என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.
    தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை பத்துமலை, தண்ணீர்மலை, கல்லு மலை ஆகும். இம்மூன்று ஆலயங்களைப் பற்றியும் இந்த தைப்பூச விழாக் காலத்தில் அறிந்து கொள்வோம். இவ்விழாக்களில் தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிகஅளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தைப்பூசத்தன்று ஐந்து மாநில அரசுகள் பொதுவிடுமுறை அளிப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    கோலாலம்பூர் பத்துமலை :

    மலேசியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகவும் திகழ்வது, கோலாம் பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் ஆகும். இங்கு மூலவராக விளங்குவது, வேல் மட்டுமே. இம்மலை சுண்ணாம்புக் கற்களால் ஊசிப்பாறைகள் கொண்டு உருவான இயற்கை குகையாகும். இந்த மலையின் வயது நாற்பதுகோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்துமலை என்ற பெயர், பத்துமலை அருகே ஓடும் கங்கை பத்து என்ற ஆற்றின் பெயரால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இவ்வாலயம் சுமார் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி. 1891-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கே. தம்புசாமி பிள்ளை, பத்துமலைக் குகையில் 400 அடி உயரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் வேலினை நிறுவி, வழிபாட்டினைத் தொடங்கினார்.

    இன்று இவ்வாலயத் திருப்பணி மற்றும் 140 அடி உயர முருகப்பெருமான் சிலை அமைக்கும் பணி டான்ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில் நான்காண்டுகள் நடைபெற்று, 2006-ம் ஆண்டு இச்சிலை திறந்து வைக்கப்பட்டது. பத்துமலை அடிவாரத்தில், முருகப்பெருமான் சிலை, விண்ணை முட்டி கம்பீரமாக காட்சி தருகின்றது.

    அமைவிடம்

    மலேசிய நாட்டின் தலைநகரமாய் திகழும் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பத்துமலை அமைந்துள்ளது. இது சிலாங்கூர் மாநிலம், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    பினாங்கு தண்ணீர்மலை :

    மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இதில் உள்ளது தண்ணீர்மலை முருகன் ஆலயம்.

    சோழமன்னன் வென்ற கடாரம் என்ற ஊர், இத்தீவின் அருகேயுள்ள கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாக பினாங்கும், கோலாலம்பூரும் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகரத்தார் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி, ஐந்து ஏக்கர் பரப்பில் தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயம் அமைத்துள்ளனர். இதுதவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், இன்று தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் கொடிமலை முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.



    அதன்பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகே தண்ணீர்மலை முருகன் கோவில் பெரிய அளவில் வெளியே தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியம் புதிய கோவில் கட்ட முன்வந்தது.

    மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி பகுதி தேர்வு செய்யப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட படிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. சுமார் நானூறு அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    ஈப்போ கல்லுமலை :

    மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ, கோடீஸ்வரர்களின் பூமி என்ற அடைமொழியால் வழங்கப்படுகிறது. கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் நிறைந்த நகரம். வெள்ளீயம் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட பூமியும் இதுவே.

    இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.

    இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    ஆலயம் கிந்தா நதிக்கரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது.

    ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரே ஈப்போ மக்களை காத்தருளும் இறைவன்.

    ஈப்போ நகரில் குனோங்கிலோ பகுதியில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையில் கல்லுமலையின் அடிவாரத்தில், கிந்தா நதிக்கரையோரம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது.
    திருநெல்வேலி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னாக்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் ஆலயம்.
    திருநெல்வேலி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது திருவருண்மலை. இந்த ஊரின் பெயர் மாறி தற்போது பொன்னாக்குடி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் ஆலயம்.

    திருவருண்மலை என்ற இந்த ஊரில் முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் மடம் ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தார். அவர் சற்று வித்தியாசமானவர். தினமும் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஊரில் உள்ள வீடு, வீடாக சென்று ‘‘உஞ்சவிருத்தி" (யாசகம்) செய்து அதன் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு தானியங்களை கொண்டு வந்து உணவு சமைப்பார். சமைத்த உணவை ஊரில் உள்ள குளக்கரை மீதமர்ந்த விநாயகர் முன்பு படைத்து, நைவேத்தியம் செய்து, பின்னர் தான் வளர்க்கும் நாய்க்கும் கொடுத்து கோவில் மணியை அடிப்பார். அந்த ஒலி கேட்டு அவ்வூர் சிவாலய மணி அடிக்கப்படும். அதன் பின்னரே அவ்வூர் மக்கள் உணவு உண்பார்கள். அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாட்டிற்கும் ஒருநாள் பங்கம் வந்தது.

    வழக்கம்போல் பிடி அரிசி பெற்று வந்து உணவு சமைத்து, விநாயகருக்கு படைத்த பின்னர் நாயை தேடினார் முனிவர். ஆனால் நாயைக் காணவில்லை.

    தென்பாண்டிய நாட்டை அப்போது ஆண்டு வந்த சுந்தரபாண்டியன் என்ற மன்னன், புதரின் மறைவில் இருந்த நாயை, ஏதோ ஒரு கொடிய மிருகம் என்று தவறாக கருதி அம்பெய்து கொன்று விட்டான். நாயை தேடிச்சென்ற மக்கள் இந்தக் காட்சியை கண்டனர்.

    மன்னனை அழைத்துக் கொண்டும், இறந்த நாயைத் தூக்கிக்கொண்டும் முனிவரிடம் வந்தனர். முனிவர் கோபமாக மன்னனிடம், ‘அநியாயமாக இந்த நாயை கொன்று உயிர்வதை செய்ததுடன், ஊர் மக்களையும் பட்டினி போட்டு விட் டாயே! ’ என்றார்.

    அதைக்கேட்ட மன்னன், ‘அறியாமல் செய்த இப்பிழையை பொறுத்து, அதில் இருந்து மீள தகுந்த பிராயச்சித்தம், பரிகாரம் சொல்லுங்கள்’ என்று மன்றாடினான்.

    அதற்கு முனிவர், ‘பொன்னால்(தங்கத்தால்) ஒரு நாய் செய்து இங்கு வை. அந்த நாய் உணவு அருந்தினால் நீ செய்த பாவம் நிவர்த்தியாகும்’ என்றார்.

    மன்னனும் அதை சிரமேற்கொண்டு பொன்னால் நாய் செய்து அங்கு கொண்டு வைத்தான். முனிவர் இறைவனிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்த பொன் நாய் உயிர் பெற்று, வாலை ஆட்டிக்கொண்டு உணவை உட்கொண்டது. அதைப்பார்த்து மக்களும், மன்னனும் அதிசயித்தனர், மகிழ்ந்தனர்.

    உணவு அருந்தியதும் அந்த நாயானது அனைவரும் ‘‘தோ, தோ" என்று கூப்பிட்டும் பாராமல் நாங்குநேரி சென்றது. ‘வானுமாமலை’ பெருமாள் கோவில் திருக்குளத்தை அடைந்து, அக்குளத்தில் விழுந்து எழுந்து ஒரு மன்னனாக உருமாறி மேலுலகம் சென்றது. இது ஒரு கர்ண பரம்பரை கதையானாலும், நாயானது அந்த ஊரில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி சென்று குளத்தில் சாபவிமோசனம் அடைந்ததை ஜீயர் மடம் வெளியிட்டு உள்ள தோத்தாத்ரி நாதர் மகாத்மியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

    அன்றில் இருந்து ‘திருவருண்மலை' என்ற இவ்வூருக்கு ‘பொன்நாய்க்குடி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘பொன்னாக்குடி’ என்றாகியது.

    அன்று மதுரையம்பதியிலே கல் யானை கரும்பு உண்டது அல்லவா? அதுபோல் இங்கு பொன் நாய் உணவு உண்டது. இங்குள்ள குளம் சுந்தரபாண்டியன் குளம் என்றும், அக்குளக் கரையில் உள்ள விநாயகர் சுந்தரபாண்டிய விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த பொன்னாக்குடியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருப்பெயர் அருணாசலேஸ்வரர், இறைவி உண்ணா முலையம்மை. ஈசன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    இனி இக்கோவிலின் அமைப்பை பார்ப்போம்.

