என் மலர்
ரஷ்யா
- தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
- போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாஸ்கோ:
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, எகிப்து, செனகல், காங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆப்பிரிக்க குழு, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் ஆப்பிரிக்க குழுவினர் ரஷியாவுக்கு சென்றனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற தென் ஆப்பிரிக்க அதிபர் சிரிஸ் ரமபோசா, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
அப்போது புதினிடம் சிரில் ராமபோசா கூறும்போது,, 'போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தொடர்பாக அவர் கூறும்போது, 'போரை என்றென்றும் தொடர முடியாது. அனைத்து போர்களும் தீர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மிகத் தெளிவாக செய்தியை தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த போரால் ஆப்பிரிக்க கண்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன.
போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து புதின் கூறும்போது, 'உக்ரைன் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. குழந்தைகள் புனிதமானவர்கள். அவர்களை மோதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றினோம். அவர்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றினோம் என்றார்.
- பெலாரஸ்க்கு அணுஆயுதங்களை நகர்த்தும் வேலைதொடங்கிவிட்டது
- ரஷியாவை தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்ட இந்த நடவடிக்கை
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அதை மீட்பதற்காக உக்ரைன் தற்போது பதில்தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷியப் பகுதியில் சேத்திற்குள்ளாகி வருகிறது. உக்ரைன் எதிர்தாக்குதல் அதிகரிக்க, ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று ஆப்பிரிக்கா தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது கிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
தெற்கு பகுதியில உக்ரைன் எல்லையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து பாதுகாப்பான பகுதியாக வைத்துக் கொள்ள ரஷிய அதிபர் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு உதவி செய்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி ரஷியாவை தோற்கடிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது. இதனால் பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தி எச்சரிக்கை கொடுக்க புதின் முடிவு செய்தார். பெலாரஸ் அதிபரும் சம்மதிக்க அதற்கான இடத்தை தயார் செய்து வருகிறது ரஷியா. அணுஆயுதங்களை வைப்பதற்கான இடத்தை அமைத்தபின், அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து பெலராஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அணுஆயுதங்கள் பெலாரஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. பெலாரஸில் அணுஆயுதங்களை நிலைநிறுத்துவதே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவுக்கு மூலோபாய தோல்வியை ஏற்படுத்த முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு நினைவூட்டுவதற்காக, பெலாரஸுக்கு தந்திரோபாய அணுஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே பெலராஸ்க்கு அணுஆயுதங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இருந்தாலும், தற்போது உக்ரைனுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தும் தேவை இருக்காது. நான் ஏற்கனவே பெலாரஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியும். அது நடந்துவிட்டது.
முதல் அணுஆயுத தடவாளங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது முதல்முறையின் முதல் பகுதி. கோடைக்காலத்திற்குள் அல்லது இந்த வருட இறுதிக்குள் இந்த வேலை முழுமையாக முடிவடையும் என்றார்.
- தற்போதைய நிலையில் ராணுவ துருப்புகளை அதிகரிக்க தேவையில்லை
- ரஷியாவின் பாதுகாப்பிற்காக உக்ரைன் எல்லையில் இன்னும் முன்னேற வேண்டியது அவசியம்
உக்ரைன் கடந்த சில நாட்களாக எதிர்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் சில கிராமங்களை ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளேம் என தெரிவித்தது. அதேவேளையில், பேரழிவு என்ற வகையில் உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாட்டு எல்லையில் எங்களது பாதுகாப்பை அதிகரிக்க, எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் பகுதிகளை இன்னும் அதிக அளவில் கைப்பற்ற ரஷியப்படைகள் முயற்சி மேற்கொள்வார்கள். அதற்கான படைகளை குவிக்க வேணடிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டள்ளார்.
நேற்று ராணுவ பத்திரிகையாளர்கள் மற்றும் பிளாக்கர்ஸ்களை சந்தித்த புதின் ''உக்ரைன் 160 ராணுவ டாங்கிகள், 360-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை கடுமையான சண்டையில் தற்போது இழந்துள்ளது. அதேவேளையில் கிவ் பகுதி புதிய தாக்குதலில் ரஷியா 54 டாங்கிகளை மட்டுமே இழந்துள்ளது. இதை உடனடியாக தெளிப்படுத்த முடியாது.
உக்ரைன் மக்கள் ஊடுருவல், ரஷியாவின் பெல்கோரோட் எல்லை பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல் போன்றவற்றை ரஷிய தடுத்து நிறுத்தும். ரஷியாவை பாதுகாக்கும் வகையில் உக்ரைனில் ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்வோம்.
தற்போதைக்கு ராணுவ வீரர்களை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ரஷியாவின் இலக்கு என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இன்றைய அளவில் அது தேவையில்லை'' என்றார்.
கடந்த சில நாட்களாக உக்ரைன் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக டிரோன் மூலம் கட்டிடங்கள் தாக்கப்படுகிறது. இதனால் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய குழுவினர், பயணிகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.
