என் மலர்
கோவில்கள்
தஞ்சை மாநகர் ரெயில் நிலையம் அருகே கல்லணைக் கால்வாய் என்னும் புது ஆறு அருகே பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் மட்டுமின்றி தனிக்கோவில்களிலும், சிவாலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோவில்களில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற வேலவன் உண்டு. அதன் பிறகு குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க அடிகள், வண்ணச் சரபம் தண்டபாணி தேசிகர் போன்றோர் கந்தனைப் பற்றி நிறைய ‘பா’ புனைந்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் ‘தஞ்சை மேவிய பெருமானே’ என்று அருணை முனிவரின் பாடல் பெற்ற ஆறுமுகன் காட்சி தருகிறார். இதே தஞ்சையில், சென்ற நூற்றாண்டில் உருவான சுப்ரமணியர் திருக்கோவில் அருள் ஒளி வீசிகொண்டிருக்கிறது. ஆம்..., தஞ்சை மாநகர் ரெயில் நிலையம் அருகே கல்லணைக் கால்வாய் என்னும் புது ஆறு அருகே பூச்சந்தை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் எழுந்த விதத்தினை செவிவழியாகவும், தல வரலாறு வாயிலாகவும் அறியலாம்.
சிலை வந்த கதை :
கடலலை கந்தன் பேர் சொல்லும் செந்தூர் பதியில் ஒரு ஞானி, உறவுகள் ஏதுமின்றி பிரமச்சரியம் கடைப்பிடித்து தவவாழ்வு மேற்கொண்டு, குமரனே கதி என்று வாழ்ந்து வந்தார். அவரிடம் இருந்த ஒரே சொத்து முருகக் கடவுளின் ஐம்பொன் சிலை மட்டும்தான். கடலிலும், நாழிக் கிணறிலும் தானும் நீராடி, முருகனையும் முழுக்காட்டி பூஜைகள் செய்து வந்தார். பிறகு அச்சிலையை துணி மூட்டையில் கட்டி வைத்து விடுவார். இது வழக்கமான நிகழ்வு.
வயது முதிர்வால் தனக்கு அந்திமகாலம் நெருங்குவதை உணர்ந்த தவசி, தனது வழிபடு தெய்வமான முருகன் சிலையை ஒருவரிடம் ஒப்படைத்து தனக்குப் பிறகும் பூஜைகள் நடக்க வேண்டும் என எண்ணினார்.
ஒரு நாள் தவசியின் உறக்கத்தில் முதியவராக முருகன் தோன்றி, அவரைக் கைப்பிடித்து ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். இரும்புப் பாதை தண்டவாளங்களைக் கடந்து ரெயில்வே கதவு இருந்தது. அங்கே ஒரு ரெயில் ஊழியரும் நின்றுக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. ‘என் சிலையை இங்கே கொடு’ என்று முதியவர் வேடத்திலிருந்த முருகன் சொல்லி விட்டு மறைந்து விட்டார். இவை அனைத்தையும் கனவில் கண்டு திடுக்கிட்ட தவசி, முருகன் காட்டிய அற்புதத்தை எண்ணி சிலிர்த்தார்.
பொழுது விடிந்ததும் தவசி வழக்கம் போல நீராடி, சிலையையும் நீராட்டி பூஜைகள் செய்து எடுத்துக் கொண்டு, இரவில் தான் கனவில் கண்ட இடத்திற்கு சென்றார். அங்கே அந்த ரெயில்வே கதவு மூடப்பட்டிருந்ததையும், அங்கே அந்த ரெயில்வே ஊழியரையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அங்கு பணி ஆற்றி வந்த கேட் கீப்பர், தஞ்சை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர்.
விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்புவதற்காக எத்தனித்திருந்தார். அவரது கனவிலும் அன்றைய இரவில் இதே காட்சி வந்து, தெய்வத் திருமேனியை தவசி ஒருவர் வழங்குவதை உணர்ந்ததாகத் தெரிவித்தார். இருவரும் ஆண்டவனின் பேரருளை எண்ணி மெய் சிலிர்த்தார்கள். சிலையைக் கொடுத்து விட்டு தவசி வந்தவழியே திரும்பி விட்டார்.
தஞ்சையில் செந்தூர் கோவில் :
ஐம்பொன் திருமேனியைப் பெற்றுக் கொண்ட ரெயில்வே தொழிலாளி, தஞ்சைக்கு அதனை எடுத்துக் கொண்டு வந்து தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இறைவன் திருவிளையாடலைக் கண்ணீர் மல்க கூறினார். இது நடந்தது கி.பி.1904-ம் ஆண்டு. அன்றிலிருந்து தான் இருக்கும் பூக்கொல்லையில் ஒருசிறு குடில் அமைத்து, வேலவன் சிலையை வைத்து விளக்கேற்றி வழிபட்டார். மக்களும் அந்த அற்புதத்தை அறிந்து கொண்டு, முருகனிடம் அன்பு செலுத்தினர்.
கோவில் ஒன்று எழுப்ப முடிவு செய்த தெருவாசிகளிடம் தஞ்சை ராவ்பகதூர் சீனிவாசன் பிள்ளை என்பவர், தனது இடத்தைத் தானமாகக் கொடுத்தார். தினமும் ஒரு கைப்பிடி அரிசி என வீட்டுக்கு வீடு சேகரித்து, பொதுமக்களைத் திருப்பணியில் ஈடுபடுத்தினர். பல ஆன்மிக அன்பர்களிடம் நன்கொடை பெற்று திருக்கோவில் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. பூச்சந்தையும், காய்கனிச் சந்தையும் இருக்கும் இடத்தில் இக்கோவில் உருவானதால், வணிகர்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட பஞ்சலோக சிலையும் அருகே வைக்கப்பட்டு 1911-ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பிறகு ஆலயம் விரிவு படுத்தப்பட்டு, பலிபீடமும், கொடிமரமும் அதை அடுத்து மயில் மண்டபமும் நிறுவப்பட்டன.