    வெளிப்பிரகாரம், அதில் கொடி மரம், அடுத்து பலிபீடம். கிழக்கு வாயிலின் நுழைவு வாயிலில் வலதுபுறம் வள்ளி, சுப்பிரமணியர், தெய்வானை ஆகியோரின் மிகப்பெரிய சிலையும், இடதுபுறம் விநாயகர், நாகர்களும் உள்ளன. கொடிமரம், பலிபீடத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் எதிரில் பெரிய பிரதோஷ நந்தி அமைந்துள்ளது. இடது புறம் சூரியன், அதிகார நந்தி, வலதுபுறம் சந்திரன்.

    அதைத்தாண்டி உள் பிரகாரத்தில் நுழைந்தால் தென்வரிசையில் வடக்கு நோக்கி ஜூரதேவர், 63 நாயன்மார்கள், சமயக்குரவர் நால்வர், வராகி, சாமுண்டி, வைஷ்ணவி, சரஸ்வதி தேவியர். கன்னி மூலையில் கணபதி. தென்புறம் நோக்கி தட்சிணாமூர்த்தி. உள்பிரகாரம் வடவரிசையில் வள்ளிவேசேனா சமேத சுப்பிரமணியர். அவர்களை வணங்கி சென்றால் அடுத்து சனீஸ்வரர். அவர் எதிரில் சிவலிங்க கரு வறையை நோக்கி சண்டிகேஸ்வரர். அவரை வணங்கி விட்டு சென்றால் ஈசானிய மூலையில் தென்புறம் பைரவர் உள்ளார்.

    இவர்களை தரிசித்து நந்தியெம்பெருமானிடம் வந்து அவர் பின்புறம் நின்று எதிரில் நோக்கினால் மூலஸ்தான கருவறையை அடைத்துக்கொண்டு மிகப்பெரிய லிங்க உருவில் அருணாசலேஸ்வரர். அவரைத்தொழுது கொண்டே படியேறினால் உண்ணாமுலையம்மாள் வலது கையில் பூச்செண்டும், இடது கையை தொங்க விட்டு மடிமீது கை வைத்துக்கொண்டும் அருள்பாலிக்கிறார். கோவிலில் நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னிதி கிடையாது. அதேபோல் கோவிலுக்கென்று ராஜகோபுரம் இல்லை. ஆனால் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு தனித்தனி விமானங்கள் உண்டு.

    இவ்வூரில் வாழ்ந்த முனிவரையும், அவரது நாயையும் கருத்தில் கொண்டால் இது ஒரு பைரவ ஸ்தலம். அதனால் பைரவருக்கு அவ்வப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அஷ்டமி தோறும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
    செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் என்ற தலம் பற்றியும், அது ஒரு செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் என்றும் அனைவருக்கும் தெரியும்.

    ஆனால், ஆதி வைத்தீஸ்வரன் கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

    ஆம்! ராதா நல்லூர் என்ற தலத்தை, அப்படித்தான் அழைக்கின்றனர்.

    இங்குள்ளது வைத்தினாத சுவாமி ஆலயம். இந்தக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம், ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபம் உள்ளது. எதிரே நந்தி மற்றும் பலி பீடம். அடுத்துள்ள மகா மண்டபத்தில் இடது புறம் இறைவி அருள்மிகு தையல் நாயகியின் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை கடந்ததும் இறைவனின் கருவறை உள்ளது. இறைவன் வைத்தினாத சுவாமி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரின் திருமேனி உள்ளது. மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் தென்கிழக்கு மூலையில் சூரிய பகவானின் திருமேனிகள் உள்ளன.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மேற்கு பிரகாரத்தில் முத்துக் குமார சுவாமி, வள்ளித் தெய்வானையுடன் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து மகாலட்சுமியின் சன்னிதி உள்ளது. இந்தச் சிலை மண் மேட்டில் புதைந்திருந்ததாகவும், மேட்டை சமன் செய்யும் போது கிடைத்தது எனவும், பின்னரே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும் சொல்கின்றனர் ஊர் மக்கள்.

    வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தின் தென் கிழக்கு மூலையில் சனி பகவான் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் மூல கணபதியின் சன்னிதி இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் இறைவன், இறைவி, முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளும் வைத்தீஸ்வரர் கோவிலில் உள்ளது போலவே அமைந்திருப்பதுடன், ஆலய அமைப்பும் கூட அந்த ஆலயத்தை ஒத்தே அமைந்திருப்பது வியக்க வைக்கிறது. இறைவன், இறைவி பெயர்களும் அப்படியே உள்ளன.

    இறைவனும் இறைவியும் நீராட தண்ணீர் வேண்டும் எனக் கேட்டபோது, அவர்களது புதல்வன் முருகன் தன் கையிலிருந்த வேலை தூக்கி எரிய, அந்த வேல் விழுந்த இடத்தில் ஒரு நதி உருவானது. சுப்பிரமணிய நதி என அழைக்கப்பட்ட அந்த நதியை, தற்போது மண்ணியாறு என்று அழைக்கின்றனர். ஆலயத்தின் தென்புறம் இந்த வற்றாத நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

    மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகையில் வரும் தீபத் திருநாள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது.

    ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஏழு நாட்கள் சூரியன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை குளிப்பாட்டுவது வழக்கம். அப்போது நடைபெறும் சூரிய பூஜையில் ஏரளமான பேர் கலந்து கொள்கின்றனர்.

    ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

    தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொள்கின்றனர். வந்த வியாதி கரைந்து, மறைந்து போகிறது.

    அந்த பக்தர்கள் வெல்லக் கட்டிகளைக் கொண்டு வந்து திருக்குளத்தில் கரைத்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்கின்றனர்.

    நாகை மாவட்டம் மணல்மேடு- பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள மணல்மேட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ராதாநல்லூர் என்ற திருத்தலம்.
    புதுவை மாநிலம் பாகூர் முள்ளோடை அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    புதுவை மாநிலம் பாகூர் முள்ளோடை அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் புதுவை மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. சீதாதேவி சமேதமாக வீற்றிருக்கும் ஸ்ரீ பட்டாபிராமர் பக்தர்கள் வேண்டியதை வழங்கி அருள்பாலித்து வருகிறார். 

    இந்த கோவில் கட்டப்பட்டதன் பின்னணியில் முக்கிய வரலாற்று சம்பவங்கள் உள்ளன. பழங்காலத்தில் கடலூர் தேவனாம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் அங்கு கோட்டை கட்டினான்.

    இதற்காக திருவக்கரை மலையில் இருந்து கற்கள் வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்டது. மதிகிருஷ்ணாபுரம் வழியாக இந்த கற்களை கொண்டு சென்றனர். அப்போது மதிகிருஷ்ணாபுரம் நீர்நிலைகளும், இயற்கை வளமும் நிறைந்து செழிமையாக இருந்தது. 

    எனவே, கற்களை கொண்டு சென்றவர்கள் இங்கு அமர்ந்து இளைப்பாறி விட்டு செல்வது வழக்கமாக இருந்தது.தேவனாம்பட்டினம் மன்னரிடம் கிருஷ்ணன் என்ற மந்திரி ஒருவர் இருந்தார். 

    அவரும் கல் எடுக்கும் பணியை மேற்பார்வையிட செல்வது உண்டு. அவர் ஒரு தடவை மதிகிருஷ்ணாபுரத்தில் இளைப்பாறி கொண்டிருந்த போது, கண் அயர்ந்து தூங்கினார். அப்போது ஸ்ரீ ராமர் சீதாதேவியுடன் பட்டாபிராமராக காட்சியளித்து மந்திரி கிருஷ்ணனுக்கு அருள்புரிந்தார்.

    இதனால் கனவில் தோன்றிய ஸ்ரீராமருக்கு அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தார்.எனவே, கோட்டை கட்ட ஒவ்வொரு தடவை கற்களை கொண்டு செல்லும் போதும் அதில் ஒரு கல்லை இங்கே போட்டு விட்டு செல்லும்படி ஊழியர்களுக்கு கட்டளையிட்டார். 

    அதன்படி அவர்கள் கற்களை போட்டு விட்டு செல்ல ஏராளமான கற்கள் குவிந்தது. அதை வைத்து மந்திரி கோவிலை கட்டினார். கோவில் கட்டி இருந்த விஷயத்தை மன்னரிடம் சொல்லி கும்பாபிஷேகத்துக்கு அழைத்தார். 

