என் மலர்tooltip icon

    உலகம்

    • சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை.
    • ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

    வடமேற்கு பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் நகரில் காவல்துறையை குறிவைத்து வெடி குண்டு வீசப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அப்பகுதியில், போலீசார் ரோந்து செல்லும் பாதையில் வெடிகுண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி முகமது அட்னான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

    டேரா இஸ்மாயில் கான் நகரம் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளின் தாயகமாக உள்ளது.

    • சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய மந்திரி பதிவிட்டுள்ளார்.
    • நாங்கள் அவனை சுருக்கமாக சேகர் என்று அழைக்கிறோம்.

    டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்-இன் குடும்பத்தில் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சமீபத்தில் சந்தித்து பேசிய எலான் மஸ்க், இது குறித்த தகவலை தெரிவித்தார். பிரிட்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்த பதிவில், "பிரிட்டனில் நடைபெற்ற ஏ.ஐ. பாதுகாப்பு கருத்தரங்கில் யார் கலந்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள். எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயரிட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். 1983-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் எஸ் சந்திரசேகரை தழுவி இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இவரது பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க் மனைவி ஷிவோன் ஸில்லிஸ், "இது உண்மை தான். நாங்கள் அவனை சுருக்கமாக சேகர் என்று அழைக்கிறோம், ஆனால் இந்த பெயரை சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக வைத்திருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் சுற்றுலா பயணி ஒருவர் போலீசில் சிக்கினார்.
    • இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லிஸ்பன்:

    அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஆர்டர் செய்ய முயன்றார்.

    மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது.

    இதை அறியாத அவர் ஆர்டர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்தனர். அதன்பின், அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தபின், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் இல்லை என உறுதி செய்தனர்.

    விசாரணையில், மொழிபெயர்ப்பில் நடந்த பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    • பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த பொதுத்தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகியது.

    இதற்கிடையில், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சஜீல் ஸ்வாதி ஆஜரானார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் தேர்தல் தேதி குழப்பம் முடிவுக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 3 நாட்களுக்கு முன் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் சந்தித்து பொதுதேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் வானம் புகை மண்டலமாக காட்சி அளித்தது
    • காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

    ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்ரூட் நகரில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வானம் புகை மண்டலமாக காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    • காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரி ஆகியோர் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா தொடர்ந்து அளிக்கும் என தெரிவித்தார்.

    • இந்தியா 2-வது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும் உள்ளது
    • துருக்கி முதல் இடத்தை பிடித்துள்ளது

    மெக்கென்சி சுகாதார நிறுவனம் உலகளாவிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த நிறுவனம் உடலளவில், மனதளவில், சமூக அளவில், அமைதி (spiritual health) அளவில் பணியாளர்களின் நலன் குறித்து ஆய்வு நடத்தியது.

    இதில் தொழில் உற்பத்தியில் நம்பர் ஒன் நாடாக விளங்கும் ஜப்பான், கடைசி இடத்தை பிடித்துள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பணியாளர்களிடம் நடத்திய ஆய்வில் 25 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    துருக்கி 78 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 76 சதவீத மதிப்பெண்ணுடன் 2-வது இடத்தையும், சீனா 75 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ஜப்பானில் ஆயுட்காலம் முழுவதும் வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற வசதிகள் வழங்க தயாராக இருந்து போதிலும், அவர்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்க விருப்பம் இல்லாமல், மாற்று நிறுவனத்தை தேட வேண்டுமென்றால் மிகவும் கடினமாக இருப்பதாக பணியாளர்கள் கருதுகின்றனர்.

    இந்த விசயத்தில் உலகளாவிய ஆய்வில் ஜப்பான் தொடர்ந்து பின்தங்கிய நிலையில்தான் இருந்து வருகிறது. இதன் பிரதிபலிப்புதான் இந்த ஆய்வு முடிவு.

    • கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
    • இந்த ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    கனடா மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    2020-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 63,927 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து சுமார் 96,917 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகமாகும்.

    கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 30 ஆயிரம் பேரும், மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற 41 ஆயிரம் இதில் அடக்கம் என தெரிவித்துள்ளது.

    • தரைவழி தாக்குதலை விரிவு படுத்திய நிலையில், காசாவை சுற்றி வளைத்துள்ளது இஸ்ரேல்
    • போர் இடைநிறுத்தம் தேவை என ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதிரடி

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக அன்றைய தினத்தில் இருந்து, தற்போது வரை இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்குதலை தொடர்ந்து, கடந்து சில நாட்களாக தரைவழி தாக்குதலை விரிவு படுத்தி வந்தது.

    இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காசா நகரை சுற்றி வளைத்து விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் (கொலை செய்யப்பட்டு உடல்கள் கருப்பு பைகளில் வைக்கப்பட்டு) சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எச்சரித்துள்ளது.

    காசா சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் குறித்த கருத்து மேசையில் இல்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காசா பகுதியில் சண்டை உச்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது.

    அகதிகள் முகாம், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக பெரும்பாலான அமைப்புகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேல், தாக்குதலை தொய்வின்றி நடத்தி வருகிறது.

    • ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலி.
    • சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

    இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2-வது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்தார்.

    • சுவிஸ் நாட்டின் சீஸ் மற்றும் பால் பொருட்கள் உலக புகழ் பெற்றது
    • மணியோசை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றனர் பால் பண்ணையாளர்கள்

    மத்திய ஐரோப்பாவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நாடு, சுவிட்சர்லாந்து.

    உலகளவில் புகழ் பெற்ற சுவிஸ் சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நாட்டில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வழிமுறைகளை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

    பசுக்களை வயல்வெளிகளிலும், மலைகளிலும் மேய்வதற்கு அனுப்பி விட்டு அவற்றின் நடமாட்டத்தை சரியாக மேற்பார்வை செய்ய பசுக்களின் கழுத்தில் மணிகள் தொங்க விடுவது அவர்களின் பரம்பரை வழக்கம். பசுக்களின் நடமாட்டத்தின் போது மிக மென்மையான ஓசையை எழுப்பும் இந்த மணிகள், இந்நாட்டின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

    பனிமலை, பசுக்கள், வயல்வெளிகள், கிராமங்கள் என அனைத்து சுவிஸ் நாட்டின் அடையாளங்களும் கொண்டு சுமார் 4700 பேரை கொண்ட அந்நாட்டின் ஆர்வெஞ்சன் (Aarwangen) கிராமத்தில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல் வெளிநாட்டினர். அந்த கிராமத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், பல பசுமாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளிலிருந்து ஒன்றாக எழும்பும் ஓசை ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இரவு உறக்கத்தை கெடுப்பதாக கிராம சபையில் புகாரளித்தனர். இரவு வேளைகளில் மட்டும் மணிகளை கழட்டி வைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், "சுவிஸ் நாட்டின் தனித்தன்மை இந்த மென்மையான மணியோசை" என கூறி, கையெழுத்து இயக்கம் நடத்தி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் கையொப்பமிட்ட எதிர்ப்பு கிராம சபையில் அளிக்கப்பட்டது.

    பலமான எதிர்ப்பை கண்ட புகார் அளித்தவர்களில் ஒருவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்; மற்றொருவர் வேறு இடத்திற்கு இடம் மாறி விட்டார்.

    உலகெங்கும் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை பதுக்க சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகள்தான் முதல் புகலிடம் என நம்பப்படுகிறது. அந்த நாட்டில் ஒற்றுமையால் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைந்த சுவிஸ் பால் பண்ணையாளர்களின் மனஉறுதி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

    • ஆகஸ்ட் வரை ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றது
    • தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது

    கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.

    இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.

    அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

    இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.

    அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

    ×