என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்து அவ்வப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமண வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கை புஷ்ரா பீவியின் முதல் கணவர் கவார் மனேகா தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறையை (இத்தாத்) மீறியதாக கூறியிருந்தார். திருமணத்திற்கு முன் சட்டவிரோதமான உறவில் இருப்பது, கல்லால் அடித்துக் கொல்லப்படும் மரண தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

    அடியாலா சிறையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிவில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி இருவரும் இஸ்லாமிய நடைமுறையை மீறி திருமணம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
    • இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக ஒரு பேரணியில் இம்ரான் கூறினார்
    • ராவல்பிண்டி நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது

    2018 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவி ஏற்றார்.

    2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

    ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

    2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

    அந்த ரகசிய செய்தி குறிப்பு "சைஃபர்" என அழைக்கப்படுகிறது.

    ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது புகார் எழுந்தது.

    மேலும், அரசாங்க ரகசியத்தை காக்க தவறிய குற்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    "சைபர் வழக்கு" (cipher case) என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

    இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

    ஆனாலும், பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கடும் குளிர் காரணமாக நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டது.
    • லாகூரில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த மூன்று வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்து இருக்கிறது.

    கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க கூட்டத்தை நடத்த அம்மாகாண அரசு ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அம்மாகாணத்தில் 10 ஆயிரத்து 520 பேருக்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது 5-க்கும் குறைவு ஆகும். மேலும் லாகூரை சேர்ந்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

    • பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • தேர்தலில் போட்டியிடும் நவாஸ் ஷெரீப் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமான நடைபெற்று வருகிறது.

    நவாஸ் ஷெரீப் தேசிய தேர்தலுக்கான 130-வது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கட்சியின் சின்னத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிங்கம் மற்றும் புலியுடன் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொண்டு வந்தது  காகித சிங்கம், புலி அல்ல. நிஜ சிங்கம், புலி.

    கூண்டில் அடைத்தவாறு கொண்டு வந்திருந்தனர். இதைப்பார்த்து மற்ற தொண்டர்கள் அதிர்ச்சி  அடைந்த போதிலும், மறுபக்கம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நிஜ சிங்கம், புலியுடன் பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மரியும் அவுரங்ஜப், நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலின்படி அந்த சிங்கம், புலி திருப்பி கொண்டு செல்லப்பட்டன.

    பாகிஸ்தானில் உயிருள்ள சிங்கம் மற்றும் மற்ற விலங்கினங்களை பேரணிக்கு கொண்டு வரக்கூடாது என நாவஸ் ஷெரீப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதியருக்கு இஷான் என்ற 5 வயது மகன் உள்ளார்.

    பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை மணந்தார் சோயிப் மாலிக்

    லாகூர்:

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

    இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

    இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது. மேலும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

    இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொனசன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, "பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கினோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானுக்குள் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறும்போது, "இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

    தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார்.

    அதேவேளையில் பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
    • 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்

    "லிட்டில் மாஸ்டர்."

    கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).

    1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.

    டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.

    பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

    ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.


    பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.

    1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.

    பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.

    டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.


    1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.

    2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
    • கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது

    2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.

    நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:

    கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.

    இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.

    2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

    அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.

    அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.

    இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

    தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மும்பைக்கு பயங்ரதீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியானார்கள்.தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பயங்ரவாதிகளை இந்தியா தேடி வருகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர்களில் ஒருவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானில் மரணம் அடைந்துவிட்டதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

    77 வயதான அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    அப்துல் சலாம் பட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்ட சமயத்தில் அப்பொறுப்பை அப்துல் சலாம் பட்டாவி ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    ×