தென்புறம் விநாயகரும், வடபுறம் திருஞான சம்பந்தரும் சிறு சன்னிதிகளில் விளங்க, உள்ளே மகாமண்டபம் தெரிகிறது. மூலவரைத் தரிசித்த பின்னர் உள் சுற்றில் வலம் வரும்போது, கோமுகம் அருகே, சண்டிகேசர் இருக்கிறார்.
வெளிச்சுற்றில் காசி விசுவநாதரும், விசாலாட்சியும் காசி கோபுரம் போலவே அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகளில் இருந்து தரிசிக்கின்றனர். அருகே தல விருட்சமான வன்னிமரத்தடியில் விநாயகர் இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. வடக்கு பிரகாரத்தில் பெரிய கடம்பமரம் செழித்து நிழல் தருகிறது. வட மேற்கு மூலையில் கஜலட்சுமி, துர்க்காதேவி சன்னதிகள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன.
திருவிழாக்கள் :
இத்திருக்கோவில் முருகனுக்கு உகந்த கார்த்திகை மட்டுமல்லாது, கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் அன்ன வாகனத்திலும், இரண்டாம் நாள் மான் வாகனத்திலும், மூன்றாம் நாள் பூதவாகனத்திலும், நான்காம் நாள் யானை வாகனத்திலும், ஐந்தாம் நாள் காளை வாகனத்திலும், ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்ததும் மயில் வாகனம் ஏறி சேவற் கொடியுடன் ஆலயத்தை அடைகிறார்.
ஏழாம் நாள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். இரவு முத்துப் பந்தல் நிகழ்ச்சியில் தேவியர் இருவருடன் சுப்ரமணிய சுவாமி ஊர் வலம் வருவார். திருக்கல்யாண நிகழ்ச்சியில் மணமாகாதோர் கலந்து கொண்டு பிரார்த்தித்துக் கொண்டால் மறு ஆண்டுக்குள் திருமணம் கைகூடி விடும். செந்தூர் செல்லமுடியாதவர்கள் இங்கேயே பிரார்த்தித்துக் கொண்டால் எல்லா காரியங்களும் நிறைவேறி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சையில் அறுபடை வீடுகள் :
தஞ்சையின் செந்தூராக கருதி வழிபடப்படும் இத்திருக்கோவிலைப் போலவே தஞ்சையில் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனி கோவில்கள் உள்ளது.
மேல அலங்கம் - பரங்குன்றமாகவும், வடக்கு அலங்கம்- பழமுதிர்ச் சோலையாகவும், குறிச்சி தெரு - தணிகையாகவும், ஆட்டுமந்தை தெரு - சுவாமி மலையாகவும், அரிசிக்காரத் தெரு- பழநியாகவும் கருதி... தஞ்சை பக்தர்கள் இந்த அறுபடை வீடுகளுக்கும் ஆடிமாதத்தில் பாதயாத்திரை மேற்கொள்வது காண்போரைக் கவர்ந்திழுக்கும் காட்சியாகும்.
சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஏரி காத்த ராமர் கோவில்.
கடவுளை பார்க்க முடியுமா.? சமீபகாலத்தில் கடவுளை கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? பலரது மனதிலும் இந்த கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. புராண காலங்களில் முனிவர்கள் கடுமையாக தவம் இருந்து கடவுளை கண்டதாக படித்திருக்கிறோம். கடவுளின் குரல் அசரீரியாக ஒலித்து பல விஷயங்களை தெரிவித்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன. இன்றைய நிலையில் அவை கதைகளாகத்தான் பார்க்கப்படுகின்றன.
உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.
மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களின் விவசாய நிலத்திற்கான பாசனத்திற்கு மட்டுமல்லாமல், குடி நீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், பெருமழை பெய்யும் சமயங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்படுவது வழக்கம்.
ஒரு முரை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார்.
அப்போது அங்குள்ள ஏரி காத்த ராமர் கோவிலுக்கும் வந்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிதிலமுற்றிருந்த தாயார் சன்னிதியை திருப்பணி செய்து தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலாக அவர், ‘உங்கள் தெய்வத்தின் அருளால் இந்த மழையின் காரணமாக ஏரி உடையாமல் இருக்கட்டும். அப்படி நடந்தால், நான் திருப்பணியை செய்து தரு கிறேன்..’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார்.

பெய்யும் இந்த கனமழைக்கு நிச்சயம் ஏரியின் கரைஉடைந்து இருக்கும் என்று நினைத்த அவர், மெல்ல சிரமப்பட்டு கரையின் மீது ஒரு புறமாக ஏறி நின்று பார்த்தார். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. கையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது.
அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார். அடுத்த சில நொடிகளில் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவரது மனதில் ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் தனது இல்லத்துக்கு திரும்பி விட்டார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார். அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார்.
நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது. ‘இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனல் பிளேஸ் துரை அவர்களது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை இன்றும் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவத்தினால் மதுராந்தகம் ராமர் கோவில் ‘ஏரி காத்த ராமர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிடப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் ‘வகுளாரண்ய ஷேத்திரம்’ என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அந்தப்பகுதி ‘மதுராந்தகம்’ என்றும், கல்வெட்டுக்களில் ‘மதுராந்தக சதுர்வேதி மங்களம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண்டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். அதன் அடிப்படையில் புஷ்பக விமானத்துடன் கோதண்ட ராமர் கோவில் அங்கே அமைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இயற்கை எழில்கொஞ்சும் வகையில் அமைந்துள்ள ரங்கநாத பெருமாள் கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றின் தென்கரையில் ஆதிதிருவரங்கம் என்ற ஊர் உள்ளது. இங்கு ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் வகையில் உள்ள இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
புராண வரலாறு :
சோமுகன் எனும் அசுரன் யாகத்தின் மூலம் தேவர்களை வெல்ல வேண்டுமென எண்ணினான். அதன்படி யாகத்தின் மூலம் பிரம்மாவிடம் இருந்து ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களையும் கைப்பற்றி, எதிர்மறை செயல்களில் ஈடுபட்டான். இதற்கிடையில் வேதங்களை கைப்பற்றிய சோமுகன் எருமை கிடா உருவத்துக்கு மாறி விட, அவனை அழிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் 10 கரங்கள் கொண்ட மகிஷாசுரமர்த்தினி என்னும் தேவதையை உருவாக்கினார்கள்.
