என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்க வேண்டும் என பல உலக நாடுகள் கூறி வருகின்றன
    • போர் நிறுத்தம் பயங்கரவாதம் தொடர வழி செய்து விடும் என்றார் பைடன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.

    இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழியாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஏமன், லெபனான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

    இதன் காரணமாக போரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு பல உலக நாடுகளும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இஸ்ரேல் அக்கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல "தி வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடைநிறுத்தம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    போர் நிறுத்தம் வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத சித்தாந்தத்தை கடைபிடித்து வருவதை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஒவ்வொரு போர் இடைநிறுத்த காலமும் தங்கள் ராணுவ தளவாடங்களையும், பயங்கரவாத திட்டங்களுக்கான ஆயுதங்களையும் சேகரித்து வைத்து கொள்ளும் காலமாக உள்ளது. தங்கள் அமைப்பின் பயங்கரவாதிகளை பலம் பெற செய்து மீண்டும் அப்பாவிகளை கொல்ல தொடங்குவார்கள். தற்காலிகமாக போரை நிறுத்துவது நமது நோக்கமாக இருக்க கூடாது; நிரந்தரமாக பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நோக்கமாக இருக்க வேண்டும்; தொடர்ந்து நடைபெறும் வன்முறைக்கு ஒரு முடிவு வர வேண்டும். அத்துடன் வரலாற்று தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    இஸ்ரேலும் மனிதாபிமான சட்டங்களை மதித்து, பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பதிலடி கொடுக்க வேண்டிய கோபத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி தவறுகள் நடக்காமல் இஸ்ரேல் பார்த்து கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்ததும், பாலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு.

    இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.

    • பெட்ரோல் வாகன விற்பனை சீரடைந்தாலும் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது
    • வாகன விலையை குறைப்பதை தீவிரமாக உற்பத்தியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்

    சுற்றுச்சூழல் மாசுபடுதலை முழுவதுமாக குறைக்க, படிம எரிபொருளுக்கு பதிலாக மின்சக்தியை பயன்படுத்தும் வாகனங்களை தயாரிப்பதில் உலகெங்கும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தீவிரமாக முனைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் மின்சார கார்கள் உற்பத்தி அதிகரித்து வந்தது.

    ஆனால், கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள், தங்கள் உற்பத்திக்கான இலக்கை குறைத்துள்ளது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பெரும் முதலீட்டு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் மெல்ல சரிவிலிருந்து மீண்டு வருகிறது. படிம எரிபொருள் வாகன விற்பனை சீரடைந்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனை மட்டும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.

    புதுப்புது வாகனங்கள் சந்தையில் வந்தாலும், ஒரு முறை "சார்ஜ்" செய்தால் மின்சார கார்கள் பயணிக்கும் தூரமான "ரேஞ்ச்", எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை.

    அமெரிக்கா முழுவதும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் உற்பத்தியாளர்களால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இது மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு.

    அமெரிக்கர்கள், தங்கள் அன்றாட அலுவல்களுக்கும், விடுமுறை நாள் பயணங்களுக்கும், நீண்டதூர பயணத்திற்கும் கார்களையே அதிகம் நம்பி உள்ளனர். ஆனால், பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை போல் மின்சக்தியை ரீசார்ஜ் செய்யும் வசதிக்கான கட்டமைப்பு அமெரிக்காவில் அதிகம் இல்லாததை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளதால் மின்சார கார்களுக்கு மாற தயங்குகின்றனர்.

    இதனால், தங்களிடம் ஏற்கெனவே அதிகமாக குவிந்திருக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை முதலில் விற்று விடுவதில் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனங்களுக்கான விலையை குறைக்க டெஸ்லா, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல மின்சார கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில், மின்சார வாகனங்களில் கார்களை விட இரு சக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாவதாலும், இங்கும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காததால், அமெரிக்காவில் தோன்றியுள்ள சிக்கல் இங்கும் வர கூடும் என வாகனத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • உலகெங்கும் பலர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்கை வன்மையாக கண்டித்துள்ளது

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 40 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    எலான் மஸ்கின் (Elon Musk) கருத்தை அமெரிக்க அரசாங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

    இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் (Andrew Bates) பேசியதாவது:

    இது யூத இனத்திற்கு எதிராக மறைமுகமாக வெறுப்பை தூண்டும் கண்டனத்திற்குரிய பதிவு மட்டுமல்ல; அமெரிக்கர்களின் அடிப்படை சித்தாந்தத்திற்கே எதிரானது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில், யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை கொடுமைகளுக்கு பிறகு அதற்கு நிகராக அக்டோபர் 7 அன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யூதர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ள வேளையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் வைப்பது சற்றும் ஏற்க முடியாதது.

