என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
    • ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்தார்.

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரிட்டனை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரிட்டனிலும் அதுவே நடக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

    முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த முடிவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

    • உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.
    • காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும்.

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது.

    அக்டோபர் 7, 2023 (ஹமாஸ் தாக்குதல்) அன்று, உளவுத்துறை தோல்வி, ஈரான் தொடர்பான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமை உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாகும்.

    எனவே, எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் 50 சதவீத வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, காட் பயன்படுத்தப்படும். காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும். இது ஏமன் மற்றும் பிற அரபு பகுதிகளில் நுகரப்படுகிறது.

    இதன் காரணமாக, அவர்களின் பேச்சு தெளிவின்மை கொண்டது. வீரர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் காட் எடுக்கும்போது, அவர்களின் பேச்சும் அரேபியர்களைப் போலவே ஒலிக்கிறது. அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க ஒரு துறையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    தற்போது பொதுமக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் வகையிலும் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.

    • தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
    • இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது.

    மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    21 மாதங்களாக காசா உடனான போர் நடந்து வரும் சூழலில் இராணுவச் சேவை விலக்கு தொடர்பான இந்த விவாதம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது

    அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

    ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

    இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

    இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

    இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நேதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது. 

    • வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

    இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.

    பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.

    அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

    இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.

    • காசாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • காசா மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் குழந்தை கள், பெண்கள் உள்பட 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில் காசாவின் சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஹகாம் முகமது இசா அல்-இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியதில் அல்-இசா முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே காசாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசா மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களை அழிப்பதற்காக பட்டினியை ஒரு ஆயுதமாக வேண்டுமென்றே இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

    காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. குழந்தைகளுக்கான நிறுவனம் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காமேனியை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார்.
    • ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.

    ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இஸ்ரேலின் 'சேனல் 13' உடனான சமீபத்திய நேர்காணலில் பேசிய காட்ஸ், "நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடிக்குச் சென்றார். ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதில் புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்" என்று காட்ஸ் கூறினார்.

    மேலும் காமேனியினயை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார். காமேனியை கொல்லும் யோசனையை அமெரிக்கா வீட்டோ செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

    கூடுதலாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.

    ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஈரான் அணுஆயு தங்களை தயாரி ப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப்பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங் கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக இஸ்ரேலின் வான் கவச பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது.

    இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 3 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடுத்தால் சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் கூறுகையில், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜெருசலேம்:

    காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச்சென்றது.

    இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. சுமார் 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 860 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
    • டிரம்ப் அறிவித்த பின்னரும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

    பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.

    டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக் கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும். இதனால் போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது இஸ்ரேலில் நடவடிக்கையின் மூலம்தான் தெரியவரும்.

    ஈரானை பொறுத்த வரையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தக்க பதில் தாக்குதல் நடத்தப்படும் உறுதியாக தெரிவித்துள்ளது.

    • எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
    • மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

    ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.

    மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.

    தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது. 

    • அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
    • அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.

    ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    "வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார். 

    டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

    "ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

    ×