மகிஷாசுரமர்த்தினி சோமுகனிடம் போரிடும் போது, அவன் எருமை உருவத்தில் இருந்து மாறி கடலில் சென்று பதுங்கி விட்டான். வேதங்கள் அவனிடம் இருந்ததால் உலகம் செயல்படாமல் இருளில் மூழ்கியது. இதனால் மிகுந்த கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும், பிரம்மாவுடன் திருப்பாற்கடல் சென்று பெருமாளை பிரார்த்தனை செய்து வேதத்தை மீட்டுத் தருமாறு வேண்டினர்.
தேவர்கள், முனிவர்களின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் மச்சஅவதாரம் (மீன் அவதாரம்) எடுத்து கடலில் ஒளிந்திருந்த சோமுகன் எனும் அசுரனை போரிட்டு வதம் செய்து, வேதங்களை மீட்டு பூவுலகிற்கு கொண்டு வந்தார்.
அவ்வாறு வேதங்களை பூவுலகிற்கு பெருமாள் கொண்டு வந்த இடம்தான் ஆதிதிருவரங்கம் ஆகும். இங்குதான் பிரம்மாவுக்கு பெருமாள் வேதங்களை உபதேசித்தார் என்று புராண வரலாறும் கூறுகிறது.
இக்கோவிலில் உள்ள மூலவர் கற்சிலைகளால் ஆனதில்லை. சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் (சுதை) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பாம்பு படம் எடுத்து குடையாக பிடிக்க அதில் பெருமாள் புன்முறுவலுடன் கிழக்கு திசையை பார்த்தபடி ஸ்ரீதேவியின் மடியின் மீது படுத்துள்ளார். பெருமாளின் இடது கால் பூமாதேவியின் மடி மீதும், வலது கால் பாம்பின் வால் சுழன்று அதன் மீது உள்ளது. வலது கையை சிரசின் பக்கம் வைத்து அபயமுத்திரையுடன் காட்சி அளித்து வருகிறார். வலது கையை கருடாழ்வார் உட்கார்ந்து தாங்கி கொள்கிறார். இடது கையால் பெருமாள் பிரம்ம தேவருக்கு 4 வேதங்களையும் உபதேசம் செய்கிறார். சுதையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் அதற்கு அபிஷேகம் செய்வதில்லை. மாறாக உற்சவருக்கு அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.
தல வரலாறு :
கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்ற தொண்டை மன்னன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களும் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லை. மனம் வருந்திய அந்த மன்னன் நாரத முனிவர் அறிவுரைப்படி மனைவியுடன் இக்கோவிலுக்கு வந்து மனம் உருகி வேண்டினான். இவர்களது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் அவர்களுக்கு ஆசி வழங்கி, புத்திர பாக்கியம் கிடைக்க செய்தார். அதன்படி அவர்களுக்கு 4 மகன்கள் பிறந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இக்கோவிலை ஆழ்வார்கள் யாரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று கருத்து நிலவி வருகிறது. இருப்பினும் பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில் இக்கோவில் பற்றி பாடியதாக குறிப்பிடுகிறார்கள். அதில், பெருமாள் பிரம்மாவுக்கு வேதங்களை கற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவிலை பற்றியது தான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை என்றும் கூறுகிறார்கள்.
தலங்களை 3 பிரிவாக பிரிக்கிறார்கள். அதன்படி புராண, அபிமானிய, திவ்ய தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் புராண காலத்திலேயே உள்ளதால் 108 திவ்ய தலங்களில் இக்கோவில் இடம் பெறவில்லை என்ற தகவலையும் ஆராய்ச் சியாளர்கள் தலவரலாறாக கூறுகின்றனர்.

பெருமாள் திருவடி
தீர்த்தம் :
சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் அழகு குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின்னர் தேவர்களின் அறிவுரையின் படி இக்கோவிலுக்கு வந்த சந்திரன், பெருமாளை வேண்டி தனது குறைகள் நீங்கப் பெற்றான். சந்திரன் இக்கோவிலுக்கு தென் கிழக்கில் உள்ள கிணற்றில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்துக்கு சந்திரபுஷ்கரணி என்ற பெயர் உருவானது.
பல்வேறு சிறப்புகளை வாய்ந்த இக்கோவிலில் கிருஷ்ணருக்கு தனி சன்னிதி, பெருமாள், தாயார் சன்னதி, வரதராஜபெருமாள் சன்னதி, நவராத்திரி மண்டபம், விஷ்வக்சேனர் சன்னிதி, ஸ்ரீவேதாந்த தேசிகர் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் அமைந்துள்ளது.
கோவிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் சன்னி தியும் உள்ளது. மூலவரின் பாதத்துக்கு நேராக வெளிபுறத்தில் பெருமாள் திருவடி உள்ளது. இந்த திருவடியை தொட்டு வணங்கினால் மூலவர் திருபாதத்தை வணங்கும் பலன் கிட்டும் என்பதால் பக்தர்கள் இந்த திருவடியை வணங்கி செல்கிறார்கள். இக்கோவில் தல விருட்சம் புன்னை மரம்.
பெரிய பெருமாள் :
பெருமாளின் அவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் ‘பெரிய பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சப்த ஸ்வரங்கள் :
இக்கோவிலில் ராமருக்கு தனி சன்னிதி உள்ளது. திருவடிக்கு அருகில் உள்ள ராமர் சிலையை தட்டினால் 7 ஸ்வரங்களும் வெளிப்படுகிறது. இதனால் இக்கோவில் சப்த ஸ்வரங் களுக்கு உரிய கோவிலாக கருதப் படுகிறது.