    இவ்வாறு ஆண்ட்ரூ பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018ல், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு "வெள்ளையர்கள் அல்லாதவர்கள்" அதிகளவில் புலம் பெயர்வதை யூதர்கள் ஊக்கப்படுத்தி, இதன் மூலம் வெள்ளையர்களை அழிக்க முயல்வதால், இந்த சம்பவத்தை நடத்தியதாக அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர் தெரிவித்தார்.

    தற்போது மஸ்க் ஆதரித்துள்ள எக்ஸ் பதிவு, இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவது போல் ஆகி விடும் என்பதால், அமெரிக்காவில் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

    அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர். அவர்கள் அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். அவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
    • 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை கெல்சி ஹேட்சர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

    • படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.
    • 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் பல வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் அங்குள்ள புளூம்ஸிபாக்ஸ் நிறுவனம் 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களை பார்த்து தரவரிசை படுத்துவோருக்கு 2 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.66 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கிறிஸ்துமஸ் கெட் அவே (2017), ராயல் கிறிஸ்துமஸ் (2014), நார்த் போல் (2014), கிறிஸ்துமஸ் ரெயில் (2017), கிறிஸ்துமஸ் மகுடம் (2015), 3 புத்திசாலிகள் மற்றும் ஒரு குழந்தை (2022) உள்ளிட்ட 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக விழா காரணி, முன்கணிப்பு அளவு, வேதியியல் சோதனை மற்றும் கண்ணீரை தூண்டும் சோதனை, மறுபதிப்பு மதிப்பு உள்ளிட்ட அளவுகோள்களின்படி போட்டியாளர்கள் தரவரிசைப்படுத்த வேண்டும். அந்த வகையில் 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • டைம் இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • காலநிலையில் தாக்கத்தை உண்டாக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள 100 வணிக பிரபலங்களை தொகுத்து ‘டைம் 100 கிளைமேட்’ என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது.

    நியூயார்க்:

    டைம் இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்த ஆண்டு, வரும் 30-ந்தேதி காலநிலை மாநாடு நடைபெற உள்ள நிலையில் காலநிலையில் தாக்கத்தை உண்டாக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள 100 வணிக பிரபலங்களை தொகுத்து 'டைம் 100 கிளைமேட்' என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது. அதில் 8 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர்களும் இடம் பெற்று உள்ளனர்.

    அதில் உலக வங்கி தலைவரான அஜய் பங்கா, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் ஜே ஷா; பாஸ்டன் காமன் அசெட் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர் கீதா ஐயர், அமெரிக்க எரிசக்தி கடன் திட்டங்கள் அலுவலகத்தின் இயக்குனர் ஜிகர் ஷா, ஹஸ்க் பவர் சிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மனோஜ் சின்ஹா, கெய்சர் பெர்மனேட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பாளர் சீமா வாத்வா மற்றும் மகேந்திரா லைப்ஸ்பேஸஸ் நிர்வாக இயக்குனர் அமித் குமார் சின்ஹா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

    • அமெரிக்கா சென்றுள்ள ஜி ஜின்பிங், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • திபெத், ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து ஜோ பைடன் கவலை தெரிவித்தார்.

    சீனாவுக்கும் அண்டை நாடுகளாக இந்தியா, திபெத், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நிகழ்வு நடந்து வருகிறது. கல்வான் பகுதியில் ஊடுருவல் நடந்தபோது இரு ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

    தைவான் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சீனாவுக்கும் அந்நாட்டிற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டிற்கு இடையே அமெரிக்க- சீனா தொழில் கவுன்சில் மற்றும் அமெரிக்கா- சீனா உறவுக்கான கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு பதற்றமான நிலை உருவாகி இருப்பது தொழில்துறைகளில் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜி ஜின்பிங் பதில் அளிக்கையில் "சீனா மோதல் மற்றும் போரை தூண்டவில்லை. வெளிநாட்டு நிலத்தை சிங்கிள் இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை" என்றார்.