அந்த விமானம் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ஏர் இந்தியா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும், பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம்.
- ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
ரஷிய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷியாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும்.

"ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்," என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தெரிகின்றன.
ரஷிய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. "ஆப்பிள் சாதனங்களில் பேக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்," என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
- மோதல் நேரங்களில் அமெரிக்கா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.
- குறைந்த செலவே என்பதால் பயங்கரவாதிகளும் அதிகமாக பயன்படுத்துகின்றன.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆரம்ப கட்டத்தில் ஏவுகணை, போர் விமானம், டாங்கிகள், ஹெலிகாப்டர் போன்றவை மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைத்தது ரஷியா.
அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய, உக்ரைனும் ரஷியா மீது திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நேருக்கு நேர் மோதல், விமான தாக்குதல் குறைந்து டிரோன்களை பயன்படுத்தி வருகின்றன.
செலவும் குறைவு, வீரர்கள் மரணமும் கிடையாது. சேதப்படுத்தும் இடம் அதிகம். இதனால் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த 30-ந்தேதி (நேற்று முன்தினம்) உக்ரைன் திடீரென ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. சுமார் 8 டிரோன்கள் இதற்காக பயன்படுத்தியதாக ரஷியா குற்றம்சுமத்தியுள்ளது.
இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்களும் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின.
இரண்டு நாடுகளும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரேன்களை அனுப்பி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க செய்கின்றனர். இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.
வான்வெளி தாக்குதலுக்கு டிரோன்களை பயன்படுத்துவது உலக நாடுகளில் அதிகரித்துள்ளதால் இது பேராபத்தாக முடியுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரோன் கண்டுபிடிக்கப்பட்டபோது உளவு பார்ப்பதற்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தின. எதிரி நாடுகள் எல்லைக்குள் சென்று உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.
தற்போது எந்த இடத்தில் இருந்து டிரோன் தங்கள் எல்லைக்குள் ஊடுருவுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாடுகளுக்கும் தலைதூக்கியுள்ளது.
உலக வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் சர்வதேச சட்டம் கொண்டு வந்து இதை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, டிரோன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
டிரோன் பயன்பாடு, வாங்குவது, பயன்படுத்துவது மற்றும் அதன் ஆபத்து
1. மோதலின்போது அமெரிக்கா உள்ளிட்ட 100 நாடுகள் டிரோன்கள் பயன்படுத்தி வருகின்றன.
2. குறைந்த செலவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியை இலக்கு வைத்து தாக்க முடியும் என்பதால் பயங்கரவாதிகள் கூட பயன்படுத்துகின்றனர்.
3. வணிகம் மற்றும் நுகர்வோர் வசதிக்காக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல டிரோன் பயன்படுத்தப்படுகிறது. 2020-ல் இதன் எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்த நிலையில், 2025-க்குள் 7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. உலகளவில் 2021-ல் இருந்து 2022-ல் விற்பனை 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
5. கடந்த சில வருடங்களாக டிரோன்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அது மீறப்படுகின்றன.
6. ஒவ்வொரு நாடுகளும் எந்தவித அச்சமின்றி, எதிர் நாடுகள் கேள்வி கேட்கும் என்பது குறித்து கவலையில்லாமல் எளிதாக எந்த இடத்திலும் பறக்க விடுகின்றன. இதற்கு வானில் பறப்பதற்கான சிறிதளவான வழிகாட்டு தல்தான் காரணம்.
7. ஒவ்வொரு நாடுகளும் வாங்குவது, பயன்படுத்துவதில் தனித்தனி ஆர்வம் காட்டுகின்றன.
8. சீனா கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கான அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதனை பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதில் மேலும் தொழில்நுட்பத்தை புகுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளன.
9. துருக்கி அதிநவீன டிரோனை பயன்படுத்துகிறது. துருக்கி பயன்படுத்தும் 'பேராக்டர் டிபி2' என்ற டிரோன், லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது ஒரு டிரக்கில் பொருத்தும் அளவிற்கு சிறிதானது.
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து டிரோன்கனை வாங்கி, மோதல் போக்கில் உள்ள ஏமன், லிபியா எல்லையில் ஊடுருவல்களை கண்காணிக்க பயன்படுத்துகிறது.
11. ஆயுதமேந்திய டிரோன்களை கொண்ட நாடுகள், சர்வதேச வழிகாட்டுகளை கடைபிடிக்காமல், தங்களுக்கென வழிகாட்டுதல்களை தயார் செய்து அதை பின்பற்றுகின்றன.
12. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்காத வரை அல்லது சொந்த பாதுகாப்பு தவிர்த்து டிரோன் பயன்படுத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது.
13. ஆனால், ஒரு முழுமையான போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்தில், கண்காணிப்பிற்காக டிரோன்களை பயன்படுத்த முடியும்.
