியை நோக்கி அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

    அதேபோல் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில், ஆஞ்சநேயரின் பாதம் அமைந்துள்ள இடத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும் அதிசயத்தைக் காணலாம். மேலும் பீமனுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்து ஆசி வழங்கியதால், ஸ்ரீஜலகண்ட ஆஞ்ச நேயர் எனும் மற்றொரு பெயரையும் பெற்றுள்ளார்.

    அணைப்பட்டி ஆஞ்ச நேயரின் வலது பக்கத்தில் கன்னிமூலையில் விநாயகர் சன்னிதியும், அதற்கு முன்பு நாக தேவதை, நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும். 400 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறப்பட்ட அந்த ஆலமரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேருடன் சாய்ந்து விட்டது. அதில் இருந்து ஒரு கிளையை எடுத்து அதே இடத்தில் நட்டு வைத்துள்ளனர். தற்போது அது அற்புதமாக வளர்ந்து வருகிறது.

    வைகை ஆற்றில் தாழம்செடியின் அடியில் சுயம்புவாக தோன்றியதால், வைகை ஆற்றின் நீரே தீர்த்தமாக கருதப்படுகிறது. கோவில் வளாகத்தில் மூலவர் சன்னிதி அருகே ஒரு அபிஷேக கிணறும் உள்ளது. அதன் தண்ணீரையே ஆஞ்சநேயரின் அபிஷேகத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.

    தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் உத்தியோக தடையை போக்கவும், பணியிட மாறுதல் கேட்டும் வேண்டுதல் செய்கின்றனர். இதுதவிர திருமண தடை, செவ்வாய் தோஷம் ஆகியவை விலகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வேண்டி செல்பவர்களும் ஏராளம். இதற்காக ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, பலவகை பழங்களால் ஆன மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

    சனி தோஷம் நீங்குவதற்கு சனிக்கிழமை விரதம் இருந்து அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். பின்னர் ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து, பிரார்த்தனை செய்வதால் சனி தோஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தை, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும் இங்கு பலர் வருகின்றனர். எனவே, நாமும் அணைப்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு அருள் பெறுவோம்.

    திருவிழாக்கள் :

    இந்தக் கோவிலில் மார்கழி அமாவாசை, அனுமன் ஜெயந்தி, ராமநவமி ஆகிய தினங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களில் அணைப்பட்டி ஆஞ்சநேயரின் அருளை பெறுவதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திண்டுக்கல்லில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், நிலக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் அணைப்பட்டி உள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டையில் இருந்து கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். இந்து ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன.

    கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனி பகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளை இங்கு மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத்சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டது. எனவே சனி பகவான் அந்த காகத்தினையே தனது வகனமாக இங்கு ஏற்றுக் கொண்டார்.

    சனி பகவானின் கதை என்ன? :

    சூரிய தேவனின் மகன் சனிபகவான். இன்னொரு மகன் எமதர்மன். இருவரும் பகை கொண்ட நேரம் நிறைய உண்டு. ஒரு சமயம் பகையினால் எமதர்மன் சனிபகவான் காலில் ஓங்கி அடிக்க, அதனால் சனிபகவானின் கால் ஊனமானது.

    கால் ஊனத்துடன் நிவாரணம் தேடி மனித உருவத்தில் சுரைக் குடுவையில் பிச்சை ஏந்தி பெற்ற அந்த தானியங்களைச் சமைத்து அன்னதானமாக ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் அளித்து வந்தார் சனிபகவான். ஊர் ஊராக சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும் போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பல கோடி யுகங்களாக மறைந்திருந்த ‘பூச ஞான வாவி’ என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்த்தது. இதனால் சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது.

    விளாவேர் தடுக்கி சனி பகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

    சனி பகவானின் அருள் :

    அட்சய திரிதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனி பகவான் கிழக்கு பிரகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்று போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனி பகவான் அருள் பாலிக்கிறார்.



    சனி தோஷம் உள்ளவர்களும், சனி கிரக பாதிப்பு உள்ளவர்களும், சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர். காக்கைகள் அந்த உணவை எடுத்து புசித்தால் அவர் களது சனி தோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம். ஒரு வேளை அந்த உணவை உண்ண தயங்கி பறந்து போனால் அவர்களது தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம். எனவே அவர்கள் மறுபடியும் சனி பகவானை தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது.

    இறைவன் - இறைவி :

    ஆலயத்தில் பிரகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலது புறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தண்டத்தையும், மேல் இடது கரத்தில் தாமரையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.

    அடுத்துள்ள மகாமண்டபத்தின் அருகில் உள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் இடது புறம் இரட்டை விநாயகரும், வலது புறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் அட்சயபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. நெய் தீபம் மட்டுமே ஏற்றி தீபாராதனை செய்கின்றனர்.

    பரிவார தெய்வங்கள் :

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென் கிழக்கில் வன்னி மரமும், தென் திருச்சுற்றில் ஆலய திருக்குளமான பூச ஞான வாவி குளத்தின் நுழைவுவாயிலும் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் விநாயகர், நாகர், சுப்ரமணியர், வள்ளி, தேவசேனா ஆகியோர் சன்னிதிகளும் வடக்கு திருச்சுற்றில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

    கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கிறது.

    ஆலயத்தின் தல விருட்சம் விளாமரம். ஆலயத்தின் வட திசையில் விருட்சம் உள்ளது.

    பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயத்தின் எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள் பாலிப்பதை தனி சிறப்பாக கூறுகின்றனர் பக்தர்கள்.

    சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அட்சய திரிதியை அன்று சனி பகவான் பலவித ஸ்தூல சூட்டும் வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம்.

