என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டத்தில் உள்ள தன்வந்திரி கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று பார்க்கலாம்.
    தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும், அந்நோயைத் தீர்த்து நல முடன் வாழ வைக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    வயலார் கிராமத்தில் வசித்த தம்பான் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவர்களிடம் சென்று, பல சிகிச்சைகள் எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.

    அவர் ஒருநாள், வைக்கத்தில் உள்ள வைக்கத்து அப்பன் சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு வயிற்று வலி குறைந்தது. ஆனால், அவர் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன், அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துவிட்டது. எனவே அவர் அன்றிரவு கோவிலிலேயே தங்கிவிட்டார்.

    அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இந்தக் கோவிலில் இருக்கும் வரை உனக்கு வயிற்று வலி இருக்காது. நீ கோவிலை விட்டு வெளியேச் சென்றால் மீண்டும் உனக்கு வயிற்று வலி ஏற்படும். இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள கேளம் குளத்தில் மூழ்கினால், உனக்கு நீருக்கு அடியில் மூன்று சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை அதிகச் சக்தி வாய்ந்தது. எனவே அதனை குளத்திலேயே விட்டுவிடு. இரண்டாவது கிடைக்கும் சிலையை எடுத்துச் சென்று ஒருவருக்குத் தானமாகக் கொடுத்து விடு. மூன்றாவதாக எடுக்கும் சிலையை ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றி நிறுவி வழிபட்டால் உன் வயிற்று வலி நிரந்தரமாக நீங்கும்’ என்றார்.

    அவரும் சிவபெருமான் கனவில் சொன்னபடி, இரண்டாவதாகக் கிடைத்த தன்வந்திரி சிலையை வெள்ளூடு என்ற மனையைச் சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து வழிபாடு செய்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மண்மூசு என்பவரின் உதவியுடன் கோவில் ஒன்று கட்டி, அந்தக் கோவிலில் தன்வந்திரி சிலையை நிறுவினார்.

    அவருக்கு பிறகு வந்த தலைமுறையி னரிடையேக் கோவில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மண்மூசு குடும்பத்தினர் அந்தச் சிலையின் கையை உடைத்து எடுத்துச் சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ஓளச்ச என்ற இடத்தில் அதை நிறுவிக் கோவில் கட்டினர்.

    வெள்ளூடு நம்பூதிரியின் குடும்பத்தினர், தங்களிடமிருந்த சிலையின் உடைந்த கைக்குப் பதிலாக வெள்ளியில் கை ஒன்றைச் செய்து சிலையுடன் பொருத்தி, அந்தச் சிலையை மருத்தோர் வட்டத்தில் கோவில் ஒன்றைக் கட்டி நிறுவினர் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்கிறது.



    தன்வந்திரி பகவான் :

    இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த 24 தோற்றங்களில் பதினேழாவது தோற்றமாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான், வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கிப் பார்த்த நிலையில் இருக்கிறார். கருவறையின் இடது புறம் சிவபெருமான் சன்னிதியும், வலதுபுறம் கணபதி, சாஸ்தா, பகவதி சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆலயமானது அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவின் சிறப்பு பெற்ற ஓணத்திருநாள் மற்றும் பிற திருவோண நட்சத்திர நாட்களிலும் இங்கு பால் பாயசம் வழிபாடு நடக்கிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வாவு பூஜை மற்றும் சம்கிரம பூஜை ஆகியவை நடத்தப்படுகின்றன. நவராத்திரி, ராமர் பட்டாபிஷேகம் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள்

    * குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் சந்தான கோபாலன் எனும் கதகளி வழிபாடு நடத்தினால் அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    * 28 வகையான மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவைகளைத் தயிரில் கலந்து தயாரிக்கப்படும் முக்குடி எனும் மருந்தினை இக் கோவிலின் தன்வந்திரி சிலையின் கையிலுள்ள குடத்தில் வைத்தி ருந்து எடுத்துத் தருகின்றனர். இதனைப் பெற்றுப் பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். (இதனைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்)

    * விழாக் காலங்களில், கயற்றேல் வானம் என்ற சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. இப்பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு ஆஸ்துமா, வாத நோய்கள் போன்றவை குண மடையும்.

    * அமாவாசை நாட்களில் நடக்கும் முன்னோர் வழிபாடு (பிதுர்காரியம்) நிகழ்வில் படைக்கப்படும் தாள்கறி எனும் உணவைப் பெற்றுச் சாப்பிடுவதால் நோய்கள் தீரும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    அமைவிடம் :

    பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவும் இத்தலம் கேரள மாநிலம் சேர்த்தலாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலப்புழாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இரு நகரங்களில் இருந்தும் இக்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனையில் உள்ளது கயிலாசநாத சுவாமி கோவில்.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை. இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர். இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம்.

    இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலத்தின் சிறப்பை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன், ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள், மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும், அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.

    அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன், தனது காவலர்களை அனுப்பி ‘உண்மை என்ன?’ என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான். மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள், அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.

    இறையுணர்வு மிக்க தனது பசு, பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன், வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.