கல்வி தலம் :
ரெங்கநாதர் எனும் பெருமாள் பிரம்மாவுக்கு 4 வேதங்களையும் (ரிக், யஜூர், சாம, அதர்வண) சொல்லி கொடுத்த இடம் ஆதிதிருவரங்கம் என்பதால் இக்கோவில் கல்வி தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் கல்வி செல்வம் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமணம் ஆகாதவர்களும், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
பன்னீர்புஷ்ப மரம் :
கோவிலுக்குள் மருத்துவ குணம் கொண்ட பன்னீர்புஷ்ப மரம் உள்ளது. இந்த மரம் பகலில் பூக்காது. மாலை 6 மணிக்கு பிறகு பூக்கும். இந்த பூக்களை பறித்து பெருமாளுக்கு இரவு நேர பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர கோவிலுக்குள் மகிழம் பூ மரமும் உள்ளது.
இக்கோவிலில் பெருமாளை தினந்தோறும் காலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், நவராத்திரி போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. மணலூர்பேட்டையில் இருந்து ஆதிதிருவரங்கத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 45 நிமிட பயணத்தில் ஆதிதிருவரங்கம் சென்று, சற்று தொலைவில் நடந்து சென்றால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோவிலை சென்றடையலாம்.
எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.
கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இறங்கிவந்து கன்று பக்கத்தில் வந்து நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.
நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார். சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிகஉயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த க்ஷேத்திரம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.
பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த பக்தியும், மிகுந்த உடலுறுதியும் இருந்தால் மட்டுமே உயர்ந்த மலைப்பகுதியில், காட்டுக்குள் உள்ள இந்த க்ஷேத்திரத்துக்குச் சென்று நரசிம்மரை தரிசனம் செய்யமுடியும். ஆனால் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, சமதளமான-வேளாண்மைப்பகுதியான கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.
பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது. இச்சிறுவனின் தாத்தா காசியப்பர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காசியப்பரால் நரசிம்மரை தரிசனம் செய்ய இயலாமல் போயிற்று.
ஆகவே தன் பேரன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம சொரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர்.
முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். நரசிம்மர் தரிசனம் காண்பீர்கள்!” என்பதே அசரீரி வாக்கு.
புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தார். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து தம் இதயக்கதவைத் திறந்தார் மகாவிஷ்ணு. அக்கணமே, ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் வடிவில் அவதார சொரூபியாகக் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “பக்தப் பிரபுவே! தாங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.
நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.
சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.
ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.
மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.
அக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய- கீழப்பாவூரில் இருந்த ‘முனைஎதிர் மோகர்’ படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான். முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோவிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.
இம்மன்னன் இங்குள்ள பெருமாளுக்கு ‘முனைஎதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயரும் உண்டு. ‘முனைஎதிர் மோகர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.
போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோவில் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு ‘முனைஎதிர் மோகப்பேரேரி’ என்று பெயர் சூட்டியுள்ளான்.
அரசு வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோக நாணயங்கள் வெளியிடும் பகுதி என்பதையும், போருக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யப்பட்ட பகுதி இவ்வூர் என்பதையும் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோவில் நினைவூட்டுகிறது. ஆகவே இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.
ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.
பழுதடைந்த இந்த திருக்குளம் திருப்பணி செய்யப்பட்டு, 19.1.2018 வெள்ளிக்கிழமை அன்று தடாகப் பிரதிஷ்டை நடைபெறுகிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன.
சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது.
நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது. இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார்.
உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம்.
கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.
தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர்.
வழிபடும் முறை : நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வேங்கடாஜலபதி-நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம்வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று முழுப்பலனும் கிட்டும்.
இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.
தகவலுக்கு : அர்ச்சகர் இரா. ஆனந்தன் - 94423 30643.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும்.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.
தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.
சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.
சுக்கிரதிசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தோஷம் நீங்க அந்தந்த தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று 9 ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோவிலுக்கு சென்று-வணங்கினாலே கிடைக்கிறது.
கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியார் சூரிய பகவானின் இரு பக்கங்களிலும் நிற்கின்றனர்.
திருவிழாக் காலங்களில், உஷாதேவி, சாயாதேவி இருவரும் சூரியனின் இருபுறமும் எழுந்தருளி சிறப்பாக பவனி வரும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு பள்ளியறை நாச்சியாராகத் திகழ்பவள் சாயாதேவியே. உஷாதேவி-காலை உதிப்பவள் எனவே அவள் பள்ளியறை நாச்சியாக இடம் பெறவில்லை.
சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான்.
எப்படி செல்வது?
தஞ்சை மாவட்டம் திருவி டைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை - திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.-பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம்.
இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர் மகாசக்தி ஹெத்தையம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என காணப்படும் தேயிலை தோட்டம், அதனை முத்தமிட்டு செல்லும் மேக கூட்டங்கள் என அழகை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். அப்படி இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள கோவில் தான் மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர், மகாசக்தி ஹெத்தையம்மன் கோவில்.
வற்றாத நீரோடை :
பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில், குன்னூர் அருகே உள்ள மஞ்சக்கம்பையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மஞ்சக்கம்பை பஸ் நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை காணலாம். கோவிலுக்கு செல்வதற்கு முன்பு அங்கு நுழைவு வாசல் நம்மை வரவேற்கும் வகையில் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நடந்து சென்றால், ஒரு ஓடை குறுக்கிடுகிறது.
இந்த ஓடை வற்றாத நீரோடை ஆகும். எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓடையில் கால் கழுவி விட்டு செல்லலாம். முன்னதாக விநாய கரை வணங்கி விட்டு, இடது புறம் பூக்குண்டம் இறங்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீசத்தியநாகராஜர் சன்னிதிக்கு சென்று நாகராஜரை வழிபட வேண்டும். தொடர்ந்து மேல் பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை தரிசிக்கலாம்.
