என் மலர்
ரஷ்யா
- ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
- காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்தது.
மாஸ்கோ:
ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன.
இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
- ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.
உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.
எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், எழுத்தாளரை கொல்ல முயன்ற கார் வெடிகுண்டு சம்பவபத்திற்கு உக்ரைனையும் அமெரிக்காவையும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
- அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டியது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் அதிபர் மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷியா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது
- எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து நாசமானது.
- உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதா? என்பது இன்னும் தெரியவில்லை.
மாஸ்கோ:
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சமீப காலமாக இந்த போரை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 2 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியாவின் முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது நேற்று டிரோன் மூலம் தாக்குதல் நடந்தப்பட்டது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்த டிரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கிரீமியா பிராந்தியத்தின் கவர்னர் மிகைல் ரஸ்வோசாயேவ் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் வினியோகம் தடைபடாது என்பதையும் அதில் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதா? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே இது குறித்து ரஷியாவின் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரஷிய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு இலக்கையும் தாக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர்.
- இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ரஷியாவும் ஈடுபட்டு வருகிறது.
மாஸ்கோ:
உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டது. ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷியாவின் கவனத்திற்கும் சென்றது.
இதற்கிடையே, ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷியாவும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது. இதன்படி, ரஷியாவில் உள்ள ஜெர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது. ஒட்டுமொத்த ரஷிய-ஜெர்மனி உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகிறது என மாஸ்கோ குற்றச்சாட்டு தெரிவித்தது.
இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என தெரிவித்தார்.
- சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது.
- விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.
மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் இன்னும் ஓயவில்லை. இப்போதும் தினம், தினம் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது.
நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவின் அதிநவீன போர் விமானங்கள் சீறி பாய்ந்தன. உக்ரைன் எல்லையில் குண்டு வீசுவதற்காக இந்த விமானங்கள் பறந்து சென்றன.
இதில் சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் உக்ரைன் எல்லையை சென்றடைந்தது.
எல்லையை நெருங்கியதும் விமானம் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.
இந்த தாக்குதலில் பெல்கோரேட் நகரின் வீதிகளில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தது.
மேலும் தெருக்களில் நடந்து சென்ற 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பற்றி அறிந்ததும் ரஷிய ராணுவ அதிகாரிகள் விரைந்து சென்று விசாரித்தனர்.
இதில் ரஷிய நகர் மீது தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது தெரியவந்தது. இதனை ரஷிய ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.
மேலும் தவறு நடந்தது எப்படி? போர் விமானத்தின் குறி தவறியது ஏன்? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- விக்கிபீடியா நிறுவனத்துக்கு ரஷியா கோர்ட்டு இதுவரை சுமார் ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
- இது தொடர்பாக மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உக்ரைன் போரில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை, ரஷிய ஆயுதப்படை போன்றவற்றை இழிவுபடுத்தும் கட்டுரைகள் உள்ளிட்ட 137 வகையான செயல்களை அந்த நாட்டின் அரசாங்கம் சட்ட விரோதம் என முத்திரை குத்தியுள்ளது. ஆனால் இந்த போருக்கு பிறகு ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை விக்கிபீடியா கொண்டுள்ளதாக அதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் ஒருபகுதியாக ரஷியாவால் சட்ட விரோதம் என முத்திரை குத்தப்பட்ட அந்த கட்டுரைகள் விக்கிபீடியா இணையதளத்தில் காணப்பட்டது.
இதற்காக விக்கிபீடியா நிறுவனத்துக்கு ரஷியா கோர்ட்டு இதுவரை சுமார் ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அந்த கட்டுரைகளை விக்கிபீடியா நிறுவனம் இன்னும் தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என ரஷியாவின் ஊடக கண்காணிப்பாளர் ரோஸ்கோம்நாட்ஸோர் தெரிவித்துள்ளார்.
- இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார்.
- காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், போரில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடும் நபர்களுக்கு ரஷிய அரசு தண்டனை வழங்கி வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் போர் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும் முன்னாள் பத்திரிகையாளருமான விளாடிமிர் காரா-முர்சாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன. விளாடிமிர் காரா முர்சாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
காரா முர்சா, மார்ச் 2022-ல் அரிசோனா பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியபோது உக்ரைன் போருக்கு எதிராக பேசி உள்ளார். இதேபோல் பிற நாடுகளிலும் பேசியிருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட காரா முர்சா, சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை காரா-முர்சா மறுத்தார். "புதினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக பல வருடமாக போராடிவருகிறேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். நம் நாட்டில் இருள் விலகும் நாள் வரும்" என்று காரா முர்சா கூறினார்.
காரா-முர்சாவை கடந்த 2015 மற்றும் 2017-ல் விஷம் கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர். அதில் இருந்து உயிர்தப்பிய அவர், ரஷிய அரசு மீது குற்றம் சாட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் ரஷிய அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை.
2015-ல் கிரெம்ளின் அருகே படுகொலை செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் போரிஸ் நெம்ட்சோவுக்கு நெருக்கமானவர் காரா-முர்சா என்பது குறிப்பிடத்தக்கது.
- எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்துக்கான குறியீடு சிவப்பு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
- பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
ரஷியாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் எழும்பி இருக்கிறது.
மேலும் 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்துக்கான குறியீடு சிவப்பு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பால் ஏற்பட்டுள்ள சாம்பல் விமானங்களை பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் சாம்பல் படர்ந்து இருக்கிறது. இது 3.35 அங்குலங்களாக உள்ளது. இது 60 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.
இதையடுத்து பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார்.
- தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தான் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் தற்போது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு உள்ளார்.
தான் செல்லும் பாதை தெரியாத அளவுக்கு புதினின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ரகசிய ரெயில் பயணம் செய்து வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்து உள்ளார்.
விமானத்தை விட பாதுகாப்பு அதிகம் என்பதால் சிறப்பு கவச ரெயிலில் அவர் பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 180-க்கும் மேற்பட்ட பயணங்களை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது. புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார்.
தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார். செல்போனை பயன்படுத்தினால் அவர் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும் என்பதால் புதின் அதனை பயன்படுத்துவது இல்லை. பல நேரங்களில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொள்கிறார். அவர் எங்கு பயணம் சென்றாலும் அவருடன் பாதுகாவலர்கள், உணவு பரிசோதகர்கள்,மற்றும் என்ஜீனியர்கள் உடன் செல்கிறார்கள்.
தனக்கு நெருங்கியவர்களுடன் மட்டும் தான் அவ்வப்போது தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
எங்கள் அதிபர் போர் குற்றவாளியாகி விட்டார். இதனால் பெரும்பாலான நேரத்தை கஜகஸ்தானில் உள்ள ரஷிய தூதரகத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகளுடன் பதுங்கு குழியில் செலவிடுதாகவும் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
- நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது.
- பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மாஸ்கோ:
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா அந்நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதற்கிடையே நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து நாடு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பில் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்தது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நடந்த விழாவில் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷியா பகிரும் எல்லை இரட்டிப்பாகி உள்ளது.
பின்லாந்து, ரஷியாவுடன் 1340 கி.மீ கிழக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால் நேட்டோ படைகள் தேவைப்பட்டால் பின்லாந்து எல்லைக்கு அனுப்பப்படலாம்.
இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறது. நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு கூறும் போது, 'பின்லாந்தை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டதால் உக்ரைன் போர் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள் எங்களது அணு ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் நடத்தும் வகையில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதன்மூலம் பின்லாந்து மீது ரஷியா போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ள நிலையில் பின்லாந்து மீதும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் நேட்டோ உறுப்பு நாடுகள் களத்தில் குதிக்கும். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது.
- உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும்.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன.
போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அதிபர் புதின் முன்வைத்து உள்ளார்.
இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற பிரபல அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.
ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.
இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்து உள்ளது. எனினும், உக்ரைன் போர் மற்றும் ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை குழு ஆகியவற்றை பற்றி அவர் செய்தி சேகரித்து வந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும். உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.