    கும்பாபிஷேக விழாவில் மன்னர் கலந்து கொண்டு அந்த இடத்துக்கு மந்திரியாரின் பெயரையே மதிகிருஷ்ணாபுரம் என சூட்டினார். 

    அதில் இருந்தே புகழ் பெற்ற ஆன்மிக பூமியாக மதிகிருஷ்ணாபுரம் திகழ்ந்து வருகிறது.இந்த கோவிலில் பட்டாபிராமர், சீதாதேவியுடன் லட்சுமணர், அனுமரும் அருள்பாலிக்கிறார்கள். 

    சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூதேவி உபநாச்சிமார்கள் உற்சவர்களாக உள்ளனர். 

    தும்பிக்கை ஆழ்வார், சக்கரத்தாழ்வார், விஷ்ணு துர்க்கை, கருடாழ்வார், சேனை தலைவர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆளவந்தார் பிரகார தெய்வங்களாக உள்ளனர். கோவில் கோபுரம் 37 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தை பாக்கியம், கடன் பிரச்சினை, எதிரிகளால் தொல்லை போன்றவற்றுக்கு தீர்வு ஏற்படுவதுடன் செல்வ விருத்தியும் ஏற்படுவதாக நம்பிக்கை உள்ளது.

    கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. தெப்ப திருவிழா, பாரிவேட்டை, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, உரியடி உற்சவம், மாசி மகம், ஆற்று திருவிழா என பல விசேஷ நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. 

    இதே ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலும் புகழ்பெற்ற திருத்தலமாக திகழ்கிறது.
    பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.
    பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    காசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.

    இதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.

    அவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.

    அதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.

    அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.

    காசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.

    அந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    தென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

    இக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    இங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.



    வழிபாடு :

    அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.

    1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    ஆலயச் சிறப்புகள் :

    இக்கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோவில் நடை அடைக்கப்படும் முன்பாக, சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கின்றனரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டே நடை அடைக்கப்படுகிறது. இக் கோவிலுக்குத் தாமதமாக வருபவர்களும் பசியால் வாடாமலிருக்க, இங்கிருக்கும் ஆலமரம் ஒன்றில் கோவில் பிரசாதம் உணவுப் பொட்டலமாகக் கட்டித் தொங்கவிடப்படுகிறது.

    இங்கு அன்னதானத்திற்கு எடுக்கப்படும் அரிசியின் அளவிற்கேற்பக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களது வறுமை அனைத்தும் நீங்கி வளமடைவர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    பெயர்க் காரணம் :

    அன்னபூரணேஸ்வரி கோவில் அமைந்திருக்குமிடம் ‘செருகுன்னு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரிலிருக்கும் சிறு குன்று ஒன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால், சிறு குன்று என்று அழைக்கப் பெற்றுப் பின்னர் அது ‘செருகுன்னு’ என்று மாறிப் போய்விட்டது என்று சிலரும், தொடக்கத்தில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்தது என்றும், சோற்றுக்குன்று என்று அழைக்கப்பட்டதே செருகுன்னு என்று மருவி விட்டது என்று சிலரும் சொல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
    வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் திகழ்கிறது.
    வைக்கத்தஷ்டமி நாளில் அன்னதானம் செய்து வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

    ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான். ஆனால், அது முடியாமல் போனது.

    அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

    அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான். பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான். இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

    பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். இது கரன் என்ற அசுரனால் வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் மகாதேவர் தல வரலாறு குறித்து, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

    வேண்டியது கிடைக்கும் :

    இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரிய அனைத்து நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இக்கோவிலில் அம்மன் இல்லை என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு நாட்கள் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வைக்கத்தஷ்டமி :

    ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் ஆலமரத்தோடு கூடிய மேடையை ‘வியாக்ரபாதர் மேடை’ என்று அழைக்கிறார்கள். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு, சிவபெருமான் இந்த இடத்தில்தான் காட்சி அளித்தார் என்றும், முனிவர் இறைவனிடம், தனக்குக் காட்சியளித்த நாளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.



    இந்தக் கோவிலில் வியாக்ரபாதருக்கு இறைவன் காட்சியளித்த நாளான, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் ‘வைக்கத்தஷ்டமி’ என்ற விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டியின்படி இந்த விழாவிற்கான தினம், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் பவுர்ணமியை அடுத்த அஷ்டமி நாளில் வருகிறது. இந்நாளில் இங்கிருக்கும் இறைவனை வழி படுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

    வனதுர்க்கை வழிபாடு :

    வைக்கம் மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் வனதுர்க்கை சன்னிதி ஒன்று இருக்கிறது. இந்தச் சன்னிதிக்கு மேற்கூரை எதுவும் இல்லை. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வந்த போது, அரக்கி ஒருத்தி அவருக்கு இடையூறு செய்து கொண்டே இருந்தாளாம். அவள் ஒரு கந்தர்வ கன்னி என்பதும், அவள் ஒரு சாபத்தால் அரக்கியாக மாறியிருப்பதும் முனிவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து வியாக்ரபாதர் அவளுக்குச் சாபவிமோசனம் கிடைக்க, விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். விநாயகப் பெருமானோ, திரிசூலி தேவியை அனுப்பி அரக்கியை மூன்று துண்டுகளாக்கி சாப விமோசனம் அளிக்கச் செய்தார். அந்த அரக்கியின் உடல்பகுதி விழுந்த இடத்தில்தான் வனதுர்க்கை சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இங்குள்ள வனதுர்க்கையை வழிபட்டால், மனிதர்களிடம் உள்ள அரக்க குணங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வைக்கம் போராட்டம் :

    வைக்கம் மகாதேவர் கோவிலின் முன்பு, பக்தர்கள் வழி படுவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட 108 குடும்பங்களின் வழிபாட்டுக்குரிய கோவிலாக மட்டும் இந்த ஆலயம் இருந்தது. இக்கோவில் அமைந்திருக்கும் வீதியில் ஈழவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துக் கேரளத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டக்காரர் களின் வேண்டுகோளை ஏற்றுத் தந்தை பெரியாரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகனின் வெற்றிக்காக அன்னமிட்ட ஈசன்:

    சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழிப்பதற்காக முருகப்பெருமான் புறப்பட்டார். அவர் சூரர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சிவபெருமான் வைக்கத்தப்பன் கோவிலில் வைக்கத்தஷ்டமி நாளில் அன்னதானம் செய்ததாக கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதும், இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக கலந்து கொண்டு ஆசி வழங்குவார்கள் என்பதும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த அன்னதான நிகழ்வை மலையாளத்தில் ‘பிராதல்’ என்று அழைக்கின்றனர். அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், எர்ணாகுளம் நகரில் இருந்து தெற்கே 33 கிலோமீட்டர் தொலைவிலும் வைக்கம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல இரு ஊர்களில் இருந்தும் அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    அணைக்கரை. இந்த ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் ஒரு குழந்தை மிதந்து வந்தது.
    “என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அந்த மழலையின் குரல் கேட்கவே, ஊர் மக்கள் ஒன்று கூடினர். ஆற்றில் மிதந்து வரும் குழந்தையைப் பார்த்தனர், பதறினர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது? என்று புரியாமல் மக்கள் திகைத்து நிற்க, ஒரு அசரீரி ஒலித்தது.

    “குழந்தையைக் காப்பாற்றுங்கள். நீங்கள் நடந்தால் நீர் முன்னே வற்றும். பின்னே பெருகும்” என்ற அந்த அசரீரியின் குரலை கேட்ட மக்கள் ஆற்றில் இறங்கினர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கியதும் நீர் முன்னே வற்றியது, பின்னே பெருகியது. குழந்தையைக் காப்பாற்றிய மக்களில் ஒருவர் அக்குழந்தையை தோளில் சுமந்தபடி ஊரை நோக்கி நடந்தனர்.