கோவில் தோன்றிய வரலாறு :
இந்தக் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாகிகளின் பராமரிப்பில் இருந்தது. இந்த ஆலயம் தோன்றிய வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பையில் ஆறு ஓடியது (தற்போது ஓடையாக உள்ளது). ஒரு முறை இந்த ஆற்றை தூர்வாரும் பணி நடந்த போது திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும், இந்த ஆலயத்தை ஸ்தாபித்தவரும் சத்தம் கேட்ட இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே 2 குகை ஏற்பட்டிருந்தன. அவற்றில் நாகராஜர் சிலை இருப்பது தெரிய வந்தது. அந்த சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அனுதினமும் அந்த சிலைக்கு வழிபாடு தொடர்ந்தது. மேலும் நாகராஜர் சன்னிதிக்கு அருகில் ஹெத்தையம்மன் கோவில் அமைக்கப்பட்டது.
கடந்த 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் சத்தியநாக ராஜர் கோவிலில் நாகம் ஒன்று தென்பட்டிருக்கிறது. சில நிமிடங்களில் அந்த நாகம், ஹெத்தையம்மன் சன்னிதியிலும் காணப்பட்டிருக்கிறது. அப்போது தான் சத்தியநாகராஜர் சன்னிதிக்கும், ஹெத்தையம்மன் சன்னிதிக்கும் இடையே சுரங்கப்பாதை இருப்பதே ஊர் மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது. 1970-ம் ஆண்டு சத்தியநாகராஜர் கோவிலுக்கும், 1973-ம் ஆண்டு ஹெத்தையம்மன் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சத்தியநாகராஜர் சன்னிதி
குழந்தை பாக்கியம் :
திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகள், இந்த ஆலயத்திற்கு வந்து சத்தியநாகராஜரையும், ஹெத்தையம்மனையும் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியர் சத்தியநாகராஜர் கோவிலில் பூஜை செய்து விட்டு தொட்டில் கட்டினால், குழந்தை வரம் கிடைப்பது உறுதி என்கிறார்கள். மேலும் திருமணம் ஆகாத பெண்கள், கன்னி பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்கள் கண்ட உண்மை.
குடிப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடவும் இந்த ஆலயத்தில் பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பலர், தங்களது தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். கோவிலில் ஆண்டு தோறும் மே 1-ந் தேதி பூக்குண்ட திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது, 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரு கிறார்கள்.
கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அது போல செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
கோவிலுக்கு அருகில் ராமர் பாதம் :
மானிஹாடா ஸ்ரீசத்தியநாகராஜர், ஹெத்தையம்மன் கோவிலில் மேலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்னவென்றால் இந்த ஆலயத்திற்கு 300 மீட்டர் தொலைவில் ராமர் பாதம் உள்ளது. ராமர் பாதம் உள்ள இடத்துக்கு செல்லும் வழியில் ஓடை ஓடுவதால் தண்ணீரின் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கு செல்லும் பாதையில் முதலில் சந்தானலட்சுமி சன்னிதி இருக்கிறது. அதன் எதிரே உள்ள மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வழிபாடு நடத்துகிறார்கள். ஓடைக்கு அருகில் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சில அடி தூரம் சென்றதும் ராமர் சன்னிதியையும், அதன் அருகில் ஒரு ராட்சத பாறைக்கு அடியில் ராமர் பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அருள் வாக்கு கூறிய பக்தர் ஒருவர், ஹெத்தையம்மன் கோவிலுக்கு அருகில் ராமர் பாதம் இருப்பதாக தெரிவித்தார். ராமர் வனவாசம் சென்ற போது, இந்த வழியாக சென்றதாகவும், அப்போது அவரது பாதம் இங்குள்ள பாதையில் பதிந்ததாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராமர் பாதம் எங்கு இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கு சென்று தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அமைவிடம் :
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் 20 கிலோமீட்டர் தூரத்தில் மஞ்சக்கம்பை உள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் குன்னூர், ஊட்டியில் இருந்து மஞ்சூர், அறையட்டி செல்லும் பஸ்களில் சென்று கைக்காட்டி என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து வாடகை வாகனங்கள் மூலமும் கோவிலுக்குச் செல்லலாம். திருவிழா நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத்தில் அமைந்திருக்கும் விசுவநாதர் ஆலயம் குழந்தை பாக்கியத்தை அருளும் தலங்களில் ஒன்றாகும்.
குழந்தை வேண்டி தவம் இருக்கும் தம்பதிகளின் மனக்குறையை நீக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருளும் தலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. திருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விசுவநாதர் ஆலயமும் இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று தான்.
அது மட்டுமல்ல. வேண்டும் தம்பதியருக்கு ஆண் குழந்தை கிடைக்க அருள் செய்யும் தலமாக இது விளங்குகின்றது என்று மெய்சிலிர்க்க சொல்கின்றனர் பக்தர்கள்.
மிகவும் பழமையான இந்த ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் சிறு மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
உள்ளே கருவறையில் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள்காசி விசாலாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள கருவறை அம்மன் சிலை மிகவும் சிறியது. அம்பாளின் உயரம் ஒன்றேகால் அடி என்பது இங்கு குறிப்பிடக் கூடிய விசேஷம்.
கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், மகாலட்சுமி, முருகன், ஆதி விசாலாட்சியும், வடக்கில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு மூலையில் நவக்கி ரகங்களின் திருமேனிகளும் உள்ளன.
