என் மலர்

  ஆன்மிகம்

  திரிபுரம் எரித்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்
  X

  திரிபுரம் எரித்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது திருவதிகை திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில். இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.

  தல வரலாறு :

  தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

  வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

  மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான். பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

  வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

  அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

  அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார்.

  மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

  திரிபுரம் எரித்ததைத் தவிர, திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, அவர்தம் சகோதரி திலகவதியார் திருத்தொண்டாற்றியது, மனவாசகங்கடந்தார் என்னும் சிவபக்தர் அவதரித்தது என பல்வேறு நிகழ்வுகளின் களமாக திகழ்கிறது திருவதிகை திருத்தலம்.  ஆலய அமைப்பு :

  சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மூன்று பிரகாரங்களுடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் ஏழு நிலைகளுடனும், ஏழுகலசங்களுடனும், 108 கரண சிற்பங்களுடனும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராஜகோபுரம் தரிசிப்பவர்களை புல்லரிக்கச் செய்கிறது. ராஜகோபுரத்திற்கு முன்னதாகவும் பின்னதாகவும் இரு மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

  முன்னதாக உள்ள பதினாறு தூண்களுடன் கூடிய மண்டபம், திலகவதியாரின் வேண்டுதலின் பேரில் அவரது தம்பியான திருநாவுக்கரசரின் திருநீறு அளித்து சூலைநோய் நீக்கிய இடம் என்பதால் அது ‘திருநீற்று மண்டபம்’ எனப்படுகிறது. பின்னதாக உள்ள மண்டபம் ‘தீர்த்தவாரி மண்டபம்’. வைகாசி விசாகத்தன்று இறைவன் இம்மண்ட பத்தில் எழுந்தருளி சக்கர தீர்த்தத்தில் தீர்த்தவாரி கொடுக்கிறார். இம்மண்டபத்தின் இடது புறத்தில் விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட சக்கரதீர்த்தகுளமும், தீர்த்தகுளத்தின் வடகரையில் வசந்தமண்டபமும் அமைந்துள்ளது.

  இரண்டாம் பிரகாரத்தில் இருந்து கொடிமரத்து விநாயகர், பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட இரண்டாம் கோபுரம் வழியாக முதல் பிரகாரத்திற்குள் சென்றால், இடதுசுற்றில் அப்பர்பெருமான் உற்சவர் சன்னிதியும், தெற்கில் தலவிருட்சம், அறுபத்துமூன்று நாயன்மார்கள் சன்னிதி, திலகவதியார் சன்னிதி, சனீஸ்வரர், துர்கை மற்றும் அப்பர் பெருமானின் மூலவர் சன்னிதி ஆகியவை உள்ளன. தென்மேற்கில் சித்திவிநாயகரின் சன்னிதி, மேற்கில் பல்வேறு லிங்கங்கள், பள்ளியறை, வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதி அமைந்துள்ளன. வடகிழக்கில் கஜலட்சுமி வடக்கில் திருமாளப்பத்தி மண்டபம், யாகசாலை மண்டபம், வடமேற்கில் நவகிரகம், நடராசர் சன்னிதி மற்றும் சூரியர் பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன.

  கருவறைக் கோட்டத்தில் சுவாமிக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர், கோமுகம் அருகே துர்கை, தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.சண்டி கேஸ்வரர் சன்னிதி அருகே சிவன் தன்சூலத்தால் உருவாக்கிய சூலை தீர்த்தம் எனப்படும் கிணறு உள்ளது. இறைவன் உமையம்மையை இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகத்தின் அடிப்படையில் அம்பாள் ஸ்ரீபெரியநாயகி சுவாமிக்கு வலதாக பிரகாரத்தில் தனி சன்னிதியிலிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் சன்னிதியில் திருமால் பூசித்த லிங்கம் உள்ளது. இடதுபுறத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதி இடம்பெற்றுள்ளது.

  பிரகார தரிசனம் முடித்து அலங்கார மண்டபம் வழியாக உள்ளே செல்ல, உயர்ந்த அலங்கார மண்டபத்தின் முன்புறத்தில் இடப்பகுதியில் விநாயகரும், வலது பகுதியில் முருகக்கடவுளும் காட்சியளிக்கின்றனர். அலங்கார மண்டபத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடைப்பட்ட மண்டபத்தில் திரிபுரசம்ஹார மூர்த்தி, வில்லேந்திய திருக்கரத்தினராக, உமையொருபாகராக நின்ற திருக்கோலத்தில் (உற்சவர்) தெற்கு நோக்கியவாறு காட்சி தருகிறார். கருவறை அர்த்த மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகரும், சுவாமியை நோக்கிய நிலையில் நந்தியம்பெருமானும் வீற்றிருக்க, கருவறையில் மூலவர் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் 16 பட்டைகளைக் கொண்ட சோடசகலாலிங்கத் திருவுருவுடன் அருள்பாலிக்கிறார். கருவறையின் பின்புறம் அம்மையப்பர் இடம்பெற்றுள்ளார். சுவாமியின் கருவறை விமானம் எண்கோணத்துடன் சூடிய திருத்தேர்போல அமைக்கப்பெற்றுள்ளது. உச்சிப் பொழுதில் நிழல் தரையில் படுவதில்லை என கூறுகின்றனர்.

  ஆலய விழாக்கள் :

  சிவாலயங்களுக்கேயுரிய வழக்கமான உற்சவங்களைத் தவிர அப்பர் பெருமானுக்காக சித்திரை மாதத்தில் நடத்தப்படும் பத்து நாட்கள் உற்சவமும், வைகாசியில் பத்து நாட்கள் நடத்தப்படும் பிரம்மோற்சவமும், அதன்போது விசாகத்தில் நடத்தப்படும் தேர்திருவிழாவும் திரிபுரசம்ஹாரமும் இவ்வாலயத்தின் முக்கிய உற்சவ விழாக்களாகும். தினசரி ஆறுகால பூஜை நடைபெறும் இந்தக் கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  சென்னை, திருச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்தும், ரெயில் நிலையத்தில் இருந்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
  Next Story
  ×