    குழந்தையின் சுமை தாங்காது அக்குழந்தையை அருகே இருந்த ஏரழஞ்சி மரத்தடியில் வைத்தனர். அக்குழந்தை தெய்வக் குழந்தை என உணர்ந்த மக்கள், அதை அங்கேயே விட்டு விட்டு அகன்றனர். அக்குழந்தையே வில்லியாண்டவர் என்னும் திருநாமத்தோடு மக்களை காத்து வருகிறார்.

    அவர் அருள்பாலிக்கும் ஆலயமே அருள்மிகு வில்லியாண்டவர் திருக்கோவில்.

    இறைவனைக் காண ஆலயத்திற்கு வந்த நல்ல நாயகி என்ற பெண் அங்கேயே தங்கிட, அவளைத் தேடி பெண்ணின் உறவினர்கள் ஆலயத்திற்கு வந்தனர்.

    “கவலை வேண்டாம். இவள் என் தென்புறத்தே கோவில் கொண்டு ‘நல்ல நாயகி அம்மன்’ என்னும் பெயரோடு விளங்குவாள்” என அசரீரி ஒலிக்க, அதன்படி ஆலயம் அமைக்கப்பட்டு விட்டது.

    ஆலய அமைப்பு :

    ஆலயத்தின் வெளியே தென்புறம் வெள்ளங்காத்த விநாயகர் ஆலயமும், வடபுறம் அகோர வீரபத்ரர் திருக்கோவிலும் உள்ளன. அடுத்த தாக தூண்டில் கருப்பன் சன்னிதி உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிரகாரம் உள்ளது. வலதுபுறம் பைரவர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து உள்ள மகாமண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் காவல் நிற்க, இடதுபுறம் பிள்ளையார் மற்றும் வலதுபுறம் ஆதி வில்லியாண்டவர் திருமேனிகள் உள்ளன.

    கருவறையில் இறைவன் வில்லியாண்டவர், பூரணை புஷ்கலை சமேதராக அருள்பாலிக்கிறார். வலதுபுறம் உள்ள அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப வாசலில் துவார பாலகிகள் கம்பீரமாக நிற்க, கருவறையில் இறைவி நல்ல நாயகி தன் தோழியோடு அருள்பாலிக்கிறாள். இக்கோவிலில் உள்ள சுதை வேலைபாடுகளைக் காணும் போது இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    முதலை சவாரி :

    கொள்ளிடத்தில் ஆங்கிலேயர் அணை கட்டிய காலத்தில் இக்கோவிலின் வடமேற்கே உள்ள கோடலி கருப்பூர் என்னும் ஊரிலிருந்து பூஜை பொருட்களுடன் ஆலய பூசாரி கொள்ளிடம் ஆற்றில் உயிருடன் இருக்கும் முதலையின் மேல் பயணம் செய்து ஆலயத்துக்கு வருவாராம். பூஜையை முடித்துவிட்டு அதே முதலைமேல் அமர்ந்து கருப்பூர் துறைக்கு திரும்புவாராம். சுவாமிக்கு படைத்த நைவேத்தியத்தையும் முதலைக்கு உணவாகக் கொடுப்பாராம்.

    இதை மெய்பிக்கும் வகையில் ஆலயத்தின் தென்புறத்தில் கர்ப்பக் கிரக கோபுரத்தின் மேல் பகுதியில் முதலைச் சுதையின் மீது பூரணை - புஷ்கலை சமேதராக வில்லியாண்டவர் காட்சி தருவதைக் காணலாம்.

    பிரார்த்தனைகள் :

    குழந்தை வரம் வேண்டுவோர் இறைவன் சன்னிதியில் மரத்தால் ஆன தொட்டிலைக் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணம் நடந்தேற மணப்பெண் அல்லது மணமகன் ஜாதகத்தை இறைவனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தருகின்றனர். அவர்கள் திருமணம் விரைந்து நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    தங்களது உடைமைகளை பறிகொடுத்த மக்கள் தங்களது வேதனையை ஒரு சீட்டில் எழுதி வீரபத்ர சுவாமியின் கரத்தில் கட்டி ஆராதனை செய்தால் களவு போன பொருள் திரும்ப கிடைத்துவிடுவது நிஜம் என்கின்றனர் ஊர்மக்கள். கோவிலைப் புதுப்பிக்கும் போது இறைவன் கருவறை அருகே ஒரு பெரிய நாகம் பொக்கலின் இயந்திரத்தில் அடிபட்டு இறக்க கோவிலுக்கு வெளியே அந்த நாகநாதருக்கு தனி ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சம், ஏரழஞ்சி மரம்.

    கொள்ளிடம் ஆற்றை தன் கழுத்தில் மாலை போல் அணிந்து வெள்ள அபாயத்திலிருந்து அனைவரையும் காத்து நிற்கும் வில்லியாண்டவருக்கு ‘அனை காத்த குட்டியாண்டவர்’ என்ற பெயரும் உண்டு. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் இந்த ஊருக்கும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கும் காவல் தெய்வமாய் விளங்குவது உண்மையே.

    யானை சிலை :

    பெருக்கெடுத்து ஓடும் கொள்ளிடம் நீரை சேமித்து வைக்க நினைத்த ஆங்கிலேயர்கள் இந்த ஆலயத்தின் அருகே ஒரு அணையை கட்ட முயன்றனர். ஆனால் அணையை கட்ட கட்ட அது யானை அடியுடன் இடிந்து இடிந்து விழத் தொடங்கியது.

    ஆண்டவனை நினையாது நாம் பாலம் கட்டும் பணியை தொடங்கி விட்டோமே என எண்ணிய ஆங்கிலேயர்கள். வில்லியாண்டவரை வணங்கி, அவர்முன் சுமார் நாற்பது அடி உயரமுள்ள யானையை சுதை வடிவில் வடிவமைத்து, இறைவனை வேண்டி பாலப் பணியைத் தொடர, பணி நல்ல முறையில் நிறைவடைந்தது என பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். இந்த யானைச் சிலை ஆசியாவிலேயே பெரிய சுதை சிலை என்று கூறுகின்றனர்.

    கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அணைக்கரை.
    தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம்.
    பிரம்மாவின் மானசீகப் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்கிற நான்கு முனிவர்களும் வேதம், ஆகமம், சாத்திரம், புராணம் முதலான ஞானநூல்கள் பலவற்றையும் முறைப்படிக் கற்றவர்கள். இம்முனிவர்கள் கல்வி வேள்விகளில் வல்லவர்களாகத் திகழ்ந்தும் உண்மைத் தத்துவத்தை உணரவில்லை. உண்மையை அவர்களுக்கு உணர வைக்க ஈசன் திருவுளம் கொண்டார். அதற்கான காலம் கைகூடியது.

    அம்பிகை பார்வதியாகப் பிறந்து தவமியற்றிய பொழுது, இறைவனும் கயிலை மலைச்சாரலில் கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக வீற்றிருந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தார். இடக்காலை மடித்து உட்கார்ந்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து, வலக்கரத்தினால் சின்முத்திரை காட்டி, உண்மைநிலை எது என்பதை உணர்த்தினார். பாதத்தின்கீழ் உள்ள முயலகன் என்னும் அசுரன் அஞ்ஞானம் என்னும் அறியாமையின் சின்னம். சின்முத்திரை தத்துவத்தை அனைவரும் அறிந்து அதன்வழி நிற்கவே, ஆலயங்களில் தெற்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.

    நவக்கிரகங்களுள் இடம்பெறும் குருபகவான் என்கிற வியாழன் கிரகம் இவரன்று. அவ்வியாழனே இவரைப் பூஜித்ததால்தான் பிரகஸ்பதி என்கிற தேவகுரு தகுதிக்கு உயர்ந்தார். எனவேதான் மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே ஆதிகுருவாக விளங்குகிறார்.

    தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம்.

    இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்மழை பொழியும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குரு பலம் கூடுகிறது. தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுதான். ஒரே விமானத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் தெற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் கயிலாசநாதரும் வீற்றிருந்து அருள்பாலிப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

    இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனைத்துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் ‘கோவிந்தபாடி’ என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது ‘கோவிந்தவாடி அகரம்’ என அழைக்கப்படுகிறது. சிறந்த சைவ-வைஷ்ணவ- குரு ஸ்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் தல புராணம் பற்றிக் காண்போம்.