கோவிலின் தலவிருட்சம் அரசமரம். கோவிலின் முன் உள்ள அரசமரம் 300 ஆண்டுகளைத் தாண்டியமரம் என்று சொல்கின்றனர். கோவில் 450 ஆண்டுகள் பழமையானது. இடையில் திருப்பணிகள் நடந்து புதுப்பிக்கப்பெற்று 3.9.1998-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
இக்கோவிலின் கருவறையில் இருந்த காசி விசாலாட்சியின் விக்கிரகம் சிறிது சேதமடையவே, அதை மேற்கு பிரகாரத்தில் ஆதி விசாலாட்சி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்துவிட்டு, தற்போதுள்ள சிறிய அளவிலான அம்மன் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
முன்பெல்லாம் சிவராத்திரி அன்று இறைவனின் மேல் சந்திர ஒளிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு மாம். நாளடைவில் கோவிலைச் சுற்றி நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு விட்டதால், அந்தக் காட்சியை காண இயலவில்லை என இவ்வூர் முதியோர்கள் வருத்தத்துடன் சொல்கின்றனர்.
திருவிழாக்காலங்களில் இறைவனையும், இறைவியையும் விதவிதமான உடைகளால் அலங்காரம் செய்து மகிழ்வது எங்கும் பழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உற்சவ அம்மனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று காய்கறிகளால் அற்புதமாக சாகம்பரி அலங்காரம் செய்வார்கள். அந்த காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கோவிலின் தீர்த்தம் காசி விளங்கி நதி. நவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, பிரதோஷம் மற்றும் ஏனைய நாட்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவதுண்டு.
அரச மரத்தை சுற்றி வந்து, இங்குள்ள அம்பாளையும் சுவாமியையும் விளக்கேற்றி வேண்டினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆரவாரமான நகரை விட்டு ஒதுங்கிநின்று அருள்பாலிக்கும் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் தரிசனம் செய்வதால் நம் மனதில் ஒரு தெய்வீக அமைதியும் நிம்மதியும் குடிகொள்வது உண்மையே.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றி திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். மதுரை சவுண்ட கோப்பர கேசவர்மன், ராஜகேசரி வர்மன், ராஜேந்திர சோழ தேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தல இறைவியின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும். இந்தக் கோவிலுக்கு அருகிலேயே எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.
தல வரலாறு :
பழங்காலத்தில் திருச்சிற்றம் பலத்தை சுற்றி அடர்ந்த காடுகள் (வனம்) இருந்தன. இதை நிரூபிக்கும் வகையில் திருச்சிற்றம்பலத்தை சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள் காடு என முடியும். உதாரணமாக துறவிக்காடு, மடத்திக்காடு, சித்துக்காடு, நரியங்காடு, நாடங்காடு, வலசக்காடு, வலச்சேரிக்காடு, கல்லூரணிக்காடு, திருப்பூரணிக் காடு ஆகும். இந்த ஊரின் மையப்பகுதியான திருச்சிற்றம் பலத்தில் நந்தவனம் ஒன்று உள்ளது.
இந்த நந்தவனத்தில் பரவியிருந்த இனிய காற்றாலும், மலர்களின் நறுமணத்திலும் மயங்கி சிவபெருமான் நித்திரையில் ஆழ்ந்தார். பார்வதி தேவி, பலமுறை அழைத்தும் சிவபெருமான் கண்விழிக்கவில்லை. உடனே பார்வதி, மன்மதனை அழைத்து பாட செய்தார். கண்விழித்த சிவபெருமான், கோபத்தில் மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தார். அந்த இடம் ‘மதன்பட்டவூர்’ என்றானது. இந்த ஊரில் மன்மதனுக்கு என்று கோவில் உள்ளது.
மன்மதனை இழந்து வருந்திய ரதிதேவி, தன் கணவன் உயிரை மீண்டும் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். அவளின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஒரு தலத்தில் மன்மதனை உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும் போது, அதனை சரிவர செய்ய தனக்கு அனுமதி அளிக்கும் படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அருள்பாலித்தார். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்தில் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு அருகே எமதர்மனுக்கு கோவில் கட்டப்பட்டதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இங்கு எமதர்மராஜன் தனிக்கோவிலில் வீற்றிருக்கிறார். அவர் எருமை வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முறுக்கி விடப்பட்ட மீசையுடன் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். அவரது நான்கு கரங்களில் ஒன்றில் கையில் பாசக்கயிறும், மற்றொரு கையில் சுவடி கட்டும், ஒரு கையில் கதையும், மற்றொரு கையில் சூலாயுதத்தை ஏந்தியபடி இருக்கிறார்..
நீண்ட ஆயுள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், செய்வினை கோளாறுகள், கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், சொத்து பிரச்சினை, கல்வி தடை உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி இத்தலத்திற்கு வருபவர்கள் நிறைய பேர். அவ்வாறு வருபவர்கள் முதலில் நீதி வழங்கும் எமதர்மராஜனை மனதார வேண்டுவர். பின்னர் தங்களது வேண்டுதல்களை சீட்டில் எழுதி அங் குள்ள சூலாயுதத்தில் கட்டுவர். இதற்கு ‘படிக்கட்டு தல்’ என்று பெயர்.
இத்தலத்தில் சனிக்கிழமை தோறும் எமகண்ட நேரமான மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை வழிபடுவது நல்லது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதுதவிர ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
கோவில் அமைப்பு :
இவ்வாறு பல்வேறு சிறப்பு கள் பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் தர்ம விநாயகர், அய்யனார், பூர்ணகலா, புஷ்பகலா, பாம்பு பிடாரன், தூண்டில் வீரனார், ஆண்டியப்பர், ராக்காச்சியம்மன், கருப்பண்ண சுவாமி, கொம்புக்காரன், முனீஸ்வரன், வடுவச்சியம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் எமதர்மராஜன் கோவிலைச் சுற்றி தனிசன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இந்த கோவிலின் தல விருட்சம் விளாமரம் ஆகும்.
தீர்த்தம் :
கோவில் வளாகத்திலேயே எம தீர்த்தம் அமைந்துள்ளது. 30 அடி ஆழம், 80 அடி நீளம், 50 அடி அகலத்துடன் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது. எமதர்மராஜனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த தீர்த்தத்தில் நீராடுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆதலால் ஆண்கள் மட்டுமே இந்த தீர்த்தத்தில் நீராடுகின்றனர். உடல் நலம், மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, எமதர்மராஜனை வழிபட்டால் நலம் பெற்று விடுவர் என்பது ஐதீகம்.
