என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். கண்ணன் கைததலம் பற்றிய தெய்வப் பெண்ணே துளசிச் செடி வடிவில் நமக்குக் காட்சியளிக்கிறாள். பக்தி வெள்ளம் பெருகிப்பாய்வதற்கு வழிசெய்யும் திவ்ய நிகழ்ச்சிதான் கண்ணனை துளசி மணந்து கொள்ளும் சுபதினம். தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய பன்னிரண்டு நாட்கள் துளசி திருமணத்தை விமரிசையாக நடத்தும் வழக்கம் முக்கியமாக ஆந்திரா கர்நாடகப்பகுதியில் இருந்து வருகிறது.  

    துளசி திருமண விரத வைபவத்தைப் பார்க்க பித்ருக்களும் கூட வந்து கூடி விடுகிறார்களாம். எனவே துளசி திருமணம் நடைபெறும்போது, ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் விளக்கேற்றி வைத்து, "இதோ இந்த வீடுதான் உங்கள் சந்ததியார் வாழும் வீடு' என்று அந்தந்த வீட்டாரும் தங்கள் முன்னோருக்கு அடையாளம் காட்டுகிறார்கள். துளசி திருமணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வீட்டு பிள்ளைகளுடன் வந்து ஒரே கூரையின் கீழ் கூடி விடுகிறார்கள்.

    நடுக்கூடத்தில் திருமணப்பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமர்த்துகிறார்கள். மாலைப்பொழுதில் பூஜை அறையிலிருந்து சாளிக்கிராம வடிவில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனைப் பீடத்தோடு தூக்கி வந்து திருமணப்பந்தலின் கீழ் துளசி மாடத்தின் அருகே வைக்கிறார்கள். பூஜை அறையில் சாளிக்கிராமத்தை எடுப்பதற்கு முன் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தனியாக ஒரு பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு திருமணப்பந்தலின் கீழ் சாளிக்கிராமத்துக்கும் துளசிக்கும் அர்க்கியம் விட்டு பூஜை செய்து, திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பூஜைக்கு இடையிடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. வயது வித்தியாசமின்றி ஆண்கள் அனைவரும் கையில் கிண்ணுரமும், சேகண்டியும் வைத்துக் கொண்டு ஒலியெழுப்பியவாறு நாமசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

    திருமணம் நடந்தேறியதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சங்கீர்த்தனம் புரிந்தவாறு திருமணப் பந்தலை வலம் வரத் தொடங்குகிறார்கள். நாம சங்கீர்த்தனம் தொடரத் தொடர பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துவிடுகிறது. வயது, அந்தஸ்து முதலான பிரமைகள் யாவும் நீங்கி விடுகின்றன. கண்ணனும் துளசியும் மணமக்களாய் கொலு வீற்றிருக்கும் திவ்ய தரிசனமே பிரக்ஞையில் நிரந்தரமாய்த் தங்குகிறது.

    அந்தப் பேரானந்தக் களிப்பில் கால்கள் தாமாகவே நர்த்தனமாடத் தொடங்கிவிடுகின்றன. கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருக உருகப் பாடிக் கொண்டே அனைவரும் நடனமாடுகிறார்கள். நீண்ட நேரம் நீடிக்கும் இந்தப் பரவசநிலை சிறுகச் சிறுகத்தான் தணிகிறது. அதன்பிறகு சாளக்கிராமத்தைத் திரும்பவும் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று அமர்த்துவதோடு துளசி திருமண வைபவம் நிறைவடைகிறது.
    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.
    மார்கழி மாதம் வருகின்ற ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அப்போது சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலை திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். ஸ்ரீரங்கம் விஷ்ணு ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்க வாசலில் நுழையக் காத்திருப்பர்.

    அன்று முழுநாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து அந்த அவலைச் சாப்பிட்டால் நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள் தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.

    அந்தத் திருநாள் மார்கழி மாதம் 3-ந் தேதி செவ்வாய்க்கிழமை (18.12.2018) அன்று வருகின்றது. மறுநாள் துவாதசியன்று அன்னம் வைத்து உணவு முறைப்படி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள்.

    கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

    இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    அதன்படி ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

    விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் செய்யக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்படும் வரை, தினமும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும்.

    கருப்பு, நீலம் அல்லது குங்குமப்பூ நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வயதில் மூத்த ஐயப்ப பக்தரின் வழிகாட்டுதலுடன், இருமுடி கட்டிச் சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்ப வேண்டும்.

    சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.
    சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர்.

    அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே, அந்த 41 நாட்கள் அமைந்தன.

    கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது.

    பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

    இன்று குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் இருக்கும் விரதம் ரம்பா திருதியை.
    குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.

    தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது. இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

    சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத் தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண் களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை. அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற் கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமைய வளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள்.

    இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத் தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர். இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள்.

    “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது. ஆனி மாதத் திரிதியை இவர்களுக்குரிய நாள். இந்நாளில் அப்சரஸ்களை வழிபடும் வழக்கம் முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல வழிபடும் வழக்கம் மறுவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும் இந்நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

    ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்து வார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

    திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
    ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
    விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

    கிழமைகளும் பலன்களும் :


    ஞாயிற்றுக்கிழமை : மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பெயர் புகழுடன் வாழ்வர்.