    பசுபால் சொரிந்து, வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான். அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான். பசுவந்து நீராடிய குளம் ‘சிவ தீர்த்தம்’ என்றும், ‘கோசிருங்கவாவி’ என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப்பெற்றுள்ளது. இதனால் இந்த ஆலயம் ‘சோமஸ்கந்தர் தலம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர் களுக்கும்), சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலில் சுவாமி, சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா ஆகியவை முக்கிய திரு விழாக்களாகும். இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    கண் தந்த கடவுள் :

    எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில், 51 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பா நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். நன்றாக இருந்த அவரது இரு கண்களும் திடீரென்று ஒரு நாள் பார்வையை இழந்து விட்டன. அவர், இத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் திருக்கோவிலுக்கு வந்து, தினமும் தீர்த்தக்குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். தொடர்ந்து 41 நாட்கள் மண்சோறு சாப்பிட்டு விரதம் இருந்தார்.

    என்ன ஆச்சரியம்! 42-வது நாள் அவரது இரு கண்களிலும், பார்வைத் திரும்ப வரப்பெற்றது. இந்த நிகழ்ச்சியினால் இத்திருத்தலத்து இறைவன் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.
    பலவிதமான நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது ஸ்தல மலை எனும் ஊத்துமலை ஸ்ரீபாலசுப்ரமணியர் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மாங்கனிநகர் எனப் பெயர் பெற்ற சேலம் நகரத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியான திருச்சி ரோட்டிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் அற்புதமான ஆன்மிகத் தலம் தான் ஸ்தல மலை எனும் ஊத்துமலை.

    கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலசுப்ரமணியரின் கருணை ததும்பும் அழகுத் திருமுகம், அங்கு வரும் அனைத்துப் பக்தர்களின் துயரங்களையும் அடியோடு நீக்கி நிம்மதியைத் தரும். அமைதியான சூழலில், பசுமையான மரங்கள் சாமரம் வீச, சித்தர் பெருமான்களின் சுவாசம் நிறைந்த ஊத்துமலையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது, அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.

    அகிலமெங்கும் ஆட்சி புரிந்து சகல சுபீட்சத்தையும் வாரி வழங்குகின்றன அம்மனின் அம்சமான ஸ்ரீசக்கரம். முனிவர்களில் மாமுனிவரான அகத்தியரால், ஊத்துமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம், ஸ்ரீசக்கர தேவியாக இருந்து அருள்பாலிக்கிறது.

    புராணக் கதையின்படி (5 ஆயிரம் வருடங்களுக்கு முன்) தாழ்ந்திருந்த தென்னாட்டை உயர்த்தும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளையை ஏற்று, அகத்தியர் பொதிகை மலை நோக்கி விஜயம் செய்தார். அப்போது, அமைதி கொஞ்சும் இவ்வனத்தைக் கண்டு, இங்கேயே ஆசிரமம் அமைத்து எம்பெருமானை வழிபட்டார். அகத்தியர் மட்டுமின்றி சித்தரில் சிறந்தவரான போகர், புலிப்பாணி, கபிலர், ரேணுகர் ஆகிய பஞ்சாச்சாரியார்கள் (ஐவர்), இங்குள்ள குகையில் அமர்ந்து தவம் செய்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் சிறப்பு சொல்லில் அடங்காது.

    இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், சகல தோஷங்களையும் போக்கித் தனம் தரும், சக்ரமஹா காலபைரவரின் பிரமாண்ட திரு உருவம். ஸ்ரீசக்கரம் அமைந்திருக்கும் ரத்தினக் கோட்டையின் ஆவரண தேவதையாக.. அதாவது காக்கும் தெய்வமாக அமைந் திருக்கிறார் இந்த கால பைரவர்.

    அகத்தியரால் பாறையில் செங்குத்து நிலையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் சர்வரோக ஹா சக்கரம் ஆக அமைந்துள்ளது. அதாவது மனிதனின் சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட மகா சக்கரம் இது. முறைப் படி இச்சக்கரத்தைப் பூஜித்து வருபவர்களின் வாழ்வில் வரும் இன்னல்கள் தீர்த்து சகல சவு பாக்கியம் கிடைக்கும். அகத்தியருடன் இணைந்து அவருடைய மனைவி லோபா முத்ரா மாதாவும் இங்கு வழிபாடு செய்துள்ளார்.

    அகத்தியர் பெருமான் ஸ்ரீவித்யா ரகசியங்களை சித்தர்களுக்கு உபதேசித்த அற்புத தலம் இது. முக்கியமாக முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் ‘ககண மார்க்கப் பிரயோகம்’ எனும் வான் வெளியில் சஞ்சரிக்கும் அற்புதமான மந்திரத்தை உபதேசித்ததால் இன்றும் நம்மிடையே கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வலம் வந்து நமக்கு நன்மைகளை செய்து வருவது இத்தலத்தின் சிறப்பு.

    ஸ்ரீசக்கரம் உள்ள பாறையை அடுத்துள்ள குகையில் அகத்தியர் மற்றும் போகர் முதலான சித்தர்கள் அமர்ந்து தவம் செய்தனர். இங்கு அவர்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்று வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. மேலும் சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற பலவிதமான நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.

    இங்கு அமைந்துள்ள காலபைரவர் சன்னிதி, சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது. கால பைரவரின் சிலை தமிழ் நாட்டிலேயே இங்குதான் பெரியதாக உள்ளது. எட்டுக்கைகளுடன், அமைதி தவழும் முகத்துடன் காலபைரவர் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வேண்டித் தொழுதால் அவர் அருளைப் பெறலாம். 