வழியும்.. தூரமும்.. :
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே திருச்சிற்றம்பலத்தில் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை செல்லும் பஸ்சில் சென்றால் இத்தலத்திற்கு செல்லலாம். திருச்சிற்றம்பலம் கடை வீதியில் இறங்கி சற்று தூரம் நடந்து சென்றால் எமதர்மராஜன் கோவிலை அடையலாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.
கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படைவீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடும்பம், நட்பு, சுற்றம் என்று மனிதர்களுக்காக வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் தங்கள் வீட்டு கால்நடைகள் நலமுடன்வாழ வேண்டுதல் செய்வதற்கு என்றே தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளது என்பது அதிசயம் தான்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.
தல வரலாறு :
பரமபத நாதனாகிய பரந்தாமன் துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்- யசோதை தம்பதியிடம் மகனாக வளர்ந்து வந்தார். அவர் கறவை கணங்களை மேய்த்து வந்த காரணத்தால், வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கண் நீங்காத செல்வத்தை அளித்தன. கண்ணபிரானின் திருக்கண் பார்வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.

அந்த கண்ணபிரான், உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார். பண்டைய காலத்தில் ஆலமரத்தூர் என்று அழைக்கப்பட்ட இந்தப்பகுதி, அடர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப்பாம்புகள் வாழும் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் புற்று ஒன்று இருந்தது. இந்த பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தன. ஒரு நாள் பசு ஒன்றை, பாம்பு தீண்டியது. பாம்பின் நஞ்சு பாதிக்காமல், பசுவின் விஷத்தை மாயவன் உண்டு பசுவை காப்பாற்றினார். இதனால் அவர் ‘ஆல்கொண்டமால்’ என்று பெயர் பெற்றார். இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்த திருமாலையும், ஆலன் உண்ட சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இன்றும் அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.
அவதார வடிவம் :
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும், தீய சக்தியும், தலைதூ க்குகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவில்களில் சிலைகள் உருவ வழிபாட்டுடன் காணப்படும். இங்கு ஆல்கொண்டமால் எனும் பெயரில் அமர்ந்திருக்கும் விஷ்ணுபகவானின் அவதாரங்கள் சில, சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இந்த சிலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேல்பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு இருமருங்கில் சூரியன், சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3,4,5 ஆகிய தேதிகளில், இங்கு தமிழர் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து, திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கிறார்கள். இவற்றை தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால், அவைகளுக்கு நோய்கள் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இந்தக் கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு.
நேர்ச்சை பொம்மைகள்ஆல்கொண்டமால் கோவில் விழாவின் போது, பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலைகளின் முன்வைக்கிறார்கள். தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உருவ பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர்.
மாட்டுப்பொங்கல் அன்று ஈன்ற கன்றுகளை, கோவிலுக்கென்று அப்பகுதி விவசாயிகள் விட்டு விடுவார்கள். அந்த கன்றுகள் கிராமங்களில் தன்னிச்சையாக சுற்றித்திரியும். அதை ‘சலங்கை மாடு’ என்று அழைக்கிறார்கள்.
சலங்கை மாடு என்பதன் அடையாளத்துக்காக காதுகளை சூலாயுதம் போல் மாற்றி விடுவார்கள். பின்னர், மாடுகளை உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர். அதன் முன்னே இரு நீள மூங்கில் கம்புகளை உயரத்தூக்கி கொண்டும், கால்களில் சலங்கை கட்டிக்கொண்டும் இசைக்கு தக்கவாறு ஆடுகின்றனர். இந்த வழிபாட்டு முறைகள் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்தி ருக்கும்.
அமைவிடம் :
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சோமவாரப்பட்டிக்கு அருகே ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது.
தேவதானம் ரங்கநாதர் கோவில் இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தேவர்களால் தானம் செய்யப்பட்ட இடத்தில், நெல் மணிகளை மரக்காலால் அளந்த களைப்பால் சயன திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசித்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதுடன் செல்வம் குவியும். ‘அந்த இறைவன் எங்கு இருக்கிறார்?’ என்கிறீர்களா..
அதற்கு நாம் வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கநாதரின் அழகைக் கண்டு அதிசயித்துப் போனான். பல இடங்களில் போரிட்டுக் கொண்டு வந்த அந்த மன்னனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் உருவம் மட்டும் கண்ணில் இருந்து மறையவில்லை. அவரது அழகை வேறு எங்காவது வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.
இத்தலம் வந்தபோது, அங்கு ஏரிக்கரையின் பக்கமாக வந்து கொண்டிருந்தான். அந்த இடம் முழுவதும் நெல் விளையும் பூமியாக, ஸ்ரீரங்கத்தைப் போலவே பசுமையுடன் காட்சியளித்தது. அதனால் இதனை வடஸ்ரீரங்கம் என்றே மனதில் எண்ணிக்கொண்டான். இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.
சாளுக்கிய மன்னன் அந்த இடத்தைப் பார்த்து அதிசயித்து நின்றான். அப்போது அங்கு ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்டு, கதிரடிக்கப்பட்டு களத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். திடீரென அந்த விவசாயி மறைந்தார். இதனைக் கண்ட மன்னன், விவசாயியைத் தேடினான். அவரோ, களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்தபடி ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.