    முன்பொரு முறை குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்குமிடையே கடும் பகை ஏற்பட்டது. இதுபற்றி திருமாலிடம் முறையிட்டு தன்னைக் காக்க வேண்டினான் குபன். உடனே ததீசி முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். முனிவரின் வஜ்ர உடலைத் தாக்க முடியாமல் சக்ராயுதம் கூர் மழுங்கியது. இதனால் செய்வதறியாது திகைத்த திருமால், தேவர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்கள் சிவனிடம் சக்ராயுதம் இருப்பதையும் அதனைப் பெறும் விவரத்தையும் கூறினர்.

    ஒருசமயம் சலந்தாசுரன் என்பவன் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். இதுபற்றி தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவபெருமான் விரலால் பூமியில் வட்டமிட்டார். அவ்வட்டம் ஒரு சக்கரமாக உருப்பெற்று சலந்தாசுரனை அழித்துவிட்டு, சிவனிடம் வந்து சேர்ந்தது. சிவனாரிடம் உள்ள அந்த சக்கரத்தை கேட்டுப் பெறலாம் என்றும், காஞ்சி மாநகரில் சிவ வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என்றும் தேவர்கள், திருமாலிடம் யோசனை கூறினர்.

    உடனே திருமால் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் காஞ்சி மாநகர் வந்தார். சிவனருள்பெற, தீட்சை பெற வேண்டும் என்ற நியதியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் திருமால். அங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி, தேகம் முழுவதும் விபூதி இட்டு, ருத்ராட்சம் அணிந்து, பாசுபத விரதமிருந்து ஈசனாரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். திருமாலின் தவத்துக்கு மகிழ்ந்து, காட்சி கொடுத்த சிவபெருமான் குருவாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்கிறது தல புராணம்.

    இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியுள்ளார். ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள் எவரையும் பார்க்காதது போலவும், இருக்கும் எல்லாரையும் பார்ப்பது போலவும் இரு கோணங்களில் காணப்படுகிறது. வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி இவர். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல் ‘கயிலாயம்’ போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது. சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சி தருகிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் எழுந்தருளியிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ெரயில் நிலையத்திலிருந்து (தற்போது பள்ளுர் ரெயில் நிலையம்) 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது. சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்திலிருந்து தினமும் திருமால்பூருக்கு ெரயில் சேவை உள்ளது.
    கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது.
    ராமாயண கால சிறப்பு பெற்றதும், நவக்கிரக பரிகார தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கூடங்குளம் அருகில் உள்ள விஜயாபதி என்ற தலத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முக்கியமான சிறப்பு சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்திரருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது.

    விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் அரக்கர்களை கொன்ற காரணத்தால் ராம, லட்சுமணர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை தீர்ப்பதற்காக யாகம் செய்ய இடம் தேடி, தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளி தேவியை பிரதிஷ்டை செய்து விட்டு, அவர்களோடு தெற்கு திசை நோக்கி விஸ்வாமித்திரர் வந்தார். அதே தில்லை வனம் விஜயாபதியிலும் இருப்பதை கண்டு, அங்குள்ள தோப்பில் காளி தேவியை பிரதிஷ்டை செய்து காவல் தெய்வமாக்கினார்.

    அதன் பின்னர் ஹோம குண்ட விநாயகர், விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆகிய தெய்வங் களையும் பிரதிஷ்டை செய்த பின்னர் ஹோம குண்டம் வளர்த்து, யாகம் செய்து ராம, லட்சுமணர்களின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். பின்னாட்களில், விஸ்வாமித்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் இங்கே கோவில் எழுப்பி அவனது மீன் சின்னத்தை இரட்டை மீன்கள் வடிவத்தில் கோவிலுக்கு உள்புற முகப்பில் அமைத்து வைத்தான்.

    எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடம் விஜயாபதி என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கடலில் உள்ள விஸ்வாமித்ர தீர்த்த கட்டத்தில் நீராடிவிட்டு, தில்லைக்காளி கோவிலில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும் உடனடி பலன் கிடைப்பது பலருக்கும் நம்பிக்கையாக உள்ளது.

    இங்குள்ள கடலில் நீராடிவிட்டு, கோவிலில் உள்ள தெய்வ மூர்த்திகளை வழிபடுவதன் மூலம் ஒருவரது குடும்பத்தில் இறந்த கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மா ஆகியவை சாந்தி அடைய வழி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இங்கு, மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம், புஷ்பாஞ்சலி, அன்னதானம் ஆகியவை நடத்தப்படுகிறது. விஸ்வாமித்திர மகரிஷி சூட்சும நிலையில் இங்கே தவம் செய்து வருவதாகவும் செய்திகள் உண்டு.

    விஜயாபதி தலத்தில் செய்யப்படும் முக்கியமான பரிகாரம் நவ கலச பூஜை ஆகும். இந்த பூஜை முறைப்படி ஒன்பது கலசங்களில் ஒன்பது விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, ஸ்நான பொடி, வெட்டிவேர், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து, வாசனாதி திரவியங்களை தூவி விட்டு, கலசங்கள் நவ கிரகங்கள் கோவிலில் உள்ள வரிசைப்படி அமைக்கப்படும். நவக்கிரக பரி காரத்துக்கு உரியவர் மேற்கண்ட கலசங்களுக்கு முன்பாக கிழக்கு பார்த்து அமர வைத்து பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் கோவில் வில்வ மரத்தடியில் அவரை அமர வைத்து ஒன்பது கலசங்களில் உள்ள தீர்த்தம் மூலம் நவ அபிஷேகம் செய்யப்படும். அதன் மூலம் சம்பந்தபட்டவரை பிடித்த தோஷங்கள் விலகி அவரது உடலும், உள்ளமும் பரிசுத்தமாவதாக ஐதீகம். அதன் பின் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கும், மகாலிங்க சுவாமிக்கும் அர்ச்சனை செய்யப்படும்.

    நவக்கலச அபிஷேகம் முடிந்த, அதே ஈரத்துணியுடன் அருகில் உள்ள விஸ்வாமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடமான கடல் பகுதியில் தீர்த்தமாட வேண்டும். பிறகு, கடற்கரை மணல் நெற்றியில் படுமாறு இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை சிவ மந்திரத்தை சொல்லியபடி உருண்டு எழுந்து, கடலில் மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படி மூன்று முறை செய்த பின்பு, எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டு, அது கடலுக்குள் எறியப்படும். மேலும், அணிந்துள்ள ஆடைகளை கடலில் விட்டுவிடுவது முறை.

    விஸ்வாமித்திரர் யாகம் செய்த ஹோமகுண்டம் இப்பொழுது கிணறாக உள்ளது. இந்த கிணற்றைத் தோண்டி, பாறைகளை மேலை நாட்டினர் ஆராய்ச்சிகள் செய்தபோது, அதன் வயது ராமர் பாலத்தின் வயதுக்கு இணையாக இருந்தது என்பது தகவலாக குறிப்பிடப்படுகிறது.

    விஜயாபதி பரிகார தலமாக இருப்பதால் பித்ரு தர்ப்பணம் செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது. நவ கலச யாக பூஜை பகல் 12 மணிக்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லப்படுவதோடு, பூஜை முடிந்த பின்னர் வேறு எங்குமே செல்லாமல் நேராக வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப் படுகிறது. பூஜை காரணமாக, பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை விலகுவதோடு, ஒருவரது முற்பிறவிகள் மற்றும் இப்பிறவியில் செய்த பாவ கர்மாக்கள் மற்றும் நவக்கிரக தோஷங்கள் கட்டுப்படுவதாகவும் நம்பிக்கை.

    திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வழியாக, ராதாபுரம் சென்றால், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் விஜயாபதி என்ற இந்த கடற்கரை ஊர் அமைந்துள்ளது.
    நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்.
    நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார். இறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை.