    காலபைரவருக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கும் சிறப்பு கலச பூஜை, வலம்புரி சங்கு அபிஷேகம், ஆகர்ஷண பைரவர் பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, குருஜி பூஜை, லட்சார்ச்சனை, புஷ்ப அபிஷேகம், 108 கலச பூஜை, ருத்ராட்ச பூஜை ஆகியவற்றில் கலந்து கொண்டு, தோஷம் நீங்கி சுபீட்சம் பெறலாம்.

    ஆலய தல விருட்சங்களாக நாவல் மரமும், அரசமரமும், மருதமரமும் உள்ளன.
    பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது. பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது. இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜை களும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

    தமிழகத்து சிவாச்சாரியர் களும் (பட்டர்கள்) கர்நாட கத்தை சேர்ந்து துளு போற்றி மார்களும், கேரளத்து மலையாள நம்பூதிரிமார்களும் இந்த கோவிலில் பூசாரிகளாக உள்ள னர். கொன்றையடி திருக் கோவிலின் தந்திரியாக பட்டர் எனப்படும் நம்பூதிரிகளும், உற்சவமூர்த்திகளுக்கு பூஜை களும், உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்ய திருக் கோவி லுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகரின் ஆட்களும் இருந்து வருகின் றன.

    தெக்கிடம் பெருமாள் என அழைக்கப்படும் விஷ்ணுவின் திருவுருவமானது கடுச்சரை யோகதால் (மருந்து) உருவாக் கப்பட்டு அவர் எப்போதும் அலங்காரப் பிரியராகவும், சிவன் அபிஷேகப்பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். விஷ்ணுவாகிய பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. இங்குள்ள உற்சவ மூர்த்தி களுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்திரன் வந்து அர்த்தசாம பூஜை (இந்திரன்பூஜை) செய்வ தாக ஐதீகம் உள்ள இந்த கோவிலில் இரு பூசாரிகள் (மேல்சாந்தி) மாறி, மாறி இரண்டு சன்னதிகளிலுமாக பூஜை செய்து வருகின்றனர்.

    இரண்டு சன்னதிகளில் (பெருமாள், தாணுமாலயன்), புதிதாக பூஜைக்கு வருபவர் கள் மூலஸ்தானத்தின் முன் நின்று “அகம் கண்டதை புறம் கூற மாட்டேன்” என்ற சத்திய பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்த பின்பு தான் கருவறைகளில் (மூலம் தானம்) பூஜை செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியை நடத்தி மந்திரம் உபதேசம் செய்து கொடுக்கும் அதிகாரம் மற்றும் அனுமதி திருக்கோவி லுடைய வட்டப்பள்ளி ஸ்தானிகருக்கு இன்றும் இருந்து வருகிறது. இது கால காலமாய் நடை பெற்று வரு கிறது.

    விழா காலங்களில் இரவு இறைவன் வீதி உலா முடிந்து திருக்கோவிலினுள் வந்த பிறகே தீபாராதனை, பூஜைகள், ஸ்ரீபலி போன்றவை நடைபெறுகிறது. வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத ஆகம விதி பல காலமாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாணு மாலயன் சன்னதியில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வைபவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். கேரளாவில் முதல்-மந்திரியாக இருந்த பட்டம் தாணு பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐ.சி.எஸ்.பதவி வகித்த தாணு அய்யர் போன்றவர்களுக்கு கூட இங்கு பெயர் சூட்டுதல் வைபவம் நடந்ததாக அறிய முடிகிறது. இது தற்போதும் நடைபெற்று வருகிறது, அதனை திருக்கோவிலுடைய ஸ்தானிகரே செய்து வருகிறார்.

    மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் காட்சி அளிக்கும் அற்புத கோவில்

    தமிழகத்தின் தென்கோடி யில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியில் பழையாற்றின் கரை அருகே இயற்கை எழில்சூழ, நெடிதுயர்த்த கோபுரக் காட்சியுடன் தாணுமாலயன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது.

    தாணு என்பது சிவபெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரமனையும் குறிப்பிடுவது ஆகும். இந்த ஸ்தலத்திற்கு வீரகேரள சதுர்வேதிமங்கலம் ராஜராஜ வளநாட்டுத் திருச்சி வந்திபுரம், நாஞ்சி நாட்டு சிவந்திரம் என்ற பெயர்களும் பெருமை தருவதாக உள்ளது. இந்திரன் தனது சாப விமோசனம் பெற்றதும் இந்த ஸ்தலத்தில் தான்.

    அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

    விமோசனம்

    இந்திரன் தான் அடைந்த சாப விமோசனம் பெற்றதினால், அவனே அர்த்த சாம பூஜை செய்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டதும் 134½ அடி உயரமுள்ளதாகும். கோபுரத் தில் உள்ள 7 நிலைகளிலும் பச்சிலை மருந்துகளால் ஸ்தல புராணமும், கோவில் ஸ்தல வரலாறும் வரையப்பட்டுள்ளது. கோவிலுக்குள் ஏராளமான கலை அழகு நிறைந்த சிற்பங்கள், தூண்கள் கல் மண்டபங்கள், இசைத் தூண்கள் உள்ளன.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த செண்பகராமன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், குலசேகர மண்டபம், வசந்த மண்டபம், அலங்கார மண்டபம் 12 ராசிகளையும் பூமியைப் பார்த்து தலைகீழாக அமைந் துள்ள நவக்கிரக மண்டபம், சித்திரசபை ஆகியவைகள் கலைச்சிறப்பு மிக்கவையாகும். ஒரே கல்லில் 18 அடி உயரத்தில் சீதாராமன் சன்னதிக்கு எதிரே கம்பீரமாக விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ராமபக்த அனுமன், வேறு எங்கும் காண முடியாத கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் உள்ள நூற்றுக்கணக்கான கல் வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

