என் மலர்
அமெரிக்கா
- ஹாஸ்கெல் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்
- கண்டெடுக்கப்பட்டது ஹாஸ்கெல் மனைவியின் உடலா என நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்
அமெரிக்காவின் புகழ் பெற்ற திரைப்பட நகரம், ஹாலிவுட்.
நூற்றுக்கணக்கான முன்னணி அமெரிக்க ஆங்கில திரைப்படங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நடிப்பு துறையில் ஈடுபட விரும்புபவர்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்த அங்கு பல ஏஜெண்ட்கள் செயல்படுவதுண்டு.
ஹாலிவுட்டின் முன்னணி ஏஜெண்ட்களில் ஒருவர் சாம் ஹாஸ்கெல்.
இவரது மகன் சாமுவெல் ஹாஸ்கெல் ஜூனியர். இவரது மனைவி காணாமல் போயிருந்தார். அவரது உடல் பாகம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் என்சினோ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த கண்காணிப்பு கேமிரா வீடியோ காட்சிகள் மூலமாக ஹாஸ்கெல் வீட்டுடன் குற்றம் செய்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹாஸ்கெல்லின் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டில் அவரது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் எங்கும் காணப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ரத்த கறை இருந்தது.
தடயவியல் நிபுணர்கள் கொலை செய்யப்பட்டது ஹாஸ்கெல்லின் மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஹாஸ்கெல் ஜூனியர் மனைவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை பல பிளாஸ்டிக் பைகளில் போட்டு 4 கூலி தொழிலாளிகளிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து ஹாஸ்கெல் ஜூனியர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காணாமல் போன அவரது மனைவியின் பெற்றோர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
- 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
- இரு தலைவர்கள் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சென்றார். சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவர்களின் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார்.
- இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றார்.
வாஷிங்டன்:
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பாக பியூஷ் கோயல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பதவி வகிப்பது மற்றும் டெஸ்லாவின் விநியோக சங்கிலியில் வளர்ந்து வரும் இந்திய தானியங்கி பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சுட்டிக் காட்டினார்.
மேலும், இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது. எலான் மஸ்க் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டார்.
இந்நிலையில், பியூஷ் கோயலுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட செய்தியில், டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கவுரவம் அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு என்னால் வர முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். வரும் காலத்தில் உங்களை சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி ஓட தொடங்கியது
- இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது
அமெரிக்காவின் தென்மத்திய பகுதியில் உள்ள மாநிலம் டெக்ஸாஸ் (Texas).
டெக்ஸாஸ் மாநில டல்லாஸ் (Dallas) நகருக்கு 531 கிலோமீட்டர் மேற்கே உள்ள மிட்லேண்டு எனும் நகரிலிருந்து ஒரு சிறு ரக புரொபெல்லர் விமானம் (propeller plane) புறப்பட்டது. அந்த விமானத்தை, விமானி, புறநகரான மெக்கின்னி (McKinney) பகுதியை சேர்ந்த ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் (Aero Country Airport) தரையிறக்க முயன்றார். அவ்விமானத்தில் விமானியுடன் மேலும் ஒரு பயணி இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
அதை தொடர்ந்து அந்த விமானம், விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வேகமாக விலகி சென்று அங்குள்ள சிறு தடுப்பு ஒன்றில் மோதியது. அதன் பிறகும் நிற்காமல் அங்கிருந்து அருகில் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது அதன் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது.
அங்கிருந்தும், நேராக சென்ற அந்த விமானம், செங்குத்தான திசையில் வந்து கொண்டிருந்த ஒரு செடான் ரக கார் மீது மோதியது.
இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த ஜேக் ஸ்னைடர் என்பவர் வீடியோ படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவைக்கான மருத்துவ பணியாளர்கள், விமானத்தில் இருந்தவர்களையும், காரில் இருந்த ஓட்டுனரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். காரில் பயணித்தவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏதுமில்லை.
மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விபத்து குறித்து தீவிரமாக விசாரணை அறிவித்து வருகிறது.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
- காசாவில் நடந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நியூயார்க்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுவரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
- அல்-ஷிபா மருத்துவமனை சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது.
- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது.
மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, "மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.
- இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
- 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.
தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.
குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.
டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.
இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.
டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.
மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
- கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 26-ந் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங் காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண் டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.
வாஷிங்டன்:
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.
இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.
- இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
- வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.