14. டிரோன் பறப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
15. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
16. முறையான வழிகாட்டுதல், விதிமுறை இல்லாததால் ஒவ்வொரு நாடுகளும் ராணுவத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என பெரும்பாலான டிரோன் வல்லுநர்கள் கருதுகிறாரள்.
17. டிரோன்கனை வெவ்வேறு ரிமோட் மூலம் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தேனீக்கள் போன்று ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாக்கும் அபாயம் உள்ளது.
18. வான்வெளிக்கு வெளியிலும் தாக்குதல் நடத்த முடியும்.
19. போர்க்களத்தில் டிரோன்களை கண்டறிவது மிகவும் கடினமானதாக உள்ளது.
20. உக்ரைன், ரஷிய படைகளுக்குக் கூட சரியாக எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய கடினமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டிரோன்கள் வேகமாக செல்லும் வாகனங்களாகின்றன.
பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த கட்டுரையை விரைவாக எழுதியுள்ளார்.
- உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது.
- தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் ரஷிய படைகளை முன்னேற விடாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு வந்த உக்ரைன் படைகள், கடந்த சில மாதங்களாக ரஷிய பகுதிகளை குறிவைத்து வான் தாக்குதல்களை நடத்துகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேசமயம், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்திய 8 ட்ரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ரஷிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
5 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் மூன்று ட்ரோன்கள் தடுத்து திசைதிருப்பப்பட்டன. இது உக்ரைன் ஆட்சியின் பயங்கரவாத தாக்குதல் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவின் பல கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன என்றும், 2 பேர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார். தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலானது, உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து ரஷியாவிற்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்த தாக்குதல்கள் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
- ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
- பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மாஸ்கோ :
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. அதன்படி ரஷியா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.
15 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
அதற்கு மாறாக இரு தரப்பினரும் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ரஷ்யாவின் தெற்கு நகரமான கிராஸ்னோடரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் டினிப்ரோ நகரம் மீது ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரின் பல பகுதிகள் சேதமடைந்தன.
இந்த நிலையில் வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்றும், ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.
- கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது.
ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.
இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது. இதன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரஷிய போர்க்கப்பலான இவான் குர்ஸை உக்ரைன் தாக்க முயற்சித்ததை அடுத்து உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர்,"போஸ்பரஸ் ஜலசந்தியிலிருந்து வடகிழக்கே 140 கிமீ தொலைவில் ரஷிய கடற்படைக் கப்பலின் நிலையான ஆயுதங்களிலிருந்து உக்ரைனின் அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டன" என்றார்.
- உளவு பார்த்ததாக கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி ரஷியா கைது செய்தது
- ரகசிய அறையில் விசாரணை நடத்தி ஜெயில் தண்டனை அதிகரிப்பு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை நிறுத்திய பாடில்லை. தொடர்ந்து உக்ரைனின் நகரங்களை கைப்பற்றிய வண்ணம் உள்ளது.
மேலும், ரஷியாவிற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வரும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நிருபர் எவன் ஜெர்ஷ்கோவிச் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி ரஷியாவால் கைது செய்யப்பட்டார். அவர் யேகாடெரின்பர்க்கில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு அபாண்டானது, அவரது கைது தவறானது என அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஜெயிலில் இருந்த நிலையில், பத்திரிகையாளர் எவன் ஜெர்ஷ்கோவிச் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்து, அத்துடன் அவரது ஜெயில் தண்டனையை ஆகஸ்ட் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
பத்திரிகையாளருக்கு எதிராக உளவு பார்த்ததாக சாட்டப்படும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் எதையும் ரஷியா அதிகாரிகள் விரிவாக தெரிவிக்கவில்லை. சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
கெர்ஷ்கோவிச் வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜரானாரா?. அவன் என்ன சொன்னார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று, பத்திரிகையாளரின் பெற்றோர்கள் நியூ ஜெர்சியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தனது மகன் விசாரணைக்காக நீதிமன்றம் வந்துள்ளனர். ஆனால், செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது அவர்கள் இல்லை என நீதிமன்ற அதிகாரி ஒருவர் மூலமாக செய்தி பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஜெர்ஷ்கோவிச் கைது அங்குள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜெயிலில் ஜெர்ஷ்கோவிச்சை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஒருமுறைக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.
- உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
- ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
- ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவமும் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷிய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் ரஷிய ஹெலிகாப்டர் (எம்.ஐ.-8), சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்தது. பிரையன்ஸ்க் பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது கிளிண்ட்சி நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 5 வீடுகள் சேதமடைந்தன. ஒரு பெண், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியில் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் கூறும்போது, 'நான்கு ரஷிய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்றார். இதை உக்ரைன் தரப்பும் உறுதி படுத்தியது.
உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறும் போது, ரஷியர்கள் இன்று மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவற்றை நாம் புரிந்து கொள்ளமுடியும். இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு போர் விமானங்கள் குறைந்துள்ளன என்றார்.
இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