    ஜோ பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பின்போது ஜோ பைடன், திபெத் மற்றும் ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து தனது கவலையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆரோனிடம் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன
    • 100-வருட பென்சில் ஒன்றும் ஆரோனின் சேகரிப்பில் அடங்கும்

    அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநில ஜாஸ்பர் கவுன்டி (Jasper County) பகுதியில் உள்ளது கோல்ஃபாக்ஸ் நகரம் (Colfax). இந்நகரத்தில் வசிப்பவர், ஆரோன் பார்த்தலோமி (Aaron Bartholomey).

    சிறு வயதில் தனது தாத்தாவுடன் கடைகளுக்கு செல்லும் போது ஆரோனுக்கு பென்சில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வயது முதலே சேகரிக்க தொடங்கினார். இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பொழுதுபோக்காக மாறியது. இவரிடம் பல நிறங்களில் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன.


    உலகெங்கும் நடைபெறும் அரிதான சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனம், கின்னஸ் உலக சாதனை பதிவகம் (Guinness World Records). இந்நிறுவன பதிவுகளின்படி அதிக பென்சில் சேகரித்த சாதனை எண்ணிக்கை 24,000 என இருந்தது.

    இதை கேள்விப்பட்ட ஆரோன் தனது சேகரிப்பை பார்க்க வருமாறு அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்திற்கு (American Pencil Collectors Society) அழைப்பு விடுத்தார்.

    கடந்த ஜூலை மாதம், அவர்கள் கணக்கெடுப்பை துவங்கினர். அவர்களிடம் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்திற்கு ஆரோன் தனது சேகரிப்பு குறித்த விபரங்களை அனுப்பினார். அந்நிறுவனத்தினர் மீண்டும் ஒரு ஆய்வை நடத்தினர்.

    3 மாதங்களுக்கு பிறகு கின்னஸ் நிறுவனத்தால் ஆரோனுக்கு உலகிலேயே அதிக பென்சில்கள் சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கும்.


    "எண்ணிக்கையின்படி பழைய சாதனையான 24 ஆயிரத்தை விட எனது சேகரிப்புகள் அதிகம் என அறிந்திருந்தேன். ஆனால், அதை துல்லியமாக எண்ண நீண்ட காலமும், பொறுமையும் தேவைப்பட்டது. நீண்ட பணிக்கு பிறகு இது நடைபெற்றது. கின்னஸ் நிறுவனத்தினர் கடுமையான விதிமுறைகளை பின்பற்றினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், இறுதியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது" என ஆரோன் தனது சாதனை குறித்து அறிவித்துள்ளார்.

    • 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.
    • மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன்.

    நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்பார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் நகரை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவருக்கு ஆன்லைன் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. அதுவும் அவர் தனக்கு வந்த இ-மெயிலை மோசடி என நிராகரித்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு தான் பரிசு விழுந்ததை அவர் நம்பி உள்ளார். அங்குள்ள கலமாசு கவுண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கேமின் செயல்பாடுகள் மூலம் மிக்சிகன் லாட்டரியில் விளையாடி உள்ளார். அதில் 2 ரவுண்டுகள் வெற்றிகளை குவித்த அவருக்கு பரிசு வென்றது பற்றிய விபரம் மின்னஞ்சல் அறிவிப்பு மூலம் வந்துள்ளது.

    அவர் முதலில் அதை ஒரு மோசடி என்று நிராகரித்தார். பின்னர் அந்த இ-மெயிலின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிக்சிகன் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவருக்கு லாட்டரியில் சுமார் 4 லட்சம் டாலர் பரிசுத்தொகை வென்றதை அறிந்து உற்சாகத்தில் மூழ்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆன்லைனில் நிறைய கேம்களை விளையாடுகிறேன். ஆனால் சில கேம்கள் விளையாடும் போது 2-வது வாய்ப்புக்கான உள்ளீடுகளை பெறுவது பற்றி எனக்கு தெரியாது.

    இந்நிலையில் மிக்சிகன் லாட்டரியில் இருந்து இரண்டாவது பரிசாக 4 லட்சத்து 16 ஆயிரத்து 322 டாலர் பரிசை வென்றதாக ஒரு மின்னஞ்சலை பார்த்தேன். முதலில் அதை மோசடி என நினைத்தேன். பின்னர் மிக்சிகன் லாட்டரியை அழைத்த போது பரிசு வென்றதை உறுதி செய்தேன். இந்த பணத்தை எனது குடும்பத்தினருக்காக செலவு செய்யவும், சேமிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.

    அதன்பின் கலிபோர்னியா சென்ற அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் இரு நாட்டு ராணுவ உறவு, ரஷியா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

    ×