    தல வரலாறு :

    இரணியன் ஒரு அசுரகுல அரசன். விஷ்ணுவை தன் பகைவனாகக் கருதியவன். பதினான்கு உலகங்களிலும் தன் ஆட்சியை செலுத்தி வந்தான் அவன். பிரம்ம விஷ்ணுவாதி தேவதைகளும், எட்டுத் திக்குப் பாலகர்களும், வசிட்டர் முதலிய முனிவர்களும் இரணியன் அவனது சொல்படி கேட்டு நடந்தனர். அதாவது அவ்வாறு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு இருந்தனர். அவனது குலகுரு சுக்கிராச்சாரியார். அவரது ஆணைப்படி சிவபெருமானை நோக்கி தவமிருந்தான் இரணியன். தேவர், மனிதன், மிருகம், பறவைகளாலும் எந்தவித ஆயுதங்களாலும், வீட்டின் உள்ளும், புறமும், பூமியிலும், ஆகாயத்திலும், இரவிலும், பகலிலும் தனக்கு மரணம் உண்டாகாதபடி சிவபெருமானிடம் வரம் பெற்றான். அந்த வரத்தின்படி அவனது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

    இரணியனின் மகன் பிரகலாதன். அவன் கல்வி கற்கத் தொடங்கினான். ‘இரணியாய நம’ எனச் சொல்லும்படி ஆசான் சுக்கிராச்சாரியார் சொல்ல அவன் மறுத்தான். ‘‘ஸ்ரீமன் நாராயணனே வணங்கத் தக்கவர். அவர் பெயரை மட்டுமே நான் சொல்வேன்’’ என பிரகலாதன் கூற இரணியனுக்கு கோபம் தலைக் கேறியது.

    ‘‘உன் வீம்பு அளவுக்கு அதிகமாக வளர்கிறது. நீ கூறும் உன் விஷ்ணு எங்கிருக் கிறார்..?, இதோ இந்த தூணில் உன் விஷ்ணு இருப்பானா..?’’ என்ற இரணியன், அருகே இருந்த ஒரு தூணைக் காட்ட “இருப்பார், நிச்சயம் இருப்பார் தந்தையே” என்று பிரகலாதன் கூற, கோபம் தலைக்கேறி இரணியன் எதிரே இருந்த தூணை எட்டி உதைத்தான்.

    உடனே, ஆயிரம் சிங்கங்கள் முழங்கியது போல் ஓர் ஓசை கேட்டது. தூண் இரண்டாகப் பிளந்தது. கண்களில் தீப்பொறி பறக்க சிங்க முகத்துடனும், கழுத்துக்கு கீழே மனித வடிவத்துடனும், நீண்ட வாலுடனும், கூரிய பற்கள்-வளைந்த நகத்துடனும் நரசிம்ம மூர்த்தியாய் விஷ்ணு தோன்றினார். இரணியனின் மார்பில் அறைந்தார். பூமியில் தூக்கி அடித்தார். அவனை தன் மடியில் கிடத்தி, நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்தார். அவனது ரத்தத்தை குடித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார்.

    அதைப் பார்த்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர். நரசிம்மமூர்த்தி அடக்க முடியாத சினத்துடன் இருப்பதைக் கண்ட லட்சுமி பஞ்ச சுத்தி செய்து பூஜித்தாள். சினம் குறைந்து, மனம் மகிழ்ந்த நரசிம்மமூர்த்தி லட்சுமியை தன் மடிமீது இருத்தி மகிழ்ந்தார். பிரகலாதன் நடுக்கம் நீங்கி நரசிம்மரை வணங்கினான்.

    தேவர்கள் நரசிம்ம மூர்த்தியை நோக்கி, “எம்பெருமானே! தூய்மை உடையவரால்தான் பிறர் பாவங்களைப் போக்க முடியும். தாங்கள் இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவராய் உள்ளீர். எனவே அகண்ட காவிரியின் தென் பாகத்தில், மேற்கு முகமாய் கோவில் கொண்டிருக்கும் பச்சாதாபேசுவரரை பூஜித்தால் தங்களது பாவம் விலகும்’’ எனக் கூறினர்.

    தேவர்கள் சொன்னபடியே நரசிம்மமூர்த்தி லட்சுமியுடனும், பிரகலாதனுடனும் பச்சாதாபேசுவரர் எழுந்தருளியுள்ள கருப்பத்தூர் வந்தடைந்தார். அங்குள்ள ஆலயத்தில் அருள் பாலிக்கும் பச்சாதாபேசுவரரையும் இறைவி சுகந்த குந்தளாம்பிகையும் வணங்கி பூஜித்தார்.

    சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, ‘‘இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய்’’ எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறினார்.

    அப்போது, சிவபெருமான் கங்கையின் நீரை நந்தியின் காது வழியே செலுத்தி நரசிம்மரின் பாவம், ரத்தக்கறை இரண்டையும் நீங்கச் செய்தார். பின் கங்கை நீர், ரத்தக்கறை எல்லாம் அருகே உள்ள அகன்ற காவிரியில் கலந்தது. அதில் நரசிம்மரும், லட்சுமியும் நீராடி பாவ விமோசனம் பெற்றனர்.

    ஆலய அமைப்பு :

    பச்சாதாபேசுவரரான சிவபெருமான் அருள்பாலிக்கும் இந்த ஆலயம் கருப்பத்தூரில் உள்ளது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். நுழைவாயிலைத் தாண்டியதும் அகன்ற பிர காரம். அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். பலி பீடத்தை அடுத்து நந்தியம் பெருமான் வீற்றிருக்கிறார். இவர் காதில் பெரிய துவாரம் உண்டு. மண்டபத்தின் இடதுபுறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் மலர்களையும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடனும் அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு.

    மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாயிலில் இடதுபுறம் சண்டி துவாரபாலகரும், வலதுபுறம் முண்டி துவாரபாலகரும் வீற்றிருக்க மண்டபத்தின் உள்ளே இடதுபுறம் மீனாட்சி சுந்தரேசுவரரும், அஷ்டபைரவரும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சிம்ம புரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் இறைவனுக்கு பின்புறம் உள்ள சுவற்றில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் தனியாக காட்சி தருவது இத்தலத்தின் தலவரலாற்றுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

    பிரகாரத்தின் வடக்கு திசையில் மகாலட்சுமியின் தனி சன்னிதி உள்ளது. சிவாலயத்தில் மகாலட்சுமியின் சன்னிதி இருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். கணவருக்கு பாவம் தீர அருள்புரிந்த ஆலயத்தில் அன்னை மகாலட்சுமி தங்கி அருள்பாலிப்பதில் வியப்பாக இருக்கிறது. வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியும் உள்ளன.

    மஞ்சள் கிழங்கு :

    நரசிம்மரும், லட்சுமியும் இத்தல இறைவியை ஆராதனை செய்து வணங்கியபோது அவர்கள் கொண்டு வந்த பூ பந்து, மஞ்சள் கிழங்குகளாக மாறியதாம். எனவே இன்றும் பூசுமஞ்சளை அரைத்து அதை அம்மன் கழுத்தில் சாத்துகின்றனர். பக்தர்களுக்கு அதையே பிரசாதமாக தருகின்றனர். குழந்தை வேண்டி வரும் பெண்களுக்கும் பிற மகளிருக்கும் உருண்டை மஞ்சளை பிரசாதமாக தருகின்றனர். அவர்கள் அதை அரைத்து பூசி குளிக்க அவர்களுக்கு குழந்தை பேறு நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அம்மனுக்கு தாலி வாங்கி சாத்துகின்றனர். விரைவில் அவர்கள் இணைவது உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    திருவிழாக்கள் :

    பங்குனி அன்று கொடியேற்றத்துடன் 11 நாட்கள் திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி வெள்ளிகள், தை வெள்ளிகள், கிருத்திகை, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நிறைய பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தலவிருட்ச வில்வம். ஆலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். நரசிம்மருக்கு அவருடைய பாவம் விலக அருள்பாலித்த இத்தலத்து இறைவனும் இறைவியும் தன்னை நாடும் பக்தர்களின் பாவத்தையும் களைவார் எனவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர அருள்புரிவார் எனவும் நம்புவது நிஜமே.

    கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் என்ற இந்த தலம்.
    பேரூரில் உள்ள பட்டீசுவரர் ஒரு சுயம்பு மூர்த்தி. இது‘முக்தி தலம்’என்பதால் இறந்தவர்களுக்கு கர்ம காரியங்கள் மேற்கொள்ள இங்கு வந்து செல்கின்றனர்.
    பரம்பொருளாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் பெருமை வாய்ந்தது பேரூர். இது கோவை காந்திபுரத்தில் இருந்து மேற்கே சிறுவாணி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு‘பட்டீசுவரர்’ என்ற திருநாமத்தில் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். 