    திங்கட்கிழமை : திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை : செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத் தடை நீங்கும். பில்லி, சூனிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

    புதன் கிழமை : புதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும். கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையாலாம்.

    வியாழக்கிழமை : வாழ்வில் உள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர். பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.

    வெள்ளிக்கிழமை :
    திருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் விரதமிருக்கலாம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

    சனிக்கிழமை : வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம். இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்…
    கார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து தூய மனதுடன் இறைவனை வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, ‘கார்த்திகை நீராடல்’ என்பர். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் ‘குப்தகங்கை’ எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

    கேதார கௌரி விரதம்:- கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    கார்த்திகை ஞாயிறு விரதம்:- இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.

    கார்த்திகை விரதம்:- கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

    விநாயகர் சஷ்டி விரதம்:- இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

    இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

    ப்ரமோதினி ஏகாதசி:- கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின் பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
    சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.
    பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் தொடங்குவார்கள். இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால்தான் மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இடையில் கோவிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை ‘திரிகரணசுத்தி’ என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் வீட்டில் அல்லது கோயிலில் மாத சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
    சிவராத்திரி விரதம் பற்றி பண்டைய புராணங்கள் நமக்குப் பல கதைகளைக் கூறினாலும்... பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் இயற்றி வரம் பெற்ற கதையே சிறப்பாகக் கொள்ளப்படுகிறது.

    மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

    சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

    மாத மகாசிவராத்திரி விரத வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது மாத சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
    தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.
    ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் நாம் அறியாமல் வாழ்வது நமக்கு தான் இழப்பு.

    நம் இறந்த கால வாழ்க்கையில் (முன் பிறப்பும், இந்த பிறப்பும் உட்பட) நாம் செய்த அனைத்து செயல்களுக்கும் ஏற்றவாறு நமது நிகழ்காலம் அமைகிறது. சுருக்கமாக சொன்னால், இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதுவே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதை நம் முன்னோர்கள் அழகாக ஒரே வார்த்தையில் கர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

    நம் கர்மவினையின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது சில சமயங்களில் இந்த வலியும் வேதனையும் துரிதமாக முடிந்து விட்டால் நிம்மதி என்று நமக்கு தோன்றும். தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் வழிபாடு.

    இந்த பின்னணியில் தான் ஐயப்பன் வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்கு அடையாளமாக, குருவின் கருணையோடும், வழிகாட்டுதலுடனும் மாலை அனிந்து, உணவை குறைத்து, புலால் உணவு நீக்கி, கள்ளுண்ணாமை பின்பற்றி, விரதம் முடியும் வரை பிரம்மச்சர்யம் கடைபிடித்து, போதை வஸ்துக்களை தவிர்த்து - எல்லாம் நம் கண் முன்னே இருந்தும் ஒழுக்கமாக வாழும் கலை. அவ்வளவு ஏன்? காலில் செருப்பு அணியாமல், சிகை அல்லங்காரம் கூட இல்லாமல், கருப்பு உடை அணிந்து, வயது வித்யாசம் பாராமல் அனைவரையும் மரியாதையுடன் 'சாமி' என அழைத்து, அரை பட்டினியில் ஒரு பிச்சைக்காரனை போல் வாழ்ந்து நம் கர்ம வினையை தீர்க்கும் ஒரே அற்புத மார்க்கம. விரதம் முடிக்க காடு மலை தாண்டி நடந்து சபரி மலை சென்று ஐயனை தரிசித்து வாழ்க்கையில் மீள்வதே நோக்கம்.

    முத்தாய்ப்பாக - நெய் தேங்காய் என்ற ஒரு விஷயம். தேங்காயில் உள்ள ஓடே நம் எலும்புகள், நார் நமது நரம்புகள், வெள்ளை தேங்காய் நம் தசை, நீர் நமது குருதி. நாம் திருந்தி தெளிந்ததற்கு அடையாளமாக நெய். பாலிலிருந்து, தயிராகி பின் நெய்யாக மாறுவது நம் ஆத்ம தரிசனம். பாலில் நேரடியாக நெய் தெரியாது. பல கட்டங்களுக்கு பிறகு திரிந்து மாறி நெய்யாகிறது என்பதே தத்துவம். அந்த நெய்யும் இறுதியாக இறைவன் மீது அபிஷேகமாகிறது. நம் ஜீவாத்மா இறைவனை அடைவதே இந்த தத்துவம். அனால் சுமந்து சென்ற தேங்காய் கோவில் வாசலில் ஓமகுண்டத்தில் தீக்கிரையாகிறது. அது நம் உடலின் நிலையாமையை உணர்த்துவது.

    இறுதியாக, இந்த வழிபாட்டு முறை கர்ம வினையை கழுவுவதற்கு மட்டும் அல்ல. வருங்காலத்தில் ஒழுக்கமாக வாழவும் ஒரு பயிற்சியே. கர்ம வினை தீர தீர, ஒழுக்கம் மேலோங்க சுபீட்சமான வாழ்க்கை கிட்டும். இதுவே சிறந்த தவமாகும்.
    இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

    1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

    3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

    4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

    5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

    6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

    7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

    8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

    9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

    10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

    11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

    12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

    13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

    14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

    15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

    16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

    17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

    19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

    20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

    21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

    22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

    23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

    24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

    25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும் 
    ×