    அட்சய திரிதியை அன்று இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு அருள் பாலிக்கும் இறைவி அபிவிருத்தி நாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள் புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

    அட்சய திரிதியை நாளில் இறைவனுக்கு சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபடுதலும், சனி பகவானுக்கு புணுகு கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுதலும் மிகுந்த பலனைத் தரும்.

    சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.

    அட்சய திரிதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம். குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

    முத்துமாலை அம்மன் :

    ராவணன் சீதாதேவியை கடத்திச் சென்றபோது, சீதா தேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதா தேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதா தேவி தங்கி இருப்பதாக நினைத்து அதற்கு முத்துமாலை அம்மன் என பெயரிட்டனர்.

    செவிவழி செய்தியாக கூறப்பட்டு வரும் அதிசய சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

    நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.

    ‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி. ‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்ற ஒலி கோவில் கருவறையில் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

    பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

    கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் ஆன திருமேனி சிலாசாசனம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு குட முழுக்காட்டு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் புடை சூழ அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.

    சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதா தேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமான் அதன் அருகே சென்று பார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.

    முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர பத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வரு கிறாள்.



    திருவிழாக்கள் :
     
    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

    ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வரு கிறது.

    நோன்போ நோன்பு :

    ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு சென்று 15-ம் நாள் “அம்மன் கொடை நோன்போ, நோன்பு” என கூவி கொண்டு செல்வார். அந்த 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரிய சாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர்.

    ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்னே திங்கட்கிழமை மாலையில் அம்மன் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்களுடன் எடுத்து சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், அம்மன் கோட்டையை வலம் வந்து வீதி உலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8-ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

    ஆனி பெருந்திருவிழாவையொட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து ஆடு வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்வர்.

    ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி :

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள் என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரிய சாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

    வியாதியை குணமாக்கும் சாம்பார்சாதம் :

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை ‘கோவில் வீடு’ என்று அழைப்பர். இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு கூடி இருப்பர். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார். அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, அதை பனை மர ஓலையில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல் நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம். இந்த சாம்பார் சாதத்தை பெற இன்றும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதை காணலாம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    வழியும்-தூரமும் :

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று.
    திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று.

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.

    கடனையாறு என்று அழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோவில்.

    இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவர். இந்த நந்திகேசுவரர், இந்திர சபையின் தலைமை சிற்பி, மயனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    லிங்கம் உருவான கதை :

    திருமறை காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூவுலகத்தை தாங்கும் பூமித்தாய் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தாள். அதனால் உலகத்தை சமன் செய்வதற்காக இந்த உலகத்தை இயங்க செய்யும் காரணகர்த்தா, அகத்தியர் மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை தெற்கே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்ரி முனிவர், சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார்.

    அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்கு தொடர்ச்சி மலையில் திரிகூடபர்வதம்(மூன்று மலைகள் சேருமிடம்) சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அத்ரி முனிவர் தன் துணைவியார் அனுசுயாதேவி மற்றும் சீடர்கள் கோரட்சகர், தத்தாத்ரேயர் முதலானோரோடு திரிகூடபர்வதம் வந்து தவம் செய்ய தொடங்கினார்.

    ஒருமுறை பவுர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்கு கடம்ப மலர்களை பறிப்பதற்காக கடம்பவனம் சென்றனர் அத்ரி முனிவரின் சீடர்கள். அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொறிந்து செல்வதை கண்ட சீடர்கள், அப்பாறையின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சிறிய சுயம்புலிங்கத்தை அவர்கள் பார்த்து உவகையுடன் அத்ரி முனிவரிடம் தாங்கள் கண்டதை தெரிவித்தனர். இதனையடுத்து அத்ரி முனிவர், தனது துணைவியாருடன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டு ஆனந்த களிப்பில் தாம் கண்டதை வேதமந்திரமாக சொல்கிறார்.

    ‘அத்ரினாம் பூஜிதம ஸ்தம்பம் பக்தாபீஷ்ட பிரதாயகம்
    வந்கேதம் சிவசைலேசம் பிண்டிகாம் ஷோடசானுதம்
    சதுர்புஜாம் விசாலாட்சிம் தேவீம் பசுபதீம் முகீம்
    பாசாங்குச வல்லபாம் அம்பாம் தீரைலோகிய நாயகீம்

    தேவீம் பரமகல்யாணிம்‘’

    “அத்ரியாகிய நானே தவத்தின் பயனாய் சுயம்புலிங்க தரிசனம் செய்ய நினைத்தேன். ஆனால் முக்திக்கு பக்திதான் அவசியம் என்று நிரூபிக்க பக்தர்களுக்கு காட்சியளித்த இறையே, பூமிக்கு மேலே ஒரு பாகமும் (சுமார் 3 அடி), கீழே 15 பாகமும் (சுமார் 45 அடி) கொண்டு சிவம் சைலத்தில் தோன்றியதால் சிவசைல நாதர் என்று அழைக்கப்பெறும் பெருமானே, நான்கு கைகளுடன் பரமகல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்கும் அன்னையை இங்கு காணும் பாக்கியத்தை தந்தருள்வீராக” என்பதே இப்பாடலின், இந்த தேவமந்திரத்தின் பொருளாகும்.

    இதன் மூலம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.



    இறைவன் சடை முடிந்த வரலாறு :

    இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான். கோவிலுக்கு வரும் வழியில் கருணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மன்னனால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டு பவருக்கு வேடிக்கை காட்டுவதை வாடிக்கையாக கொண்ட அப்பன், வேந்தனிடத்தும் விளையாட நினைத்தார்.

    வெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் கோவிலுக்குள் நுழைந்தபோது பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. சாத்திய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் திடீர் வருகையால் அர்ச்சகர் கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக கொடுத்து அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை திரும்ப பெற்று மன்னனுக்கு பிரசாதமாக கொடுத்தார்.

