என் மலர்
அமெரிக்கா
- 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது.
- இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.
கடந்த 1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று நாசா தெரிவித்தது.
இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026-ம் ஆண்டுக்கு தள்ளி போயிருக்கிறது.
- அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
- தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).
மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.
1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.
2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.
இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
- சுவை மாறுதலுக்கு காரணமாக ஒரு குண்டான ஜாதிக்காயை காரணமாக காட்டினார் சாராவின் தாய்.
- பரிசோதனையில் காலாவதியான ஜாதிக்காய் 24 ஆண்டாக பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
உங்கள் தாயின் சமையலறையில் உங்களை விட அதிக வயதுடைய மசாலாப் பொருட்களை தேடி கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள்! எக்ஸ் தளத்தில் தனது கதையைப் பகிர்ந்த சாரா மெகோனகலுக்கு அதுதான் ஏற்பட்டது.
அனைத்தும் ஆப்பிள் பை (Apple pie) மூலம் தொடங்கியது. ஆப்பிள் பையில் சுவையை உணர்ந்து விளையாட்டுத்தனமாக தனது தாய் முயற்சித்த செய்முறையை விவரிக்க கேட்டிருக்கிறார் சாரா.
சாரா மெகோனகலின் தாயார் சுவை மாறுதலுக்கு காரணமாக ஒரு குண்டான ஜாதிக்காயை காரணமாக காட்டினார். சாரா, அந்த ஜாதிக்காய் ஜாடியின் லேபிளை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். அது டிசம்பர் 16, 1999 இல் காலாவதியாவதை கண்டுபிடித்தார்.
பரிசோதனையில் காலாவதியான ஜாதிக்காய் 24 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது.
"அம்மா... இது 24 வருஷத்துக்கு முன்னாடியே காலாவதியாகி விட்டது" என்று அம்மாவிடம் தெரிவித்தார். மேலும், பரிசோதனைக்கு பிறகு பல பொருட்கள் காலாவதியானதைக் கண்டுபிடித்துள்ளார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் பயனர்கள் பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
- உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரராக திகழ்ந்த சாதனையாளர் டைகர் உட்ஸ்
- நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் உட்ஸ்
"பணக்காரர்களுக்கான விளையாட்டு" என கருதப்படும் கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்காவை சேர்ந்த டைகர் உட்ஸ் (48). இவரது இயற்பெயர் எல்ட்ரிக் டான்ட் உட்ஸ் (Eldrick Tont Woods).
1999 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2004 செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 264 வாரங்களும், மீண்டும் 2005 ஜூன் மாதம் முதல் 2010 அக்டோபர் வரை தொடர்ச்சியாக 281 வாரங்களும், உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரர் எனும் முதலிடத்திலேயே திகழ்ந்தவர் உட்ஸ்.
இக்கால கட்டங்களில் உட்ஸ், 13 முக்கிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்முறை கோல்ஃப் விளையாட்டில் தனது 20-வது வயதிலேயே பங்கு பெற தொடங்கிய உட்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு உயர்ரக காலணிகள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான "நைக்" (Nike) உடன் அதன் பிராண்ட் தூதராக (brand ambassador) 1996ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
27 வருடங்களாக தொடர்ந்த "உட்ஸ்-நைக்" கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் உட்ஸ் தெரிவித்திருப்பதாவது:
27 வருடங்களுக்கு முன் உலகின் தலைசிறந்த ஒரு பிராண்டுடன் அதிர்ஷ்டவசமாக இணைந்தேன். அந்த இணைப்பினால், அன்றிலிருந்து இன்று வரை சிறந்த தருணங்களால் என் நினைவுகள் நிரம்புகிறது. நான் அவற்றை கூற தொடங்கினால், அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதற்கு காரணமாக இருந்த ஃபில் நைட் (Phil Knight) எனது நன்றிக்குரியவர்.
நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இந்த இணைப்பின் வழியாக பல பிரமிப்பூட்டும் தடகள விளையாட்டு வீரர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
மக்கள், இது போல் மீண்டும் ஒரு அத்தியாயம் உருவாகுமா என கேட்பார்கள். நிச்சயமாக மற்றொரு அத்தியாயம் உருவாகும்.
இவ்வாறு டைகர் உட்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த பிரிவை குறித்து நைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "27 வருடங்களாக, உலகின் ஒப்பற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான டைகருடன் இணையும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அவர் கோல்ஃப் விளையாட்டை மாற்றியது மட்டுமில்லாமல், அதில் இருந்த பல தடைகற்களை தகர்த்து எறிந்தார். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளது.