    கோவை என்றாலே மருதமலையும், பேரூர் பட்டீசுவரர் கோவிலும் தான் நம் நினைவுக்கு வரும். பேரூரில் உள்ள பட்டீசுவரர் ஒரு சுயம்பு மூர்த்தி. இது‘முக்தி தலம்’என்பதால் இறந்தவர்களுக்கு கர்ம காரியங்கள் மேற்கொள்ள இங்கு வந்து செல்கின்றனர். இன்றைய காலகட்டத்திலும் பழமை சிதையாமல் கோவில் காட்சியளிப்பது, இத்தலத்தின் சிறப்பு.

    கோவைக்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள நடராஜர் சன்னிதிக்கு முன்புறம் மண்டபத்தில் உள்ள சிலைகளின் சிற்பங்களை பார்த்து வியந்து செல்கின்றனர்.‘பிறவா புளி’. ‘இறவா பனை’ இந்த தலத்தின் சிறப்பு.

    இறைவனிடம் நம்முடைய காரியத்தை ஒப்படைத்து விட்டு நாம் நினைத்தது நடக்குமா..? என சந்தேகப்பட கூடாது. எந்த காரியம் என் றாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்று இருங்கள். அந்த காரியம் நீங்கள் நினைத்தப்படியே நிச்சயம் நடைபெறும். அது போல் தான் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரை துடைத்து, அவர்களின் இம்மை பிறவி துன்பத்தை நீக்கி முக்தி அளிக் கிறார் கோவை அருகே உள்ள பேரூர் பட்டீசு வரர்.

    பேரூரின் பெருமைகளை கச்சியப்ப முனிவர் தனது பேரூர் புராணத்தில் விளக்கமாக கூறி இருக்கிறார். இதில் மொத்தம் 32 படலங்கள் உள்ளன. அதில் வரும் நைமிச படலத்தை பற்றி பார்ப்போம்:-

    நைமிச சாரண்யம் அது. அடர்ந்த வனப்பகுதி. பூமாதேவியை எப்படியாவது எட்டி பார்த்து விட வேண்டும் என்று விரும்பிய ஆதவனின் ஆசையை வான் நோக்கி வளர்ந்திருந்த மரங்கள் தடுத்து நிறுத்தின. அழகிய மலையில் இருந்து தவழ்ந்த நதிமகள் இருகரைகளிலும் தொட்டு விளையாடியபடி கடல்நோக்கி சென்று கொண்டு இருந்தாள். வானில் ஓடும் மேகக் கூட்டங்கள், ஓடும் நதிநீரில் கண்ணாடி போன்று தெளிவாக தெரிந்தது. 

    நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து சவுனகர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் யாக வழிபாடுகளை செய்தனர். யாக குண்டத்தில் அக்னியை எழுந்தருள செய்து இருந்தார்கள். அகிலத்தை ஆட்டிப்படைக்கும் அந்த அகிலனின் மந்திரமான ‘நமசிவநாய’ என்பதை உச்சரிப்பதில் முனிவர்கள் தங்களை மறந்திருந்தனர். சவுனகரும் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். 

    யாகங்கள் எல்லாம் முடிந்த பிறகு, முனிவர்கள் அனைவரும், சவுனகரை வணங்கி, ‘சுவாமி..! தாங்கள் அருளிய பேரூர் புராணத்தை நாங்கள் மீண்டும் கேட்க விரும்புகிறோம். தாங்கள் அதை எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்’ என்று பணிந்து நின்றனர். சவுனகரும், அவர்களை பார்த்து, ‘தங்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் பேரூர் புராணத்தை எடுத்து சொல்லும் பாக்கியம் பெற்றேன்’ என்று கூறி அதை சொல்லத்தொடங்கினார்.

    பனிமலை சூழ்ந்த திருக்கயிலை மலை அது. சிவகணங்கள் அனைத்தும் சிவமந்திரத்தை உச்சரித்து மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தனர். திருச்சடையில் கங்கையை ஏந்தியும், சிரசுவில் பிறை சந்திரனை சூடியும், கழுத்தில் வாசுகி மாலையாக அணிவித்தும், புலிதோல் போர்த்தி மெஞ்ஞானத்தை உமாதேவியருடன் அருள்பாலித்து கொண்டு இருந்தார் சிவபெருமான். 

    உமாதேவியருடன் காட்சி தரும் சிவனின் அழகை தரிசித்தவாறே சிவ கணங்கள் தாங்கள் பெற்ற பாக்கியத்தை எண்ணி மனம் மகிழ்ந்தனர். நந்திதேவரும், அந்த உமையதொரு பாகனை சுமக்கும் பாக்கியம் பெற்றதற்கு மனம் மகிழ்ந்தார். இருப்பினும் அகிலமும் அரசாளும் அந்த பரமனின் திருத்தலங்களில் கயிலைக்கு ஒப்பான திருத்தலம் யாது..? என்பதை கேட்டு அறிய ஆவல் கொண்டார். ஆதலால், சிவபெருமானின் திருவடி கமலங்களை வணங்கி, ‘தேவரீர்! தாங்கள் எழுந்தருளிய திருத்தலங்களில் திருக்கயிலைக்கு ஒப்பான திருத்தலம் எது?’ என்று கேட்டார்.

    ‘‘நந்தியே! உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம் ஆகியவற்றுக்கு இணையான சிறப்புகள் கொண்டது, தட்சிண கயிலாயம். இதில் உப்பு நீரே அல்லாத சுத்தமான கடலில் எழுந்தருளி உள்ள கயிலாயம் உத்தர கயிலாயம். யாம் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மத்திய கயிலாயத்தை தேவர்களும், முனிவர்களும், மற்றவர்களும் எளிதில் தரிசிக்க இயலாதது. (மத்திய கயிலாயம் என்பது இமயமலையில் இருக்கிறது. 

    இந்த கயிலாயத்துக்கு சிவனின் அருள் இருந்தால் தான் சென்று தரிசிக்க முடியும்) ஆனால் பேரூர் என்னும் ‘தட்சிண கயிலாயம்’ அனைவரும் தரிசிக்கவல்லது. எளிதில் மோட்சங்களை கொடுக்கவல்லது. தென் கயிலாயத்தில் வெள்ளியங்கிரி மலையாய் யாம் வீற்றிருக்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்தார்.

    நந்திதேவர் மூலமாக முருகப்பெருமானும், நாரதரும், வியாச முனிவரும், சிவன் அருளிய பேரூர் வரலாற்றின் மகிமைகளை தெரிந்து கொண்டனர். வெள்ளியங்கிரி மலையே சிவனாக எழுந்தருளி இருப்பதாகவும், அதன் திருமுடி வெள்ளியங்கிரி கிரிமலை ஆண்டவர் கோவில் என்றும், திருப்பாதம் பேரூர் பட்டீசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.‘திருவடி’ என்பதால் தான் என்னவோ இத்தலம் முக்தி தலமாக போற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தை, நாரதர் தரிசித்த வரலாற்றை அடுத்த வாரம் காண்போம்.
    தேடிவரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரிவழங்கி வரும் ‘அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள்’ கோவிலின் வரலாற்றையும், சிறப்பையும் பார்ப்போம்.
    தன்னை வணங்குபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் தந்து வாழ்வின் துன்பங்களை போக்கி நிலையான இன்பம் தருவதில் பெருமாளுக்கு நிகர் பெருமாளே. செல்வத்தில் சிறந்த ஸ்ரீதேவியை தன்னுள்ளே நிறுத்தி, தேடிவரும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரிவழங்கி வரும் ‘அகரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள்’ கோவிலின் சிறப்புகளைப் பார்ப்போம்.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளச்சிப்பாளையம் செல்லும் வழியில் கொன்னையாறு பஸ் நிறுத்தத்தில் அமைந்துள் ளது, அகரம் ஸ்ரீ சென்றாயப்பெருமாள் திருக்கோவில்.