    சிவதரிசனம் செய்ய முடியாவிட்டாலும் அவருக்கு சூட்டிய புஷ்பத்தையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி மனம் மகிழ்ந்த மன்னன் அம்மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டபோது மலரில் ஒரு உரோமம்(முடி) தட்டுப்பட்டது. அது அபசகுணம் என்று கருதிய மன்னன், அர்ச்சகரிடம் பிரசாதத்தில் முடி எப்படி வந்தது? என்று கேட்டான். அதற்கு அர்ச்சகர், சுவாமியிடம் சடைமுடியுண்டு. மாலையில் இருந்தது சுவாமியின் முடியே என்று கூறினார். அப்படியானால் அந்த சடைமுடியை நான் தரிசிக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று அர்ச்சகருக்கு கட்டளையிட்டான் மன்னன்.

    அப்போது செய்வதறியாது திகைத்த அர்ச்சகர், இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்து தன்னை காப்பாற்றுமாறும், இல்லையேல் உயிர் நீக்கப்போவதாகவும் முறையிட சிவசைலநாதர் அசரீரியாக “சுதர்சனப்பாண்டியனை சோதிக்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும், அவனுக்கு தரிசனம் தந்து உன்னை காப்பேன் என்றும், எனது மூன்று புறங்களிலும் துளைகள் அமைப்பாயாக” என்றும் கூறினார்.

    சில நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்தான் மன்னன். அப்போது மன்னனை கூட்டிச்சென்ற அர்ச்சகர், சுவாமிக்கு பின்னால் உள்ள துளைக்கு நேராக வந்து நிற்கும்படி வேண்டினார். அதன் படியே மன்னன், சுவாமியின் பின்புறம் உள்ள துளைப்பக்கமாக வந்து நிற்க அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தினுள் இருந்து கற்பூர தீபம் காட்ட அந்த தீப ஒளியில் துளையின் பின்னால் இருந்த பாண்டிய மன்னன் இறைவனை ஜடாதளியாக... தரிசனம் செய்த திகைப்பில் ஆழ்ந்து இறைவா அர்ச்சகர் கூறியது பொய் என்றே கருதினேன். என்னை மன்னித்தருள்க என்று இறைவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

    கோவில் உருவான வரலாறு :

    முன்னாளில் செந்தமிழ் பாண்டிய நாட்டினை மணலூரை தலைநகராக கொண்டு சைவநெறி போற்றி சிறப்பாக ஆண்டு வந்தார் சுதர்சனப்பாண்டியன். இந்த மன்னன் பிள்ளை பேறு இல்லாமல் பெரிதும் வருந்தினான். பிள்ளை பேற்றினை பெறுவதற்காக இம்மன்னன் பொருநையின் கரையில் அசுவமேத யாகம் ஒன்றை செய்தான். யாகத்தின் முடிவில் எத்திசையும் சென்று வரத்தக்க படையுடன் அரச பரியினை (குதிரை) அலங்கரித்து அதனுடன் தனது சகோதரன் சத்யமூர்த்தியையும் அனுப்பி வைத்தான். கிழக்கு திசையிலும், தென் திசையிலும் வெற்றி பயணம் முடிந்தபின் பரி மேற்கு திசையில் பயணத்தை தொடங்கியபோது சிவசைலநாதர் கந்தவேளிடம் ‘எண்திசை வென்று இத்திசை நோக்கி வரும் பரியினை கட்டுவாயாக’ என்று பணிந்தார்.

    மறைச்சிறுவனாக சென்ற குமரக்கடவுள், அக்குதிரையை பிணித்தான். அதனால் எழுந்த போரில் சத்தியமூர்த்தி மண்ணில் வீழ்ந்திட மணலூருக்கு செய்தி பறந்தது. சுதர்சனப்பாண்டியன் மதகரியென களத்தில் புகுந்து மறைச்சிறுவனுடன் போர் புரிந்து முடிவில் மகுடம் கீழே விழ மண்ணில் மன்னன் வீழ்ந்த தருணத்தில், முருகன் வேலுடன் தோன்றி சிவசைலநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கும் இடத்தை கூறி மறைந்தார். நான் என்ற அகப்பற்றும், நான் நடத்தும் வேள்விப்பரி இது என்ற புறப்பற்றும் அக்கணமே நீங்கப்பெற்ற சுதர் சனப்பாண்டியன், சுயம்பு மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தான். இறைவன் அருளால் போர்க்களத்தில் மாண்டோர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர்.

    பாண்டிய மன்னனின் பரிவேள்வி முழுமையடைந்தது. இறையருளால் கந்தவேளும், சுதர்சனப்பாண்டிய மன்னனின் மகவாக தோன்றினான். அம்மகவிற்கு குமரபாண்டியன் என பெயர் சூட்டி பெருமிதமடைந்த மன்னன் தனக்கு அருள்பாலித்த சிவசைலநாதருக்கு கோவில் எழுப்பினான்.
    சீர்காழியில் இருந்து வடகிழக்கில், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் ஆச்சாள்புரம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    சிவபாத இருதயரின் மகனாக சைவமும், தமிழும் தழைக்க சீர்காழியில் அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு, சிவஞானம் பெற்றார். ஈசனின் அருளால் அடியார்களுடன் சிவத்தலங்கள் பல சென்று பதிகம் பாடி, அற்புதங்கள் நிகழ்த்தினார். சிவபெருமானைப் போற்றிப் பாடி திருக்கோலக்கா திருத்தலத்தில் சம்பந்தர் பொற்றாளம் பெற்றார். பட்டீஸ்வரம் திருத்தலத்தில் முத்துப்பந்தல் பெற்றார். திருவாவடுதுறை திருத்தலத்தில் பொற்கிழி பெற்றார்.

    திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றார். நஞ்சினால் இறந்த வணிகனை பதிகம் பாடி திருமருகல் திருத்தலத்தில் உயிர்ப்பித்தார். திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, திறக்காத அத்தலத்தின் கோவில் கதவை திறக்கவும், அடைக்கவும் செய்தார். திருவோத்தூர் திருத்தலத்தில் சம்பந்தர் ஆண் பனை மரத்தை, பெண் பனை மரமாக்கினார். சென்னை மயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவை எனும் பெண்ணை, அவளது அஸ்தி மற்றும் எலும்பை கொண்டு ஈசன் அருளால் உயிர்ப்பித்தார்.

    இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தருக்கு, அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். சீர்காழியிலிருந்து வடகிழக்கே எட்டு மைல் தொலைவிலுள்ள திருநல்லூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் மகள் தோத்திரப் பூர்ணாம்பிகையை மணம் பேசி முடித்தனர். பெருமணம் சிவாலயத்தில் வைத்து சம்பந்தருக்கு திருமணம் செய்ய முடிவானது. வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று பெருமணம் சிவாலயத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    திருமண நாளும் வந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தரின் உறவினர்களும், அடியவர்களும் ஒருங்கே திருநல்லூர் எனும் அந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர். அப்போது அன்னை உமையவள் அங்கு தோன்றி, சம்பந்தரின் திருமணம் காணவந்த அனைவருக்கும் திருநீறு அளித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவேதான் இத்தல அம்பிகைக்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ என்னும் திருநாமம் வந்தது. இதன் பொருட்டே இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது.



    ஆச்சாள் எனும் அம்பிகையே சம்பந்தர் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து அனைவருக்கும் திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ஆச்சாள்புரம் என வழங்கலாயிற்று. மணமேடையில் சம்பந்தரின் வலப் பாகத்தில் மணமகளை அமர வைத்தனர். சம்பந்தரின் திருமணக் கோலத்தை கண்டு அவையோர் மகிழ்ந்தனர். வேள்வி சடங்குகள் நடந்தன. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது, ‘இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்’ என்று கூறி, ‘கல்லூர்ப் பெருமணம்’ எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

    அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது. ‘சம்பந்தா! இப்போது கருவறையில் எமது லிங்கத்திருமேனியில் இருந்து பெருஞ்ஜோதி தோன்றும். அந்த ஜோதியில் யாம் ஒரு வாசலையும் அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனைவரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக’ என்றது. அப்போது கருவறை லிங்கம் பிளந்து அதில் இருந்து தோன்றிய சிவஜோதியைக் கண்டு சிலர் தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ எனும் நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு சொன்னார். அவரும் தனது மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார்.

    உடனே கருவறையில் ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்புபோல மீண்டும் ஒன்றாகியது. ஆம்! சம்பந்தர் மற்றும் அவரது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இத்தல ஈசன், முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு சிவலோக தியாகேசர் என்னும் திருநாமம் வந்தது. இப்படி தம்முடைய சிவலிங்க பிளவுக்குள் சம்பந்தர், அவரது மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கிய லிங்கம், இன்றும் நமக்கு சிவலோக பதவி வழங்க காத்திருக்கிறது.

    ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் இத்தலத்தில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடக்கிறது. வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும். பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடைபெறும். அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தர் சிவஜோதியில் கலத்தலை தரிசித்து பெரும் புண்ணிய பேறு பெறுவார்கள்.

    பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதைக் காண்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது.
    தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற்கில் திருப்பூந்துருத்தி வழியாக சென்றால் திருவாலம்பொழில் ஆலயத்தை அடையலாம்.
    ஒவ்வொரு சிவ ஆலயமாக வழிபாடு செய்து கொண்டு வந்தார் திருஞானசம்பந்தர். திருவையாறில் வழிபாடு செய்த திருஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் இருப்பதாக அறிந்தார். அவரைக் காணும் பொருட்டு, பல்லக்கில் ஏறி புறப்பட்டார். வழியில் திருவாலம்பொழில் என்ற இடத்தில் சம்பந்தரின் பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது, தன்னைக் காண சம்பந்தர் வருவதாக அப்பர் அறிந்தார். உடனே திருப்பூந்துருத்தி திருத்தலத்தில், தாம் மடம் அமைத்து தங்கியிருந்து செய்துவந்த உழவாரப்பணியை சிறிது நிறுத்திவிட்டு சம்பந்தரை எதிர் கொண்டு அழைக்க வேண்டி விரைந்தார்.

    வெகுதொலைவில் சம்பந்தரின் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட அப்பருடன் வந்த பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றார்கள். சம்பந்தரும் அவ்வூர் ஈசனை வணங்கிவிட்டு ஊர் எல்லையை அடைந்தார். எதிரே அப்பரடிகளின் அடியார்கள் இரு கைகளையும் சிரசுக்கு மேலே உயர்த்தி சம்பந்தர் பல்லக்கை நோக்கி தொழுதனர். அப்போதுதான் சம்பந்தரும் தமது சிவிகையின் சீலையை உயர்த்தி அடியவர்களை நோக்கி தமது திருமுகம் மலரச் சிரித்தார்.

    தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த அடியவர்கள் கூட்டம், திருநாவுக்கரசரை மறந்தே போனது. அப்பரடிகளும் இதுதான் சமயம் என்று கருதி, அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார். ஆம்! சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கி சம்பந்தரின் சிவிகையை தமது திருத்தோளில் சுமந்து வரலானார் அப்பர் பெருமான். திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சம்பந்தர் சிவிகையின் திரை சீலையை விலக்கி வெளியே எட்டிப்பார்த்து, ‘அப்பர் பெருமான் எங்கு உள்ளார்?’ என்று அங்கு உள்ளோரிடம் கேட்டார்.