    தலைமையிடம்

    குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் முதன் மைக்கோவிலாக சுசீந்திரம் கோவில் சிறப்பு பெற்று வருகிறது. நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வரும்பொழுது தேவசம் தலைமையிடம் மட்டும் சுசீந்திரத்தில் இயங்கி வருவதிலிருந்து தாணுமாலயன் கோவிலின் பெருமையை உணர முடியும். கி.பி.1410-ம் ஆண்டில் சேர மன்னர் “ ஸ்ரீஉதயமார்த் தாண்ட வர்மா” வினால் அலங்கார மண்டபமும், இசைத் தூண்களும் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. இந்த கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்த பின்பு முன்புபோல் ஆகம விதிப்படி பூஜைகளும் திருவிழாக்களும் நடை பெற்று வருகின்றன.

    தேரோட்ட தத்துவம்

    புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசூயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்து அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் “பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும்” என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

    அதிலும் பன்னிரண்டு படா கையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடைகள் உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.
    சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ளது அருள்மிகு கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் : கொற்றவாளீஸ்வரர்
    அம்மன்/தாயார் : நெல்லையம்மன்
    பழமை : 500 வருடங்களுக்குள்
    ஊர் : கோவிலூர்
    மாவட்டம் : சிவகங்கை
    மாநிலம : தமிழ்நாடு 

    பிரார்த்தனை, நேர்த்திக்கடன்: 

    வேலைக்கோ, படிக்கவோ செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 

    தலபெருமை: 

    காவல் அம்பிகை: சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லிøயக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள். 

    அங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது. நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள்,பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.

    சிறப்பம்சம்: கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது. கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், கோவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.

    தல வரலாறு: 

    திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர்புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார். 

    காட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்த போது, அங்கு ஒரு அந்தணனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த அந்தணர், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன்வந்தான். அப்போது புலியும், அந்தணனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது. 

    மன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர். மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனேனஸ்வரர் என்றும் பெயருண்டு. 

    சிறப்பம்சம்: 

    அதிசயத்தின் அடிப்படையில்: மகாமண்டபத்தில் ஆடல்வல்லான் சிலை அமைந்திருப்பது சிறப்பு.

    போன்: 

    +91 94892 78792, 94424 39473, 90435 67074. 
    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள டி.வி.எஸ். நகரில் உள்ளது இந்த சிவா விஷ்ணு ஆலயம். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி அருகே உள்ள டி.வி.எஸ் நகரில் உள்ளது, சிவா- விஷ்ணு ஆலயம். ஆலய முகப்பு சாலையிலேயே உள்ளது. அழகான வளைவுடன் கூடிய முகப்பைத் தாண்டியதும், பரந்து விரிந்த ஆலய வளாகம் காணப்படுகிறது. ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு :

    வளாகத்தில் வலது புறம் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி இருக்கிறது. இங்கு நவக்கிரக நாயகர்கள் அனைவரும், தங்கள் துணைவியருடன் அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும். இடதுபுறம் ஆஞ்சநேயர் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் மூன்று சன்னிதிகள் கருவறையுடன் கூடியதாக உள்ளது. முதல் சன்னிதியில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஐந்து முகங்களுடன் அருள் பாலிக்கும் இந்த விநாயகரை வழிபட்டால், கல்வி, ஞானம், செல்வம், ஆரோக்கியம், நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    அடுத்து நடுநாயகமாய் சுந்தரேஸ்வரர் சன்னிதி உள்ளது. லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் இந்த இறைவனின் திருமேனி சுயம்பு என்றும், இன்ன பொருளால் உருவானது என்று சொல்ல இயலாது என்றும் கூறும் நிர்வாகத்தினர், ‘இறைவனின் திருமேனியைத் தொடும்போது ஜீரோ டிகிரிக்கும் கீழ்பட்ட ஜில்லென்ற ஓர் உணர்வு உண்டாவதை தவிர்க்க இயலாது’ என்கின்றனர்.

    அடுத்துள்ள சன்னிதியில் முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இந்த மூன்று சன்னிதிகள் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளன. பஞ்சமுக விநாயகரின் கருவறை முகப்பில் சரஸ்வதியும், சுந்தரேஸ்வரர் சன்னிதி முகப்பில் ஆதி விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரரும், முருகப்பெருமான் சன்னிதி முகப்பில் ஐஸ்வரிய லட்சுமியும் வீற்றிருக்கின்றனர்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி மீனாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற திருக்கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப நுழைவுவாசலில் வலதுபுறம் கால பைரவர் அருள்பாலிக் கிறார்.

    மகா விஷ்ணு ஆலயம் :

    அடுத்து மகா விஷ்ணுவின் தனி ஆலயம் உள்ளது. மூலவராய் மகாவிஷ்ணு நின்ற திருக்கோலத்தில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்க மகாமண்டபத்தின் தென்புறம் மகாலட்சுமி வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.


    சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன்

    பெருமாளின் தேவக்கோட்டத்தில் லட்சுமிநரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஏகாதசி திருவிழாவும் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பெருமாள் சன்னிதியின் முன்புறம் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று இறைவன், இறைவி ஆலயத்தைச் சுற்றி வலம் வருவது வழக்கம்.