    இது 4300 ஆண்டுகள் பழமையானது. அதை நிரூபிக்கும் சான்றுகளும் இத்திருத்தலத்தில் உள்ளன. இக்கோவில் வளாகம் திருமணிமுத்தாறு எனும் நதிக்கரையில் கிழக்குப்பார்த்து அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் மொத்தப் பரப்பளவான 22 ஆயிரம் சதுர அடியில், 12 ஆயிரம் சதுர அடி கொண்ட நந்தவனத்துடன், கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், பந்தல்மண்டபம், திட்டிவாசல், உள்-வெளி திண்ணைகளுடன் 22 அடி உயரம் கொண்ட அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் பெருமாளின் பக்தனான ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்ட கொடிகம்பம் ஆகியவை திருக்கோடி ஏற்றப்படும் மாடத்துடன் கோவிலில் அழகுற அமைந்துள்ளது.

    இக்கோவிலின் கருவறைத் தெய்வமாக புற்று வடிவ சென்றாயப்பெருமாள் வீற்றிருக்கிறார். மாடு மேய்க்கும் கண்ணனின் அம்சமாக ‘ஸ்ரீ சென்ற ஆயன்’ (ஸ்ரீ சென்றாயன்) இங்கு புற்று வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இது கருவறையில் உருவவழிபாடு இல்லாத பெருமாள் தலம்.

    கோவில் நந்தவனத்தில் இருந்து நாக தெய்வங்கள் தினசரி பலமுறை மூலஸ்தானத்தில் உள்ள புற்றுக்கு சென்று வழிபட்டு வருவதை ஆண்டாண்டு காலமாக இங்கு கண்டு வியந்து வந்துள்ளார்கள். கால மாற்றங்களால் சமீபத்தில் ‘டைல்ஸ்’ கற்களால் புதுப்பிக்கப்பட்ட கோவிலில் நாகங்களை காண்பது குறைந்துவிட்டாலும், இன்றும் நந்தவனத்தின் வடமேற்கு மூலையில் நாகங்கள் வசித்துவருவது இத்தலத்தின் சிறப்புகளுள் ஒன்று.

    இக்கோவிலின் சிறப்புகளாக பல விஷயங்கள் இருந்தாலும், நந்தவனத்தில் நாகரை மையமாகக்கொண்ட ‘ஸ்வஸ்திக்’ எனப்படும் தெய்வீக அமைப்பும், அதன் மையத்தில் வட்டவடிவ பீடத்தில் அமைத்துள்ள ராஜகிரகமான சூரியபீடமும் இங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. அதன்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஷட்கோண (ஆறுகோணம்) சுதர்சன சக்கரமும், ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் அருளாசியுடன் நிர்மாணிக்கப்பட்டு பக்தர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சூட்சும தெய்வீக சக்திகள் கொண்ட ஸ்ரீ சுதர்சனசக்கர மேடை தமிழ்நாட்டிலேயே வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக அமைகிறது.

    மேலும் ஸ்வஸ்திக்கின் எட்டுக் கட்டங்களிலும் அந்தந்த திசைகளுக்குரிய அதிபதிகளையும் ,கோள்களையும் பிற்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் கருங்கல் பீடங்களை அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவை கிழக்குத்திசை அதிபதி இந்திரன், (கோள்-சுக்கிரன்), தென்கிழக்கு திசை அதிபதி சந்திரன், (கோள்-அக்னி), தெற்குதிசை அதிபதி யமன், (கோள்-அங்காரகன்), தென்மேற்கு அதிபதி நைருதி (கோள் ராகு), மேற்குத்திசை அதிபதி வருணன் (கோள்-சனீஸ்வரன்), வடமேற்கு அதிபதி வாயு, (கோள்-கேது), வடக்கு அதிபதி குபேரன் (கோள்-குருபகவான்), வடகிழக்கு அதிபதி ஈசானன் (கோள்-புதன்)

    சுதர்சன சக்கர மேடையின் கிழக்கில் திருமாலின் ஸ்ரீபாதம் கருங்கல்லில் வடிக்கப்பட்டு பக்தர்களுக்கு திருவடி தரிசனம் தருகிறது. அத்துடன் சுதர்சன மேடையை பக்தர்கள் சிரமமின்றி சுற்றிவர டைல்ஸ் பாதையும், வெயில், மழையில் ஒதுங்க நான்கு முனைகளிலும் பிரமிட் வடிவ நிழற்குடைகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.



    எம்பெருமான் பெருமாளிடம் பக்தர்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்தி அவைகளை நிறைவேற்றித் தருவதில் ஸ்ரீசுதர்சன அடியாருக்குப் பெரும்பங்குண்டு. ஆகவேதான் திருமாலின் வலது திருக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரம் இடம்பெற்று பக்தர் களுக்கு அருள்புரிகின்றது. இங்கு அட்சரவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசுதர்சன சக்கரம் சூட்சும சக்தியுடன் அருளும் வண்ணம் ஸ்ரீசுதர்சன சஹஸ்ரநாம பூசை, அஷ்டாஷரம், அஷ்டகரம், ஷோடஷாயுதம் உள்ளிட்ட மங்கள மந்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.

    மேலும் இந்த நந்தவனத்தில் நாகர்சிலையின் பின்புறம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் (பரிமுகப்பெருமாள்) சிலா ரூபம் அழகுற பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுதர்சனசக்கர சுற்றுப்புற மேற் கூரையைச் சுற்றி 12 ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டு 108 திவ்யதேசத்தில் வீற்றிருக்கும் பெருமாளின் திருவுருவப்படங் கள் அழகுற அமைந்து பக்தர்களை பரவசம் கொள்ளவைக்கிறது.

    இவ்வாலயத்தில் பெருமாள் வழிபாட்டுக்கு சிறந்த புரட்டாசி மாத சனிக்கிழமை, விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஏற்றப்படும் திருக்கோடி தீபம் காண ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். தீபம் ஏற்றியவுடன் வருணபகவான் மனம் மகிழ்ந்து மழை பொழிவது இங்கு நிகழும் அதிசயம். திருப்பந்த சேவையான தீப்பந்தங்களை கையில் தாங்கி ஆணிப்பாதுகைகளில் கோவிலை வலம்வந்து, வாணவேடிக்கைகள் முழங்க “கோவிந்தா” கோஷம் முழங்க ஏற்றப்படும் திருக்கோடி வைபவம் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். அதுமட்டுமின்றி 52 வாரங்கள் சனிக்கிழமைகளில் பக்தர்களின் சார்பில் இங்கு தொடர்ந்து திருக்கோடி ஏற்றப்படுவது தனிச்சிறப்பு.

    இக்கோவிலின் சிறப்புகளை பெருமாளே மனமுவந்து ஏற்றுக்கொண்டதற்கு சான்றாக நந்தவனத்தின் வாயு மூலையில் சுயம்பு வடிவில் ஒரு அடி உயர வேப்பமரம் அமைந்துள்ளது. அதன் தண்டிலிருந்து 10 அடி உயரமுள்ள, 5 நீண்ட தனித்தனிக்கிளைகள் 5 சர்ப்பங்கள் ஆக ஐந்து தலை நாகங்கள் போன்று காட்சியளிக்கின்றன. இந்த அதிசய வேப்ப மரத்தை சுயம்பு பஞ்சமுக சென்றாயனாக பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

    இத்திருத்தலத்தில் தினசரி வழிபாடு, அமாவாசை, பவுர்ணமி போன்ற சிறப்புதினங்கள், தமிழ்ப்புத்தாண்டு சித்திரை விஷுக்கனி உற்சவம், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, கார்த்திகை மாத பரணி தீபத்திருநாள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் திருக்கோடி, போன்ற விசேஷங்களுடன் அன்னதானமும் நடைபெறுகிறது.

    அஷ்டஅஷர நாயகனான நாராயணன் அம்சமான அறுகோண ஸ்ரீ சுதர்சனசக்கர பீடத்தை 9 முறை 9 வாரங்கள் வலம்வந்து பிரார்த்தனை செய்தால் ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகதோஷங்களில் இருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி, சந்தானபாக்கியம், தனலாபங்கள் பெற்று சுபிட்சம் பெறுவது உறுதி என்கின்றனர் இங்கு வந்து வழிபட்டு வாழ்வை சீராக்கிக் கொண்டவர்கள்.
    ×