    சிவிகை தூக்கி வரும் தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து சம்பந்தரைப் பார்த்த அப்பர், ‘தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’ என்றார். சம்பந்தர் உடனே சிவிகையிலிருந்து கீழே குதித்து ‘என்ன காரியம் செய்தீர் ஐயா’ என்று அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகி கட்டித்தழுவினர். அடியவர்கள் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி ‘இதென்ன திருக்காட்சி’ என வியந்து இவ்விரு அடியார்களையும் பூமியில் வீழ்ந்து வணங்கியது.

    இந்த நிகழ்வுக்கு ‘பூந்துருத்தி உபசாரம்’ என்று பெயர். அடியார்களின் இந்த உபசாரத்தால் ஒருகணம் ஆலம்பொழில், கயிலாயபுரியாக மாறியது. அப்பரும், சம்பந்தரும் திருஆலம்பொழில் ஈசனைப் பாடித் துதித்து திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர்.



    ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சம்பந்தரின் பல்லக்கினை அப்பர் பெருமான் தமது தோளில் சுமந்து வந்ததையும், பின்னர் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உபசாரத்தையும் போற்றி புகழும் வண்ணம் அடியவர்கள் இதனை ‘தோள் கொடுத்த விழா’ என்னும் பெயரில் ஐதீக விழாவாக நடத்திவருகிறார்கள்.

    தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் 10 கி.மீ. சென்று திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற்கில் திருப்பூந்துருத்தி வழியாக 4 கி.மீ. சென்றால் திருவாலம்பொழில் ஆலயத்தை அடையலாம்.

    இங்கு பைரவருக்கு தனி சன்னிதி இல்லை. ஆம்! சென்னை மயிலாப்பூர் போலவே இங்கும் மூலவரே கபாலியாக, பைரவர் சொரூபமாக விளங்குகிறார். இதனை இத்தல அப்பர் பதிகம் உறுதி செய்கிறது. ‘கமலத்தோன்றலையரிந்த கபாலியை, உருவார்ந்த மலைமகளோர் பாகத்தானை, திருவாலம்பொழிலானைச் சிந்தி நெஞ்சே’ என்கிறார் அப்பர்.

    அதாவது பிரம்மனின் தலையை கொய்த பைரவர் சொரூப ஈசன் கபாலி தான், பாகம்பிரியாளின் ஒருபாகம் கொண்டவனான அந்த ஈசன் தான் நம் திருவாலம்பொழில் திருத் தலத்தில் உறைகிறான். அவனை மனதுக்குள் சிந்தியுங்கள் என்கிறார் அப்பர். இத்தல ஈசனை காசிப மகரிஷி வழிபட்டு உள்ளார்.

    தட்சனின் குமாரிகளில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களுக்கு ‘அஷ்ட வசுக்கள்’ என்று பெயர். வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை இவர்கள் கவர்ந்து சென்றதால் வசிஷ்டர், பூலோகத்தில் சென்று பிறக்குமாறு அஷ்ட வசுக்களுக்கும் சாபமிட்டார். தங்கள் முழு சாபமும் நீங்கிட அஷ்ட வசுக்களும் இத்தல ஈசனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார்கள். இத்தல ஈசனை பிரதோஷம், அஷ்டமி, திங்கட்கிழமைகளில் வழிபட்டு, கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட நினைத்த காரியங்கள் ஜெயமாகும். இது ஒரு சர்வ தோஷ நிவாரண திருத்தலம் என்கிறார்கள். அதற்கு ஏற்ப இத்தலத்தில் வெளி பிரகாரத்தின் தெற்கில் பஞ்ச லிங்கங்கள் உள்ளன.

    பிரதோஷம், அஷ்டமி அல்லது திங்கட்கிழமைகளில் தொடர்ந்து 11 முறை மூலவருக்கும், பஞ்ச லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்வித்து வழிபட்டு வந்தால், சகல கிரக தோஷங்கள், பஞ்சமாபாதகங்கள் விலகும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 5 அமாவாசை நாட்களில் பகல் பொழுதில் இத்தல மூலவர், பஞ்சலிங்கங்கள், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர பித்ரு தோஷங்கள் அகலும்.

    இத்தல அம்பாள் ஞானாம்பிகையை தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களின் மாலைப்பொழுதில் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல இத்தலத்தில் வழிபட்டால் பிரிந்தவர் கூடுவார்கள். இங்கு வரும் அடியவர்களை உபசரித்து அன்ன தானம் செய்து, தொடர்ந்து 3 பவுர்ணமி நாட்களில் வழிபட்டு வர குடும்பம் ஒற்றுமை பலப்படும்.

    இங்கு தலவிருட்சம் ஆலமரமாகும். தொடர்ந்து 8 அமாவாசை நாட்களில், ஈசன், அம்பாள், பஞ்ச லிங்கங்களை வழிபாடு செய்து, ஆலமரத்தை வலம் வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    மத்யார்ஜூனேஸ்வரர் ஆலய இறைவனையும், இறைவியையும், சித்தரையும் பிரார்த்தனை செய்ய, பூரண நலம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    திருச்சி மாவட்டத்தில் பேட்டைவாய்த்தலை என்ற கிராமத்தில் உள்ளது அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் பெயர் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் இறைவனின் மற்றொரு பெயர் மார்த்தாண்டேஸ்வரர். இறைவியின் பெயர் அருள்மிகு பாலாம்பிகை அம்மாள்.

