என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
    • அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்-கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன. 40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • ஆவணப்படத்தை பகிர்வதை தடுக்கும்படி சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
    • சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது.

    மாஸ்கோ:

    குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியும் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆவணப்படத்தை இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தடையை மீறி ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா சகரோவா, சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷியா மட்டுமின்றி சக்திவாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் இது. சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரியவந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசி-க்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.

    • உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
    • ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.

    'டாங்கிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை அனுப்புவது எந்த விதத்திலும் மோதலில் ஈடுபடுவதாக ஆகாது என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறுகின்றன. ஆனால், இதை நாங்கள் ஏற்கவில்லை. ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது. போர் விரிவடைவதையும் காண்கிறோம்' என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார்.

    • அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
    • ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறி உள்ளார்

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. ரஷியாவை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், போர் தீவிரமடையும் என ரஷியா எச்சரித்துள்ளது.

    'இது மிகவும் ஆபத்தானது. இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பின் பார்வையில் இது நல்லதல்ல' என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

    இதற்கிடையே உக்ரைனை ராணுவரீதியாக ஆதரிப்பது குறித்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ராம்ஸ்டீனில் உள்ள விமானத் தளத்தில் நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

    ரஷியாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    • ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர்.

    மாஸ்கோ:

    உக்ரைனில் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு ரஷிய நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மார்செல் காந்தரோவ் (வயது 24) என்ற அந்த வீரர் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், மே 2022-ல் பணி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்ன சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    உக்ரைன் மீது நடத்தி வரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக சுமார் 3 லட்சம் வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டு, அதன்படி புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பையடுத்து ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர். பலர் ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளி வீரர்களை அழைத்து வருவதற்கான எம்எஸ்-22 விண்கலம் மீது விண்கல் மோதியதால் சேதம்.
    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

    மாஸ்கோ:

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருப்பதாவது:-

    ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது. சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும்.

    இவ்வாறு விண்வெளி நிறுவனம் கூறி உள்ளது.

    விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது. தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

    • ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
    • ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி 6-7 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில், ஆர்த்தடாஸ் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக புதின் அறிவித்துள்ளார்.

    ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ரஷிய படைகள் ஜனவரி 6 ஆம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் 36 மணி நேரம் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கிரெம்ளின் கூறியுள்ளது.

    ரஷியா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி 6-7 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

    • துருக்கி அதிபர் எர்டோகன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • ரஷிய அதிபர் புதினுடன், எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

    இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார். இத்தகவலை ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷியாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷியா கூறுகிறது.

    • ரஷ்யாவை பலவீனப்படுத்த, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.
    • போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அமெரிக்காவின் கையில் உள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதமாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ரஷியாவிற்கு எந்தவொரு ராணுவ ரீதியான அச்சுறுத்தலையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு ரஷியா தீர்வு காணும். ரஷியாவை பலவீனப்படுத்த உக்ரைனில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் விடுத்த டுவிட்டர் பதிவில், ரஷியா யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும், ஈரானுடனான ரகசிய ஒப்பந்தங்களோ, ரஷிய மந்திரி லாவ்ரோவின் அச்சுறுத்தல்களோ போரை நிறுத்த உதவாது, உக்ரைன் இறுதிவரை போராடி அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் ரஷியாவை வெளியேற்றும். இறுதி வரை அமைதியாக காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
    • ரஷியாவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென பல நாடுகள் வலியுறுத்தின.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷியா, உக்ரைன் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக அறிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், உக்ரைன் போர் தொடர்பாக அனைத்துத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.

    உக்ரைனில் ரஷ்யா சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்த நினைக்கின்றன. நாட்டு நலனை காக்கவும், மக்களின் நலனை காக்கவும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சயில் ஈடுபட்டனர்.
    • ரஷியா முழுவதும் முதியோருக்கான பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

    ரஷியா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சயில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரஷியா முழுவதும் முதியோருக்கான பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளன.

    • உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
    • ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது. அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.

    பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க 'ஹார்ம்' ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

    ×