- 7200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்
- முழு கண்ணையும் மாற்றி பொருத்துவது இதுவரை நடைபெற்றதில்லை
கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள், இடது கன்னம், தாடை ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து, மே 27 அன்று நியூயார்க் லேன்கோன் ஹெல்த் எனும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஆரோனுக்கு பலனளிக்காது என்பதால் "முழு கண் மாற்று அறுவை சிகிச்சை" அவருக்கு தேவைப்பட்டது. ஆனால், ஒருவர் இழந்த முழு கண்ணையும் மீண்டும் வேறொரு கொடையாளியிடம் பெற்றாலும் அதனை பொருத்துவது மருத்துவ உலகில் இதுவரை ஒரு மிக பெரிய சவாலாக இருந்து வந்தது.
டாக்டர். எடுவர்டோ ரோட்ரிகஸ் (Dr. Eduardo Rodriguez) தலைமையில் ஒரு மருத்துவர் குழு இந்த சவாலான முயற்சியில் இறங்கியது. அவரது மேற்பார்வையில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் ஆரோனுக்கு முழு கண்ணும் வேறொரு கொடையாளியிடம் இருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சையில் முப்பரிமாண அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது மாற்றப்பட்ட இடது கண்ணில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், விரைவில் ஆரோனுக்கு கண் பார்வை கிட்டும் என நம்புவதாகவும் டாக்டர். ரோட்ரிகஸ் தெரிவித்தார்.
விபத்து மற்றும் பல்வேறு இதர காரணங்களால் கண் பார்வை இழந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி என பல்வேறு பிரபல கண் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- 70 வருடங்களில் பிக்காசோ பல அரிய படைப்புகளை உருவாக்கினார்
- சந்திரயான்-3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானது
மேற்கத்திய நாடுகளில் கலைப்பிரியர்கள் அதிகம். அதிலும், ஓவியங்களை தேடித்தேடி வாங்கும் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைவே இருக்காது.
புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வாங்கி வைத்து கொள்வதை பெருமையாக நினைக்கும் கோடீசுவரர்கள் அதிகம் உள்ளதால், விற்க விரும்புபவர்களிடம் அவற்றை வாங்கி ஏலமுறை மூலம் விற்றுத்தரும் ஏல நிறுவனங்களும் மேலை நாடுகளில் அதிகம்.
1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்து அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் உள்ள பார்சிலோனா நகரில் வளர்ந்தவர் ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso).
1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.
1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
இந்நிலையில், 1968ல், எமிலி ஃபிஷ்ஷர் லாண்டவ் (Emily Fisher Landau) என்பவர் வாங்கி வைத்திருந்த பிக்காஸோ வரைந்த "ஃபெம் அ லா மான்ட்ரே" (Femme a la Montre) எனும் அரிய ஓவியத்தை வேறு ஒருவர் வாங்கியிருந்தார். அது சில தினங்களுக்கு முன் சாத்பீஸ் (Sotheby's) எனும் ஏல நிறுவனத்தின் மூலமாக விற்பனைக்கு வந்தது.
1932ல் பிக்காஸோ வரைந்த இந்த ஓவியத்திற்கு மேரி தெரேஸ்-வால்டர் (Marie Therese-Walter) எனும் பெண், மாடலாக இருந்தார். மேரி, பிக்காசோவின் நெருக்கமான தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நீல நிற பின்னணியில் மிக பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் மேரி அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் இந்த ஓவியம், ஏலத்திற்கு வரும் முன் சுமார் ரூ.1000 கோடி ($120 மில்லியன்) மதிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்பார்த்ததை விட ஏலத்தில், இந்த ஓவியம் சுமார் ரூ.1157 கோடி ($139 மில்லியன்) தொகைக்கு விலை போனது.
2015ல் கிறிஸ்டீஸ் (Christie's) ஏல நிறுவனம் மூலமாக விற்கப்பட்ட பிக்காசோவின் "லே ஃபெம் டி அல்ஜெர்" (Les Femmes d'Alger) எனும் மற்றொரு ஓவியத்திற்கு ரூ.1500 கோடி ($179 மில்லியன்) தொகை கிடைத்திருந்தது.
தற்போது அவரது இந்த ஓவியத்திற்கு கிடைத்துள்ளது இரண்டாவது அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவின் மேற்பரப்பினை ஆராய்ச்சி செய்ய இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலன் திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானதை ஒப்பிட்டு, ஒரு ஓவியத்திற்கு இத்தனை பெரும் தொகையா என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.