    கோவில் அமைப்பு :

    கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் பெரிய ராஜமண்டபம் உள்ளது. நடுவே கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

    அடுத்து அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை பாலாம்பிகை நான்கு கரங்களுடன் சாந்தம் தவழும் முகத்துடன் நின்ற நிலையில் தென்முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள்.

    அடுத்து மகா மண்டபமும், அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரு பெரிய துவாரபாலகர்களின் திருமேனிகள் உள்ளன. அந்த மண்டபத்தின் தென்புறம் விநாயகர் மற்றும் வடபுறம் பாலதண்டாயுதபாணியின் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தினை அடுத்து இறைவன் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் லிங்கத்திருமேனியுடன் அருள் பாலிக் கிறார்.

    இந்த ஆலயத்திற்கு உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை கோஷ்்டத்தின் தென்புறம் சுப்ரமணியர், நர்த்தன விநாயகர், உச்சிஷ்ட கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தியும், மேற்புறம் லிங்கோத்பவரும், வடபுறம் பிரம்மா, துர்க்கை திருமேனிகளும் உள்ளன. துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர், மேற்கில் வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணியர், வடமேற்கு மூலையில் கஜலட்சுமி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வட கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

    தல வரலாறு :

    இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. சோழ மன்னர்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருவிடைமருதூரில் சிவாலயம் ஒன்றை அமைத்தனர். அப்போது அந்த தோஷம் முழுமையாக நிவர்த்தி அடையாததால் நதி ஒன்றை உருவாக்கி, அதன் அருகே ஒரு சிவாலயம் அமைக்க வேண்டு மென ஒரு அசரீரி கூற, மன்னனும் அதன்படியே ஒரு நதியை வெட்டி அதன் தென் கரையில் ஆலயம் அமைத்தான். இப்படி அமைக்கப்பட்டதே இந்த ஆலயம்.

    மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய ஆறுதான் உய்யகொண்டான். காவிரியின் துணை நதியான இந்த ஆறு திருச்சி மாநகரின் மையப்பகுதி வரை சென்று பாசனத்துக்குப் பயன்படுகிறது.

    தன் முன்னோர்கள் திருவிடைமருதூரில் எழுப்பி கொண்டாடி வந்த சிவாலயத்தில் உள்ள இறைவனின் பெயரான மத்யார்ஜூனேஸ்வரர் பெயரையே இத்தல இறைவனுக்கும் மன்னன் சூட்டினான்.

    இந்த ஆலயத்தின் கருவறை அமையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுவதும் நீங்கியது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத மன்னனுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாயிற்று. அதை நினைவு படுத்தும் வகையில் இங்குள்ள மண்டபத்தின் தென்பகுதியில் ஒரு தூணில் பிரம்மஹத்தி உருவம் பொரிக்கப்பட்டு உள்ளது.


    மார்த்தாண்டேஸ்வரர், பாலாம்பிகை.

    இந்த ஊரில் பொற்றாள பூவாய் என்ற சித்தர் வாழ்ந்து வந்தார். இவர் ஊர் மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் செய்து வந்தார். அவர் அருள்வாக்கு சொல்வதிலும் வல்லவராகத் திகழ்ந்து வந்தார்.

    இக்கோவிலின் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் பெண்களுக்கு வரும் மாத விடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நிவர்த்தியாகும் என்று சித்தர் அருள்வாக்கு சொல்லி உள்ளார்.

    அந்த சித்தரின் உருவம் இங்குள்ள மண்ட பத்தின் வடபுறம் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு உள்ள மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளை ஒரு சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி இருக்கும் தூணில் கட்டுகின்றனர். பின், இங்குள்ள இறைவனையும், இறைவியையும், சித்தரையும் பிரார்த்தனை செய்ய, அவர்கள் பூரண நலம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த சித்தர் இந்த ஆலய இறைவனுடன் ஜோதி உருவில் ஐக்கியமானதாக ஐதீகம்.

    இந்த ஆலயத்தில் காலை, உச்சி, சாயரட்சை மற்றும் அர்த்தஜாமம் என நான்குகால பூஜைகளும் தினசரி சிறப்பாக நடைபெறுகின்றன.

    பெயர் காரணம் :

    இக்கோவில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு பேட்டைவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் இரு பெயர்கள் உள்ளன.

    ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்கு தலைவாய் என்ற பெயர் உண்டு. காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலின் தலைமை இடத்தைக் கொண்டு உள்ளது இந்த ஊர். மேலும் வண்டிகள் கூடும் இடத்தை பேட்டை என்பர். எனவே இந்த ஊர் பேட்டைவாய்த்தலை என அழைக்கப்படலாயிற்று.

    திருவரங்கநாதர் கோவிலில் இருந்த நகைகளைத் திருடிய திருடன் ஒருவன் இந்த ஊரில் வெட்டப்பட்டு மாண்டதால் வெட்டுவாய்த்தலை என அழைக்கப்பட்டது என்றும் பெயர் காரணம் சொல்கின்றனர். இருப்பினும், பேட்டைவாய்த்தலை என்ற பெயரே தற்போது பழக்கத்தில் உள்ளது. இங்கிருந்து புறப்படும் உய்யகொண்டான் வாய்க்காலுக்கு குடமுருட்டி, பாலக்கரை, சர்ப்பநதி என்று பலப் பெயர்கள் உண்டு.

    திருவிழா :

    ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் இந்த ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது. பத்து நாட்களும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு வீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பிரதோஷ நாட்களில் அம்பாள் புறப்பாடு செய்யப்பட்டு உள் பிரகாரத்தில் உலா வரும். நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சிவராத்திரி ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுண்டு. தைமாதத்தில் தைப்பூசத் திரு நாளில் இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள குளித்தலை கடம்பர் கோவில் கால்வாய் துறையில் மற்ற ஏழு ஊர்களில் இருந்து வரும் இறைவன்-இறைவியுடன் இத்தலத்து இறைவனும், இறைவியும் சேர்ந்து கொள்ள, தீர்த்தவாரி உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். மாலையில் சுவாமியும், இறைவியும் கோவிலுக்கு வந்தடைவர்.