    சித்திரையில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் வெகு அமர்க்களமாக நடைபெறுகிறது. சிவராத்திரி, பொங்கல், தீபாவளி, மாதப்பிறப்பு நாட்களில் இறைவன்- இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சரஸ்வதி பூஜையின் போது, கொலு அலங்காரம் மிக சிறப்பாக நடைபெறுவதுடன் ஏராளமான பேர் அதைக் கண்டு தரிசிக்க வருவதுண்டு. மார்கழி மாதம் இறைவன்-இறைவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கும், சங்கடகார சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது சிறப்பு.

    தைப்பூசத்தின் போது முருகப் பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வர சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து வருவர். அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

    கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். மகா சிவராத்திரியின் போது நடைபெறும் நான்கு கால பூஜையில் மூன்றாவது கால பூஜை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜை நடந்தவுடன் பக்தர்களுக்கு பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை என அன்னதானம் வழங்கப்படுகிறது.

    துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை ஏராளமான பெண்கள் சூழ நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று இறைவி மீனாட்சிக்கு பல ஆயிரம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம் நடைபெறும். அன்னையை தரிசிக்க வரும் பெண்களுக்கு அந்த வளையலையே பிரசாதமாக தருகின்றனர்.

    ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் குத்துவிளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர்.

    இந்த ஆலயத்தை அடுத்து விழா மண்டபம் உள்ளது. திருமணம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி போன்ற மங்கள விழாக்கள் இந்த மண்டபத்தில் நடைபெறுகின்றன. பெயரளவுக்கு மிக்குறைந்த கட்டணமே இதற்கு பெற்றுக்கொள்கின்றனர்.

    ஆலய வளாகத்தின் வலதுபுறம் நாகம்மா சன்னிதி உள்ளது. இங்கு ராகு கால பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.


    மகாவிஷ்ணு, மகாலட்சுமி

    சாய் பாபாவுக்கான தனிக்கோவிலும் இங்கு உள்ளது. தினசரி நான்கு தடவை ஆரத்தி எடுப்பதுடன் வரும் பக்தர்களுக்கு விதம் விதமாய் பிரசாதம் தருகின்றனர். வியாழக்கிழமை நடைபெறும் அன்னதானத்தில் 200 பேர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

    இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் கைகூடும் என பக்தர்கள் உறுதியாகக் நம்புவது உண்மையே.

    அருள் தரும் ஆஞ்சநேயர் :

    இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய ஒரு புதுமையான முறை கடைப் பிடிக்கப்படுகிறது.

    ஆஞ்சநேயரிடம் வேண்டுவோர் முழு மட்டையுடன் கூடிய தேங்காயுடன், தங்களது வேண்டுகோளையும் ஒரு சீட்டில் எழுதி ஒரு சிவப்பு நிற துணியில் அதைக் கட்டி, ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பின்னர் அந்த செந்நிற துணி முடிப்பை, சன்னிதியின் இடதுபுறம் உள்ள அதற்கான விட்டத்தில் கட்டுகின்றனர். 90 நாட்களில் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம். பின் அவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி அர்ச்சனை செய்து மகிழ்வோடு இல்லம் திரும்புகின்றனர்.

    அனுமன் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. அன்று ஆஞ்சநேயரை வெண்ணெயால் அலங்காரம் செய்து, 1008 வடை மாலை, 1008 ஜாங்கிரி மாலை சாத்துகின்றனர். இந்தக் காட்சியை தரிசிக்கும் நம் மேனி சிலிர்ப்பது நிஜமே.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள டி.வி.எஸ். நகரில் உள்ளது இந்த சிவா விஷ்ணு ஆலயம். சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள வீரமாங்குடியில் உள்ளது ஸ்ரீசெல்லியம்மன் கோவில்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. இங்கே வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், காட்சி தருகிறாள் ஸ்ரீசெல்லியம்மன். 

    தஞ்சகாசுரனின் மகன்களான தண்டகன், தாரகன், தஞ்சையன் ஆகிய மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத தேவர்கள் ஓடி வந்து, கோடியம்மனிடம் முறையிட்டனர். தன்னுடைய ஆறு சகோதரிகளுடன் கடும் உக்கிரத்துடன் புறப்பட்டுச் சென்ற கோடியம்மன், வெண்ணாற்றங்கரையில் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தாள். 

    பிறகு, வெண்ணாற்றாங்கரையிலேயே கோயில் கொண்டாள் ஸ்ரீகோடியம்மன். அவளுடன் அவதரித்த ஆறு சகோதரிகளில் ஐவர், அந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் குடியமர்ந்து, காவல் காத்தனர். செல்லியம்மன் மட்டும் ”எனக்கென்று ஒரு நாடு. எனக்கென்று மக்கள் என தேசத்துக்கு வடக்குப் பகுதியில் குடிகொள்ளப் போகிறேன்” என்றாள். அப்படியே குடிகொண்டவள், இன்றளவும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள். 

    தஞ்சகாசுரன் அட்டூழியம் செய்த பகுதி, தஞ்சை தேசம். தரணி போற்றும் தஞ்சை மாவட்டத்தின் வடக்கே வீரமாங்குடி எனும் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசெல்லியம்மன். 

    ஸ்ரீசெல்லியம்மனை வணங்கி பதினாறு செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வோம்!

