என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியதால் விண்கலம் லேசான சேதம் அடைந்தது
    • பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.

    மாஸ்கோ:

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.

    இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.

    அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது. விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • வீட்டு காவலில் இருந்த அலெக்சி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷியாவிலும் போராட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பள்ளியில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரேனிய கொடியுடன் நிற்கும் ஒரு பெண்ணையும், குழந்தையையும் நோக்கி ரஷிய கொடி அருகே ஏவுகணைகள் செல்லும் ஓவியத்தை வரைந்தாள்.

    இது தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சமூக வலைதளங்களில் ரஷியாவின் போர் தாக்குதலை விமர்சிக்கும் கருத்துகளை தெரிவித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது ரஷிய ராணுவத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் அவரிடம் இருந்து 13 வயது மகள் பிரிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டாள். அலெக்சி மொஸ்கலியோவை வீட்டு காவலில் வைத்தனர்.

    அவர் மீதான வழக்கு, மாஸ்கோவின் தெற்கே யெப்ரேமோவ் நகரில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே வீட்டு காவலில் இருந்த அலெக்சி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
    • புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷியா வந்தடைந்தார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து புதினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் போர் விஷயத்தில் சீனா நடுநிலை வகிப்பதாக கூறுகிறது. ஆனால் சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

    அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பது, சீனாவின் 12 அம்ச யோசனை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் பற்றிய சீனாவின் கருத்துக்களை புதின் வரவேற்றார். மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதில் விருப்பம் காட்டுவதாக சீனாவின் கருத்துக்கள் இருப்பதாக அவர் கூறினார். சீன-ரஷிய உறவுகள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி நாடு திரும்புகிறார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டைக் கடந்துள்ளது.
    • உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் சென்றார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

    போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, இந்தப் போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.

    மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதிபர் புதினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷியா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார்.
    • அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது.

    மாஸ்கோ:

    சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கட்கிழமை ரஷியா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20-ம் தேதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் 23-ம் தேதி அங்கிருந்து சீனா திரும்புகிறார் என தெரிவித்தார்.

    இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹூவா சுன்யிங், பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

    • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது.
    • ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

    போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    மாஸ்கோ:

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி20 வடிவத்தில் ரஷியா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.

    ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்ட்ரி போட்டிகோவின் கழுத்து பெல்ட்டால் நெரிக்கப்பட்டிருந்தது.
    • 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு ரஷிய அதிபர் புதின் உயரிய விருதை வழங்கினார்

    மாஸ்கோ

    கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் ஆண்ட்ரி போட்டிகோவ் (வயது 47) என்ற விஞ்ஞானியும் ஒருவர்.

    இந்நிலையில், ஆண்ட்ரி போட்டிகோவ் நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது கழுத்து பெல்ட்டால் நெரிக்கப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அண்டிருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ட்ரியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரி கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியானது.
    • உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷியா தன் வசப்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு ராணுவம், ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

    இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏற்கனவே போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தற்கொலை தாக்குதல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக தி மிரர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். ரஷிய ராணுவத்தால் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை. இதுரை ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதலை திறம்பட செய்ய முடியவில்லை. இதனால் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    • புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

    அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார்.

    ரஷியா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை. அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.

    போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.
    • வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் புதின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை வருகிற மார்ச் 5-ந்தேதி தொடங்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

    • ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செர்பியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

    இந்த விபத்தில் 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 7-ம் தேதி தலைநகர் மாஸ்கோ அருகிலுள்ள யெப்ரெமோவ் நகரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    ×