    குளித்தலை வட்டத்தில் நடைபெறும் இந்த தீர்த்தவாரி திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும்.

    இத்தலத்து இறைவன்-இறைவியை வழிபட்டு ஆராதனை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் இத்தலம் வந்து இறைவன்-இறைவியை வழிபட்டு குணம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் கூற்று.

    திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து பேட்டைவாய்த்தலையில் இறங்கிக் கொள்ளலாம். திருச்சி சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. ஊரின் உள்ளே 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
    சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது திருவதிகை திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில். இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.

    தல வரலாறு :

    தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

    வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

    மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான். பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

    வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

    அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

    அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார்.

    மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

    திரிபுரம் எரித்ததைத் தவிர, திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, அவர்தம் சகோதரி திலகவதியார் திருத்தொண்டாற்றியது, மனவாசகங்கடந்தார் என்னும் சிவபக்தர் அவதரித்தது என பல்வேறு நிகழ்வுகளின் களமாக திகழ்கிறது திருவதிகை திருத்தலம்.



    ஆலய அமைப்பு :

    சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மூன்று பிரகாரங்களுடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் ஏழு நிலைகளுடனும், ஏழுகலசங்களுடனும், 108 கரண சிற்பங்களுடனும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராஜகோபுரம் தரிசிப்பவர்களை புல்லரிக்கச் செய்கிறது. ராஜகோபுரத்திற்கு முன்னதாகவும் பின்னதாகவும் இரு மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    முன்னதாக உள்ள பதினாறு தூண்களுடன் கூடிய மண்டபம், திலகவதியாரின் வேண்டுதலின் பேரில் அவரது தம்பியான திருநாவுக்கரசரின் திருநீறு அளித்து சூலைநோய் நீக்கிய இடம் என்பதால் அது ‘திருநீற்று மண்டபம்’ எனப்படுகிறது. பின்னதாக உள்ள மண்டபம் ‘தீர்த்தவாரி மண்டபம்’. வைகாசி விசாகத்தன்று இறைவன் இம்மண்ட பத்தில் எழுந்தருளி சக்கர தீர்த்தத்தில் தீர்த்தவாரி கொடுக்கிறார். இம்மண்டபத்தின் இடது புறத்தில் விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட சக்கரதீர்த்தகுளமும், தீர்த்தகுளத்தின் வடகரையில் வசந்தமண்டபமும் அமைந்துள்ளது.

    இரண்டாம் பிரகாரத்தில் இருந்து கொடிமரத்து விநாயகர், பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட இரண்டாம் கோபுரம் வழியாக முதல் பிரகாரத்திற்குள் சென்றால், இடதுசுற்றில் அப்பர்பெருமான் உற்சவர் சன்னிதியும், தெற்கில் தலவிருட்சம், அறுபத்துமூன்று நாயன்மார்கள் சன்னிதி, திலகவதியார் சன்னிதி, சனீஸ்வரர், துர்கை மற்றும் அப்பர் பெருமானின் மூலவர் சன்னிதி ஆகியவை உள்ளன. தென்மேற்கில் சித்திவிநாயகரின் சன்னிதி, மேற்கில் பல்வேறு லிங்கங்கள், பள்ளியறை, வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதி அமைந்துள்ளன. வடகிழக்கில் கஜலட்சுமி வடக்கில் திருமாளப்பத்தி மண்டபம், யாகசாலை மண்டபம், வடமேற்கில் நவகிரகம், நடராசர் சன்னிதி மற்றும் சூரியர் பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன.

    கருவறைக் கோட்டத்தில் சுவாமிக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர், கோமுகம் அருகே துர்கை, தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.சண்டி கேஸ்வரர் சன்னிதி அருகே சிவன் தன்சூலத்தால் உருவாக்கிய சூலை தீர்த்தம் எனப்படும் கிணறு உள்ளது. இறைவன் உமையம்மையை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகத்தின் அடிப்படையில் அம்பாள் ஸ்ரீபெரியநாயகி சுவாமிக்கு வலதாக பிரகாரத்தில் தனி சன்னிதியிலிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் சன்னிதியில் திருமால் பூசித்த லிங்கம் உள்ளது. இடதுபுறத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதி இடம்பெற்றுள்ளது.

    பிரகார தரிசனம் முடித்து அலங்கார மண்டபம் வழியாக உள்ளே செல்ல, உயர்ந்த அலங்கார மண்டபத்தின் முன்புறத்தில் இடப்பகுதியில் விநாயகரும், வலது பகுதியில் முருகக்கடவுளும் காட்சியளிக்கின்றனர். அலங்கார மண்டபத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடைப்பட்ட மண்டபத்தில் திரிபுரசம்ஹார மூர்த்தி, வில்லேந்திய திருக்கரத்தினராக, உமையொருபாகராக நின்ற திருக்கோலத்தில் (உற்சவர்) தெற்கு நோக்கியவாறு காட்சி தருகிறார். கருவறை அர்த்த மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகரும், சுவாமியை நோக்கிய நிலையில் நந்தியம்பெருமானும் வீற்றிருக்க, கருவறையில் மூலவர் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் 16 பட்டைகளைக் கொண்ட சோடசகலாலிங்கத் திருவுருவுடன் அருள்பாலிக்கிறார். கருவறையின் பின்புறம் அம்மையப்பர் இடம்பெற்றுள்ளார். சுவாமியின் கருவறை விமானம் எண்கோணத்துடன் சூடிய திருத்தேர்போல அமைக்கப்பெற்றுள்ளது. உச்சிப் பொழுதில் நிழல் தரையில் படுவதில்லை என கூறுகின்றனர்.