2016லிருந்தே நைக் நிறுவனம், கோல்ஃப் விளையாட்டிற்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலிலிருந்து விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.
- எல்லோரையும் போல் முதியவர் பாக்கெட்டை விரல்களால் திறக்க முயன்றார்
- தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டனர்
அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ளது ஜியார்ஜியா (Georgia) மாநிலம். இங்குள்ள நகரம், டால்டன் (Dalton).
இங்கு வசித்து வந்த 75 வயது முதியவர் ஒருவர், உண்பதற்காக ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், எல்லோரையும் போல் அந்த பாக்கெட்டை தனது விரல்களால் திறக்க முயன்றார்.
ஆனால், அவரால் அந்த பாக்கெட்டை திறக்க முடியவில்லை.
சிறிது நேரம் போராடி பார்த்து பொறுமையிழந்த அவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, அந்த பாக்கெட் ஓரத்தில் தீயை காட்டினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீ பற்றி, மளமளவென அவரது உடல் எரிய தொடங்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பராமரிப்பு பணியாளர்கள் சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரையில் காத்திருக்காமல், பராமரிப்பு பணியாளர்கள், ஒரு பெரிய நீர் குழாய் வழியாக, எரிந்து கொண்டிருந்த அந்த முதியவர் மீது நீரை பாய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து, டென்னிசி மாநில சட்டனூகா (Chattanooga) பகுதியில் உள்ள எர்லாங்கர் பேரோனெஸ் மருத்துவமனையில் (Erlanger Baroness Hospital) அவர் சேர்க்கப்பட்டார்.
தீ விபத்து காரணமாக அந்த முதியவருக்கு உடலில் 75 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.
சிப்ஸ் பாக்கெட்டில் தீ பற்றி, அது அவர் மேல் பரவியதா அல்லது அவர் தன் உடல் மேல் கவனக்குறைவாக தீ வைத்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
ஆனால், சிப்ஸ் தயாரிப்பில் எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்தப்படுவதால், அவை தீப்பற்ற கூடிய பொருட்கள்தான் என உணவு பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.
வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.
இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியனை தாண்டி விட்டது
- இந்திய மதிப்பில் அமெரிக்க கடன், சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்
நியூயார்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனம், ஜேபி மோர்கன் (JP Morgan).
மிகப்பெரும் நிதி முதலீட்டு ஆலோசனை மற்றும் நிதி சேவைகள் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் மிக்க இந்நிறுவனம், உலக நாடுகளின் நிதி நிலவரம் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளியிடுவது வழக்கம்.
அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியன் ($34 trillion) தொகையை தாண்டி விட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்.
"2030-ஆம் ஆண்டிற்குள் கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே கணக்கிட்டால் அது அமெரிக்காவின் மொத்த வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக பெருகி விடும்" என அமெரிக்க பட்ஜெட் அலுவலகம் சமீபத்தில் தெரிவித்தது.
2024-ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் எதிர்கால நிதி நிலை குறித்து ஜேபி மோர்கன் கருத்து வெளியிட்டுள்ளது.
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மலை போல் குவிந்திருக்கும் அமெரிக்க கடன் சுமை "தண்ணீரில் கொதிக்கும் தவளை" நிலையை போன்று உள்ளது.
பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடன் சுமையை சமாளிக்க மேலும் பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை நிறுத்தவில்லை.
அரசு எடுக்கும் ஒவ்வொரு நிதி ஊக்க நடவடிக்கைகளும், கடன் சுமையை தாங்க முடியாமல் வெடிக்கும் நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது. அந்த நிலைமையும் ஒரு நாள் வெடித்து விடும்.
இவ்வாறு ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.
கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்ட தவளை அதை உடனே உணர்ந்து கொண்டால் வெளியே குதித்து தப்பி விடலாம். ஆனால், அது உணர தாமதித்தால், சிறுக சிறுக வெந்து, தப்பிக்க முடியாமல் உயிரிழக்கும்.
அதே போன்று ஒரு நெருக்கடியான நிலையில் தவறை உணர்ந்து உடனடியாக செயலாற்ற வேண்டியவர்கள் செயலாற்ற தவறினால் அந்த நெருக்கடி வளர்ந்து, மீண்டும் மீளவே முடியாத அளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இந்நிலை நிர்வாக மேலாண்மையில், "தண்ணீரில் கொதிக்கும் தவளை நிலை" என குறிப்பிடப்படும்.