    சந்திரனை தலையில் சூடியபடி அருள்பாலிக்கும் சிவபெருமான் மூலவராய் கருணை பொழியும் இந்த ஆலயம் முசிறியில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    ஒரு முறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். சந்திரன் தனது சாபம் நீங்க முசிறியில் அருள்பாலிக்கும் சந்திரமவுலீஸ்வரரை ஆராதித்து, தனது சாபம் நீங்கப் பெற்றார். சந்திரனுக்கு சாப விமோசனம் தந்ததால் இத்தல இறைவன் ‘சந்திர மவுலீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அத்துடன் மூன்றாம் பிறை சந்திரனை தனது தலையிலும் சூடியுள்ளார் இத்தல இறைவன்.

    சந்திரனை தலையில் சூடியபடி அருள் பாலிக்கும் சிவபெருமான் மூலவராய் கருணை பொழியும் இந்த ஆலயம் முசிறியில் உள்ளது. இறைவனின் திருநாமம் சந்திர மவுலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பூரவல்லி.

    ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலு மண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகா மண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்க பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாகவும் அர்ச்சகர் கூறுகிறார். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    ஆலய திருச்சுற்றில் நால்வர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்குப் பிரகாரத்தில் இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அன்னை மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் கீழ் திசை நோக்கி காட்சி தருகிறாள்.

    மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த நட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை உள்ளது. தாமரைப் பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். பின், அந்த அகல் விளக்கை அன்னை சன்னிதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்ல பரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடி பூரம், ஆவணி மூலம், சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, தை பூசம், மாசி மகம் போன்ற நாட்களில் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.

    ஐப்பசி பவுர்ணமியில் ஏராளமான பக்தர்கள் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண இங்கே வருகை தருகின்றனர்.

    800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இத்தல இறைவன் - இறைவியை ஆராதிப்பதால் கடன் நிவாரணம் பெறலாம் எனவும், புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், தொழிலில் அபிவிருத்தி அடையலாம் எனவும் பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள்.

    திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முசிறி என்ற இந்த தலம்.
    பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டு தாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல் தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.

    சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் பணி நடந்தது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்கள் அமைய செய்து முடித்தனர். ஆனால், அதன் வலது மேல்கரத்தில் ஒரு விரலில் பின்னம் ஏற்பட்டுவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் மனம் வருந்தினர். அப்போது அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?’ என்றது.

    மேலும் ‘என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்றாள் தேவி.

    தான் கண்ட கனவை, அர்ச்சகர் ஊர் மக்களிடம் கூறினார். கனவில் சொன்னபடியே ஆட்டை நடக்க விட்டனர். அது ஓரிடத்தில் அமர்ந்த இடத்தில் தோன்றியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரமாண்ட கற்சிலை கிடைத்தது.

    அந்த சிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல் கரத்தில் ஒரு விரல் பின்னமடைந்து இருந்தது. ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.

    அன்று இரவு மீண்டும் அர்ச்சகர் கனவில் வந்த அன்னை, ‘உங்கள் வீட்டு குழந்தைக்கு ஊனம் என்றால், தூக்கி வீசியெறிந்து விடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள். இந்தக் கனவு அர்ச்சகருக்கு மட்டுமல்ல.. அந்த ஊரைச் சேர்ந்த அனைவருக்குமே வந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    பிறகென்ன முழுமனதோடு அன்னையின் பிரமாண்ட வடிவை நிறுவி வழிபடத் தொடங்கினர். அன்னையும் ஊர் மக்களுக்கு, காவல் தெய்வமாய் விளங்கி வருகின்றாள்.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் வடக்கு நோக்கிய வாசலைக் கொண்டு அமைந்துள்ளது. எளிய முன்முகப்பு மண்டபத்தின் வலதுபுறம், கருப்பசாமி மற் றும் விநாயகர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாயிலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவார பாலகியர்கள் காவல் புரிகின்றனர்.

    கருவறையின் இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான தெய்வ சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. முதல் மரியாதை இவர்களுக்கே. இதைக் கடந்ததும், கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக, அருள் காட்சி வழங்குகின்றாள்.



    அன்னை பிரம்மாண்ட வடிவில் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். வலதுபுறம் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் கொண்டும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரதம் தாங்கியும் காட்சி தருகின்றாள்.

    வலது காலை மடக்கி, இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் முகத்தில் சிறிய கோரைப் பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது, அபூர்வக் கோலமாகும்.

    இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, வீரமாகாளி திகழ்கிறாள்.

    வரம் வேண்டுவோர் அம்மனை நேரில் வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமண நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

    இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகின்றாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாக அமைகிறது. குழந்தை வரம் நிறைவேறியவர்கள் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயத்தைத் தரிசனம் செய்யலாம்.

    ஆடி மாதம் முழுவதுமே ஆலயத்திற்கு பிரம்மோற்சம்தான். 30 நாட்களும் சுற்றியுள்ள 16 கிராமத்தின் அனைத்து சமுதாயத்தினருக்கும், அரசுத்துறை ஊழியர் களுக்கும் தலா ஒவ்வொரு நாள் என, மாதம் முழுவதும் கச்சேரி, வாண வேடிக்கை என ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். இது தவிர, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அம்மனுக்கு உகந்த நாட்களாக போற்றப்படுகிறது.

    அமைவிடம் :

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும், இவ்வாலயம் அமைந்துள்ளது.
    திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ளது தென்திருவண்ணாமலை. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வடஇந்தியாவில் காசி போல, தென் இந்தியாவில் தென்காசி திருத்தலம் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. அதேபோல் வடக்கே திருப்பதி போல், தெற்கே தென்திருப்பதி என்ற புகழ், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலுக்கு உண்டு. அதுபோல் வடக்கே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் போன்று, தெற்கே ஏதேனும் கோவில் இருக்கிறதா? என்றால் இருக்கிறது. அந்த கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப்புதூர் என்னும் ஊரில் இருக்கிறது என்பது பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

    அப்படிப்பட்ட ஒரு கோவிலைப்பற்றி இங்கே நாம் பார்ப்போம்!.

    திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் வன்னிக்கோனேந்தல் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சரியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் மருக்காலங்குளம் விலக்கு என்ற இடம் உள்ளது. இந்த மருக்காலங்குளம் சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அண்ணாமலைப்புதூர் என்ற ஊரில் இந்த அக்னி ஸ்தலம் அமைந்துள்ளது. இங்குதான் அண்ணாமலையார் ஆலயம் இருக்கிறது.

    இந்த ஆலயத்தை தென்திருவண்ணாமலை என்று அழைப்பதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உண்டு. இந்த கோவில் அமைந்து உள்ள பகுதிக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஒரு சித்தர் வந்து உள்ளார். அவரது பெயர் பெரியசாமி. அவரது சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் தனது தலையில் துளசி மாலையை “சும்மாடு'' போல் மடக்கி கட்டிக்கொள்வார். அதற்குள் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி எரிய விடுவார்.

    அவரது இந்த செயலை ஊரே அதிசயமாக பார்த்தது. வெறும் தலையில் ஒரு சாமியார் தீபம் எரிய விடுகிறார் என்பது அந் நாளில் அனைவரையும் அதிசயம் கொள்ள செய்தது. அவர் சுற்றித்திரிந்த பனவடலிசத்திரம் பகுதியில் ஒரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்ததால் அவர்களால் இந்த சித்தர் விரட்டப்பட்டு அண்ணாமலைப்புதூர் பகுதிக்கு வந்து உள்ளார். அப்போது அந்த பகுதி ஒரு ஊராக இருக்கவில்லை. மனித நடமாட்டமே இல்லாத காடாக இருந்து உள்ளது.

    சித்தர் பெரியசாமி இந்த இடத்திற்கு வந்தவுடன், இந்த பகுதி திருவண்ணாமலை போன்று உள்ளதே என்று ஆச்சரியம் அடைந்து அங்கேயே அண்ணாமலையாருக்கு சிறிய கோவில் ஒன்றை கட்டி வழிபட்டு வந்தார். அங்கே அவர் வழிபட்ட ஐம்பொன்னாலான அண்ணாமலையார் சிலை இன்னமும் அந்த கோவில் கர்ப்பகிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராக கல்லால் ஆன சிவலிங்கம் உள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ளதுபோலவே இங்கும் ஒரு பெரிய மலை உள்ளது. அந்த மலையானது அங்கே(திருவண்ணாமலையில்) சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் அமைந்து உள்ளது. இந்த மலையானது இங்கே(அண்ணாமலைபுதூரில்) சிவனின் முன்புறத்தில் கிழக்கு திசையில் அமைந்து உள்ளது. இங்குள்ள மலை மீது சப்தகன்னிமார் கோவிலும் உள்ளது. அங்கே இருப்பதைபோலவே இங்கேயும் தெப்பக்குளம் இருக்கிறது.

    இப்படி இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் அண்ணாமலையாருக்கு திருக்கோவிலை உருவாக்கிய சித்தர் பெரியசாமி ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் மலைமீது தீபம் எரிய விட்டார். திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப்போன்று இந்த பகுதியிலும் தீபம் எரிகின்றதே என்று அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த மலையடிவாரத்தை நோக்கி மறுநாள் பகல் பொழுதில் வந்து பார்த்தால் சித்தர் பெரியசாமியோ தனது தலையில் தீபத்தை எரியவிட்டு தவக்கோலத்தில் இருப்பார்.

    அதைப்பார்த்து அதிசயித்த மக்கள் சித்தர் பெரியசாமியை வழிபட தொடங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக கோவிலை சுற்றி குடியேறவும் தொடங்கினார்கள். திருக்கார்த்திகை நாள் அன்று தனது தலையில் தீபம் ஏந்தியவாறு சித்தர், அந்த தீபத்துடன் வீடு, வீடாக சென்று அருளாசியும் வழங்குவார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் அவரது தலையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவரது தேகம் எல்லாம் வழிந்தோடும். ஆனாலும் அவருக்கு ஒன்றும் செய்யாது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

    அவரை வழிபடுவதற்காக வந்த மக்கள் அவருக்கு காணிக்கையாக நவதானியங்களை வழங்கினார்கள். அவற்றை சித்தர் பெரிய “குலுக்கைகளில்'' சேமித்து வைத்திருப்பார். அதை ஒரு குடும்பத்தினர் திருட முயன்றபோது சாமியார் “நான் சுமக்கிற நெருப்பை நீ சுமப்பாய்'' என்று சாபம் கொடுத்து விட்டார். அந்த குடும்பத்தினர் வழிவழியாக இன்றும் தங்கள் தலையில் தீபம் ஏந்தி கார்த்திகை தினத்தின் மறுநாள் வீதி உலா வருகின்றனர்.

    பின்னாட்களில் ஜீவசமாதி அடைந்த பெரியசாமி சித்தரின் சமாதி, கோவிலை ஒட்டியவாறே அமைந்து உள்ளது. இக்கோவில், மிகுந்த அருளாட்சி நிறைந்த கோவிலாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த பகுதி மக்கள் மிகுந்த ஒற்றுமையாக கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபமானது பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்த்தாலும் திருவண்ணாமலையில் உள்ள மலையில் தீபம் எரிவதைப்போன்று சுடர்விட்டு பிரகாசிப்பதை பார்க்க முடியும்.