அங்கு சென்ற மன்னனுக்கு, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி கொடுத்து மறைந்தார். இதனால் ஆனந்தம் அடைந்த மன்னன், அங்கேயே இறைவனுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான். பின்னர் தன்னுடைய படைகளுடன் வட இந்தியாவிற்குப் புறப்பட்டான். கங்கை நதிக்கு வடக்கேச் சென்றபோது, நேபாள நாட்டில் இமயமலை அடிவாரத்தில் பெரிய அளவிலான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லைக் கொண்டு, தான் நினைத்த இறைவனின் திருவுருவத்தைச் செய்ய எண்ணினான். அதற்காக அந்தக் கல்லை ஏற்றிக்கொண்டு, தென்னிந்தியா புறப்பட்டான். ஆனால் கல்லானது, வழியில் கங்கை நதியில் விழுந்தது. நீரில் விழுந்த கல் மூழ்காமல், மிதக்கத் தொடங்கியது.

இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மன்னன், அது பற்றி அறிஞர்களிடம் விசாரித்தபோது, அது சாளக்கிராம கல் என்பது தெரியவந்தது. மேலும் அந்தக் கல்லில் இறைவனின் சிலையை வடித்து வழிபட்டால், அந்தப் பகுதி முழுவதும் சுபீட்சம் அடையும் என்றும் கூறினார்கள். இதையடுத்து அந்தக் கல்லையே கொண்டு வந்து, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை எழுப்பியதுடன், இறைவனின் சிலையையும் வடித்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு.
இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்ததும், கொடி மரமும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்ததாக ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். இவர்களை வழிபட்டு உள்ளேச் சென்றால், கருவறைக்கு வெளியே துவார பாலகர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் நம்மை வரவேற்கின்றனர்.
அவர்களுக்கு வலது பக்கத்தில் நம்மாழ்வார், பொய்கையாழ்வர், பூதத்தாழ்வர், குலசேகராழ்வர், திருமழிசையாழ்வார், பெரியாழ்வர், தொண்டரடியாழ்வர், திரு மங்கையாழ்வர், மதுரகவியாழ்வர், ஆண்டாள் ஆகிய பன்னிரு ஆழ்வார்கள், மணவாள முனிவர், விச்வக்சேனர், ராமானுஜர், தேசிகர், வேணுகோபால் சுவாமி கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
இவர்களை தரிசத்த வண்ணம் உள்ளே சென்றால் ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.
பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். 18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.
இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.
இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம்.
விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி- தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
தேவக்கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மூலகணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.
சுருட்டு நிவேதனம் :
குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை, வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர் இந்த தீவிர முருக பக்தர்.
வழக்கம் போல் முருகப்பெருமானை தரிசிக்க ஒரு நாள் விராலிமலை வந்தார் கருப்பமுத்துப் பிள்ளை. வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தது மழை விட்டபாடில்லை.
நீண்ட நேரமாக காத்திருந்ததில் அவருக்கு பசிக்கத் தொடங்கியது. பசியைப் போக்க உணவில்லை. முருகப்பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. புகைக்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என வருந்தினார் அவர்.
பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர் முன் தோன்றினார். அவருக்கு சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு.
அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது விருப்பப்படி அன்று முதல் மாலை பூஜையின் போது சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்த பின் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர்.
அருணகிரி நாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரி நாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.
தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது.
மன்னரின் வயிற்று வலி :
சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு.
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை.
ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைக்க மன்னரின் வயிற்று வலி குணமானது.
திருவிழாக்கள் :
பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.
ஜனவரி முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.
திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியில்இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை.
ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.
கொடிமரம், பலிபீடம், நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் இல்லாத ஆலயம், பிரதோஷம், தெப்போற்சவம் நடைபெறாதக் கோவில், திருவாசகம் தோன்றிய தலம், மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தேவார வைப்புத் தலம், திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில்.
11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களு டன் ஆலயம் விளங்குகின்றது. கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் மட்டுமே அமைந்துள்ளது. அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப் படுகிறது. ஆவுடையாரின் பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்குமேல் சூரியன், சந்திரன், அக்னி தீபங்கள் மூன்றும் ஒளி வீசுகின்றன.
சுவாமி முன்புறம் உள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. புழுங்கல் அரிசி அன்னம் ஆவி பரப்பி இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறுகால பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.
ஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. அன்னை அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்கு உள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த புனித நீர் மனக்கவலை மற்றும் தீய சக்திகளை நீக்கும் சக்தி கொண்டது. அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே மட்டுமே தரிசிக்க வேண்டும்.
மாணிக்கவாசகர் வரலாறு :
பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூரில், பிறந்தவர் வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றி ‘பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். குரு உபதேசமும் பெற்றார்.
இதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு மணலில் நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க முடியாத இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள் வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படிபட்டார். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது.
இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். பாண்டிய மன்னன், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டினான். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன் முதலமைச்சர் பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார். உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு தலங்களை தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார்.
தில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில் வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள் அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக் கையொப்பம் இட்டு, பொற்சபையின் பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார்.
தில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள் கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக் கலந்தார்.
மாணிக்கவாசகர் :
ஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும், முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு முகமாய் உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி, அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.
இத்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும், குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.
அபூர்வ சிற்பங்கள் :
ஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில் நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர் முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன.
கால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
மூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர் மண்டபம், குருந்த மரம் அமைந்துள்ளன. இதில் வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு விருந்தாகின்றன.
இரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் உள்ளது. இது நடனசபை என அழைக்கப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன.
முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம், மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதி அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலா வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிரே அமைச் சராக, அடியாராகக் காட்சி தரும் மாணிக்கவாசகர் வடிவம், மன்னன் வரகுண பாண்டியன் உருவம் போன்றவை கலைநயத்தைக் காட்டுகின்றது.
27 நட்சத்திரங்களின் வடிவம் புடைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப் படுகின்றன. ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெரு மானாகப் போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங் களைச் செய்து வீதியுலா நடத்துகின்றனர்.
தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12 மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும்.
அமைவிடம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் அமைந்திருக்கிறது, ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம். திருச்சியில் இருந்து 102 கி.மீ., அறந்தாங்கியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.