- திருட வந்த கும்பலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்
- இச்சம்பவங்களால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கின்றனர் என்றார் ராமிரெஸ்
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர எல்லைக்கு அருகே உள்ளது காம்ப்டன் (Compton).
காம்ப்டனில் மெக்சிகோவிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த ரூபென் ராமிரெஸ் ஜுனியர் என்பவர் "ரூபென்'ஸ் பேக்கரி அண்ட் மெக்சிகன் ஃபுட்" எனும் ஒரு கடை நடத்தி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் கடையின் முன் திடீரென 100க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் கடையை சூறையாட வந்தது. அக்கும்பலில் சிலர் ஒரு வெள்ளை நிற கியா (Kia) காரால் கண்ணாடி கதவு மீது மீண்டும் மீண்டும் மோதி கடையை உடைத்தனர்.
கடைக்குள் நுழைந்த அந்த கும்பல் சூறையாடியது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் அங்குள்ள அலமாரிகளை உடைத்து உணவு பண்டங்களையும் வேறு சில பொருட்களையும் பெருமளவில் கொண்டு சென்றனர்.

அதில் முக்கியமாக பெருமளவு இறைச்சிகளும், மளிகை பொருட்களும், லாட்டரி டிக்கெட்டுகளும் இருந்தன.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால், ராமிரெசுக்கு சுமார் $70 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது.
இதை தவிர, கடையை மீண்டும் சுத்தப்படுத்தி அங்கிருந்த கண்ணாடி துகள்களை அகற்றவும் நீண்ட நேரமானது.
இது குறித்து ராமிரெஸ் தெரிவித்ததாவது:
ஆங்காங்கு இது போல் சிறு சம்பவங்களை கண்டிருந்தாலும், என் கடையில் நடந்தது போல் ஒரு சூறையாடலை இதற்கு முன் கண்டதில்லை. கண்காணிப்பு கேமிரா படக்காட்சிகளை காவல்துறையினர் காட்டினார்கள். அவர்களில் ஒருவரையும் நானோ என் குடும்பத்தினரோ இதற்கு முன் கண்டதில்லை. காம்ப்டன் காவல்துறை மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை கண்டிப்பாக குற்றவாளிகளை கண்டு பிடிப்பார்கள் என நம்புகிறோம். பிரெட் செய்வதற்கான உபகரணங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தி விட்டது. எங்கள் முதல் குறிக்கோள் கடையை மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதுதான். எங்கள் குடும்பம் மீள எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களால் பலர் வாழ்வதாரத்தையே இழக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
- 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
- ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).
தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.
தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.
- வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
- டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்
இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.
தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.
இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.
சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.
ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.
டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
- ஒருவேளை தடைவிதிக்கப்பட்டால், அமெரிக்கா வரலாற்றில் இது முதல் முறையாகும்.
2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
கொலராடோவின் உச்சநீதிமன்றம், ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் போட்டியிட டிரம்புக்கு தடைவிதித்தது. ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க பாராளுமன்றம் மீதான தாக்குதலின் காரணமாக கொலராடோ உச்ச நீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாய்மொழி வாதங்களை கேட்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் 77 வயதான டிரம்பின் பெயர், மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டில் தோன்றுவதைத் தடுக்கும் மைனின் உயர் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்பின் வழக்கறிஞர்கள், ஜனநாயகக் கட்சியின் மைனே வெளியுறவுச் செயலர் ஷென்னா பெல்லோஸ் அளித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு மைனே உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர் "ஒருதலைப்பட்சமான முடிவெடுப்பவர்" என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
- விமானத்தில் 171 பயணிகள், 6 விமான பணியாளர்கள் பயணித்தனர்.
- உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் அசம்பாவிதம் நடைபெறவில்லை.
அலாஸ்கா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் "737-9 MAX" விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோவுக்கு (கலிபோர்னியா) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் நடுப்பக்கத்தில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பயங்கரமான காட்சியை சில பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர்.
இதுகுறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்பின் தகவலை பகிர்ந்து கொள்கிறோம் என அலாஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் 16,325 அடி உயரத்தில் பறக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
விமானத்தின் வெளியேறும் கதவு விமானத்தில் இருந்து முற்றிலும் விலகி தனியாக சென்றதாக விமானத்தில் இருந்த சில பயணிகள் தெரிவித்தனர்.
அலாஸ்காவுக்கு இந்த விமானம் கடந்த அக்டோபர் 1-ந்தேதி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11-ந்தேதியில் இருந்து அலாஸ்கா வணிக பயன்பாட்டிற்கு ஈடுபத்தி வந்துள்ளது.