    அதேபோல் தலையில் தீபம் சுமக்கும் வைபவமும் இங்கு ஆண்டு தோறும் நடக்கிறது. இந்த திருக்கோவிலுக்கென்று ஒரு சிறிய தேரும் இருக்கிறது. திருக்கார்த்திகை அன்று நள்ளிரவில் இந்த தேர் பவனி நடக்கிறது.

    திருநெல்வேலியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து பனவடலிசத்திரம் சென்றால் அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம்.
    மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ளது சனி சிங்கனாப்பூர் கோவில். இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சனி சிங்கனாப்பூர்.. மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம் தான் இது. இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.

    அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத கிராம மக்கள் அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு கிராம தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த கிராமத்தில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில் தான் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது.

    சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40,000 பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுகிறார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    செல்லும் வழி :

    சீரடி நகரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், அகமது நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கி.மீ. தொலைவிலும், பூனாவில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கி.மீ.தொலைவில் உள்ளது.
    மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.
    மணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.

    விரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர் ஆனதாக கூறப்படுகிறது. விராலூரை வைத்தே விராலிமலை பெயர் ஏற்பட்டது. இவ்வூரின் தொன்மையைக் குறிக்கிறது.

    கி.பி. 9-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களும், திருமண உறவு கொண்டு வாழ்ந்த வேளிர்களும், விராலூரின் அருகேயுள்ள கொடும்பாளூரில் இருந்து இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயன். இவர் வழி வந்த அழகிய மணவாளதேவன், குமாரவாடி ஜமீன் லெக்கம நாயக்கர், மருங்காபுரி ஜமீன், மதுரை நாயக்கர், குளத்தூர் நமன தொண்டைமான், புதுக்கோட்டை தொண்டைமான் காலங்களிலும் இப்பகுதி மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டு வந்தது. என்றாலும், விராலூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயமும் போற்றி பராமரிக்கப்பட்டு வந்தது.

    தலவரலாறு :

    பழங்காலத்தில் காஞ்சீ புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக 27 அந்தணர்கள் பயணமாகினர். இவர்களால் 26 பேர் சைவ அந்தணர்கள். ஒருவர் மட்டும் வைணவர்.

    நடைப்பயணமாக வந்தவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த வனப்பகுதியாக இருந்த விராலூர் திருத்தலம் வந்தனர். அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறினர். மறுநாள் காலை அனைவரும் ராமேஸ்வரம் புறப்பட்டபோது, வைணவ அந்தணரைக் காணவில்லை. அவர் எங்கே என்று அனைவரும் தேடியபோது, அங்கே ஓர் அசரீரி ஒலித்தது.

    ‘உங்களுடன் வந்த திருமால் நான், எனக்கு இந்த தலமும், இயற்கை வளமும் பிடித்துப் போனதால், நான் இங்கேயே தங்கிட விரும்புகிறேன்’ என்று கூறியது. இதனால் மனம் மாறிய 26 அந்தணர்களும், அதே இடத்தில் ஊரின் மேற்குப் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

    இச்செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதியை ஆண்ட மன்னன் ஆலயம் எழுப்ப உதவிபுரிந்தான். அத்துடன் அந்தணர்களுக்கு நிலதானம் வழங்கியும் கவுரவித்தான். இந்நிலையில், இப்பகுதியை ஆட்சி செய்த கத்தலூர், பேராம்பூர் அழகிய மணவாளத்தேவர், அழகிய ஆலயம் எழுப்பிட உதவினார் என தலவரலாறு கூறுகிறது.


    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

    ஆலய அமைப்பு :

    விராலூரின் மேற்குப்புறத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அருகே ஏரம்ப விநாயகர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். ஆலயத்திற்குள் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் அமைந்துள்ளன. ஆலயம் விசாலமாகவும், பசுமையாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. கருங்கல்லினால் ஆன மகாமண்டபத்தில் ஆழ்வார்களின் சிலா வடிவங் களும், ஆண்டாளின் சிறு சன்னிதியும் உள்ளது. இதனைக் கடந்ததும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் அருள்காட்சி வழங்குகிறார். இவரே தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வள்ளல் பிரான்.

    இவ்வூரின் ஈசான்ய பகுதியில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த பூமீஸ்வரர், அருகே வடமலையான், குரும்பச்சியம்மன் ஆலயங்களும், திருக்குளமும் அமைந்துள்ளன.

    இவ்வாலயத்தின் முன்புறச் சுவரில் தொண்டைமான் காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் இத்திருக்கோவிலுக்கு ஒரு காணம் தீப எண்ணெயைக் கொடையாகத் தந்தது குறித்து கூறப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இத்தலம் திருமணப்பேறு - குழந்தைப்பேறு பெற உகந்த தலமாக விளங்குகிறது. குழந்தை வரம் பெற்றோர், தங்கள் குழந்தையை இறை வனுக்குத் தத்துக் கொடுத்து, காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் சுவாமி வீதியுலா, மார்கழியில் உற்சவம், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    அமைவிடம் :

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், திருச்சிராப்பள்ளி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலி மலையை அடுத்து, சாலையோரம் அமைந்த ஊர் விராலூர். திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் விராலூர் அமைந்துள்ளது.
    ×