    ஆலய விழாக்கள் :

    சிவாலயங்களுக்கேயுரிய வழக்கமான உற்சவங்களைத் தவிர அப்பர் பெருமானுக்காக சித்திரை மாதத்தில் நடத்தப்படும் பத்து நாட்கள் உற்சவமும், வைகாசியில் பத்து நாட்கள் நடத்தப்படும் பிரம்மோற்சவமும், அதன்போது விசாகத்தில் நடத்தப்படும் தேர்திருவிழாவும் திரிபுரசம்ஹாரமும் இவ்வாலயத்தின் முக்கிய உற்சவ விழாக்களாகும். தினசரி ஆறுகால பூஜை நடைபெறும் இந்தக் கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சென்னை, திருச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்தும், ரெயில் நிலையத்தில் இருந்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
    புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.
    சுயம்புவாகத் தோன்றிய திருமேனி - பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் - சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் - பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் - வில்லைப்புராணம் கொண்ட கோவில் - ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும் தலம்- பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம் -புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.

    புராணக் கதைகள் :

    ஒரு காலத்தில் வில்வமரக் காடாக விளங்கிய இத்தலத்தில் இறைவன் வெளிப்பட்டது ஒரு சுவையான கதை. உழவார் கரை பண்ணையார் வளர்த்த பசு ஒன்று சிவலிங்கம் மறைந்துள்ள புற்றின் மீது பால் சுரப்பதைக் கண்ட மக்கள், தங்கள் மன்னனிடம் கூற, மன்னனும் அங்கு வர, அங்கே மறைந் திருந்த சுயம்புலிங்கம் வெளிப்பட்டது. இம்மன்னன் இறைவனுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பினான் என தலபுராணம் கூறுகிறது.

    இது போன்று மற்றொரு புராணக் கதையும் உண்டு. இச்செய்தி வீரராகவக்கவி இயற்றிய வில்லைப் புராணத்தில் காணப்படுகிறது. சோழவள நாட்டைச்சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குட்ட நோய் தாக்கியது. மனம் நொந்து இருந்த மன்னனிடம் புண்ணியகீர்த்தி என்ற அந்தணர் வந்தார். அவரின் ஆலோசனைப்படி தொண்டை வள நாட்டில் வில்வவனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமீஸ்வரர் ஆலயம் சென்று பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபடச் சென்னார்.

    அவ்வாறே மன்னன் தருமபாலனும் செய்ய, அவனது நோய் அனைத்தும் நீங்கியது. பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தம் இது. ஹிருத்தாபநாசினி, பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தினி எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி என்று பட்டியல் நீள்கிறது.

    வில்லைப் புராணம் :

    இக்கோவிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் வில்லைப்புராணம் ஆகும். 495 பாடல்களைக் கொண்ட இதனை இயற்றியவர் வீரராகவக்கவி என்ற புலவர். இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையே சாரும். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் பேராசிரியராக இருந்த ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர் தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து சாமிநாத அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940-ம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

    பிரசவ நந்தி :

    இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள சுகப்பிரசவ நந்தி (படம்) அம்மன் சன்னிதியை நோக்கியவாறு இது அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும் இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி திருப்பி வைத்துவிட வேண்டும். நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். இதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து அதற்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அம்மனை நோக்கிய வடக்கி திசையில் அந்த நந்தியை இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே நன்றிக்கடனும், பரிகாரமும் ஆகும்.


    திருக்காமீஸ்வரர், கோகிலாம்பிகை

    திருக்காமீஸ்வரர்- கோகிலாம்பிகை :

    இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன. இறைவிக்கு கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை எனப் பல பெயர்கள் உள்ளன.

    திருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். முருகன் பெயர் முத்துக்குமரன் என்பதாகும்.

    இவ்வாலயம் அரிய கலைநயம் கொண்ட சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபத்தின் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் காட்சி தத்ரூபமாக காட்சியளிக்கிறது. குழந்தை வெளியே வருவது, இரண்டு பெண்கள் தாங்கிப் பிடிப்பது என உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் கண்டாமணி, கி.பி. 1812-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள புரோக்ஸ் போர்னிபரி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டது.

    இங்குள்ள திருத்தேர் மிகவும் பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இத்தேரின் பழைய அச்சு நீக்கப்பட்டு, இரும்பாலான புதிய அச்சு பொருத்தப்பட்டது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை கவர்னரும் முதல்வரும் வடம் பிடித்துத் தொடங்கி வைப்பது, பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதல் இன்றும் தொடர்கிறது. இத்திருக்கோவிலுக்கு மூன்று தேர்கள் உள்ளன. தேரோட்டத்தில் இம்மூன்றும் உலா வரும்.

    இங்கே சூரிய பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. பங்குனி மாதத்தில் 9,10,11 ஆகிய மூன்று தினங்களில் இப்பகுதி வாழ் மக்கள் பலரும் அறிந்திராத செய்தி.

    விழாக்கள் :

    இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது.

    ஆலய தீர்த்தம் ஹிருத்தாபநாசினி. தலவிருட்சம், வில்வமரம்.

    இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வில்லியனூர் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியனூர் திருக்காமீசுவரன் கோவில்.
    சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

    அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

    7 கன்னியர்கள் போரிட்டனர் :

    இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர்.

    இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

    ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

    தவக்கோலத்தில் தேவி :

    தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.



    வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள்.

    தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

    சூரன் வதம் :


    அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.

    வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.

    மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்.
    ×